திருவாங்கூரில்  வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவம்

 

கம்மாளர்,  நாடார்,  தீயர்,  புலையர்

தாழ்ந்த  ஜாதி  இந்துக்களாம்

திருவாங்கூர்  அரசாங்கம்  வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவக்  கொள்கையை   ஒப்புக்கொண்டு,  அந்தப்படி  கவனித்து  உத்தியோகம்  நியமிக்க  ஒரு  பப்ளிக்  சர்விஸ்  கமிஷன்  என்ற  இலாக்காவையும்  ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தக்  கமிஷனுக்கு  கொடுத்த  அதிகாரப்  பத்திரத்தில்  இந்துக்கள்,  கிறிஸ்தவர்கள்,  முஸ்லிம்கள்  என்னும்  மூன்று    மத  வகுப்புகளும்,  இந்துக்களில்  மேல்  ஜாதி  இந்துக்கள்,  கீழ்ஜாதி  இந்துக்கள்  என்று  இரண்டு  ஜாதி  வகுப்பு களும்  ஏற்படுத்தி  இருக்கிறார்கள்.

அப்படி  ஏற்படுத்திய   ஜாதி  வகுப்புகளில்  பார்ப்பனர்களையும்,  நாயர் களையும்  மேல்  ஜாதி  இந்து  வகுப்பிலும்,  கம்மாளர்,  நாடார்,  ஈழவர்  புலையர்  என்பவர்களைக்  கீழ்  ஜாதி  இந்து வகுப்பிலும்  சேர்த்திருக்கிறார்கள்.

இந்த  அக்கிரமம்  ஒரு  சுதேச  அரசர்  ஆட்சிபுரியும்  நாட்டில்  இருந்து  வருகின்றது.  இந்தக்  கொடுமையான  இழிவை  ஒழிக்காமல்,  ஒழிக்க  முயற்சிக் காமல் என்ன சுயராஜ்ஜியம் வேண்டி இருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை.

பிரிட்டிஷ்  ராஜ்ஜியத்தில்  விஸ்வப்பிராமணர்கள்  என்று  சொல்லிக்  கொள்ளும்  கம்மாளர்  வகுப்பார்களும்,  க்ஷத்திரியர்  என்று  சொல்லிக்கொள்ளும்  நாடார்  வகுப்பாரும்,  சுதேசச்  சமஸ்தானத்தில்  தீண்டப்படாதவர்களாய்க்  கருதப்படுவது  மிக  மிக  அக்கிரமமான  காரியம்  என்றே  சொல்லுவோம்.

இதுமாத்திரமல்லாமல்,  இந்தக்  காரணத்துக்காக  இவர்களுக்கு  சில  உத்தியோகங்களும்  தடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆகையால் திருவாங்கூர் சட்டசபை அங்கத்தினர்கள் இந்தக்  கொடுமையை  நீக்கி,  கிரமமான  முறையில்  வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவம்  கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய முன்  வரவேண்டும்  என்று  ஆசைப்படுகின்றோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  30.06.1935

You may also like...