குச்சிக்காரி புத்தி  “”நீ மாத்திரம் வாழ்ரயோ?” -I

 

காங்கிரசின் அயோக்கியத்தனமும், அதில் வயிறு வளர்த்த பார்ப்பனர்களின் இழி தன்மையும், அவர்களுடைய கூலிகளின் கூட்டிக் கொடுக்கும் தனமும் இன்று அசல் குச்சிக்காரியின் தன்மைக்கே வந்துவிட்டது.

காங்கிரஸ்காரர்கள் பொது மக்களை ஏமாற்றி வசூலித்த கோடிக் கணக்கான ரூபாய்களின் மோசத்தைக் குறித்து வெகுநாளாகவே பொது ஜனங்கள் பேசி வருகிறார்கள். காந்தியார் முதல் ஒவ்வொருவரையும் அனேகர் நேரில் கண்டு கேட்டும் வந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காங்கிரஸ்காரர் அவ்வப்போது மழுப்பிக் கொண்டே வந்திருக்கிறார்களே ஒழிய கேட்கப்பட்ட  கேள்விகளுக்கு நாளதுவரை சரியான சமாதானம் சொல்லப்படவில்லை.

ஒரு கோடி ரூபாய் பித்தலாட்டம்

அதாவது ஒரு கோடி ரூபாய் இன்ன காலத்துக்குள் சேர்ந்துவிட்டால் ஒரு வருஷத்தில் சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுக்கிறேன் என்று காந்தியார் முதல் காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் பொது ஜனங்களை ஏமாற்றி ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாகவே வசூலித்தார்கள்.

ஒரு வருஷத்தில் சுயராஜ்ஜியம் வந்ததா? இதோ சுயராஜ்யம் வந்துவிட்டது. அதோ சுயராஜ்யம் வந்து விட்டது என்று சொன்னதோடு சுயராஜ்யத்தின் நிழல் தெரிகின்றது என்றுகூட சொல்லி மறுபடியும் வசூல் செய்தார்கள். இது இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?

சுயராஜ்யம் வராத விஷயம் ஒரு பெரும் ஏமாற்றமாக இருக்கட்டும், ஏனெனில் அந்த வார்த்தையே “”கீக்கிரி மூக்கிரி” என்பதுபோல் அர்த்த மற்றதாகிவிட்டது. ஆதலால் ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காகவே அப்படிச் சொன்னதாக இருக்கட்டும். ஆனால் அந்த ஒரு கோடி ரூபாய் என்ன ஆயிற்று என்பதற்கு சரியான பதில் சொல்ல வேண்டியது யோக்கியர்களின் கடமையல்லவா?

அதற்கப்புறமும் 3, 4 தடவைகளில் பணம் லட்சக்கணக்கில் வசூலிக்கப்பட்டன. அவற்றின் கதி என்ன ஆயிற்று என்பதற்குப் பதில் சொல்ல வேண்டியது யோக்கியர்களின் கடமை அல்லவா?

முட்டாள்களின் பணத்தை மோசக்காரர்கள் வஞ்சகக்காரர்கள் வசூலித்து வயிறு வளர்ப்பது இயற்கை என்றாலும் அந்தப் பணமானது மற்ற சாதுக்களுக்கும் உண்மையான தொண்டு புரிபவர்களுக்கும் இடையூறாக இருக்குமானால் இனியும் மக்களை ஏமாற்றி வசூலிக்காமல் இருப்பதற்கும், முட்டாள்கள் மோசம் போகாமல் இருப்பதற்கும் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியது உண்மையான ஊழியர்களின் கடமை அல்லவா என்று கேட்கின்றோம்.

ஆகவே இந்த 3, 4 தடவை வசூலித்த பொதுப் பணம் சுமார் 20000000 இரண்டு கோடி ரூபாய்க்கு காங்கிரஸ்காரர்கள் இப்போது என்ன விபரம் சொல்லுகிறார்கள் என்பதைக் கவனிப்போம்.

முதலாவது விபரம் என்னவென்றால் அதைப்பற்றிக் கணக்குக் கேட்பவன் தேசத் துரோகி என்று சொல்லி இழிகுணமாய் வைவதாகும்.

இரண்டாவது விபரம் என்னவென்றால் கேட்பவனை நீ மாத்திரம் யோக்கியனா என்று குச்சிக்காரித்தனமாய்ப் பேசுவதாகும்.

