விதண்டா வாதம்

 

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தது.  குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக்கதை சொல்லுகிறது.  குசேலர் பெண்சாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளை யாகப் பெற்று இருந்தாலும் கைக்குழந்தைக்கு ஒரு வருஷமாயிருக்கு மானால் மூத்த பிள்ளைக்கு 27 வருஷமாவது ஆகியிருக்க வேண்டும்.  ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள்? இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப்போக குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா?  அல்லது இந்தப் பிள்ளைகளுக்காகவது மான அவமானமிருந்திருக்காதா? அல்லது பிச்சைபோட்ட கிருஷ்ண பகவானுக்காவது “”என்ன? பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப்பையல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே வெட்கமில்லையா?” என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?

*  *  *

கேள்வி:  என்னடா உனக்கு கடவுள் இல்லையென்று சொல்லுகின்ற அளவு தைரியம் வந்துவிட்டதா?

பதில்:  அவர்தான் மனோவாக்குக்  காயங்களுக்கு எட்டாதவரென்று சொன்னாயே! அவரை நான் உண்டு என்று சொன்னால் நீயே உனக்கு எப்படித் தெரியும்? என்று கேட்பாயே!  அதனால்தான் என் புத்திக்கு எட்டாததையும் தெரியாததையும் நான் ஒப்புக்கொள்வதில்லை என்று சொல்லிவிட்டேன்.  இதில் என்ன தப்பு?

*  *  *

கேள்வி:  கடவுள் கருணாநிதி அல்லவா?

பதில்:  கடவுளே நமது மனதுக்கும், காயத்துக்கும் எட்டாதவரா யிருக்கும்போது அவர் கருணாநிதி என்பது உனக்கு எப்படித் தெரிந்தது?

*  *  *

ராமாயணம் நடந்தது திரேதாயுகத்தில்.  அதில் ராவணன் அரைக்கோடி வருஷம் (50லக்ஷம் வருஷம்) அரசாண்டான் என்று காணப்படுகிறது.

அந்த யுகத்திற்கு மொத்த வருஷமே 12 லக்ஷத்து 96 ஆயிரம் வருஷங்களாகும்.  நாலு யுகமும் சேர்ந்தாலுமே 43 லக்ஷத்து 20 ஆயிரம் வருஷந்தான் ஆகிறது.

ஆகவே ராவணன் எப்படி அரைக்கோடி வருஷம் அரசாண்டு இருக்கமுடியும்?

பகுத்தறிவு (மா.இ.)  வினா விடை  ஜூலை 1935

 

பொது உடமை தேசத்தில் கலைகள்

பொது உடமை தத்துவம் பெருகி மக்கள் சமதர்மக் கொள்கைக்கு ஆளாகிவிட்டால், எல்லோரும் சோம்பேறிகளாக ஆகிவிடுவார்கள் என்றும், கலைகள் விருத்தியாகாதென்றும், அற்புதங்களும் அதிசயங்களும் கண்டு பிடிக்க முடியாமல் போய்விடுமென்றும், உற்சாகமற்ற வாழ்க்கையாக ஆகி விடுமென்றும், உலக முற்போக்கே தடைப்பட்டு விடுமென்றும், பொதுவாக மனித சமூகத்தின் அறிவே மங்கிவிடுமென்றும் சொல்லப்படுகின்றது.

இன்று உலகில் பொது உடமை தேசமாகவும் சமதர்மக் கொள்கை ஆட்சி புரியக்கூடியதாகவும் இருந்து வரும் நாடு ரஷ்ய தேசமாகும்.

அது 81 சதுர மயில் விஸ்தீர்ணமும் 17லீ கோடி ஜனத்தொகை கொண்டதுமான தேசமாகும். அத்தேசம் தனி உடமைத் தத்துவத்தின் கீழ், சமதர்மம் என்கின்ற வாசனையே அற்று, உயர்வு தாழ்வு தத்துவத்தில் வெகு காலமாக இருந்து வந்திருக்கிறது.

அப்படி இருந்தும் அந்த தேசம் ஏறக்குறைய ஒரு காட்டுமிராண்டி தேசம் போலவே, இந்தியாவை விட மோசமான நிலைமையில் சமீப காலம் வரை இருந்து வந்திருக்கிறது.  1917ஆம் Mக்கு முன் அந்நாட்டு மக்கள் 100க்கு 8பேர், பத்துப் பேர்களே படித்திருந்தார்கள்.

மூக்குக்கண்ணாடியைப்பார்த்து ஆச்சரியப்படும்படியான நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இருந்தார்கள்.  மகாயுத்தம் நடந்ததை உணர முடியாமலும், உலக நடப்பில் கொஞ்சம் கூட தெரிந்துகொள்ள முடியாமலும் கோடிக்கணக்கான மக்கள் இருந்திருக்கிறார்கள்.  பல ஜாதி, பல மதம் என்பதாகப் பிரித்து ஒற்றுமையே இல்லாமல் இருந்து வந்தார்கள்.

