திருடியது காங்கிரஸ்காரர்கள்தான்

சென்ற திங்கட்கிழமை (18.11.35) இதழில் “”தினமணி” என்ற சுயநலக் கூட்டத்தாரின் பத்திரிகை, திலகர் சுயராஜ்ய நிதியைத் திருடிய காங்கிரஸ்காரரின் படலத்தைப் பாராயணம் செய்ததற்காக, கடுங்கோபங் கொண்டு கண்டபடி எழுதியிருக்கிறது. கோபத்தால் அறிவு அந்தர்த்தானமாகிறது என்ற விஷயத்தை அப்பத்திரிகை தன் தலையங்கத்தில் நன்றாகத் தெரியப்படுத்தியிருக்கிறது. “”திருடியது யார்?” என்ற தலைப்பிட்டு எழுதியதற்குப் பதில் “”திருடியது காங்கிரஸ்காரர்கள்தான்” என்று எடுத்துக்காட்ட விரும்புகிறோம். திலகருடைய பெயரையும், இந்தியத் தாயினுடைய பெயரையும் கூறி, வழிபறிக் கொள்ளைக்காரர்களைப் போல, பெண் மக்கள் அணிந்திருந்த நகைகளையும்கூடத் திலகர் நிதிக்காகக் கொண்டு, மலை போலிருந்த ஒரு கோடி ரூபாய்களைக் கரைத்து, பெரும்பாலும் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டவர்களைத் “”திருடர்கள்” என்று கூறாமல் “”தேசபக்தர்கள்” என்று கூறுவதெங்ஙனம்? ஆனால், “”காங்கிரசைத் திட்டுவதையே தொழிலாய்க் கொண்டிருக்கும்” பூனா “”மராட்டா” பத்திரிகையில் விஷயங்கள் வெளி வந்த காரணத்தால், அவைகளை நம்பக் கூடாதென்று “”தினமணி” கூறுகிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை (17.11.35ல்) வெளிவந்த “”மராட்டா”வில், பிராமணரல்லாதார் காங்கிரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டுள்ள தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் கொள்கையிடத்தபிமானமுள்ள “”மராட்டா” காங்கிரசைச் சுத்தப்படுத்த வேண்டுமென்ற உயரிய நோக்கங் கொண்டுதான் திலகர் நிதியைத் திருடியவர்களுடைய மோசமான காரியங்களை வெளிப்படுத்தியுள்ள தென்பது நன்றாகத் தெரிகிறது. “”திருடியவர்கள் யார்?” என்ற கேள்விக்குத் “”தினமணி”யே பதிலளித்திருக்கிறது. அப்பத்திரிகை கூறுவதாவது@

“”ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து செலவிட்டதில் ஏதோ சில தொகைகளை திரும்பக் கொடுக்க முடியாமல் சில காங்கிரஸ்காரர்கள் கஷ்டப்படலாம். ஆனால், மோசம் செய்ய வேண்டுமென்று எடுத்துக் கொள்ளவில்லை. தேசத்திற்காக சகலத்தையும் தியாகம் செய்த சில தேசபக்தர்கள் கையில் சில ஆயிரம் ரூபாய்கள் செலவாய் விட்டதால், அதனால் மூழ்கிப் போவது எதுவுமில்லை. ஏனெனில், தியாகிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காங்கிரசைச் சார்ந்தது.” இதனால், திருடர்கள் காங்கிரஸ் “”தியாகிகள்” தான் என்பது விளக்கமாகத் தெரிகிறது. “”மோசம் செய்ய வேண்டும்” என்ற எண்ணத்தைக் கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், மோசம் செய்த விஷயத்தை மாத்திரம் “தினமணி’ மறுக்கவில்லை. “”தேசத்திற்காக சகலத்தையும் தியாகம் செய்த தேச பக்தர்கள்  சில ஆயிரம் ரூபாய்களைத் திருடினால் தோஷமில்லை என்று “”தினமணி” கூறுகிறது. அதனால் “”மூழ்கிப் போவது எதுவுமில்லை” என்கிறது. ஆனால், சுயநலக்கடலில் முழுகி மறைந்தது ஒரு கோடி ரூபாய் என்ற விஷயம் மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியாய் அனேக ஆண்டுகள் இருந்த தோழர் பி.வி.மகாஜன் விளக்கிக் காட்டியிருக்கிறார். “தினமணி’ கூறும் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான்  அதாவது “”தியாகிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காங்கிரசைச் சேர்ந்தது” என்பதாகும். ஆனால், “”தேசத்திற்காக சகலத்தையும் தியாகம் செய்த” தேசபக்தர்கள் திலகர் ஞாபகார்த்தத்திற்காக ஏற்படுத்தப்பட்ட நிதியைத் தம் சுயநலத்திற்காகத் “”தியாகம்” செய்ததற்கும் காங்கிரசினுடைய பொறுப்பிற்கும் என்ன சம்பந்தம்? தியாகிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காங்கிரசைச் சேர்ந்திருக்க, திலகர் நிதியிலிருந்து, தியாகிகள் பெருந்தொகைகளைக் கையாண்டு தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொண்டதைப் பற்றித் தான் கேள்வி எழுந்திருக்கிறது.

