புராண மரியாதைக்காரனுக்கும்  சுயமரியாதைக்காரனுக்கும்

 

சம்பாஷணை

சித்திரபுத்திரன்

விஷயம்: மோக்ஷமடைய காசிக்குப் போவது.

சுயமரியாதைக்காரன்:  ஐயா தாங்கள் இவ்வளவு அவசரமாக எங்கு சென்றுவிட்டு வருகிறீர்கள்?

புராண மரியாதைக்காரன்:  எங்கும் இல்லை, ஒரு இடத்தில் கொஞ்சம் கடன் கேட்டிருந்தேன்; அதற்காகப் போய் விட்டு வருகிறேன்.

சு.ம:  தங்களுக்குக் கடன் வாங்க வேண்டிய அவசியமென்ன? தங்கள் பிள்ளைகள் எவ்வளவோ நல்ல நிலையில் இருக்கும்போது நீங்கள் கூடவா கடன் வாங்கவேண்டும்?

பு. ம:  நான் யாத்திரை போகப்போகிறேன்;  அதற்காகப் பணம் வேண்டும். பிள்ளைகளைக்கேட்டால் கொடுக்க மாட்டான்கள்.

சு.ம:  இப்பொழுது என்ன யாத்திரை வந்தது தங்களுக்கு?

பு.ம:  கொஞ்ச காலமாகவே எனக்குக் காசிக்குப்போக வேண்டும் என்கின்ற அவா; கடவுள் செயலால் அது இப்போதுதான் முடிந்தது.  ஆதலால் காசிக்குப்போகிறேன்.

சு.ம: என்ன அய்யா இது அதிசயமாய் இருக்கிறது! இந்தப்பண நெருக்கடியான சமயத்தில் கடன் வாங்கிக்கொண்டு காசிக்குப்போகிறேன் என்று சொல்லுகிறீர்களே!  அப்படி என்ன அவசரம் வந்துவிட்டது?

பு.ம:  ஒரு அவசரமும் புதிதாய் வந்து விடவில்லை; இந்தப் பாழாய்ப்போன சுயமரியாதை இயக்கம் வந்து நம்ம பிள்ளைகளையெல்லாம் கெடுத்து விட்டது. அதனால்தான் நான்  இவ்வளவு கஷ்டத்துடன் காசி யாத்திரை வைத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது.

சு.ம: சுயமரியாதை இயக்கத்துக்கும் தாங்கள் காசிக்குப்போக வேண்டியதற்கும் என்ன சம்பந்தம்?

பு.ம: சம்பந்தம் என்னவென்றா கேட்கிறீர்கள்? நானோ வயது முதிர்ந்த கிழவன்;  எனது உடல் நிலை மிகவும் மோசமாய் இருக்கிறது;  எந்தச் சமயத்தில் பகவான் தனது திருவடி நிழலுக்கு அழைத்துக் கொள்ளுவாரோ தெரியவில்லை. ஒருசமயம் அந்தப்படி ஏதாவது திடீர் என்று ஏற்பட்டு விட்டால், என்னுடைய பிள்ளைகள் எனக்குச்செய்ய வேண்டிய சரமக் கிரியைகளையெல்லாம் செய்வார்களா?  திதி செய்வார்களா?  எள்ளுந் தண்ணீரும் இறைப்பார்களா?  பிண்டம் போடுவார்களா?  நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம்!  இந்த நாசமாய்ப்போன சுயமரியாதைக்காரர் களால் எவ்வளவு அநியாயங்கள் ஏற்பட்டுவிட்டன பாருங்கள்.

சு.ம:  அதைப்பற்றிச் சாவகாசமாய்ப் பேசிக்கொள்ளலாம்;  இதற்காக காசிக்கு ஏன் போகவேண்டும் என்று கேட்டால் அதற்கு ஒன்றும் சொல்லாமல் சுயமரியாதைக்காரர்களையே சும்மா வைகின்றீர்களே!

பு.ம:  இதற்காகத்தான் காசிக்குப்போகிறேன்.  இன்னும் சொல்லுகிறேன் கேளுங்கள்.  ஒரு மனிதன் காசியில் போய் இறந்துவிட்டால் அவனுக்கு யாரும் திதி பண்ணினாலும்,  பண்ணாவிட்டாலும், பிண்டம் போட்டாலும்,  போடா விட்டாலும், அவன் கவலைப்பட வேண்டியதில்லை. காசியில் இறந்தாலே மோக்ஷம் கிடைத்துவிடும்.  இதில் ஏதாவது கொஞ்சம் நஞ்சம் சந்தேகம் இருப்பதானால் கயாவுக்குப் போய் நமக்கு நாமே பிண்டம் போட்டுக் கொண்டு சிரார்த்தம் செய்துகொள்ளலாம்;  வேறு எவனும் போட வேண்டு மென்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆதலால் நான் இங்கிருந்து நேரே கயாவுக்குப் போய்,  அங்கு எனக்கு நானே இங்கிருந்து செய்து கொண்டு பிறகு காசிக்குப்போய் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறேன்.