இன்று ரஷிய தேசம் பொது உடமைத் தத்துவத்துக்கு வந்த  சமதர்மக் கொள்கைப்படி ஆட்சி புரிய ஆரம்பித்த இந்த 18வருட காலத்தில் உலகத்தில் கலைகளில் முதன்மை ஸ்தானம் பெறப் பார்க்கிறது.  ரஷியக்கலை வளர்ச்சியும், அதன் முற்போக்கும் இன்று வேறு எந்த தேசத்திலும் அவ்வளவு வேகமாக நடைபெறவில்லை என்றே சொல்லவேண்டும். இலக்கியம், சித்திரம், நடனம், சங்கீதம், நாடகம், ஆகியவைகளில் ரஷியாவுடன் போட்டி போட மற்ற தேசங்களில் அனேகம் பயப்படுகின்றன.  போர்த்திறத்தில் ரஷ்யாவைக் கண்டு மற்ற தேசங்கள் பயப்படுகின்றன என்று சொன்னால் அதை மறுக்க இன்று எத்தேசத்துக்கும் தைரியமில்லை.  வைத்திய விஷயத்தில் செத்தவனைப்  பிழைக்க வைத்தல் முதலான அனேக காரியங்களில் உலகத்தில் முதன்மை பெற்று  வருகிறார்கள்.  விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ரஷியா எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சியே அது இன்று எல்லாத்  துறைகளிலும் உலகத்தைப் பின்னடையச்  செய்கிறது.

அதாவது ரஷிய சோவியத் அரசாங்கமானது ஆராய்ச்சித்துறையில் வேலை செய்து புதிய புதிய விஷயங்களை கண்டுபிடித்து வெளிப்படுத்து வதற்கு முதல் தர விஞ்ஞான  நிபுணர்களாக (30000) முப்பது ஆயிரம் பேர்களைத் தெரிந்தெடுத்து அதற்கு “”இன்வெண்ட் கில்ட்” என்று பெயர் வைத்துக் காரியங்கள் செய்யச்செய்து வருகிறார்கள். இந்நிபுணர்கள் இதுவரை அனேக அற்புதங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.  இன்னும் அனேக விஷயங்கள் கண்டு பிடிக்க உறுதி கொண்டு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

கை விரல் நசுங்கித்  துண்டுபட்டுவிட்ட ஒருவனுக்கு அவன் கால் விரல் ஒன்றை வெட்டி தைத்துப்  பொருத்தி இயற்கையான கை விரலாகச் செய்யப்பட்டது.

குருடர்கள் கண்களுக்கு மின்சார சக்தி ஏற்றுவதன் மூலம் வெளிச்சம் வரும்படி செய்யப்பட்டிருக்கிறது.  ஒரே கம்பியில் ரயில் வண்டியைத் தாங்கும்படி செய்து பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு மணிக்கு 185மைல் வேகம் ஓடும்படி செய்யப்பட்டிருக்கிறது.

செத்த பிராணிகளை அதாவது பனியில் மூழ்கி உறைந்து உயிர் துறந்த பிராணிகளை 2, 3, 4 மாதகாலம் பொறுத்துக்கூட உயிர் வரும்படி செய்யப்பட்டிருக்கிறது,  ரத்தத்தை வெளியிலெடுத்ததும் மறுபடியும் சரீரத்துக்குள் பாய்ச்சப்படுகிறது.

கம்பளங்களுக்கு, ஜெந்துக்களின் மயிர்களை வெட்டாமல் தானே உதிரும்படி செய்து மறுபடியும் சீக்கிரம் முளைக்கும்படி செய்யப்படுகிறது.

பூமி விவசாய ஆராய்ச்சியில் பெரியதொரு மாற்றமும் பயனும் ஏற்படும்படியாக  பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது.

இன்னும் பல காரியங்கள் நடக்கின்றன.  எனவே கலைவளர்ச்சி, அதிசயம், அற்புதங்கள் கண்டு பிடித்தல், முயற்சி, விஞ்ஞான முன்னேற்றம் முதலியவைகள் எல்லாம் தனி உடமை நாட்டில் தான் ஏற்படும் என்று சொல்லுவதானது தனி உடமை பணமே சுயநலம், பணமே வேலைக்கு பிரதி பலன் என்றதான பழக்கத்தினால் ஏற்படும் மனப்பான்மையே ஒழிய, அவை இயற்கையாகத் தோன்றுவதல்ல.  பணமில்லாத போட்டி விளையாட்டுகளில், பந்தயங்களில் மக்கள் இறங்கி வேலை செய்வதையும் பண வருவாயில்லாத காரியத்துக்கு மக்கள் பலர் உயிர் விடும்படியான அளவு முயற்சி செய்வதையும், உயிரையே இழப்பதையும் கூட பார்க்கின்றோம்.  இவர்களுடைய லக்ஷியம் என்ன என்று பார்த்தோமேயானால் சமதர்ம நாட்டில் போட்டியும், பந்தயமும், அதற்காக உற்சாகமும் ஊக்கமும் ஏன் இருக்காது என்பது விளங்கும்.

நிற்க ஒரு மனிதன் இரண்டு மனிதர்களால் செய்யப்படுகின்ற காரியங்கள் போக, 1000பேர் 10000பேர், 100000பேர்களால், ஒரு வருஷம், பத்து வருஷம் பாடுபட்டு, 10கோடி ரூ, 20கோடி ரூ, செலவிட்டுச் செய்ய வேண்டிய அதிசயமான காரியங்கள் எல்லாம் பெரிதும் சமதர்ம நாட்டில் தான் செய்ய முடியும்.

ஏனெனில், சமதர்ம நாட்டில் உள்ளதை விகிதாசாரம் சாப்பிட்டுவிட்டு, முடிந்ததைக்  கூலி இல்லாமல் செய்வது என்பதால் எப்படிப்பட்ட வேலைக்கும் மூலதனக்  கவலையோ வட்டிக்கணக்கு பார்க்க வேண்டிய அவசியமோ இல்லாமல் போய்விடுகிறது.  ஆதலால் சமதர்ம மக்கள் வாழ்க்கை எழுச்சி உள்ளதும், ரசமுள்ளதுமாக இருக்காது என்று யாரும் எண்ணிவிட வேண்டியதில்லை.

பகுத்தறிவு (மா.இ.)  கட்டுரை  ஜூலை 1935

You may also like...