கல்கத்தா கலாட்டா

 

சென்குப்தா கட்சியாருக்கும், சுபாஷ் போஸ் கட்சியாருக்கும் ஏற்பட்டிருந்த பிணக்கு மூலம் கல்கத்தா நகரசபை வெகுகாலம் சீரழிந்து கிடந்ததை அன்பர்கள் மறந்திருக்க மாட்டார்கள். கடைசியாக மாஜி மந்திரி தோழர் ஏ.கே. பஸ்லுல் ஹக் நகரசபை மேயர் ஆனது முதல் நகரசபைக் காரியங்கள் ஒருவாறு நடந்து கொண்டிருந்தன. நகரசபை கூடும்போ தெல்லாம் பெரும்பாலும் வாய்ச்சண்டை நடப்பது சகஜமாயிருந்து வந்தும் தமது சாதுரிய புத்தியினால் மேயர் ஒருவாறு சமாளித்துக் கொண்டிருந்தார். இப்பொழுதோ இந்திய ஸ்தல ஸ்தாபனங்களுக்கே மானக்கேட்டை யுண்டுபண்ணக்கூடிய  நிலைமை கல்கத்தா நகர சபையில் ஏற்பட்டிருக்கிறது. கார்ப்பொரேஷன் உத்தியோகங்களில் 100க்கு 25 விகிதம் முஸ்லீம்களை நியமிக்க வேண்டுமென்ற தீர்மானத்தைப் பற்றி ஆலோசிப்பதற்காக ஒரு விசேஷக் கூட்டம் கூட்ட வேண்டுமென்று 16 முஸ்லீம் அங்கத்தினர்கள் செய்துகொண்ட விண்ணப்பத்தின்படி சென்ற 13ந் தேதி ஒரு விசேஷக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் கல்கத்தாவில் வசிக்கும் முஸ்லீம் களுக்கும், இதர சமூகத்தினருக்கும் கார்ப்பொரேஷன் உத்தியோகங்களில் பிரதிநிதித்துவம் அளிப்பது பற்றிக் கார்பொரேஷன் கைக்கொண்டிருக்கும் கொள்கையை மேலும் அமலுக்குக் கொண்டுவரும் விஷயத்தை விசேஷ கமிட்டி பரிசீலனை செய்ய வேண்டுமென்று முடிவாயிற்றாம். ஆனால் விசேஷக் கமிட்டிக்கு அங்கத்தினர் தேர்ந்தெடுக்க முயன்றபோது தொல்லை ஆரம்பமாயிற்றாம். விசேஷக் கமிட்டிக்கு பிரேரணை செய்யப்பட்ட பல பெயர்கள் முஸ்லீம் அங்கத்தினர்களுக்குப் பிடிக்கவில்லையாம்.

கடைசியில் 5 ஹிந்துக்களும் 2 முஸ்லீம்களும் அடங்கிய விசேஷக் கமிட்டி ஒன்று நியமனமாயிற்றாம். இது முஸ்லீம் மெம்பர்களுக்குப் பிடிக்காததினால் அவர்கள் வெளியேறி தம் பதவிகளை ராஜிநாமாச் செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்தார்களாம். பிரஸ்தாபக் கூட்டத்தில் அங்கத்தினர்கள் நடந்து கொண்ட மாதிரியைப் பார்த்து மேயர் தோழர் பஸ்லுல் ஹக் மிகவும் மனம் புண்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அங்கத்தினர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதை சகிக்கப் பொறாத மேயர் “”இங்கு நீங்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுவதின் மூலம் உங்கள் எதிரிகளுக்குத்தான் ஆதரவு கொடுத்து வருகிறீர்கள். அவர்கள் உங்கள் எல்லோரையுமே கேவலப்படுத்தப் போகிறார்கள். இந்த ஆபாச விஷயங்கள் எல்லாம் அன்னிய நாடுகளுக்குத் தந்தியில் பறக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். இந்தியாவுக்கு சுயராஜ்யம் வழங்கக் கூடாது என்பதற்கு இதையெல்லாம் ஆதாரமாக உபயோகித்து இந்திய விரோதிகள் வாதிப்பார்கள்” என்று கூறினாராம். எனினும் அங்கத்தினர்கள் அடங்கவில்லை. தான் தோன்றித்தனமாகவே நடந்து கொண்டார்கள். கடைசியாக மனம் சலித்து “”ஒழுங்கான முறையில் தனது அலுவல்களைக் கவனிக்காத ஒரு சபையுடன் சம்பந்தப்பட்டிருக்க எனக்கு விருப்பமில்லை; ராஜிநாமாச் செய்துவிடுவதே நல்லது என்ற அபிப்பிராயம் நாளுக்கு நாள் பலப்பட்டு வருகிறது” என்று கூறி கூட்டத்தைக் கலைத்தாராம். அப்பால் மேயர் அறையில் ஒரு அந்தரங்கக் கூட்டம் நடந்தது. நகர சபையை விட்டு வெளியேறிய முஸ்லீம் மெம்பர்கள் தங்கள் ஸ்தானங்களை ராஜிநாமாச் செய்துவிடுவதாகச் சொன்னார்கள். ஆத்திரப்படக் கூடாதென்று சிலர் அபிப்பிராயப்பட்டதின் பேரில் ஒரு முடிவுக்கும் வராமல் பிரிந்தார்கள். சமரசம் ஏற்படுத்த மேயரும் எவ்வளவோ முயன்றார், பலன் ஏற்படவில்லை. 16ந் தேதி மத்தியானம் 15 முஸ்லீம் அங்கத்தினர் சேர்ந்தாற்போல் ராஜிநாமாச் செய்துவிட்டனர். வேறு கதியில்லாமல் மேயரும் தமது ஸ்தானத்தை ராஜிநாமாச் செய்துவிட்டார். அங்கத்தினர் பதவியை மட்டும் அவர் ராஜிநாமாச் செய்யவில்லை. தமது சகோதர அங்கத்தினர் அனைவரும் ராஜிநாமாச் செய்துவிட்டதினால் தாமும் ராஜிநாமாச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும், எனினும் சமரஸம் ஏற்படுமா? என்று பார்ப்பதற்காகவே தாம் அங்கத்தினர் பதவியை வகித்துக் கொண்டிருப்பதாயும் மேயர் தெரிவித்துவிட்டாராம்.