சு.ம: அப்படியானால், தாங்கள் சொல்லுவதைப்பார்த்தால் மறுபடியும் இங்கு திரும்பி வரமாட்டீர்கள்போல் தோன்றுகிறதே!

பு.ம:  ஆம்! ஆம்!! இனி எனக்கு இங்கு என்ன வேலை?  கடவுள் கிருபையால் நான் பாடுபட்டு எவ்வளவோ சம்பாதித்தேன்.  பகவான் எனக்கு யாதொரு குறைவும் வைக்கவில்லை.  எல்லாவற்றையும் இந்தப் பிள்ளைகளுடைய படிப்புக்கும்,  கலியாணத்துக்கும், மற்ற சடங்குகளுக்கும் நன்றாய்ச் செலவு செய்தேன்.  அவர்கள் நல்ல நிலைமைக்கும் வந்தார்கள்;  கடைசியாக இந்தச் சுயமரியாதைக்காரன்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு, அவனுடைய பெற்ற தாயாருக்கே திதி,  திவசம் ஒன்றும் கொடுப்பதில்லை.  வீட்டிலோ ஒரு நாள்கிழமைபண்டிகை என்பவை எதுவுமே இல்லை.  இப்படிப்பட்டவன்கள் எனக்குத்  திதி செய்வான்களா?  எள்ளும் தண்ணீரும் கூட இறைக்கமாட்டான்களே! கொள்ளிகூட வைக்கமாட்டான்களே!  ஆதலால் இங்கே இருந்து இறந்து கருமங்கள் செய்யப்படாமல் என் ஆத்மா நரகத்துக்குப்போய் அவஸ்தைப்பட்டு, நாய், கழுதையாய்ப் பிறப்பதைவிட, காசியில் போய் இறந்துவிட்டால் ஒரு பயலுடைய தயவுகூட இல்லாமல் மோக்ஷம் கிடைத்து விடும் என்பது உறுதி.

அன்றியும் அவனவன் வந்த காரியத்தைப் பார்க்க வேண்டாமா?  எவ்வளவு காலத்துக்குத்தான் இந்தப் பூலோகத்தில் இருந்தாலும் என்ன பயன்?

சு.ம:  ஓ ஹோ! அப்படியா சங்கதி?  மனிதன் என்ன பாவம் செய்தாலும்,  எவ்வளவு அக்கிரமம் செய்தாலும் திதி செய்யப்படுவதாலோ, காசியில் போய்ச் செத்துப்போவதினாலோ மோட்சத்துக்குப் போய் விடுவானாக்கும்!

அன்றியும் மனிதன் எவ்வளவு யோக்கியமாய் நடந்திருந்தாலும், எவ்வளவு புண்ணியம் செய்தவனாய் இருந்தாலும் அவன் இறந்துபோன பிறகு, அவனது பிள்ளைகளோ, சந்ததியார்களோ செய்த குற்றத்துக்காக (திதி செய்யாததற்காக)  நரகத்துக்குப்  போவதுடன், நாய், கழுதையாய்ப் பிறப்பானாக்கும். இது என்ன நீதி?

என்ன சாஸ்திரம்? எந்தக் கடவுளுடைய உத்திரவோ தெரியவில்லை.  அதிருக்கட்டும், தாங்கள் எதற்காக இந்தப் பூலோகத்துக்கு வந்தீர்கள்?  அது ஒன்றும் எனக்கு விளங்கவில்லையே!

பு.ம:  மனிதன் எதற்காகப் பிறந்தான்?  ஸ்ரீமந் நாராயணனைப் பக்தி பண்ணவும், பூஜிக்கவும்,அவன் பாதாரவிந்தம் அடையவும்தானே?  இதுகூடவா மனிதனுக்குத் தெரியாது?

சு.ம:  அப்படியா?  தாங்கள் நாராயணன் பாதாரவிந்தம் சேருவதற்கும், தங்கள் பிள்ளைகள் எள்ளும் தண்ணீரும் இறைப்பதற்கும், நீங்கள் கயாவுக்கும், காசிக்கும் போவதற்கும்,  காசியில் சாவதற்கும் எப்படி அய்யா சம்பந்தம் இருக்கமுடியும்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே! சற்று விவரமாய்ச் சொல்லுங்கள்!  நானும் தங்களுடனேயே புறப்பட்டு விடுகிறேன்.  எனக்கு மாத்திரம் மோட்சம் வேண்டாமா?  நாராயணனுடைய பாதாரவிந்தம் வேண்டாமா?