“”சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையில் இரண்டு குற்றங்கள் கூறுகிறார்” தோழர் மகாஜன் என்று “”தினமணி” எழுதுகிறது. இரண்டு குற்றங்களல்ல, ஏழு குற்றங்கள், சென்னை சுயநலக் கூட்டக் காங்கிரஸ் காரர்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது. அவை பின் வருமாறு@

  1. தோழர் சி. இராஜகோபாலாச்சாரியாரிடம் மூன்று ஆண்டு களாக ரூ.19,000 “”அட்வான்ஸ்” ஆக நின்றிருந்தது.
  2. தோழர் டி. பிரகாசம் பந்துலுவிற்கு ரூ.10,000 கடனாகக் கொடுக்கப்பட்டு, பின்பு அக்கடன் தொகை ரத்து செய்யப்பட்டது.
  3. ரூ.44,500க்குக் கொடுக்கப்பட்ட “செக்’குகள் மாற்றப் படவில்லை என்று கணக்கில் எழுதி வைக்கப்பட்டது.
  4. ரூ.20,000 நிரந்தர “டிபாசிட்’டில் வைக்கப்பட்டதைப் பற்றிபாங்கி விவகாரங்கள் “காஷ்புக்’கிலும் “டே புக்’கிலும் பதிவு செய்யப்படவில்லை.
  5. ரூ.20,225 மேற்குறித்தபடி ‘டிபாசிட் விவகாரங்கள் கணக்குப் புத்தகங்களில் பதிவு செய்யவில்லை.
  6. அங்கத்தினர்கள் ஜாபிதாவின்படி, அவர்களிடம் வசூல் செய்த பணத்திற்கும், கணக்குப் புத்தகங்களில் வரவு வைக்கப்பட்டிருக்கிற தொகைக்கும் காரணம் காட்ட முடியாத வித்தியாசம் இருக்கின்றது.
  7. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர்களுக்கு பிரயாணச் செலவு ரூ.1,400 கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஏழு குற்றங்களில், இரண்டு குற்றங்களுக்கு “ஜவாபு’ சொல்ல “தினமணி’ முயற்சித்திருக்கிறது. “”தென்னாட்டுக் காந்தியடிகள்” என்று கருதப்படும் தோழர் ராஜகோபாலாச்சாரியாரிடம் கொடுக்கப்பட்ட ரூ.19,000 “”அட்வான்ஸ்”  ஆகக் கொடுக்கப்பட்டது என்ற விஷயத்தை நாம் நன்றாக அறிவோம். “”அட்வான்ஸ்” கொடுத்தால் அதற்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டுமென்பது முக்கியமான விஷயம். “”ஸ்ரீ ஆச்சாரியார் தம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள பணத்திற்குக் கணக்கு விவரங்களையும் மீதப் பணத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டதை பின் ரிப்போர்ட்டுகளில் பார்க்கலாம்” என்று “”தினமணி” கூறுகிறது. “”பின் ரிப்போர்ட்டுகள்” எழுதப்படவில்லை என்பதுதான் மாஜி காங்கிரஸ் காரியதரிசி தோழர் மகாஜன் அவர்களுடைய குற்றச்சாட்டு.  அப் “”பின் ரிப்போர்ட்டுகளை”த் “”தினமணி”யில் பிரசுரிக்கும்படி அப்பத்திரிகைக்குச் “சவால்’ கூறுகிறோம்.

பொது மக்களிடமிருந்து பகற்கொள்ளையடித்த கோடி ரூபாயைப் பற்றிக் கணக்குக் கேட்பதற்கு நமக்கு அதிகாரமில்லை என்று “”தினமணி” கூறுகிறது.

