ஸ்தல ஸ்தாபனம்

 

தலைவரவர்களே! தோழர்களே!!

சுமார் 10 நாட்களுக்கு முன்பாகவே இவ்வூர் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் அவர்கள் இந்த பஞ்சாயத்து ஆபீசு கட்டடம் திறப்பு விழா கொண்டாட்டத்தின்போது பெரியதொரு கூட்டம் வரும் என்றும், அந்தச் சமயத்தில் ஒரு மணி நேரமாவது அக்கூட்டத்தின் கவனத்துக்கு வேலை இருக்கும்படியாக ஏதாவது ஒரு உபன்யாசம் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். நானும் அதற்கு இணங்கி இந்த சமயத்தில் ஸ்தல ஸ்தாபனம் என்பது பற்றி பேசுவதாகவும் ஒப்புக் கொண்டேன். அதற் கேற்றாப்போல் இன்று ஸ்தல ஸ்தாபனத்தில் சம்பந்தப்பட்டவர்களும் அதன் நிர்வாகஸ்தர்களுமாகவே ஏராளமாகக் கூடி இருக்கிறீர்கள்.

கனம் வெள்ளியங்கிரி கவுண்டர் அவர்கள் தலைமையில் பேசுவதற்கு மிகுதியும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்தல ஸ்தாபன சம்மந்தமான அனுபவம் எனக்கும் சிறிது உண்டு. ஆனால் அவற்றை நான் ஒரு விதமாய் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் ஒரு விதமாய் உணர்ந்திருக்கக் கூடும். என்னவென்றால் ஸ்தல ஸ்தாபன சுயாட்சி என்பதையே நாணயமில்லாத காரியம் என்று தான் கருதுகிறேன். அதனால் பொது ஜனங்களது நன்மைக்கு கேடும், சர்க்காருக்கு ஒரு பெரும் பொறுப்பிலிருந்து விடுதலையும் ஏற்படுகிறது என்று நன்றாய்ச் சொல்லுவேன். ஒரு நல்ல அரசாங்கத்திற்கு இருக்க வேண்டிய பொறுப்புகளில் மக்களுடைய கல்வி, சுகாதாரம், வைத்தியம், போக்குவரத்து வசதி ஆகியவைகள் முக்கியமான பொறுப்பாகும்.

அந்த முக்கியமான பொறுப்புகளை அரசாங்கத்தார் பொது ஜனங்கள் தலையிலேயே தள்ளி விட்டார்கள். அதிலும் பொறுப்பற்ற ஜனங்கள் தலையிலேயே தள்ளிவிடப்பட்டது.

மற்றும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகப் பதவி ஒரு பொறுப்பான பதவி என்று கருதுவதற்கில்லாமல் அதை ஒரு போக போக்கியத்துக்கும் வியாபாரத்துக்கும், பெருமைக்கும் ஏற்ற பதவி என்று கருதும்படியாகச் செய்து விட்டார்கள்.

ஸ்தல ஸ்தாபனப் பொறுப்பு பொது ஜனங்கள் கையில் இருக்க வேண்டும் என்று கேட்டு அச்சுதந்திரத்தைப் பெற்றவர்கள் படித்த கூட்டத்தவர் களேயாவார்கள். அதை இன்று அனுபவிப்பவர்கள் வியாபாரிகளும், பெரிதும் மிராசுதாரர்களுமாவார்கள்.

வியாபாரிகளுக்கும், மிராசுதாரர்களுக்கும் வேறு எவ்வளவோ சொந்தக் காரியங்களும், நிர்வாகத்திலேயே அவை சம்மந்தமான தொடர்புகளும் உண்டு என்பதை நான் எடுத்துக் கூற வேண்டியதில்லை.

அவர்களுடைய வியாபார நேரமும், குடும்ப விவகார நேரமும் போன மீதி நேரத்தில் இளைப்பாறுவது போன்ற நேரமும் உணர்ச்சியும் தான் அவர்கள் இந்த ஸ்தல ஸ்தாபன நிர்வாக பதவியில் இருந்து செய்யக்கூடும்.

இந்த விளையாட்டு நேரமும், இளைப்பாறும் உணர்ச்சியும்கூட நேர்மையாயும், நீதியாயும் அப்பதவியை செலுத்த முடியாமல் அனேக தாக்ஷண்யங்களும், பிரதி உபகாரமும் நன்றி செலுத்தும் முறையும் சேர்த்து பாழாக்கி வருகின்றது.

