பட்டப் பகல் ஏமாற்றுந் திருவிழா

 

அ.ஐ.இ.இ.

சென்னையில் அக்டோபர் N 17, 18ந் தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கூடி “”பிரமாதமான” வேலை செய்துவிட்டது.

அதாவது மந்திரி பதவிகளை ஏற்பதா இல்லையா என்கின்ற விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அம்முடிவு என்னவென்றால் பதவி ஏற்பதா இல்லையா என்பதைப் பற்றி இப்போது ஒரு முடிவுக்கும் வர முடியாது என்பது.

ஆனாலிது விஷயத்தைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் தனிப்பட்ட முறையில் பிரசாரம் செய்வதில் எவ்வித ஆ÷க்ஷபணையுமில்லை என்றும் தீர்மானித்துக் கொண்டது.

இதன் கருத்தென்னவென்று பார்த்தால் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு எப்படி எப்படி பேசினால் மக்கள் ஏமாந்து ஓட்டுச் செய்வார்களோ அந்த முறைகளைக் கையாள காங்கிரசின் பேரால் பயனனுபவிக்கக் கருதி இருக்கும் பதவி வேட்டைக்காரருக்கு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதுதான்.

இது காங்கிரசின் சூழ்ச்சிக்கு சரியான உதாரணமா அல்லவா என்று பாருங்கள்.

மற்றும் இந்தத் தீர்மானம் “”பயித்தியம் தெளிந்து போய்விட்டது உலக்கை எடுத்துக் கொடு கோவணம் கட்டிக் கொள்ள வேண்டும்” என்று ஒரு பைத்தியக்காரன் சொன்னது போலவே இருக்கிறது.

காரியக் கமிட்டித் தீர்மானம் செய்வதற்கு முன்னுமிந்த நிலைமை தான் இருந்து வந்ததென்பதோடு இதனாலேயே பல காங்கிரஸ் பிரமுகர்களும் தங்கள் வருத்தத்தை தெரிவித்ததோடு ராஜீனாமாவும் செய்திருப்பதாய் பத்திரிகைகளில் பார்த்து வருகிறோம்.

தென்னாட்டில் சிறப்பாக தமிழ்நாட்டில் பல காங்கிரஸ் மகாநாடுகளில் பதவி ஏற்க வேண்டும் என்றும், பதவி ஏற்காவிட்டால் சட்டசபைக்குப் போவது முட்டாள்தனமென்றும், பதவி ஏற்பதோடு மாத்திரமல்லாமல் சீர்திருத்தத்தை நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும், சட்டசபைக்குப் போன பின்பும் பதவி ஏற்ற பின்பும் சீர்திருத்தத்தை அழிப்பது என்பது முட்டாள்தனமானது என்றும் தோழர்கள் சத்தியமூர்த்தி, சி.ஆர். ரெட்டி முதலிய பல காங்கிரஸ்காரர்கள் பேசி அதை அனுசரித்து பல தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கும்போது இப்போது திடீரென்று தோழர் சத்தியமூர்த்தி பல்ட்டி அடித்து இந்தப் பிரச்சினையை ஒத்தி வைக்க அனுகூலமாக இருந்திருப்பதில் ஏதாவது இரகசியம் இல்லாமல் இருப்பதற்கில்லை.

இரகசியம்

அந்த இரகசியம் என்னவென்றால் தீர்மானத்தின் 2வது பிரிவாகிய “”பதவி ஏற்கலாமா கூடாதா என்னும் விஷயத்தைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் அவரவர்கள் இஷ்டப்படி (சமயத்துக்குத் தகுந்தபடி) பேசி பிரசாரம் செய்து கொள்ளலாம்” என்கின்ற தந்திரம் நிறைந்த தீர்மானமேயாகும். இதை நாம் சூட்சி என்று சொன்னால் காங்கிரஸ்காரர்கள் ராஜ தந்திரம் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே பாமர மக்களை ஏமாற்றிப் பார்ப்பனர்கள் பதவி அனுபவிக்க வேண்டும் என்பதைத் தவிர காங்கிரசில் வேறு எவ்வித பயனும் இல்லை என்று நாம் சொல்லி வருவதற்கு இவை சரியான அத்தாக்ஷியாகும்.

மற்றும் சத்தியம், நேர்மை, பரிசுத்தம் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லப்படுவதும் மனிதத் தன்மைக்கு மீறின சக்தியும் “”தெய்வீகத் தன்மையும் கொண்ட ஒரு மகாத்மாவின்” சர்வாதிகாரத்தின் கீழ் நடைபெற்று வருவதும் இந்தியா முழுமைக்குமே சர்வ பிரதிநிதித்துவமான சபை என்று சொல்லப்பட்டதுமான காங்கிரசுக்கு இன்று புரட்டு, பித்தலாட்டம்,  ஏமாற்றம், சூட்சி, மூடு மந்திரம் ஆகிய காரியங்கள் இல்லாமல் ஒரு காரியமும் செய்ய முடியவில்லை என்பதை நமது பார்ப்பனர்கள் நிரூபித்துக் காட்டி விட்டார்கள்.

