கொள்ளைக்காரப் பார்ப்பனர் ஏழை ஏழையென்று ஏமாற்றும் வித்தை நம்மவர்கள் கண்மூடி தர்மம்  உண்மை  விளம்பி

 

ஒருவன் செய்த தப்பிதத்திற்குத் தக்கபடி தண்டனை கொடுப்பது உலக தர்மம். ஆனால் தப்பிதம் செய்தவன் பிறந்த ஜாதிக்குத் தக்கபடி தண்டனை விதிப்பது இந்து தர்மம். மரியாதையும், தனிப்பட்ட நபரின் யோக்கியதையைப் பொறுத்து வருவதில்லை. அவனுடைய ஜாதியைப் பொறுத்தே நமது நாட்டில் மனிதர்களின் உயர்வும், மரியாதையும் கவனிக்கப்படுகின்றன. ஒரு குலத்துக்கொரு நீதி வழங்கிய மனுநீதி இன்று இல்லை. இங்கிலீஷ்கார ராஜ்யத்தில் கிரிமினல் குற்றங்களைப் பொறுத்த வரையில் சட்டம் எல்லா ஜாதிகளையும் சமமாகப் பாவித்து அமுல் செய்கிறது. ஆயினும் சமூக வாழ்வில் ஜாதி பற்றிய சலுகைகளும், கொடுமை களும் கொஞ்சமும் குறைந்தபாடில்லை.

சட்ட மூலம் அரசாங்கத்தினிடம் பெற முடியாமற் போன விசேஷ உரிமைகளை, பொது ஜனங்களின் அனுதாப மூலமாகப் பெற்று அனுபவித்து வருகின்றனர் பார்ப்பனர். பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்கு அவர்கள் கையாளும் முறைகள் பல. அவற்றுள் ஒன்று “”பிராமணனும், பசுவும் ஒன்று. அவர்களால் நன்மையேயன்றித் தீமையில்லை.  பிராமணன் ஏழை! அவனை ஆதரிப்பது மற்றவர் கடமை” என்று சொல்லிக் கொண்டு, தங்கள் சமூகத்தின் ஏழ்மையைப் பற்றியும், ஆதரவற்ற நிலைமையைப் பற்றியும் சதா விளம்பரப்படுத்தி மற்றவர்களை நம்பும்படி செய்கின்றனர். “”பாவம்! ஏழை பிராமணன்! பிழைச்சிட்டுப் போறான்” என்று நம்முடைய ஜமீன்தார்களும், பிரபுக்களும், முதலாளிகளும், அதிகாரிகளும் பிராமணருக்கு அனுதாபங் காட்டுவதில் போட்டி போட்டு வருகின்றனர். இந்த அனுதாபமும், ஆதரவும் எவ்வளவு நியாயமற்றவை என்று ஒரு நிமிஷம் யோசித்துப் பார்த்தால்கூட விளங்காமல் போகாது.

முதலாவது பிராமணன், ஏழை என்பது ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை. இரண்டாவது பிராமணன் என்கின்ற காரணத்திற்காக ஒருவன் பிழைச்சுட்டுப் போறான் என்பது அர்த்தமற்ற இரக்கம்.

பிராமணன் ஏழையா?

பிராமணர் மற்ற சமூகத்தினரைவிட மிகவும் எளிய நிலையில் இருப்பவர்கள் என்று சாதாரணமாய் எல்லோரும் நம்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் அவ்வாறில்லை. இந்தியாவின் தற்காலப் பொருளாதார நிலையில் மற்ற எல்லாச் சமூகங்களையும்விட உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்து வரும் சமூகம் பார்ப்பன சமூகம் என்பது மறுக்க முடியாத உண்மை.