“”தேசீய வேலைக்காக வசூலித்தது காங்கிரஸ், அதை நிர்வகித்து, அதை எப்படிச் செலவு செய்ய வேண்டுமென்று முடிவு செய்யும் பொறுப்பும் காங்கிரசையே சேர்ந்தது. அந்த காங்கிரஸ் பார்த்து ஒன்றைச் செய்யும்போது அதில் குற்றங்குறை காண விரோதிகளுக்கு என்ன வாய் இருக்கிற தென்று கேட்கிறோம்”

என்று அப்பத்திரிகை வாய் கூசாமல் கேட்கிறது. திலகர் நிதி மோசடியை வெளிப்படுத்தினவர்கள் நம் போன்ற காங்கிரஸ்காரரின் விரோதிகளல்ல; காங்கிரசிற்குப் பிராமணரல்லாதார் ஆதரவளிக்க வேண்டுமென்று கூறும் திலகரால் ஏற்படுத்தப்பட்ட “”மராட்டா” பத்திரிகையும், மகாராஷ்டிர மாகாணக் காங்கிரசின் காரியதரிசியாய் வெகுகாலம் இருந்த தோழர் மகாஜனும் தான் அந் நிதி காங்கிரஸ்காரரால் கையாண்ட விஷயங்களைக் கூறியவர்கள். மேலும், “”காங்கிரஸ் ஒரு கட்சியல்ல, அது தேசமேயாகும்” என்று கூறியவர்கள், இப்போது, “”காங்கிரஸ் ஒரு கட்சி தான்; அதன் விஷயங்களில் வேறு கட்சியினர் பிரவேசித்தல் கூடாது” என்று வாதாடுவதற்கு நியாயமிருக்கிறதா என்று கேட்கிறோம். “”தேசீய வேலைக்காக வசூலித்த” பணம் சுயநலக் காங்கிரஸ்காரர்களுடைய வயிறு வளர்ச்சிக்கு உபயோகப்பட்ட காரணத்தைக் கேட்டால், “”காங்கிரஸ் பார்த்து ஒன்றைச் செய்யும்போது, அதில் குற்றங் குறை காண விரோதிகளுக்கு” உரிமை இல்லை என்று “”தினமணி” கூறுகிறது. திலகர் சுயராஜ்ய நிதி காங்கிரஸ் கட்சியினரால் தமக்குள் வசூலிக்கப்பட்ட நிதியல்ல, பொது மக்களிடமும் ஏழை மக்களிடமும் தேசத்தின் பெயரைச் சொல்லி வசூலித்தது; பெண் மக்கள் அணிந்திருந்த ஆபரணங்களை இந்தியத் தாயின் பெயரைச் சொல்லி அபகரித்துச் சேர்த்த நிதி; அதைச் சுயநலக் கூட்டத்தார் சுயராஜ்யத்திற்கு உபயோகிக்காமல் பெரும்பான்மையான தொகைகளைத் தமது வயிற்று ராஜ்யத்திற்கு உபயோகித்ததை அதட்டி கேட்க இந்தியர் ஒவ்வொருவருக்கும் சர்வ உரிமையும் உண்டு, என்று சுயநல மணிக்கு நாம் இடித்துரைக்க விரும்புகிறோம்.

தோழர் பிரகாசம் பந்துலுவுக்குப் பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுத்து ரத்து செய்த விஷயத்தைப் பற்றி எழுதும்போது, “”தமது சொத்துக்கள் அனைத்தையும் பத்திரிகைகளுக்காக”த் தோழர் பிரகாசம் செலவிட்டா ரென்றும், அதைப் பார்த்த பிறகு அக்கடன் தொகை ரத்து செய்யப்பட்ட தென்றும், “”தினமணி” கூறுகிறது. இதனால் சில விஷயங்கள் புலனாகின்றன. தோழர் பிரகாசத்தின் சொத்துக்கள் அதிகமாயிருந்தால், ரூ.10,000 கடன் கொடுத்திருக்க வேண்டியதில்லை. சொத்துக்கள் கொஞ்சமாயிருந்தால் அதை “”மகத்தான தியாகம்” என்று கூறுவது உண்மையன்று. தன்னுடைய சொத்துக்களையெல்லாம் பத்திரிகைகள் நடத்துவதில் இழந்து, தோழர் பிரகாசம் நஷ்டமடைந்தார் என்றால் அவர் பத்திரிகைகளை ஒழுங்காகவும், நிர்வாகத் திறமையுடனும் நடத்த யோக்கியதையற்றவர் என்று தெரிகிறது. பத்திரிகைகளுக்காகத் தன் சொந்த சொத்தையும் இழந்து கடன் வாங்கின தொகையையும் செலவு செய்தார் என்ற விஷயம் உண்மையாயிருந்தால், அவரால் நடத்தப்பட்ட பத்திரிகைகள் இன்னும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஆனால் அப்பத்திரிகைகள் திலகர் நிதி மறைந்த மாதிரி மறைந்து போய்விட்டன.