மூன்றாவது விபரம் ஏதோ அங்கும் இங்கும் சில தவறுதல்கள் இருப்பது சகஜம்தான். அதை எல்லாம் ஒரு பெரிய காரியத்தில் கவனிக்கலாமா? தேசபக்தர்கள் தியாகிகள் என்பவர்கள் தானே கையாண்டு இருக்கிறார்கள். போனால் போகட்டுமே என்று பல்லைக் கெஞ்சுவதாகும்.

2 கோடி ரூபாய் நாசமானதைப் பற்றி இங்கு நாம் அதிகக் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்தியா பூராவுக்கும் சிறிது காலத்தில் (2 கோடி ரூ.) பொது மக்களிடம் இருந்து சுயராஜ்ஜியத்தின் பேரால் வசூலிக்கப்பட்டது 2 கோடியாகுமானால்,  இதே கூட்டத்தார் தென்னாட்டில் மாத்திரம் கோயில்கள் மடங்கள் என்னும் பேரால் வசூலிக்கப்படும் ரூபாய்கள் வருஷம் ஒன்றுக்கு 2லீ கோடி ரூபாய் 3 கோடி ரூபாய் ஆகின்றது.

இந்தப் பணங்கள் 2லீ கோடி அல்லாமல் கணக்குக்கு வராமல் சுவாமி, கோவில், மடம் என்னும் பெயரால் கொள்ளையடிக்கும் பணம் அதைப் போல் பல மடங்கு இருக்கலாம். இவையெல்லாம் என்ன கதி ஆகின்றது என்று பார்த்தால் காங்கிரஸ் சுயராஜ்ஜியம் என்னும் பெயரால் போகும் கொள்ளை, அதில் நடக்கும் அயோக்கியத்தனம், திருட்டு புரட்டு ஆகியவை பிரமாதமல்ல என்று தோன்றும். ஆனால் இரண்டுக்கும் தான் “”கணக்கு” வெளியிடப்படுகிறது என்று சொல்லலாம்.

இதற்குக் கணக்குக் கேட்டாலும் கேட்டவனை இதுபோலவேதான் நாஸ்திகன் என்றும், மதத்துரோகி என்றும், ஜாதித் துவேஷி என்றும், பச்சையாய் பார்ப்பன துவேஷி என்றும் தான் சமாதானம் சொல்லப்படுகிறது.

காட்டப்படும் கணக்குகளினுடைய மோசம் எப்படி இருக்கும் என்று பார்த்தால் ஒரு யோக்கியமான கோர்ட்டு மூலம் இன்று உள்ள குருக்கள் அர்ச்சகர், தர்மகர்த்தாக்கள், டிரஸ்டிகள், கமிட்டி மெம்பர்கள் என்பவர்களில் 100க்கு 99 பேர் “”போர்ஜரி, பொய்க்கணக்கு, பொதுச் சொத்தை கையாளுதல் என்கின்ற குற்றங்களுக்கு வருஷக்கணக்காய் ஜெயிலுக்கு போக வேண்டியவர் களாவார்கள், பலர் நாடு கடத்தப்பட வேண்டியவர்களுமாவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் வேண்டியதில்லை. கோவில் கள்ளர் குகை என்றும், விவசாரிகள் இல்லம் என்றும் சொன்னவர்கள் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும் என்று சொல்லும்படியான நிலையில்தான் இருந்து வருகிறது.

மற்றும் அக் கணக்குகளைப் பார்க்க யாருக்கு அக்கரை? யார் மூலம் பரிசோதகர்கள் வைத்து பார்க்கப்படுகின்றது? பரிசோதகர்களின் யோக்கியதை என்ன? அர்ச்சகர் குருக்கள் ஆகியவர்களிடம் உள்ள மோகனாஸ்திரம் என்ன? டிரஸ்டிகளின் செல்வாக்கு எப்படிப்பட்டது? என்பவைகளையெல்லாம் பார்த்தால் எந்தக் கணக்காவது உண்மையாய் யோக்கியமாய் பார்க்கப்பட்டு எந்தக் கணக்காவது உள்ளதை வெளியில் சொல்லிவிட முடியுமா என்பதும் மற்றும் அக்கணக்கின் யோக்கியதையும் நன்றாய் விளங்கும்.