எங்கேயோ ஒரு நாயக்கர் ஒரு ஜமீன்தாராகவோ, சிற்றரசனாகவோ இருந்தால் அவர் சமூகத்தவர்களில் 100க்கு 99 பெயர் உண்ணவும், உடுக்கவும் வகையின்றி மிகவும் தாழ்ந்த நிலையில் தான் இருக்கிறார்கள். எங்கேயோ ஒரு கவுண்டர் பெரிய பண்ணையக்காரராக இருந்தால் அவரைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஜனங்கள் பண்ணை யடிமைகளாகவும், கூலிகளாகவும் தான் இருக்கின்றனர். எங்கேயோ ஒரு செட்டியார் லக்ஷப் பிரபுவாக இருந்தால் அவர் சமூகத்தவர்களில் முக்காலே மூணு வீசம் பேர் நித்திய தரித்திரத்தில் நீந்திக் கொண்டிருப்பவர்கள் தான். எங்கேயோ ஒரு முதலியார் மில் முதலாளியாக இருந்தால் அவர் சமூகத்தவர்களில் பெரும்பாலானவர்கள் கந்தையைக் கட்டிக் காய்ச்சிக் குடிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். இப்படியே மற்ற பார்ப்பனரல்லாத சமூகங்களின் நிலைமையும் இருந்து வருகிறது. மகம்மதியர் நிலை இன்னும் மோசம். எப்பவோ ஒரு காலத்தில் அவர்கள் நவாப்புகளாக இருந்தார்கள் என்ற சரித்திர நினைவைத் தவிர தற்காலம் சுக வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய சௌகரியங்கள் அவர்களில் பெரும்பாலார்க்கு இல்லை. ஆதி திராவிடர் நிலைமையோ சொல்ல வேண்டியதில்லை. “”யாக்கை அகத்ததோ புறத்ததோ” என்ற ஆராய்ச்சியைத் தினந் தினம் செய்து வருகின்றது அச்சமூகம்.

இந்தச் சமூகங்களின் மத்தியில், இந்திய சமுதாயத்தின் துக்ககரமான, பயங்கரமான தரித்திர நிலையில், கூடுமானவரை தங்களுக்கு வேண்டிய எல்லா சௌகரியங்களையும் கஷ்டமில்லாமல் பெற்றுக் கவலையற்றுச் சுகஜீவனம் செய்து வருகிற சமூகம் ஒன்று இருக்கிறதென்றால் அது பார்ப்பன சமூகமேயாகும். இந்த உண்மையை ஒப்புக் கொள்ளாதவர்  பலர் இருக்கலாம். அவர்கள் தான் “”பாவம்! ஏழைப் பிராமணன்! போறான் போ” என்பவர்கள். தினசரி வாழ்க்கையில் பார்ப்பனர் நிலைமையையும், மற்றவர் நிலைமையையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து பார்த்தால் நாம் கூறும் முடிவை மறுக்க எவரும் துணியார்.

தற்கால சமூக வாழ்க்கை

ஒரு சமூகத்தின் சிறப்பும், செல்வமும், அச்சமூகத்தவரின் கல்வி நிலையைப் பொறுத்திருக்கின்றன. பிராமணரில் 100க்கு 95 பெயர் எழுதப் படிக்கத் தெரிந்திருக்கிறார்கள். மற்றவர்களில் 100க்கு 5 அல்லது 6 பெயர் கூடப் படித்தவர் என்று சொல்லுவதற்கில்லை. இந்த ஒரு விஷயத்திலிருந்தே பிராமணர் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கின்றனர் என்பது விளங்கும். வேறு உதாரணங்கள் தேவையில்லையென்றாலும், சாதாரண ஜனங்களும் நன்றாக உணரும் பொருட்டு, எல்லோர்க்கும் கட்புலனாகக் கூடிய வேறு சில உதாரணங்களையும், நம்மவர் தினசரி வாழ்க்கையிலிருந்து எடுத்துக் காட்ட விரும்புகின்றோம்.

(1)          பெரிய பட்டணங்களில் சிங்காரச் சோலைகளுக்கிடையில் அலங்கார மாளிகைகள் கட்டிக் கொண்டும், மோட்டார் முதலிய வாகனாதிகள் வைத்துக் கொண்டும், ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்களில் பார்ப்பனர் எத்தனை பேர் என்றும், மற்றவர் எத்தனை பேர் என்றும் கவனித்திருந்தால் பாதிக்கு மேல் பார்ப்பனர்தான் என்று தெரியும். மொத்த ஜனத் தொகையில் பார்ப்பனர் எண்ணிக்கையையும், பங்களா வாழ்க்கை நடத்துபவர்களில் இவர்கள் எண்ணிக்கையையும் கவனிக்கும்போது பணக்காரர்கள் யார்? என்பது விளங்காமல் போகாது. மிகவும் ஏழையென்று சொல்லிக் கொள்ளுகிற பார்ப்பான்கூட மாதம் 3 அல்லது 4 ரூபாய் குடிக்கூலி கொடுத்தாவது, வெயில், மழை, பனி முதலியவற்றின் கொடுமைகளுக்கு உட்படாமல் ஏதோ வீடு என்பதில் குடியிருக்கிறான். ஆனால் பிராமணரல்லாதாரில், வேலி யொதுக்கிலும், மரத்தடியிலும், கீற்றுச் சாலைகளிலும் தங்கி, வெய்யிலில் காய்ந்து, மழையில் நனைந்து பனியில் உலர்ந்து பரிதவிக்கும் குடும்பங்கள் எத்தனை ஆயிரம்?

