வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

 

பார்ப்பனரல்லாதாருக்குத் தனித்தொகுதி வேண்டும்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு ஆகவே ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது.

ஜஸ்டிஸ் கட்சியானது இன்று எல்லோருடைய செல்வத்தையும், பலாத்காரத்தாலோ, சட்டபூர்வமாகவோ கைப்பற்றி எல்லா மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கத் துணியாவிட்டாலும், அதைவிட முக்கியகாரியமான எல்லா மக்களுக்கும் பிரதிநிதித்துவத்தைச் சமமாய் அடையலாம் என்றும், எவ்வித சமத்துவத்துக்கும் சட்டத்தின் மூலமாய் மாத்திரம் தகுதி இல்லாமல் பிறவியின் மூலமாகவே தகுதி அற்றவர்கள் என்று ஏற்படுத்தியிருந்த சமூகக் கட்டுகளை உடைத்து சகல பிரஜைகளுக்கும் சம உரிமை கொடுக்கும் காரியத்தில் முயற்சித்து வெற்றி பெற்று வருகிறது.

இன்று எல்லோரும் சமமாக மண், பெண், பொன் ஆகியவைகளை அனுபவிப்பவிக்கலாம் என்பதற்கும், கைப்பற்றலாம் என்பதற்கும் சில நிபந்தனைகள் இருந்தாலும் அனுபவிப்பது குற்றமல்ல என்கிறதும், அது நாஸ்திகமாகாது என்கிறதும் நம்நாட்டில் அனுபவத்தில் வந்து விட்டது. ஆதலால் முழு அமுலில் வர இன்னும் சில முறைகள் வகுக்கவும், திருத்தவும் தான் வேண்டியிருக்கிறது.

ஆனால் சகல மக்களும் சமூக வாழ்வில் ஒன்று என்பதும், சகல பிரஜா உரிமையும் பிரதிநிதித்துவமும் சகல மக்களும் சமமாய் அனுபவிக்கலாம் என்பதும் சட்டப்படிக் கூட அதிகமாய் இல்லாமல் பிறவி காரணமாய் மதப்படி, சாஸ்திரப்படி பலமாக தடுக்கப்பட்டிருப்பதுடன் இதை மீறுவது மதத்திற்கு விரோதம்  நாஸ்திகம் என்றெல்லாம் சொல்லப்படுவதுடன் அமுலிலும் இருந்து வருகிறது.

அரசியலானது மதக்கட்டளையையும், மததத்துவத்தையும், அடிப்படையாகக் கொண்டது என்பதிலும் சந்தேகமிருக்காது.

இப்படிப்பட்ட தடுப்புகளையும், மதக் கட்டளைகளையும், ஆஸ்திகத் தையும், அலட்சியம் செய்து இன்று ஜஸ்டிஸ் கட்சியின் முயற்சியானது மதம், சாஸ்திரம் இவை சம்மந்தமான ஆஸ்திகம் என்பனவற்றை யெல்லாம் தவிடு பொடி ஆகும்படிச் செய்து சண்டாளன், இழிமகன், அடிமை என்பவர்களுக்கு எல்லாம் அரசியலில் சம உரிமை, பிரதிநிதித்துவத்தில் சம உரிமை சமூக வாழ்வில் சம உரிமை என்ற கொள்கையை நிலை நிறுத்தி விட்டார்கள்.

இன்று பார்ப்பனர்கள் பறையர்களிடம் படிக்கிறார்கள்.

இன்று பார்ப்பனர்களுடன் சேர்ந்து பறையர்கள், சக்கிலியர்கள் உட்கார்ந்து சட்டம் செய்கின்றார்கள்.

தொட்டால், பேசினால், நிழல்பட்டால், கண்ணில் தென்பட்டால் பாவம் என்கின்ற ஆஸ்திகம் ஒழிந்து, அது சம்பந்தமான சாஸ்திரம், மதக் கட்டளை ஆகியவை பொசுக்கப்பட்டு, அப்படிப்பட்டவர்களுடன் சாஸ்திரிகள், ஆச்சாரிகள் முதலியவர்கள் சரிசமமாக உட்காரும்படியாக செய்துவிட்டார்கள்.

அவ்வளவோடு மாத்திரமல்லாமல் கிரமப்படி பிரதிநிதித்துவ உரிமை அடையும்படி சட்டம் செய்து விட்டார்கள்.

