திருச்சி மகாநாடு

 

இயக்கம் ஆரம்பமானதேன்?

சுயமரியாதை இயக்கம்  ஆரம்பித்தபோது அதன் காரணஸ்தர்கள் என்ன நோக்கத்துடன் இதனை ஆரம்பித்து வைத்தார்கள் என்பதை முதலில் நீங்கள் அறிய வேண்டும்.

ஜஸ்டிஸ் கட்சியின் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் காரர்களிலேயே பலர் ஒப்புக் கொண்டு 191819ல் முதலில் வேலை செய்து பின்னர் காங்கிரசில் சேர்ந்து மேற்படி வகுப்புவாரி தீர்மானத்தை காங்கிரசின் கூட்டத்தில் கொண்டுவந்த காலத்தில் இத்தீர்மானம் லிஸ்டிலிருந்து ரத்து செய்யப்பட்ட காரணத்தால் காஞ்சீபுர மகாநாட்டில் நானும் மற்றும் சிலரும் அதற்காகவும், பார்ப்பன சூட்சியை வெளியாக்கி அவர்களது ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகவும் வேறொரு கட்சியை ஏற்படுத்துவதாகச் சொல்லி சபதங்கூறி வெளிவந்தோம். வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை அமுலுக்கு கொண்டுவர கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சிக்கு நாம் ஆதரவு கொடுத்தோம் என்பதையும், பிராமணரல்லாதாருக்கு நன்மை செய்ய ஏற்பட்ட ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க முயற்சிக்கும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் ஆகியவர்கள் தொல்லையிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காகவுமே நாம் இந்த இயக்கத்தைத் தோற்றுவித்தோம் என்பதையும் நீங்கள் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.

ஈரோட்டு வேலைத் திட்டக் கூட்ட சமதர்ம திட்டத்துக்கு நாம் ஒருபோதும் பின் வாங்கக் கூடாது. ஆனால் அத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய விஷயத்தில் நமது பொறுப்பைக் கொண்டு செலுத்த அவற்றை அமுலுக்குக் கொண்டுவர, தக்க அனுபவ சாத்தியமான திட்டத்தோடு வேலை செய்ய வேண்டும். இவற்றிற்கு ஜஸ்டிஸ் கட்சியாரின் உதவியை எவ்வளவு தூரம் உபயோகப்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சுயமரியாதை கட்சியில் 100க்கு 90 பேர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் அனுதாபிகளாகவும், மெம்பர்களாகவும், நிர்வாகிகளாகவும் இருக்கின்றார்கள். நம் இயக்க நன்மையை உத்தேசித்து நாம் எவ்வளவு தூரம் அவர்களுக்கு உதவி செய்யக் கூடுமோ அவ்வளவு தூரம் நாம் செய்ய வேண்டும் என்கிற கருத்தில் தான் ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களாய் இருக்கிறார்களே ஒழிய மந்திரிகளாவதற்கல்ல.

ஜஸ்டிஸ் கட்சிக்குக் கொள்கை உண்டு

ஜஸ்டிஸ் கட்சிக்குக் கொள்கை இருக்கிறது. அவர்கள் எந்தக் கொள்கைகளைக் கொண்டு ஆரம்பித்தார்களோ அக்கொள்கைகளை இப்போதும் காப்பாற்றி வருகிறார்கள். அவர்கள் போகும் வழியில் உத்தியோகம் சம்பளம் வந்தால் அதை விட்டுவிட வேண்டுமா? மேலும் அக் கட்சியார் தங்களது கொள்கையாகிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை விட்டு விட்டார்களா? அல்லது அவர்கள் எப்போதாவது அரசாங்கத்தை மிரட்டுவதாகச் சொல்லி உங்களிடம் ஓட்டுப் பெற்று பல்டி அடித்தார்களா?

நாம் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டுமென்று கருதினால் அதற்கு ஏற்ற திட்டம் போட்டு வெளிப்படையாய்ச் சொல்லிவிட வேண்டும். ஆனால் நம்மிடம் அப்படி ஒன்றும் தற்போது இல்லை. ஈரோடு திட்டத்தில் (அது மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. பர்.) தேர்தல்களில் ஸ்தானங்களை ஏற்று சட்டம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. பொதுவுடமை சட்ட விரோதமானது என்று அரசாங்கத்தார் தீர்மானித்து விட்டார்கள். வீணாக ஏன் ஜெயிலுக்குப் போக வேண்டும்? நமக்கு முக்கியமான வேறு வேலை செய்ய இடமில்லையா? இனிமேலா நாம் ஜெயிலுக்குப் போய் வீரத்தன்மையைக் காட்ட வேண்டும்? நான்கு பேர்கள் மட்டும் கட்சியின் சார்பாக ஜெயிலுக்குப் போனால் பலன் கிட்டிவிடுமா? நான் ஜெயிலுக்குப் போகப் பயப்படவில்லை. நான் ஜெயிலுக்குப் போனால் எனக்கு என்ன கஷ்டம் இருக்கும்? ஒன்றுமில்லை சுகமாக இருப்பேன். அதிகாரிகளும் என்னைக் கண்டு கிழவனாய் விட்டானேயென்று மரியாதை செய்கிறார்கள்.