“”தினமணி” கூறுகிறது@

“”காங்கிரஸ் மகாசபை தியாகிகள் கூட்டம், அங்கே அகப்பட்டதைச் சுருட்டுவது, மேல் பதவிக்கு தாவுவது, பதவிகளுக்காக லஞ்சம் வாங்குவது, கொடுப்பது இவைகளுக்கு இடமே கிடையாது”.

ஆனால், “”அகப்பட்டதைச் சுருட்டிய” பலருக்குக் காங்கிரசில் தாராளமான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறதென்ற விஷயம், தோழர் மகாஜன் கட்டுரைகளில் நன்றாகப் புலப்படுகின்றது. ஒரு கோடி ரூபாய்களை “சுவாஹா’ செய்யும்  காங்கிரஸ்காரர்களுக்கு  “”மேல்  பதவிக்கு  தாவுவது, பதவிகளுக்காக லஞ்சம் வாங்குவது, கொடுப்பது” முதலிய சிறிய வருமானங்கள் வேண்டியதில்லை; ஆனால் அப்படிப்பட்ட காங்கிரஸ்காரர்கள் சென்னையில் பலர் இருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம்.

கடைசியாக தியாகராயர் நிதிக்குக் கணக்குக் காட்டும்படி “”தினமணி” சவால் கூறுகிறது. அச்சவாலுக்கு நாம் ஆணித்தரமான பதில் கூறுகிறோம். தியாகராயர் நிதிக்கு, திலகர் நிதியைப் போலல்லாமல், சரியான கணக்குகள் இருக்கின்றன. அந்நிதியைக் கொண்டுதான் “”தியாகராய மெமோரியல் பில்டிங்ஸ்” என்று தற்போது பெயர் கொண்டுள்ள கட்டிடங்கள் வாங்கப் பட்டன. கட்டிட கிரயத் தொகை நிதியின் தொகையைவிட அதிகமானதால், மிகுதி தொகைக்குக் குதவைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்கடன் இன்னும் தீராமல், வட்டி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கடனைத் தீர்ப்பதற்காக ஜஸ்டிஸ் கட்சியினர் பண உதவி செய்ய வேண்டு மென்று, 1924ம் ஆண்டில், வி.பி. ஹாலில் நடந்த ஜஸ்டிஸ் மகாநாட்டில், தியாகராயரின் குடும்பத் தலைவரும், தியாகராய நிதியின் “டிரஸ்டி’யும் ஆன திவான் பகதூர் பி.டி. குமாரசாமிச் செட்டியார், தமது வரவேற்புக் கழகத் தலைமையுரையில் வேண்டியிருக்கிறார். தியாகராயர் நிதிக்குக் கணக்குக் கேட்கும் பெரியார்களை கண் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்று பிறகு சென்னை மலைச்சாலை 14ம் நம்பர் கட்டடங்களைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம். திலகர் நிதி, திலகருக்கு ஞாபகார்த்தம் ஒன்றுமில்லாமல் மறைந்தது. ஆனால், தியாகராயர் நிதி தியாகராயருடைய ஞாபகார்த்த கட்டிடங்களை வாங்குவதற்காக உபயோகப்படுத்தப்பட்டது. திலகர் நிதியைக் காங்கிரஸ்காரர்கள் கையாண்டார்கள் என்று திலகர் பத்திரிகை கூறுகிறது. ஆனால், தியாகராயர் நிதி செலவிடப்பட்டு மேல் ஏற்பட்ட ஞாபகார்த்த கட்டிட கடன் தொகைக்கு உதவி செய்ய வேண்டுமென்று தியாகராயர் சகோதரரின் புதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விஷயங்களைச் சாவதானமாகவும், சாவகாசமாகவும் யோசனை செய்யும்படி, திலகர் நிதியைத் திருடியவர்களின் தரப்பில் வாதிக்கும் “”தினமணி”யை வேண்டுகிறோம்.

“விடுதலை’

குடி அரசு  மறுபிரசுரம்  24.11.1935

You may also like...