இன்று காங்கிரசு மூன்று முக்கிய கொள்கைகளைக் கைக் கொண்டு இருக்கிறது. அந்த மூன்று கொள்கைகள் தான் மற்ற அரசியல் ஸ்தாபனங்களில் இருந்து காங்கிரஸ் பிரிந்திருக்கிறது என்பதைக் காட்டுவதாகும்.

  1. அதாவது இந்திய சமுதாயத்தில் அரசியலில் வகுப்புவாதம் கூடாது என்பது.
  2. இந்திய சீர்திருத்தத்தை ஏற்காமல் அதை நாசமாக்குவது என்பது.
  3. அரசியலில் பதவி ஏற்கக் கூடாது என்பது.

இம்மூன்று காரியமும் காங்கிரசுக்கு முக்கியமான காரியம் என்று சொல்லி வந்திருப்பதுடன் அவை இல்லாததற்கு ஆகவே மற்ற அரசியல் கட்சிகளை (ஜஸ்டிஸ் கட்சியை) காங்கிரஸ் குறை கூறி விஷமப் பிரசாரமும் செய்து வந்திருக்கிறது.

இம் மூன்று விஷயங்களில் இன்றைய காங்கிரசின் யோக்கியதை என்ன என்று பார்ப்போம்.

மூடுமந்திரம்

மூன்றையும் மூடு மந்திரமாகவே வைத்து அவரவர்களுக்கு தகுந்தபடி சமய சந்தர்ப்பத்துக்கு தகுந்தபடி பேசி மக்களை ஏமாற்றி வருகிறது.

  1. வகுப்புவாதப் பிரச்சினையாகிய வகுப்பு தீர்ப்பைப் பற்றி அதாவது முஸ்லீம்களுக்கு அரசாங்கத்தாரால் கொடுக்கப்பட்டிருக்கும் வகுப்புப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி “”காங்கிரஸ் இப்போது ஒன்றும் சொல்லுவ தில்லை” என்பது.

(இதை முஸ்லீம்களைப் பொறுத்தவரை மூடுமந்திரமாக வைத்திருக்கிறது.)

  1. சீர்திருத்தத்தை உடைப்பது என்பதைப் பற்றி “”இப்போது ஒன்றும் பேசக் கூடாது”

(அதையும் சென்னை மாகாணத்தைப் பொறுத்த வரை மூடு மந்திரமாக வைத்திருக்கிறது.)

  1. சீர்திருத்த அரசியலில் மந்திரி பதவி ஏற்கக் கூடாது என்பதும், இப்போது முடிவு கட்ட முடியாது ஆனால் அவரவர்கள் இஷ்டப்படி பேசிக் கொள்ளலாம்.

(இதுவும் இந்திய ஓட்டர்கள் எல்லோரையும் ஏமாற்ற மூடு மந்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது.)

ஆகவே காங்கிரசானது எந்த கொள்கையில் அல்லது எந்த திட்டத்தில் தெளிவாகவும், யோக்கியமாகவும் அபிப்பிராயம் கொண்டு இருக்கிறது என்று பார்த்தால் மக்களை ஏமாற்றுவது என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்திய தேசீய காங்கிரஸ் ஸ்தாபனமே ஏமாற்று ஸ்தாபனமென்றும், காங்கிரஸ் மகாநாடுகள் எல்லாம் ஏமாற்றுந் திருவிழா என்றும் 1927லேயே நாம் எழுதியிருக்கிறோம்.

ஆகவே காங்கிரசானது காந்தியார் கைக்கு என்று வந்ததோ அன்று முதலே அது சூட்சி, தந்திரம், புரட்டு, பித்தலாட்டம் முதலாகிய ஏமாற்று காரியங்களில் பிரவேசித்து பாமர மக்களை ஏய்த்து வஞ்சித்து பொருள் கொள்ளை கொண்டு பார்ப்பனர்களும் காலிகளும் படித்தவர்களும், அதாவது “”பிராமணர்களும்” “”க்ஷத்திரியர்களும்” “”வைசியர்களும்” பிழைக்கும்படியான நிலைமையும், பாடுபடுகிற மக்களும் ஏழை விவசாயிகளும் இந்தக் கூட்டங்களுக்கு உழைத்து உழைத்து அழுது ஓட்டாண்டியாகவுமான காரியம் தான் நடந்து வருகிறது.

குடி அரசு  துணைத் தலையங்கம்  27.10.1935

You may also like...