பு.ம:  இதெல்லாம் எவ்வளவு சொன்னாலும் உங்களுக்குச் சுலபத்தில் புரியாது.

சு.ம:  பின்னை எப்படித்தான் புரியும்? அதன் இரகசியத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!  என் ஆத்மாவும் முக்தியடையட்டும்.

பு.ம:  உங்களுக்குப் புரியவேண்டுமானால் நல்ல குரு கடாட்சம் வேண்டும்.  பெரியோர்கள் சாவகாசம் வேண்டும்.  முன்னோர்கள் நூல்களைப் பார்க்கவேண்டும். சாஸ்திரங்களில் பரீøக்ஷ இருக்கவேண்டும்.  புராணங்களை மரியாதை செய்ய வேண்டும்.  பக்தி சிரத்தையுடன் அவைகளைப் படிக்க வேண்டும். எதற்கும் பிராப்த கருமம் இருக்கவேண்டும்.  எல்லாவற்றிற்கும் அனுகூலமாக பகவான் கடாட்சம் இருக்கவேண்டும்.  இப்படிக்கெல்லாம் இல்லாமல் சும்மா ஒருவரைப் பார்த்து ஒருவர் ஆசைப்படுவதனாலேயே,  முக்தி என்பது எல்லாருக்கும் கிடைத்துவிடக்கூடிய காரியமல்ல.

சு.ம:  இப்போது எனக்கு ஆசைவந்துவிட்டது.  நான் கொஞ்சம் கூட சுமரியாதைக்காரர்களுடன் சாவகாசமே வைத்துக்கொள்வதில்லை.  தாங்கள் சொன்னபடியே நடந்து, நானும் நாராயணன் திருவடியை அடைந்தாக வேண்டும். தாங்களே எனக்கு நல்ல குருவாகவும், நேசத்திற்கேற்ற பெரியோராகவும் இருந்து உபதேசம் செய்யவேண்டும். மற்றபடி முன்னோர்கள் நூல்கள் என்றீர்களே! அவர்கள் எவ்வளவு காலத்துக்கு முன்னோர்களா யிருக்கவேண்டும்!  அவர்களில் சிலருடைய பெயர்களை யாவது சொல்லுங்கள்! அவர்களது நூல்களுடைய பெயர்களையும் சொல்லுங்கள்!  அந்தப் படியே செய்யப்பார்க்கிறேன். பிறகு சாஸ்திரங் களின் பரீøக்ஷ என்றால் என்னென்ன சாஸ்திரங்கள்?  அவைகளை எப்படிப் பரீக்ஷிப்பது?  தயவு செய்து அதையும் கடாட்சிக்கவேண்டும்.

புராணங்களை மரியாதை செய்வது என்றால் எப்படி மரியாதை செய்வது? விழுந்து கும்பிட்டால் போதுமா?  அல்லது அவைகளில் உள்ள விஷயங்களை எல்லாம் அப்படியே நம்பி ஆகவேண்டுமா?  மற்றும் பக்தி சிரத்தையோடு படிக்க வேண்டும் என்றால்  பணம் கொடுத்து வாங்கி, குளித்து முழுகிவிட்டுப் புராணங்களுக்குத் தீபதூபம் வைத்து பூஜை செய்து நானே படித்தால் போதுமா?  அல்லது வேறு யாருக்காவது பணம் கொடுத்துப் படிக்கவைக்க வேண்டுமா?  என்பதையும் அருள வேண்டும்.

அன்றியும் எனக்குப் பிராப்த கர்மம் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி அறிவது?  இவ்வளவான பாடு பட்டும் பிராப்த கர்மம் இல்லாவிட்டால் எல்லாம் வீண் செலவாகவும், வீண் கஷ்டமாகவும் ஆகிவிடுமே!  அது மாத்திரமல்லாமல்,  அதாவது பிராப்த கர்மம் இருக்கா இல்லையா?  என்று அறிவது மாத்திரமல்லாமல், பகவன் கடாக்ஷம் வேறு இருக்க வேண்டும் என்று முடிவாய்ச்சொல்லிவிட்டீர்களே! அதை எப்படித்தெரிந்து கொள்ளுவது?  இதை அறியாமல் கடைசியாய்ச்  செய்த காரியமெல்லாமல் வீணாய்ப் போகும் படி விட்டுவிடக்கூடாதே என்கின்ற கவலை அடியேனுக்கு அதிகமாய் இருக்கிறது.  ஆதலால் குருசுவாமிகள் இவற்றையெல்லாம் கடாக்ஷித்தருளுவதுடன்,  தங்களுக்குப் பிராப்த கருமம் இருப்பதும், பகவான் கடாக்ஷம் இருப்பதும் எப்படித் தெரியவந்தது? என்பதையும் அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

பு.ம:  சரி! சரி!!  விளங்கிவிட்டது.  நீரும் பக்காச் சுயமரியாதைக்காரன் என்பது நன்றாய் விளங்கி விட்டது! அவன்களுக்குத்தான் இந்த குயுக்தியான பேச்சுகளும், போக்கிரித்தனமான பேச்சுகளும் பேசத்தெரியும்.  உம்மிடத்தில் பேசுவதில் பயனில்லை போம்!

