ஆச்சாரியார் ஆட்சி நீடிக்க வேண்டும் அடக்குமுறைகளும் வலுக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் உண்மையை உணர்வார்கள்
தலைவரவர்களே! தோழர்களே! இன்று இந்த சென்னை கடற்கரையில் இவ்வளவு பிரம்மாண்டமான கூட்டத்தில் நான் பேச நேர்ந்ததைப்பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கூட்டமானது எனது நண்பர் கனம் ஆச்சாரியார் அவர்கள் தமிழ் மக்கள் மீது பலாத்காரமாய் சுமத்தும் பார்ப்பன பாஷையாகிய ஹிந்தியைத் தடுப்பதற்காக கூட்டப்பட்ட ஹிந்தி எதிர்ப்புக் கூட்டமாகும் என்பது நீங்கள் அறிந்ததேயாகும். இது தோழர் ஆச்சாரியார் சென்ற வாரத்தில் இதே கடற்கரையில் ஹிந்தி ஆதரித்து பேசுவதற்காக என்று கூட்டப்பட்ட கூட்டத்தில் அதன் தலைவர் தோழர் முத்துரங்க முதலியார் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த மக்களை எழுந்து போகும்படி சொன்னது போல் அதாவது “இக்கூட்டம் ஹிந்தியை ஆதரிக்கின்றவர்களுக்கு மட்டுமேயன்றி ஆதரிக்காதவர்களுக்கு இங்கு வேலையில்லை” என்று சொல்லி போலீஸ் குதிரைப் படையை விட்டு கூட்டத்தைக் கலைத்தும் போலீஸ் தடியைக்கொண்டு கூட்டத்தை விரட்டியும் அடித்தது போல் இக்கூட்டம் ஒரு சாராருக்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. இக்கூட்டம் ஹிந்தியை எதிர்ப்பதற்கு உண்டான காரணங்களைச் சொல்லவே கூட்டப்பட்டதானாலும் அன்றைய தினம்...