“”இந்த அரசாங்கத்தை ஒன்று உருக்கி வாரு அல்லது உடைத்து விடு” என்று கர்ஜித்துக் கொண்டு உழைத்து வந்த காந்தி இன்று எங்கே? “”10 லக்ஷம் பேர் ரத்தம் சிந்த உயிரைவிடக் காத்திருக்கிறார்கள்” என்று சொன்ன காந்தி, இப்போது எல்லோரையும் சட்டசபைக்குப் போய் ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்யும்படி சொல்லவில்லையா? 100000க்கணக்காக காங்கிரஸ்காரர்கள், தொண்டர்கள் ஜெயிலுக்குப் போன பலன் என்ன ஆயிற்று? அன்று வசூலித்த கோடி ரூபாய் எங்கே? அதற்கப்புறம் வசூலித்த 50 லக்ஷ ரூபாய் எங்கே? பட்டாஸ் வெடிகள் போல் எல்லாம் வெடித்து ஓய்ந்து போய்விடவில்லையா? இப்படியிருக்கும்போது அரசாங்கத்தோடு ஜஸ்டிஸ் கட்சியார் ஏன் ஒத்துழைக்கின்றார்கள் என்றால் அவர்கள் மனித சமூகத்துரோகக் கட்சியார்கள் சபைக்குள் நுழைந்து கொள்ளாது பார்த்துக் கொள்கிறார்கள். ஜாதி ஆணவக்காரர்கள் ஏகபோக உரிமைக்காரர்கள் உள் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டாமா? இந்தக் காரணத்துக்காகத்தான் இப்படிச் செய்கின்றனர். இந்த முயற்சியில் நமக்குப் பங்கில்லையா? ஜாதி ஆணவமும், ஜாதி ஆதிக்கமும் சட்டசபையில் தாண்டவமாட நாம் சம்மதிக்கலாமா? நாம் அனுபவத்தில் பயன்படத் தக்கமாதிரியில் புத்திசாலித்தனமாய், தந்திரத்தில் நாம் வேலை செய்ய வேண்டும். எல்லா விஷயங்களையும் நாம் தீர யோசிக்க வேண்டும். சர்க்கார் காங்கிரசை அடக்கிவிட்டோமென்று இந்த எண்ணத்துடனேயே நமது இயக்கத்தையும் அடக்கிவிடப் பார்க்கிறார்கள். நாம் அதற்கு இடம் கொடுக்காமல் நமது பிரசாரத்தை பின்னும் பலப்படுத்தி வேலை செய்ய வேண்டும். வெறும் ஆவேசம் கொண்ட வாலிபர்களுக்காக நமது இயக்கம் இரையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

“”சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியார்தான் ஜாதி ஆணவம் பிடித்த பார்ப்பனர்களும் கொள்கை இல்லாத காங்கிரசுக்காரரும் உள் நுழைந்து விடாமல் காப்பாற்றி வருகிறார்கள். வீணாக ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி நாம் குறை பேசக் கூடாது. வீராவேசப் பேச்சால் ஒன்றும் முடியாது. பணக்காரர்களை நாம் தற்போதுள்ள நிலைமையில் எப்படி ஒழிக்க முடியும்? எந்த வகையில், அனுபவத்தில் இன்று அது முடியும்? பார்ப்பான் ஒழிவதற்கு முன் பணக்காரத் தன்மை ஒழிந்து விடுமா? அது சாத்தியமா என்று எண்ணிப் பாருங்கள். ஜஸ்டிஸ் கட்சியார் இல்லாவிட்டால் பொட்டுக் கட்டும் வழக்கம் ஒழிந்திருக்குமா? குழந்தை மணம் ஒழிக்க சட்டம் வந்திருக்குமா? தீண்டாமை விலக்குக்கு ஒரு அளவாவது சட்டம் ஏற்பட்டிருக்குமா? இவ்வளவு பார்ப்பனரல்லாதார் உத்தியோகம் பெற்றிருக்க முடியுமா? பார்ப்பனரல்லாதாருக்கு இவ்வளவு சுயமரியாதையாவது ஏற்பட்டிருக்குமா? மற்றும் பல நன்மைகள் நமக்கு ஏற்பட்டிருக்குமா என்பதை எண்ணிப் பாருங்கள். “”பாழாய்ப் போன எலெக்ஷன்” என்று சொல்லி விடுவதில் பயனில்லை. பாழாய்ப் போன எலெக்ஷனில் வருகிறவன் எவனாயிருந்தாலும் அவனைத்தான்  சர்க்காரும் மதிக்கிறார்கள். அவன் வசம் தான் நிர்வாகம் போய்ச் சேருகிறது; எதிரிகள் வசம் போனால் அதைக் கொண்டு நன்மை அதிகம் செய்யாவிட்டாலும் நமக்குத் தீமை அதிகம் விளைவிக்க முடியும். அங்கு சேர்ந்து செய்யும் சட்டம் தான் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாகிறது. அவன் செய்வதுதான் நமது தலைவிதியாகிறது. எலெக்ஷனில்தான் நம் பிரதிநிதியை அனுப்ப முடிகிறது.