சு.ம:  என்ன சுவாமீ!  இவ்வளவு சந்தேகப்பட்டு விட்டீர்கள்! நான் தங்களைக் குருவாக அடைந்து விட்டேன் என்று சொன்னேனே!  தங்களிடத்தில் அல்லாமல் வேறு யாரிடத்தில் எனது முக்திக்கு வேண்டிய விஷயங்களையும்,  சந்தேகங்களையும் கேட்டுத்  தெளிவடைவது?

பு.ம:  வேண்டாமையா!  நான் உமக்குக் குருவாகவும் இல்லை; என்னை எவ்வித கேள்வியும் கேட்க வேண்டாம்; என்னோடு கூட நீர் வரவும் வேண்டாம்.  நீர் சரியான சுயமரியாதைக்காரர் என்பதில் ஆ÷க்ஷபனை யில்லை. உம்மைப்போன்ற ஆள்களால் தான் என் பிள்ளைகள் கெட்டு இந்தப்படி நாசமாய் விட்டதுகள்.  சரி! போம்! போம்! இங்கே நில்லாதேயும்.

சு.ம: சுவாமிகளே கோபிக்காதீர்கள்! தங்களுக்கு வருத்தம் வருவதானால் நான் பேசவேயில்லை,  வாயை மூடிக்கொள்ளுகிறேன்.

ஒரு சமயம் நான் மோக்ஷமடைய பிராப்த கர்மம் இல்லையோ; என்னமோ தெரியவில்லை.  தங்களைப்போன்ற பெரியார்களைக் குருவாக அடைந்தும் இப்படியாகிவிட்டது. என் சங்கதியைப் பின்னால் பார்த்துக் கொள்ளுகிறேன்.  தங்கள் விஷயத்தில் ஒரு சிறு சந்தேகம்! அதைக் கேட்கலாமா என்பதை எதிர் பார்க்கிறேன். அதை நிவர்த்தி செய்தால் திருப்தியாவேன்.

பு.ம:  என்ன ஐயா சந்தேகம்?

சு.ம:  இல்லை சுவாமிகள்!  இவ்வளவு தீர்மானத்துடனும், உறுதியுடனும், பிடிவாதத்துடனும் இந்த முதிர்ந்த வயதில் முக்திக்காகப் போகின்றீர்களே, போகும் வழியில்,  காசி கயாவைப் போய் சேருவதற்குமுன் வழியில் ஏதாவது நேர்ந்து, தாங்கள் சாகவேண்டி ஏற்பட்டுவிட்டால் இந்த உத்தேசங்கள் எல்லாம் என்ன ஆகிறது? நீங்கள் தான் திரும்பி வரப்போவ தில்லையே பிறகு இன்று வாங்கும் கடனை யார் கட்டுவது?

பு.ம:  நான் செத்துப்போய்விட்டால் நல்ல காரியமாச்சுது!  போம் வெளியே!  இங்கே நில்லாதேயும்!  பயணம் புறப்படும்போது சகுனத் தடைமாதிரி! வாயில் வரும் வார்த்தையைப் பாருங்கள்! மனிதனுக்கு எதாவது புத்தியிருக்கிறதா? கடனைப்பற்றி நீர் கவலைப்படவேண்டியதில்லை. அடுத்த ஜன்மத்தில் மாடாய் பிறந்தாவது அவன் கடன் கட்டிவிடுவேன்.

சு.ம: சரி! சரி!! கோபித்துக்கொள்ளாதீர்கள்!  நான் இதோ போகிறேன்! நீங்களும் உங்கள் சாஸ்திர புராணங்களும், அதற்கு நீங்கள் செய்யும் மரியாதைகளும் மிக நன்றாய் இருக்கிறது!  இனி உங்களைப்போன்ற புராண மரியாதைக்காரர்களே மோக்ஷத்துக்குப் போகட்டும், அதற்காக கடன் கொடுத்தவன்கள் எல்லோரும் அடுத்த ஜன்மத்திலேயே வசூல் செய்யட்டும். ரொம்ப நாணயம் தான்.

பகுத்தறிவு (மா.இ.)  உரையாடல்  ஜூலை 1935

You may also like...