முக்கியமாக இந்நாட்டில் இன்று அரசியலில் உள்ள கட்சி இரண்டுதான், அதாவது ஒன்று சாஸ்திரம், மதம் ஆகியதையே அடிப்படையாகக் கொண்ட காங்கிரசு, மற்றொன்று அதை லட்சியம் செய்யாமல் எல்லா மக்களுக்கும் எல்லா உரிமையும் சட்டப்படி, கணக்குப்படி இருக்க வேண்டும் என்கின்ற அளவில் நாஸ்திகம் கொண்ட ஜஸ்டிஸ் கட்சி. ஒரு சமயம் நாஸ்திக பாஷ்யக்காரர்களின் பத்துவாப்படி, அருள்வாக்குப்படி ஜஸ்டிஸ் கட்சியார் நாஸ்திகர் அல்லாதவர்களாகவும், மத நம்பிக்கைக்காரர்கள் ஆகவும் இருக்கலாம் என்றாலும் அனுபவ சாத்தியக் கொள்கைக்காரர்களுக்கு ஜஸ்டிஸ்காரர்களின் கொள்கையைப் பார்த்தால் அவர்கள் குருட்டு ஆத்திகர்கள் அல்ல, மூடநம்பிக்கை மதவெறியர்கள் அல்ல என்பது விளங்கும்.

ஜஸ்டிஸ் கட்சியார் எல்லா மக்களுக்கும் சமூகத்துறையில், அரசியல் பிரதிநிதித்துவத்தில் சமத்துவம் வழங்க வேண்டும் என்று ஆரம்பித்த காலத்தில் அவர்கள் அரசியல் உத்தியோகங்களிலும், அரசியல் பிரதிநிதித்துவத்திலும் சகல ஜாதியாருக்கும் சமத்துவம், சம சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்றே ஆரம்பித்தார்கள். அதை எதிர்த்த முறையில்தான் இந்நாட்டில் பார்ப்பனர்  பார்ப்பனரல்லாதார் என்ற வகுப்புப் பிரிவும், காங்கிரஸ்  ஜஸ்டிஸ் என்கின்ற கட்சிப் பிரிவும் ஏற்பட்டது.

அதனாலேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் உரிமையும் வேண்டாம் என்பதுதான் தேசீயம், தேச பக்தி என்பதாகவும், அவை வேண்டும் என்பதே தேசத் துரோகம், குலாம்தனம் என்பதாகவும் சொல்லப்பட்டு ஜஸ்டிஸ் கட்சி இழிவுபடுத்தப்பட்டது. அவற்றையெல்லாம் சமாளித்துத் தங்களது கொள்கையில் ஜஸ்டிஸ் கட்சியார் வெற்றி பெற்று, இன்று அவர்கள் உச்ச ஸ்தானத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாரம் சென்னை சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சென்னை நகரசபை சட்டப்படி ஜஸ்டிஸ் கட்சி கொள்கை முழுவதும் வெற்றி பெற்று விட்டது என்று சொல்லலாம்.

அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி இந்நாட்டில் கிறிஸ்துவர்கள், மகமதியர்கள், இந்துக்கள் என்று மூன்று மதப்பிரிவும், இந்துக்களுக்குள் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் ஜாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று மூன்று பிரிவும் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம், தனித் தொகுதி தேர்தல், தனி உத்தியோக எண்ணிக்கை ஆகியவைகள் இருக்க வேண்டுமென்று ஜஸ்டிஸ் கட்சியார் கேட்டார்கள். அதற்காக பாடுபட்டார்கள். “”இந்தியா பூராவும்” அதை எதிர்த்தது.

கடசியாக உத்தியோகத்தில் பங்கு வீதக் கொள்கை ஒப்புக் கொள்ளப்பட்டது.

பிரதிநிதித்துவத்திலும் ஸ்தானம் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இன்று தேர்தல்களிலும் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதிகள் ஒப்புக் கொள்ளப்பட்டாய்விட்டது. இதற்கு மாத்திரம் கடசியாக பார்ப்பனர்களும், காந்தியாரும் எவ்வளவோ சூட்சி செய்து காந்தியாரின் பட்டினிச் சண்டித்தனமும் பயன்படுத்தப்பட்டது. என்ன செய்தும் தனித் தொகுதி கிறிஸ்தவர், மகமதியர், ஐரோப்பியர், இந்துக்கள் ஆகியவர்களுக்கு இருப்பது போல இந்துக்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கும் ஏற்பட்டு விட்டது. சென்னை முனிசிபாலிட்டிகளுக்கு கவுன்சிலராய் நிற்கும் தீண்டப்படாதவர் ஒருவருக்கு இனி தீண்டப்படாதவர்கள் தான் ஓட்டுக் கொடுக்க முடியும். பார்ப்பனர் ஓட்டை எதிர்பார்த்து எச்சைத் தொட்டி ஓரம் இனி தீண்டப்படாதவர் நிற்க வேண்டியதில்லை.