அதுபோலவே காங்கிரசையும் சுயராஜ்ஜியப் பேச்சையும் அதன் டிரஸ்டிகள், கமிட்டி மெம்பர்கள் பிரசாரகர்கள் ஆகியவர்களின் யோக்கியதையும் பார்த்தால் தேசாபிமானம் என்பது வடிகட்டின அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு மார்க்கம் என்று சொன்னவர்கள் வாய்க்கு சர்க்கரை போட வேண்டிய அளவுக்கு மெய்ப்பிக்கப்பட்டுவிடும்.

நமது தேசாபிமானிகள் யார்? அதன் டிரஸ்டிகள் யார்? கமிட்டியார்கள் யார்? இவர்களின் கூலிகள் யார்? இவர்களை ஆதரிக்கும் பத்திரிகைக் காரர்கள் யார் என்பவைகளைக் கவனித்து இவர்களின் நடவடிக்கை இது வரை எப்படி இருந்து வந்தது என்பதையும், அவர்களது தனிப்பட்ட யோக்கியதையும், கொடிவழிப்பட்டியையும் பார்த்தால் தேசாபிமானத்தின் பேரால் வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் கொள்ளை போயிற்று என்று சொல்லுவதில் அதிசயமிருக்காது. ஏனெனில் அதைத் தவிர வேறு ஒன்றுக்கும் வசூலிக்கப்படவில்லை என்றும், அதிலுள்ள ஆட்களின் யோக்கியதை இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது என்றும், தெரிந்த விஷயத்தைப் பற்றி குறை கூறுவது முட்டாள்தனத்தைத் தவிர வேறு பயன் அளிக்கக்கூடியதாகுமா என்பதும் விளங்கும்.

இந்த நிலையில் சுயராஜ்ஜிய நிதிப் பணங்கள் யார் பேரால் வசூல் செய்யப்பட்டதோ அவரது சந்ததியார்களே இப்பண சம்மந்தமான கணக்குகளில் உள்ள புரட்டுகளைக் கண்டு பிடித்து வெளியிட்டிருப்பதைச் சில பத்திரிகைகள் எடுத்துக்காட்டி, பொது ஜனங்களுக்கு இனியும் இப்படி முட்டாள்தனமாக ஏமாந்து போகக்கூடாது என்று எச்சரிக்கை செய்தால் அதைக் கண்ட யோக்கியர்கள் ஆத்திரப்படுவதின் காரணம் என்ன என்பதை விளக்க வேண்டுமா?

தமிழ்நாட்டு கமிட்டியைப் பொருத்தவரை பணம் கொள்ளை போன விஷயம், கணக்குச் சொல்லாமல் வரவு வைத்து சரி செய்து கொண்ட விஷயம் எல்லாம் கூட்டிப் பார்த்தால் நமக்குத் தெரிந்த வரை 3, 4 வருஷங்களில் வருஷம் பல பல ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று இப்போதும் பந்தயம் கட்டி உறுதி கூறுவோம்.

மொத்தத்தில் இப்பவும் ஒரு ஸ்டேட்மெண்ட் வெளியிடுகின்றோம். அதை மறுக்க காங்கிரசாருக்கு அல்லது அவர்கள் கூலிகளுக்கு சரக்கு இருக்குமானால் வெளியில் வரட்டும் என்று அறைகூவி அழைக்கின்றோம்.

அதாவது 1922, 23, 24, 25ல் காங்கிரசில் இருந்த பார்ப்பனர்கள் தோழர்கள் டாக்டர் ராஜன் சாஸ்திரியார், எம்.கே. ஆச்சாரியார், சந்தானமய்யங்கார், சுப்பிரமணியம் முதலியவர்களும் மற்றும் சேலம் பார்ப்பனர்கள், திருநெல்வேலி பார்ப்பனர்கள், சென்னைக்காரர்கள் முதலிய சகல பார்ப்பனர்களும், தாங்கள் வாங்கிய பணங்களுக்கு வாங்கியபடி சரியான கணக்குக் கொடுத்தார்களா? எவ்வளவோ ஆயிரம் ரூபாய் இவர்கள் பேரிலிருந்து சரியான வகையும் பொறுப்பும் தெரியாமல் வசூலிக்க முடியாமல் வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு (ஆயிரம் ஆயிரமாய்) வரவு வைத்து செலவெழுதப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சேராமல் இன்று எந்தக் காங்கிரஸ் பார்ப்பனராவது மீதியாய் இருக்கிறார்களா என்பதாகும்.