கடைசியில் கல்கத்தா நகரசபை குடை சாய்ந்து கிடக்கிறது, இதற்குக் காரணம் என்ன? காரணத்தை ராஜிநாமாச் செய்த முஸ்லீம் அங்கத்தினர் வெகு தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். அரசியல் காரணங்களை முன்னிறுத்தி நகரசபை ஹிந்து மெம்பர்கள் காரியங்களை நடத்தி வருவதினால் எல்லா சமூகங்களுக்கும் நீதி வழங்கப்படவில்லையென்றும், அத்தகைய ஒரு ஸ்தாபனத்தில் இருக்க தாம் விரும்பவில்லையென்றும் முஸ்லீம் அங்கத்தினர்கள் பட்டவர்த்தனமாகக் கூறியிருக்கிறார்கள்.

ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்ற வேண்டுமென்று சுயநலக் கூட்டத்தார் தென்னாட்டில் ஆர்ப்பாட்டம் செய்து வருவதினால் அவர்கள் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றினால் என்ன நிலைமை ஏற்படும் என்பதை தென்னாட்டு மக்களுக்கு விளக்கிக் கூறும் பொருட்டே கல்கத்தா சம்பவத்தைப் பற்றி இன்று விரிவாக எழுத எண்ணினோம்.

பிரிட்டிஷ் முதன் மந்திரியின் வகுப்புத் தீர்ப்பு வங்காள ஹிந்துக் களுக்கு ஒரு சிறிதும் பிடிக்கவே இல்லை. பொதுவாக வடநாட்டு இந்துக்கள் எல்லாம் வகுப்புத் தீர்ப்பை எதிர்த்தாலும் தேச ÷க்ஷமத்தை முன்னிட்டு சிறிது விட்டுக் கொடுத்து இந்தியர்களாகவே ஒரு சமரசம் செய்து, வகுப்புத் தீர்ப்பின் வன்மையைக் குறைக்க ஒருவாறு இணங்கினர். பண்டித மாளவியா கூட்டிய சர்வகட்சி மகாநாட்டு முடிவுகளை ஏனைய மாகாணங்கள் எல்லாம் ஒப்புக் கொண்டன. சமரசம் ஏற்பட்டு விடும் போலவும் தோன்றிற்று. வங்காள ஹிந்துக்களின் பிடிவாதத்தினால் மாளவியாவின் சமரச முயற்சி முறிந்தது. வங்காளத்திலே முஸ்லீம்களே மெஜாரட்டி சமூகத்தார். எனவே அவர்களுக்கு ஹிந்துக்களைவிட அதிகப்படியான ஸ்தானங்கள் வகுப்புத் தீர்ப்புப்படி அளிக்கப்பட்டிருக்கின்றன. அதை வங்க ஹிந்துக்கள் எதிர்க் கிறார்கள். அந்த எதிர்ப்பை மறைக்க காங்கிரஸ்காரர் சூழ்ச்சி செய்தாலும் வங்க ஹிந்துக்களின் அதிருப்தி இருந்து கொண்டே இருக்கிறது. தேசீய முஸ்லீம்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டு வகுப்புத் தீர்ப்பை ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்வதில்லை யென்று காங்கிரஸ் முடிவு செய்திருந்தாலும் ஹிந்து மகாசபையாரும் வங்க ஹிந்துக்களும் காங்கிரசின் இந்தப் பேடி நிலைமையை ஆட்சேபித்துக் கொண்டே இருக்கிறார்கள். வகுப்புத் தீர்ப்பு விஷயம் அவ்வளவு சுளுவாக மழுப்பக் கூடியதல்ல வென்றும், காங்கிரஸ்காரரின் நடுநிலைமைப் போக்கு கண்டிக்கத்தக்க தென்றும், வகுப்புத் தீர்ப்புக்குச் சரியான முடிவு கண்டாலொழிய பொதுவாக ஹிந்து இந்தியாவும், விசேஷமாக வங்காள ஹிந்துக்களும் காங்கிரசை ஆதரிக்கப்போவதில்லை யென்றும் சமீபத்தில் பாபு சுபாஷ் சந்திரபோஸ் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கல்கத்தா நகரசபை ஹிந்து மெம்பர்கள் எல்லாம் காங்கிரஸ் வாலாக்களே. முஸ்லீம்கள் அரசியல் சுதந்திரங்களுக்கு முட்டுக்கட்டை போடும் தோரணையிலேயே அவர்கள் காரியங்கள் நடத்தி வருகிறார்கள். தற்காலம் கல்கத்தா நகரசபை முன் முஸ்லீம்கள் கொண்டு வந்திருக்கும் கோரிக்கை அவ்வளவு அமிதமானதல்ல. கார்ப்பொரேஷன் உத்தியோகங்களில் 100க்கு  25 விகிதம் முஸ்லீம்களுக்கு அளிக்க வேண்டுமென்பதே அவர்களது கோரிக்கை. ஒரு மெஜாரட்டி சமூகத்தாருக்கு இதைவிட அதிகப்படியான ஒரு விகிதத்தைக் கோர சட்டப்படி உரிமை இருந்தும் 100க்கு 25 விகிதம் கோரும் ஒரு தீர்மானத்தை கல்கத்தா நகர சபை ஹிந்து மெம்பர்கள் ஆதரிக்கவில்லை என்றால் இதைவிடப் பெரிய கொடுமை வேறுண்டா?