சமதர்மம் என்பதைத் தமிழ்நாட்டு வாலிபருள்ளத்திற் புகுத்தித் தணல் விட்டெரியச் செய்தது, நான்தானென்று தோழர் ஜீவானந்தம் சொன்னார். “”சமதர்மம் ஒரு நாளில் ஏற்படக் கூடியதல்ல. ரஷியாவில்கூட ஒரு நாளில் சமதர்மம் ஏற்பட்டுவிடவில்லை. பல காலத்து வேலையால்தான் அதுவும் சந்தர்ப்பம் சரியாய் இருந்ததால்தான் முடிந்தது. முதலில் சமூகத் துறையில் சமதர்மம் ஓங்க வேண்டும். ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி குறை கூறுவதால் நாம் நன்மையைச் செய்வதாகாது. நமது கொள்கைக்கு பலம் ஏற்படுத்த தகுந்த நல்ல நிலைமை ஏற்படுத்தும் வரை தற்போது நடக்கும் வேலைத் திட்டத்துக்குத் தடை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது இயக்கத்துக்கு இன்று நிர்ப்பந்தம் ஏற்பட்ட காரணத்தாலேயே நாம் நம் நிலைமையை நன்கு பரிசீலனை செய்து திட்டமொன்றை வகுக்க வேண்டும். எந்த அளவுக்குத் தடையில்லையோ அந்த அளவுக்குப் பிரசாரம் செய்யலாம். தடை மீற வேண்டுமென்று நாம் முடிவு செய்த பின்பே அதைப் பற்றி யோசிக்க வேண்டும். சமதர்மத்தில் எனக்குள்ள ஆர்வம் அவசரம் நீங்கள் அறியாததல்ல. படிப்படியான திட்டத்துடன் அதை ஒழுங்கான வழிமுறைகளுடன் கொண்டு செலுத்த வேண்டும்.

சமதர்மமென்பது மதம் மாறுவது என்பது போல வெறும் உணர்ச்சியல்ல. காரியத்தில் அனேக மாறுதல்களும், புரட்சிகளும் ஏற்பட வேண்டும். அதற்குத் திட்டங்கள், பிரசாரம் செய்யச் சௌகரியங்கள் முதலியவை களெல்லாம் வேண்டும். அவைகளையும், காலதேச வர்த்தமானங்களுக்குத் தகுந்தபடி செலுத்தக்கூடிய ஆற்றலும், துணிவும் வேண்டும். கண்மூடித்தனமாக வெறும் பாமர மக்களின் திருப்தியையே எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள் பின் செல்லவுங் கூடாது. நாம் பாமர மக்களைத் திருப்பி நடத்துகிறவர்களாய் இருக்க வேண்டும். சமதர்மத்துக்கு நாம் திட்டம் வைத்திருக்கிறோம். அத் திட்டத்துக்கு இம்மி அளவு பின்போகும்படியோ மாற்றிக் கொள்ளும்படியோ நான் சொல்ல வரவில்லை.

குறிப்பு:            19.10.1935  ஆம்  நாள்  திருச்சி  டவுன்ஹாலில்  பெரிய  கொட்டகையில்  நடைபெற்ற  திருச்சி  மாவட்ட  சுயமரியாதை  மாநாட்டில்  ஆற்றிய  தலைமையுரை.

குடி அரசு  சொற்பொழிவு  27.10.1935

You may also like...