மற்றும் எத்தனையோ பார்ப்பனர்கள் கதர்கடையில் இருந்து பணம் பச்சையாகத் திருடிக் கொண்டு போய் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் நடத்தாமல் விடப்பட்டிருக்கிறது என்பது பொய்யா என்று கேட்கின்றோம்.

மற்றும் திருச்சியில் மாத்திரம் நேற்று மீனாம்பள்ளி ஜமீன்தாருக்குப் போட்டியாய் காங்கிரஸ் கேண்டிடேட்டாய் நின்றவர்கள் அவர்களுக்கு வேலைசெய்தவர்கள் முதல் கதர் போர்டில் கதர் சம்மந்தத்தில் இருந்த ஒரு டஜன் பார்ப்பனர்களில் (பெயர் வேண்டுமென்று காங்கிரஸ் பத்திரிகைகள் கேட்டால் எழுதத் தயாராயிருக்கிறோம்) ஒருவராவது யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்று சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம்.

காங்கிரஸ் ஆபீசில் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்த்தவர்களில் பண விஷயத்தில் நாணயமாய் நடந்து கொண்டவர்கள் 100க்கு 10 பேராவது உண்டா என்று கேட்கின்றோம்.

காங்கிரஸ் ஆடிட் ரிப்போர்ட்டு என்பதாக 1922 வருஷ முதல் நாளது வரை அச்சிட்டு வைத்திருப்பதும், அக்கணக்குகளில் யார் யார் பேரால் வர வேண்டிய ரூபாய்கள் விவரமில்லாமல் ஒரு வரியில் வரவு வைத்துச் செலவெழுதப்பட்டதும், இன்றும் ஒரு நடுநிலைமைக்காரர் தணிக்கை செய்து பார்த்தால் þ ஒரு கோடி ரூபாய்போன வழியைப் பற்றி “மராட்டா’ “விடுதலை’ ஆகிய பத்திரிகைகள் சொல்வது எவ்வளவு கொஞ்சமானது என்பது விளங்கும்.

ராமசாமி மீது குறை

தோழர் ஈ.வெ. ராமசாமி வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு வாங்கிய நிதிக்கு கணக்குக் கொடுக்கவில்லை என்பதை ஒரு காங்கிரஸ் பத்திரிகை மராட்டாவில் வந்த சேதியை எடுத்து எழுதிய விடுதலையின் பிரசாரத்துக்கு சமாதானமாகச் சொல்லுகிறது.

இந்தச் சமாதானமானது விடுதலை சொன்ன குறைகளை காங்கிரஸ் பத்திரிகை ஆதரிக்கிறது என்று தான் அர்த்தமே ஒழிய, காங்கிரஸ் பண விஷயத்தில் அதன் நிர்வாகிகள் யோக்கியமாய் பொறுப்பாய் நடந்து கொண்டார்கள் என்பதாக ஆகவில்லை. தோழர் ராமசாமி இடம் கொடுத்த பணத்துக்கு ராமசாமி கணக்குச் சொல்லவில்லை என்பது வாஸ்தவமாய் இருந்து அவரிடம் கணக்குக் கேட்டு வாங்காமலும் வாங்கியிருந்தால் கொடுத்த பணத்தை வரவு செலவு செய்து கொண்டு பாக்கி உள்ளதற்கு கணக்கு வாங்காமலோ, வசூல் செய்யாமாலோ விட்டிருப்பார்களானால், காங்கிரஸ்காரர்கள் பணவிஷயத்தில் எவ்வளவு பொறுப்பற்றவர்களாய் நடந்திருக்கிறார்கள் என்பதற்கு வேறென்ன அத்தாட்சி வேண்டும்.

அன்றியும் நூறோ, இருநூறோ, ஐநூறோ, ஆயிரமோ ஈ.வெ.ரா. மீது பாக்கி இருந்தால் அதை வசூலிக்க அவரிடம் இன்று வரை மார்க்க மில்லாமல் போய்விட்டதா? என்றும் கேட்கின்றோம்.

இனி கதர் நிதி, திலகர் நிதி விஷயத்திலும் ஈ.வெ.ராமசாமியிடம் கணக்கு சொல்லப்படாமல் பாக்கி இருக்குமானால் எதற்காக அவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு ஏற்பட்டது என்பது நமக்கு விளங்கவில்லை.