இன்றைய ஸ்தல ஸ்தாபன நிர்வாகமானது சுமார் 10, 20 வருஷங்களுக்கு முன் “”பொறுப்பற்ற ஒரு அன்னிய அரசாங்கம்” என்று  சொல்லப்படுவதால் நடந்து வந்த நாணயப்படியும் நீதிப்படியும் திறமைப்படியும்கூட “”இன்று பொது ஜனங்களாலும் பொது ஜனப் பிரதிநிதிகளாலும்” நடத்தப்பட முடியவில்லை.

பிரசிடெண்டுகள், மெம்பர்களைத் திருப்திப்படுத்தி அவர்கள் தயவிலேயே தொங்கிக் கொண்டு தன் காரியம் பார்த்துக்கொள்ள வேண்டியவர்கள் ஆகிறார்கள்.

மெம்பர்கள் தங்களுக்குத் தேர்தலில் உதவி செய்தவர்களைத் திருப்தி செய்து கொண்டு தன் காரியம் பார்க்க வேண்டியவர்களாகிறார்கள். தேர்தலுக்கு வருவதோ அதில் வெற்றி பெறுவதோ ஆயிரம் பதினாயிரக்கணக்காய் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

ஒரு வியாபாரியும், ஒரு குடித்தனக்காரனும் இந்தப் பண நெருக்கடியான காலத்தில் ஆயிரம் பதினாயிரமாய் பணம் வட்டிக்கு வாங்கி செலவு செய்து பதவி பெற்றால் அப்பதவி மூலம் நீதியும், நேர்மையும், நாணையமும், யோக்கியப் பொறுப்பும் எப்படி எதிர்பார்க்க முடியும். அக் கடன்களை திருப்பிக் கொடுக்க வேண்டாமா?

இதற்கு மேல் அரசாங்கமோ ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்துக்கு பொறுப்பு இல்லாவிட்டாலும் அதிகாரம் செலுத்துவதில் “”நவாப்” தர்பாரைப்  பின்பற்றுகின்றது.

மெம்பர்களும், தலைவர்களும் தங்கள் காரியம் பார்த்துக் கொள்வதில் மாத்திரம் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறார்களே ஒழிய மற்ற நிர்வாகத்தில் சுதந்திரம் இல்லை. சர்க்கார் சட்டப்படிதான் நடக்க வேண்டும். சர்க்கார் நிபுணர்கள் சொல்லுவதைத்தான் வேத வாக்காகக் கொள்ள வேண்டும். மற்றபடி இடம் பொருள் ஏவல் ஆகியவைகளுக்கோ சமய சந்தர்ப்பங்களுக்கோ அனுபவ சாத்தியமான காரியங்களுக்கோ சிறிதும் இடமில்லை.

சீமையில் என்ன நடக்கிறதோ அதுதான் ஒரு இந்திய குக்கிராமத்திலும் நடக்க வேண்டும். அதைத் திருத்தவோ ஊருக்குத் தகுந்தபடி நடத்தவோ பிரதிநிதிகளுக்கு அதிகாரமில்லை.

ஸ்தல ஸ்தாபன இலாக்கா மேலதிகாரிகளும் அவர்களது சிப்பந்திகளும் ஜனப் பிரதிநிதிகளைத் தங்கள் வாயில் காப்போன்களைப்போல் மதிக்கிறார்கள். அந்த யோக்கியதைக்குத் தகுந்தபடி தான் ஜன பிரதிநிதிகள் அதிகம் பேர் நடந்து கொள்ளுகிறார்கள் என்றாலும் மொத்தத்தில் அந்த இலாக்கா சிறிதும் பொறுப்பும் சுயமரியாதையும் அற்றது என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் எப்படி கண்ட்றாக்டர்கள் ராஜ்ஜியமென்று சொல்லப்படுகிறதோ அதுபோலவே தான் ஸ்தல ஸ்தாபன இலாக்கா சர்க்கார் சிப்பந்திகளும் கன்ட்றாக்ட் ராஜ்யம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஈரோடு முனிசிபாலிட்டியாராகட்டும், கோவை ஜில்லா போர்டாரா கட்டும் இப்போது எவ்வளவு நேர்மையாக நிர்வாகம் நடத்தப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், இவை ஒரு டிப்டி கலைக்டர் நிர்வாகத்திலும் ஒரு ஜில்லாக் கலைக்டர் நிர்வாகத்திலும் இருந்தால் இதைவிட குறைந்த செலவில் இன்றைய சௌகரியத்தைவிட பல மடங்கு மேன்மையானதும் நன்மையானதுமான நிர்வாகம் நடைபெறும்.