(2)          பார்ப்பனரில் பெண்கள் எவரும் வீட்டைவிட்டு வெளியில் போக வேண்டிய அவசியம் இல்லை. குடும்பங்களைத் தவிர கூலி வேலைக்குப் போகிறவர் கிடையாது. கிராமத்தில் வசிப்பவர்கூட விறகு பொறுக்கவோ, கீரை பறிக்கவோ வெய்யிலில் வெளியே போகிற வழக்கமில்லை. ஆனால் பிராமணரல்லாதாரில், குடும்ப காரியங்களையும் பார்த்துக் கொண்டு தினமும் கூலிக்குப் போய் கால் பணம், அரைப் பணம் சம்பாதிக்கவும், வேலி வேலியாய் விறகு பொறுக்கி வரவும், காடுகாடாய்ப் போய்க் கீரை பறித்து வரவும் வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்க்கை நடத்த வேண்டிய பெண்கள் எத்தனை லக்ஷம்?

(3)          காப்பி ஓட்டலில் சம்பளத்துக்கு இருக்கும் பார்ப்பான் வீட்டுப் பெண்கள் கூட சாதாரணமாய்க் கட்டுவது பட்டுப் புடவை. போடுவது நாகரீகப் பாடியுடன் ஜாக்கட்டு. ஒவ்வொருத்தி உடம்பின் மேலும் குறைந்தது 500 ரூபாய் பொறுமான நகைகள். ஆனால் பார்ப்பனரல்லா தவர்களில் (தங்களை அழகுபடுத்தி உடம்பை விற்று வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள விலை மாதர் தவிர) பட்டுப்புடவை கட்டிப் பாடியும் ஜாக்கட்டும் போடும் பெண்கள் எத்தனை பேர்? தங்கள் மானத்தைக் காப்பாற்றி உடலை மறைக்கவும் போதிய துணியின்றிக் கிழிசலையும் பொத்தலையும் மறைத்து மறைத்துக் கட்டி வெளியில் போகும் துயரப்படுபவர் எத்தனை லக்ஷம்? இடுப்பில் இருப்பதைத் தவிர்த்து வேறு துணியில்லாததால் அழுக்கையே கட்டி அவஸ்தைப் படுபவர் எத்தனை லக்ஷம்? பெண்களுக்கியல்பாகவுள்ள நகைப் பைத்தியத்தைத் திருப்தி செய்து கொள்கிறதற்காகச் செம்பு பித்தளை மோதிரங்களையும், காப்பு கொலுசுகளை மண் வளையல்களையும், கண்ணாடி மணி மாலைகளையும் (எல்லாம் சேர்ந்து ஒரு வெள்ளி ரூபாய் பொறாது) அணிந்து திருப்திபடுகிறவர்கள் எத்தனை கோடி?

(4)          யாசகஞ் செய்து ஜீவிக்கிற பார்ப்பான் வீட்டிலும் தினம் இரண்டு வேளை சமைத்துக் காய்கறி பதார்த்தங்களுடன் சாப்பிடுவதும், ஒரு வேளையாவது காப்பி குடிப்பதும் சாதாரணமாய் நடக்கிற காரியங்கள். மற்றவர்கள் 100க்கு எத்தனை பேருக்குத் தினம் காப்பி சாப்பிட முடிகிறது? ஒருவேளை சமைத்து இரண்டு வேளை யுண்டு மிஞ்சியதைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்து மறுநாள் காலையில் சாப்பிட வேண்டிய நிலையில் எத்தனை பேர் இருக்கின்றனர்? பகலெல்லாம் பட்டினி கிடந்து பொழுது விடிந்த பின் காய்ச்சிக் குடிக்கிற குடும்பங்கள் எத்தனை?

(5)          பரம ஏழை என்கிற பார்ப்பான் வீட்டிலும் தங்களுக்குத் தேவையுள்ள வெண்கலப் பாத்திரங்களும், செம்புப் பித்தளைப் பாத்திரங்களும் இருப்பதோடு குறைந்தது இரண்டு வெள்ளி டம்ளரும், ஒரு வெள்ளித் தட்டும் சாதாரணமாய் இருக்கும். மற்றவர்களின் வீடுகளில் வெள்ளிப் பாத்திரங்களைக் காண முடியுமா? தண்ணீர் எடுக்கத் தகரப் பாத்திரங் களுக்கும் விதியற்று மண் பானைகளையும் சொப்புக்களையும் உபயோகிக்கிற குடும்பங்கள் எத்தனை லக்ஷம்? இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்ள பானை யில்லாமல் அவ்வப்போது வாய்க்காலுக்கோ கிணற்றுக்கோ போய்க் கொண்டு வரவேண்டிய நிலையில் உள்ளவர்கள் எவ்வளவு பேர்?