தோழர் ஈ.வெ.ரா. 1924 ம் வருஷம் முதல் காங்கிரசையும், காங்கிரஸ் வேலையாட்களையும், காங்கிரஸ் தலைவர்களையும் தயவுதாட்சண்ணிய மின்றி வெளியாக்கிய வண்ணமாகவே இருந்து வருகிறாரே ஒழிய யாருக்கும் அடிமையாய் இருந்து வரவில்லை.

அப்படி இருக்க ஈ.வெ.ரா.விடம் கதர் நிதிக்கு என்றோ, திலகர் நிதிக்கு என்றோ, வைக்கம் நிதிக்கு என்றோ கொடுத்த பணம் ஏதாவது மீதி இருக்குமானால், இந்த 10, 13 வருஷமாய் வசூல் செய்ய எது தடையாய் இருந்தது என்பதும், அதையேன் வெளிப்படுத்தாமல் இதுவரை மூடி வைக்கப்பட்டிருந்தது என்பதும் விளங்கவில்லை.

தோழர் ஆதிநாராயண செட்டியார் எழுதிய கணக்கு அறிக்கையைப் பார்த்தால் ஈ.வெ.ரா. யோக்கியதை வெளியாகும் என்று அப்பத்திரிகை எழுதி இருக்கிறது.

தோழர் ஆதிநாராயண செட்டியார் யோக்கியதை பெற்ற ஒரு கணக்கு பரிசோதகரல்ல என்றாலும், அவர் எழுதியதாகச் சொல்லப்படும் அறிக்கைக்குப் பிறகுதான் தோழர் ஈ.வெ. ராமசாமி மாகாணக் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாகவும், மாகாணக் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், மாகாண கான்பரன்ஸ், ஜில்லா கான்பரன்சுகளில் சுமார் 100க்கு மேற்பட்ட கான்பரன்சுக்குத் தலைவராகவும் கதர் போர்டுக்கு 5 வருஷ தலைவராகவும் தெரிந்தெடுக்கப்பட்டார்.

ஆகவே வாங்கிய பணத்துக்குக் கணக்குக் கொடுக்காதவர் எப்படி மாகாண காங்கிரஸ் ஸ்தாபனத்துக்கு பல தடவை தலைவராக தெரிந் தெடுக்கப்பட்டார் என்பதை கவனித்தால் அவரை தெரிந்தெடுத்து அவரை பின்பற்றிய அத்தனை பேரும் திருட்டில் பங்கு வாங்கியவர்களா? அல்லது மடையர்களா? அல்லது அயோக்கியர்களா? என்று கேட்கின்றோம்.

காரியதரிசி பதவிக்கு அறிக்கை எழுதிய தோழர் ஆதி நாராயண செட்டியார், பல தடவை ஈ.வெ.ராவுடன் போட்டி போட்டு ஈ.வெ.ரா. வாங்கிய ஓட்டுக்கு 100க்கு 15 போலவே ஒவ்வொரு தடவையும் ஓட்டுப் பெற்று தோல்வி அடைந்திருக்கிறார். மற்றும் ஆதிநாராயண செட்டியாரைப் பற்றிய பாக்கி விஷயம் இதில் வர வேண்டியதில்லை. ஆகையால் அதை விட்டுவிட்டோம். ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால் கணக்கு தணிக்கை விஷயத்தில் ஆதிநாராயண செட்டியார் போன்ற ஆட்களை காங்கிரஸ் பார்ப்பனர்கள் நன்றாய் உபயோகித்துக் கொண்டார்கள். பிறகு அவரின் திருப்தி அற்ற நடத்தையாலேயே வேறு தகுதியுள்ள பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

விவரம்  “”வைக்கம் சத்தியாக்கிரகம்”

இவை ஒருபுறம் இருக்கட்டும். தோழர் ஈ.வெ.ரா. வைக்கம் சத்தியாக்கிரக நிதி விஷயமாய் வாங்கிய பணத்துக்கு கணக்கு கொடுக்கவில்லை என்பதற்கு சமாதானம் சொல்லி ஆக வேண்டுமல்லவா? குச்சிக்காரி மாதிரி “”நீ மாத்திரம் யோக்கியனா” என்று சொன்னால் போருமா? அல்லது “”பெரிய காரியத்தில் இதெல்லாம் கவனிக்கக் கூடாது” என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாமா? அல்லது “”சகலத்தையுந் துறந்த தேச பக்த தியாகிகள் தானே கையாடினார்கள்” என்று சொல்லலாமா? கணக்கு சொல்லித் தானே ஆக வேண்டும். எனவே வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு அட்வான்சாக ரூபாய் ஆயிரம் (19000 அல்ல) ஈ.வெ.ரா. பேருக்கு வைக்கத்துக்கு அனுப்பியது உண்மை. அப்பணத்துக்கு ஈ.வெ.ரா.வால் 2 தடவை கணக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரம் கூறுகிறோம்.