காங்கிரஸ்காரர் ஸ்தல ஸ்தாபனங்களில் நுழையத் தொடங்கியதும் ஸ்தல ஸ்தாபன நிருவாகம் ஊழலாகத் தொடங்கிவிட்டது. அரசியல் காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு சாமானிய விஷயங்களிலும் கலாட்டா செய்வதே அவர்கள் வாடிக்கையாகி விட்டது.

கல்கத்தா நகர சபையில் ஏற்பட்டிருக்கும் மானங்கெட்ட நிலைமை தென்னாட்டு ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று பலர் அஞ்சுகின்றனர். காங்கிரஸ்காரர்களுக்கு சுதந்திரத்துக்கும், கலாட்டாவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. நிதான புத்தியும் கிடையாது.  கூச்சலும் குழப்பமுமே சுதந்தரத்துக்கு அழகென்று அவர்கள் தப்பாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தேசீயக் கொடி ஏற்றுவது, தலைவர்களுக்கு உபசாரப் பத்திரமளிப்பது, கதர் வாங்குவது முதலிய திருவிளையாடல்களே காங்கிரஸ் பார்வையில் பெரிய தேச சேவையாகத் தோன்றுகின்றன. மக்களது போக்குவரத்து சாதனங்கள், சுகாதார வசதிகள், கல்வி முறை முதலியவற்றை விருத்தி செய்ய வேண்டிய ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் தேசீயக் கொடியாகிய திருக்கூத்துகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை குறுகிய நோக்குடைய காங்கிரஸ் வாலாக்கள் அறிவதில்லை. எனவே காங்கிரஸ்காரர் ஆதிக்கம் பெற்றால் தென்னாட்டு ஸ்தல ஸ்தாபனங்களும் குட்டிச் சுவராவது உறுதி.

ஆனால் இதுவரையுள்ள ஸ்தல ஸ்தாபன தேர்தல்களின் முடிவுகளை உற்று நோக்கினால் நம்மவர்கள் அவ்வளவாக அஞ்சத் தேவையில்லை என்றே தோற்றுகிறது. ஏனெனில் காங்கிரஸ் பேரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் அசல் காங்கிரஸ்வாலாக்கள் அல்ல. சட்டமறுப்பு தர்பாரில் ஈடுபட்ட அசல் காங்கிரஸ்வாதிகளே கலாட்டாக்காரர்கள். தென்னாட்டு ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களில் பலர் தேர்தலுக்காக காங்கிரஸ்காரர் ஆனவர்களே. அவர்களில் மிக்காரும் நிதானஸ்தர்களாகையினால் மதிமயங்கி எதுவும் செய்துவிட மாட்டார்கள்.

மேற்கொண்டு நடக்கவிருக்கும் தேர்தல்களிலும் நிதானஸ்தர்களைப் பொறுக்கி எடுத்து ஸ்தல ஸ்தாபனங்களுக்கு அனுப்பினால் கல்கத்தா நகர சபைக்கு ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தி நமது ஸ்தாபனங்களுக்கும் ஏற்படாமல் காப்பாற்றிக் கொள்ளலாம். தென்னாட்டார் இதனை கவனிப்பார்களாக!

குடி அரசு  துணைத் தலையங்கம்  22.12.1935

 

You may also like...