அவர்களுக்குப் பல சுதந்திரங்களும் அனேக சௌகரியங்களும் உண்டு. பொது ஜனப் பிரதிநிதிகள் கையில் ஒப்புவித்து சரியானபடி நிர்வாகம் நடைபெறவில்லையென்று சொல்லுவதற்கு அனுகூலமாகவே பல சௌகரியங்களை பிடுங்கிக் கொண்டார்கள். ஒரு முனிசிபாலிட்டியோ ஒரு ஜில்லா போர்டோ வெகுநாள் பாடுபட்டு வெகு கஷ்டத்துடன் தயாரித்த ஒரு திட்டத்தை ஒரு கிராமக் கணக்குப் பிள்ளை நினைத்தால் அடியோடு கவிழ்ந்துவிடும்படியான நிலையில்தான் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு சர்க்காரின் ஆதரவு இருந்து வருகிறது.

சுயமரியாதையைப் பிரதானமாய் கருதுபவர்கள் இந்த ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தில் இருப்பது மிகக் கஷ்டமான காரியமாகும்.

தாலூக்கா போர்டுகளை எடுத்துவிட்டது பற்றி பலருக்கு அதிருப்தி இருந்து வருகிறது. ஆனால் அரசாங்கத்தார் அதற்குப் பதிலாக அந்தந்த சர்க்கிளிலிருந்து நேரடியாக ஜில்லா போர்டுக்கு அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொடுத்திருக்கிறார்கள். ஆதலால் அந்தந்த சர்க்கிள் தேவைகளையும் கவனித்துப் பொறுப்பேற்று நடத்த சௌகரியம் இல்லாமல் போகவில்லை. தாலூக்கா போர்டு நிர்வாகம் நாம் பார்த்தது தானே ஒழிய நமக்குத் தெரியாததல்ல. அதில் இருந்த ஊழல்கள் எவ்வளவு என்பதை நான் இப்போது சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். வரிப் பணமும், சர்க்கார் கிராண்டும் எல்லாம் சம்பளங்களுக்குத்தான் சரியாகப் போயிற்றே ஒழிய காரியத்துக்கு ஆவதில்லை. 6 மாதம் 8 மாதம் சம்பளம் இல்லாமல் திண்டாடின தாலூக்கா போர்டுகள் பல உண்டு.

ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் நம்ம பக்கங்களில் எவ்வளவோ தேவலாம் என்று சொல்லுவேன். மற்ற தமிழ் ஜில்லாக்களிலேயே எவ்வளவோ மோசமாக நடைபெற்று வந்தன. கட்சிப் பிரிவுகளாலும், ஒரு கட்சியை மற்றொரு கட்சி தூற்றி கைப்பற்றி விடுவதினாலும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் நேர்மை அடைந்துவிடாது.

ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தைச் சர்க்கார் தலையில் போட்டு நாம் கண்டித்து வேலை வாங்க வேண்டும். அவர்களும் நன்றாய்ச் செய்வார்கள். நாமும் தாட்சண்ணியமில்லாமல் வேலை வாங்கலாம்.

இப்போது கட்சிகளும், சுயநலமும்தான் நிர்வாகம் செய்கிறது. ஆகையால் இன்றைய ஸ்தல ஸ்தாபனம் ஜனப் பிரதிநிதிகளுக்கு லாபத்தையும் கௌரவத்தையும் கொடுக்கக் கூடியதாய் இருந்தாலும் பொதுஜன நன்மைக்கு ஏற்றதாக இல்லை என்பதோடு அந்த ஸ்தல ஸ்தாபன யந்திரமானது அந்தப்படி பொதுஜன நன்மைக்கு ஏற்ற விதமாக நேர்மையுடனும் சுதந்திரத்துடனும் நிர்வாகம் செய்யக்கூடியதாய் இல்லை என்பதுதான் எனது அபிப்பிராயம்.

குறிப்பு:            21.10.1935  ஆம்  நாள்  ஈரோடு  அருகில்  உள்ள  பிராமண  பெரிய  அக்கிரகார  யூனியன்  பஞ்சாயத்து  அலுவலகக்  கட்டடமாகிய  மகமத்  இப்ராகிம்  ஹால்  திறப்பு  விழாவில்  ஆற்றிய  சொற்பொழிவு.

குடி அரசு  சொற்பொழிவு  10.11.1935

 

You may also like...