முதலில் 2 தடவை ஏன் கணக்கு கொடுக்கப்பட்டது என்பது ஒரு கிளைக் கேள்வி ஆகலாம். ரசீதுகளுடன் முதல் தடவை கொடுத்தக் கணக்கு காங்கிரஸ் ஆபீசில் கை தவறி விட்டது. இரண்டாம் தடவை கணக்கு கேட்டதற்கு ஈ.வெ.ரா. முதலிலேயே வவுச்சருடன் கணக்கு அனுப்பி ஆய்விட்டது என்று பதிலெழுதினார். பிறகு தோழர் முத்துரங்க முதலியார் ஆபீசுக்கு அதிகாரியாக வந்தார். அந்த சமயம் ஈ.வெ.ரா. காங்கிரசை பலமாக தாக்கிக் கொண்டிருந்த சமயம். ஆதலால் முத்துரங்கத்தைப் பிடித்து அவர் மூலமாக ஈ.வெ.ரா. மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு தயாரிக்க சூக்ஷி செய்து அதற்கு ஆக எவ்வளவோ தூரம்  பழங்கணக்குகளை எல்லாம் பூதக்கண்ணாடி வைத்து ஆபீசில் பரிசீலிக்கப்பட்டு, இந்த ஒரு விஷயம் அதாவது, “”1000க்கு கணக்கு அனுப்பாமல் இருக்கும்” விஷயத்தைக் கண்டுபிடித்து கணக்கு அனுப்பும்படி ஈ.வெ.ராவுக்கு ரிஜிஸ்டர் நோட்டீசு அனுப்பி, கணக்கு கேட்கப்பட்டது. கணக்கு அனுப்பாவிட்டால் பத்திரிகை களில் பிரசுரிக்கப்படும் என்று அதில் எழுதி இருந்தது. அதற்குப் பதிலாக மறுபடியும் ஒரு தடவை கணக்குகளை ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பப்பட்டது.

இந்தக் கணக்கின் பேரில் அக்கணக்கில் கண்ட நபர் ஒவ்வொரு வருக்கும் எழுதி அதில் கண்ட பணம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டதா என்று காங்கிரஸ் ஆபீசிலிருந்து எழுதிக் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் பெற்றுக் கொண்டதாக ஆபீசுக்குத் தகவல் எழுதியும் இருக்கிறார்கள்.

அதாவது 1000 ரூபாயில் 700 ரூபாய் வைக்கம் சத்தியாக்கிரக காரியதரிசிக்கு கொடுக்கப்பட்டதும் பாக்கி 300ல் பாலக்காடு சவுரி ஆச்சிரமத்துக்கு கதருக்குப் பஞ்சு வாங்கி அனுப்பியதும், மீதி நூத்திச் சில்லரை ரூபாய் கோட்டார் சத்தியாக்கிரகத்துக்கு கொடுக்கப்பட்டதும் ஆகிய கணக்குகள் மேல்கண்டபடி இரண்டு தடவை அனுப்பப்பட்டிருக்கிறது.

கதர் நிதி

மற்றபடி கதர் நிதி பண்டு 500 ரூ. விஷயமாய் ஈரோடு பொறுத்தவரை எந்த நபரிடம் பாக்கி இருந்ததோ அந்த நபரைத் தோழர் சந்தானமய்யங்காரே பல தடவை நடந்து கேட்டு பகுதி வசூல் செய்யப்பட்டு, பகுதி வசூல் செய்யாமல் அலட்சியமாய் விட்டு விட்டார்கள். இது அவருக்கும் நன்றாய் தெரியும்.