(6)          மிகவும் தரித்திரம் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பான் கூடத் தன் வீட்டில் நடக்கும் நலம் தீமை முதலிய காரியங்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய முடிகிறது. மற்றவர்களில் இவ்வாறு செய்பவர்கள், செய்யக் கூடியவர்கள் எத்தனை பேர்? வளைகாப்பும், சீமந்தமும், ஆண்டு நிறைவும், ஆயுள் ஓமமும், அறுபதாங் கல்யாணமும் (சஷ்டியாப்த பூர்த்தி) பிராமணரல்லாதாரில் எத்தனைக் குடும்பங்களில் நடைபெற்று வருகின்றன?

இவ்வாறே பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம். இவற்றிலிருந்து விளங்கும் உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற எல்லாச் சமூகங்களையும்விட பிராமண சமூகத்தின் பொருளாதார நிலை மேலானது என்பதே. பார்ப்பனருடைய உயர்ந்த நிலைக்குக் காரணம் என்னவென்று விவரிக்க இது சமயமல்ல. பொருளாதார நிலையில் உள்ள ஏற்றத் தாழ்வைக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். இரு சமூகங்களின் நிலைமை இப்படியிருக்க, “”பாவம்! பிராமணன் ஏழை பிழைச்சுட்டுப் போறான்” என்று பிராமணரல்லாத பிரபுக்களில் சிலர் தங்களைச் சுற்றியுள்ள தரித்திரத்தையும், துக்கத்தையும் கவனிக்காது, பிராமணருக்குச் சலுகை காட்ட முன் வருவது எவ்வளவு மடத்தனம்? ஏழை பிராமணன் என்று தங்களைச் சொல்லிக் கொள்வதன் மூலம், பார்ப்பான் என்ன அக்கிரமம் செய்தாலும், தப்பிக் கொள்ளவும் கஷ்டப்பட்டு சுகஜீவனம் நடத்தவும் முடிகிறதல்லவா? மனு தர்மம் பிரிட்டிஷ் ராஜாங்கத்தில் வெளிப்படையாய் அமுல் செலுத்துவதில்லை யென்றாலும், சமூக வாழ்வில் மறைமுகமாகப் பாமர ஜனங்களின் அனுதாபத்தைக் கவர்ந்து அமுல் செலுத்தி வருகிறது என்பதில் என்ன சந்தேகம்?

பிச்சை போடுவதிலும் ஜாதியா?

“”பிராமணாளுக்குத் தர்மம் செய்தால் ரொம்பப் புண்யமுண்டு. வீடு தேடி வந்த பிராமணாளுக்கு இல்லை யென்று சொல்லாதே” என்கிறான். செம்பை எடுத்துக் கொண்டு நேராக வீட்டினுள் வந்து ஒரு பிராமணன் இவன் கேட்பது பசியைத் தணித்துக் கொள்ளச் சாப்பாடு அல்ல. பச்சரிசி அரைப்படி தினம் 6 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக ஊரை ஒரு தரம் சுற்றிவிட்டு இரண்டு மணி நேரத்தில் சுமார் 8, 9 படி அரிசி சம்பாதித்து விடுகிறான். ஒரு ரூபாய் ஆயிற்று.

“”சாமீ ஈ இ! குலையெல்லாம் எரியுது. ஏதாவது பழயது இத்தனை இருந்தா ஊத்துங்கோ” என்று ஈனஸ்வரத்தில் தெருவில் நின்று கொண்டு கேட்கிறான் ஒரு கிழவன். “”சக்கிலி பறையருக்குப் போடறதில்லை போ” என்று வீட்டுக்காரர் உள்ளேயிருந்து சொல்லுகிறார். கிழவன் வீதிக் கடைசி வரை கேட்டும் ஒருவரும் ஒன்றும் போடவில்லை. முனிசிபாலிடி குப்பைத் தொட்டியில் உள்ள எச்சிலையைப் பார்க்கிறது பசி.

குடி அரசு  கட்டுரை  29.12.1935

You may also like...