இந்த சட்டத்தின் மூலம் பொப்பிலி “”அரக்கன்” செய்த வேலை இப்போது சுப்பராய ஆழ்வாராக (விபூஷணனாக) இருக்கும் 6 வருஷத்துக்கு முன் சுப்பராய ராக்ஷசனாக இருந்தவர் செய்த வேலையைவிட முத்தையா முதலியார் (அசுரன்) செய்த வேலையைவிட மேலான வேலை என்றே சொல்லுவோம்.

அதாவது தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதித்துவம் ஒதுக்க முதலில் சட்டம் செய்தவர் டாக்டர் சுப்பராயன் அவர்களாவர்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு உத்தியோகம் வழங்க சட்டம் செய்தவர் தோழர் எஸ்.முத்தையா முதலியார் என்றே சொல்லலாம்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி வழங்கினவர் பொப்பிலி அரசர் என்றே சொல்ல வேண்டும்.

இம் மூவர் எப்படிப்பட்டவராயிருந்தாலும், நாளைக்கு இவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராயிருந்தாலும், இந்தக் காரியங்களுக்கு இவர்களுக்கு சிலை வைத்து கௌரவிக்க வேண்டியது நன்றி உடைமையாகும் என்பதில் நமக்குச் சிறிதும் ஆ÷க்ஷபணையில்லை.

இதற்காகத் தோழர் சுயமரியாதை வீரர் சிவராஜ் அவர்களின் உறுதியையும், பிடிவாதத்தையும் போற்றாமலிருக்க முடியவில்லை.

ஆனால் இன்னும் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அதாவது எல்லாத் தேர்தல்களும் பார்ப்பனத் தொகுதி, பார்ப்பனரல்லாதார் தொகுதி என்று பிரிக்கப்பட வேண்டும் என்பதே தான்.

அதைப் பலர் ஒப்புக் கொள்ளுவதில்லை. அதற்கு அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் “”இப்பொழுதே பார்ப்பனர்கள் செல்வாக்கு ஒழிந்துவிட்டது. இனி அவர்கள் விகிதாச்சாரம் கூட பெற முடியாது. ஆதலால் அவர்களுக்குத் தனித் தொகுதி கொடுத்தால் அவர்களுக்கு அதிக ஸ்தானம் ஏற்பட்டுவிடும்” என்கிறார்கள்.

இதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது. பார்ப்பனர்கள் கூட்டுத் தொகுதியில் இருந்தால் சதா தொல்லை விளைவித்துக் கொண்டிருப்பார்கள்.

உதாரணமாக திருச்சி, திருநெல்வேலி ஜில்லா போர்டுகளைக் காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும் என்பதில் என்ன கருத்து இருந்தது.

பொதுத் தொகுதி இருப்பதினால் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு பல அய்யர்களும், அம்மாள்களும், பல சாஸ்திரிகளும், பல சாஸ்திரிச்சி அம்மாள் அவர்களும் புகுந்து கொண்டார்கள்.  இப்பொழுது எந்தப் பிரசிடெண்டு வந்தாலும் எப்படியாவது சரிப்படுத்தி தங்கள் கைக்குள் போட்டுக் கொள்ளுவார்கள்.

ஆதலால் அதையும் முடித்துவிட்டால் பிறகு பார்ப்பனத் தொல்லை பெரிய அளவுக்குக் குறைந்து போகும். அவர்களோடு கூடஇருந்தால் நம்மவர்களுக்குச் சதா தொல்லைதான். அவர்கள் பச்சோந்தி மாதிரி சமயத்துக்குத் தகுந்த நிறம், தேவேந்திரன் மாதிரி யாரையும் இந்திரப் பட்டம் அடையவொட்டாமலும் எப்படியாவது தபசைக் கலைத்த கதைகள் போல் தொல்லை விளைவித்துக் கொண்டே இருப்பார்கள். கண்களை அரித்துத் தின்னும் பூச்சிகள் போல் மனித சமூகத்தின் உழைப்பையும், சுயமரியாதை யையும், சாந்தியையும், ஒற்றுமையையும் அரித்துத் தின்னும் மனித உருக் கிருமிகளே யாவார்கள்.

ஆதலால் இனி நாம் செய்ய வேண்டிய வேலை சட்டம், சமாதானம், மனித சமூகத் திருப்தி, ஒற்றுமை ஆகியவைகளை உத்தேசித்தாவது பார்ப்பனத் தொகுதி பார்ப்பனரல்லாதார் தொகுதி என்று பிரித்துவிடும் படியான தொண்டில் இறங்கித் தீவிரமாய் வேலை செய்ய வேண்டும் என்று கருதுகிறோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  10.11.1935

You may also like...