மற்றபடி திலகர் நிதி விஷயம் ஒன்றும் கிடையாது. ஜில்லா ஆபீசு கணக்கு விஷயமாய் ஈரோடு ஜில்லா கமிட்டி காரியதரிசியிடமிருந்து கோயமுத்தூர் ஜில்லா கமிட்டி காரியதரிசி கணக்குப் பார்த்து நேர் செய்து வரவேண்டிய ரூபாய்கள் பூராவும் பெற்றுக் கொண்டு கணக்கில் கையொப்பம் செய்து விட்டு போயிருக்கிறார். இவைகளில் எதற்கும் ஈ.வெ.ராமசாமிக்கு நேரில் சம்பந்தமில்லை.

இந்த உண்மைகள் இன்றும் யார் வேண்டுமானாலும்  ஆதாரங்களோடு அறிய தக்க சவுகரியம் இருக்கிறது. இவை எப்படியோ இருந்தாலும் காங்கிரஸ் பணம் பாழாயும் கொள்ளை போயும் இருப்பதை ஈ.வெ.ராமசாமி கணக்கு கொடுக்கவில்லை என்று எழுதும் குற்றச்சாட்டு எப்படி சமாதானப்படுத்தும் என்பது விளங்கவில்லை.

பிரகாசம் 10000

பிரகாசத்துக்கு கொடுத்த 10000 பத்து ஆயிரம் ரூபாய் மோசம் செய்யப்பட்டது என்பதற்கு சொன்ன சமாதானம் மிகவும் மோசமானதாகும். என்னவென்றால் பிரகாசம் 10000 ரூ. கடன் வாங்கினார். கொடுப்பதாகச் சொன்னபடி கொடுக்கவில்லை. பிறகு அவர் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ள கமிட்டி தீர்மானித்தது. தோழர் சீனிவாசய்யங்கார் தலைவராய் வந்ததும் அதை மெள்ள நழுவ விட்டார். பிறகு இவ்விஷயம் காந்தியார் தகவலுக்கு எட்டச் செய்யப்பட்டது.

பிறகு ஏதோ தவணையின் மீது கொடுப்பதாக பிரகாசத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டது. கடைசியில் “ஸ்வஹா’ செய்து கொள்ளப்பட்டது. ஆகவே  பிரகாசம் பத்திரிகை நடத்தி நஷ்டப்பட்டதற்கும், காங்கிரசிடம் கடன் வாங்கி பஞ்சாயத்து செய்து கடைசியாக காந்தியார் முன்னிலையில் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு ஏமாற்றினதற்கும் என்ன சம்மந்தம் என்பதை பொது ஜனங்களே யூகித்துக் கொள்ள வேண்டும்.

ராஜகோபாலாச்சாரியார் 19000

தவிர ராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் அட்வான்சாக கொடுத்த 19000க்கு கணக்கு இல்லை என்று சொன்னால் அதற்கு சமாதானம் செலவு விபரம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று அப்பத்திரிகை எழுதுகிறது.

எத்தனை வருஷமாக காத்திருப்பது? அந்தப் பணம் எந்த மாதிரி செலவு செய்யப்பட்டது? (ஆச்சாரியார் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால்)

சத்தியமூர்த்தி தேர்தலுக்காக செலவு செய்யப்பட்டதா அல்லது வேறு என்ன காரியத்துக்கு செய்யப்பட்டது என்பதைப் பல வருஷங்களாகியும் காங்கிரஸ்காரரே தெரியும்படியான நிலைமை ஏற்படவில்லையானால், அப்பணம் யோக்கியமாய் செலவழிக்கப்பட்டது என்று எப்படிச் சொல்லிவிட முடியும்?

அல்லது பண விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் கவலையுடனும் ஒழுக்கத்துடனும் நடந்து கொண்டார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

கடைசியாக இந்த தவறுதல்களுக்கு அப்பத்திரிகை சொல்லும் சமாதானம் “”தேச பக்தர்கள் கையில் சில ஆயிரம் ரூபாய்கள் செலவாகி விட்டால் மூழ்கிப் போவது ஒன்றும் இல்லை” என்று எழுதிவிட்டு, ஜஸ்டிஸ் கட்சியில் சிலர் பதவிகளுக்காக உத்தியோகத்துக்காக லஞ்சம் வாங்கினதாக எழுதி இருக்கிறது. இதைப்பற்றி அடுத்த வாரம் விவரிப்போம்.

குடி அரசு  தலையங்கம்  24.11.1935

You may also like...