ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு

 

“”ஜஸ்டிஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி ஆலோசித்து முடிவு செய்வதற்காக கோயமுத்தூரில் ஜூன் 15, 16 தேதிகளில் தென் ஜில்லாக்களிலுள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரரின் ஆயத்த மகாநாடு ஒன்று கூடும். ஜஸ்டிஸ் கட்சிக்காரர் திரளாக அந்த மகாநாட்டுக்கு வரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்” என்று “”விடுதலை” பத்திரிகையில் ஒரு விளம்பரம் வெளியாகி இருக்கிறது.

இக் கூட்டத்தைக் கூட்ட கோவை பிரபல வியாபாரியும் தனவந்தரும் பொதுநல சேவையில் ஈடுபட்டு மிகுதியும் ஊக்கமாய் உழைத்து வரும் பெரியாரும் கோவை முனிசிபல் சேர்மெனுமான ராவ்சாகிப் எஸ்.என். பொன்னையா அவர்கள் முயற்சித்து, தன் பேரால் பொது மக்களுக்கு பத்திரிகை மூலம் ஒரு பொது அழைப்பும் அனுப்பியிருக்கிறார். இதை நாம் பெரிதும் பாராட்டுகிறோம்.

உண்மையை ஒளிக்காமல் பேச வேண்டுமானால் சமீப இந்திய சட்டசபைத் தேர்தல் பலனைக் கண்ட பிறகும், சென்னை சட்டசபை உபதேர்தலின் பலனைக் கண்ட பின்பும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுக்கு அதாவது அக்கட்சியின் பேரால் அதிகாரம் பதவி பட்டம் முதலியவைகள் அடைந்து அதன் மூலம் பொதுநலத் தொண்டு செய்யலாம் என்று கருதி இருந்த  இருக்கிற மக்களுக்கு பெரியதொரு திகில் ஏற்பட்டு விட்டது. பலருக்கு காங்கிரசில் சேர்ந்து கொள்ளலாமா என்கின்ற எண்ணமும் தோன்றி எலும்பை உருக்கி வருகின்றது. பலருக்கு அடுத்து வரும் தேர்தல் வரையில் நாம் ஒரு கட்சியிலும் சேராமல் எல்லோருக்கும் நல்ல பிள்ளைகள் போல் நடந்து பிறகு சமயம் போல் நடந்து கொள்ளலாம் என்கின்ற யுக்தியும் அவர்களது உள்ளத்தில் தாண்டவமாடுகின்றது.

பொது ஜனங்களுக்குள்ளும், பார்ப்பனரல்லாதார்களுக்குள்ளாகவே உத்தியோகஸ்தர்கள், உபாத்தியாயர்கள், வக்கீல்கள் ஆகிய கூட்டத்தார் களுக்குள்ளாகவே அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிடும் என்கின்ற எண்ணம் பலமாய் ஏற்பட்டு அவர்களது வாழ்க்கை கட்சியின் ஆதரவாலேயே இருப்பதாய் இருந்தாலும் தாமரை இலையின் நீரதைப்போல தங்களுக்கும் கட்சிக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதாய் இருக்கிறது.

பாமரர்களுக்குள்ளாக என்றாலோ “”ஜஸ்டிஸ் கட்சி செத்துப் போய்விட்டது, இனி தலையெடுக்கப் போவதில்லை” என்கின்ற பிரசாரம் பலமாய் புகுந்து விட்டது.

ஒரு வேலையும் பொறுப்பும் இல்லாமல் கட்சியின் பேரைச் சொல்லி பதவி, எலக்ஷன், கமிஷன், கான்ட்ராக்ட் முதலியன பெற்று வயிறு வளர்த்து வந்த தானாவதிக் கூட்டங்கள் “”சாகப் போகின்ற கட்சிக்கு என்ன தான் வைத்தியம் பார்த்தாலும் என்ன பிரயோஜனம்” என்றும் சொல்லும்படியான நிலைமையில் இருந்து வருகின்றது.

தலைவர்கள், கட்சி மூளைகள் என்பவர்களைப் பற்றி இப்பொழுதே பொது ஜனங்களும் எதிரிகளும் சுமத்தும் பழிகள் ஏராளமாய் தாங்க முடியாததாய் இருப்பதால் அவர்களைப் பற்றி நாமும் பழி கூறவோ குற்றங் குறைகளைப் பெரிதாக்கி பிரசாரம் செய்யவோ, இப்பொழுது நமக்குச் சிறிதும் இஷ்டமில்லை. ஆதலால் அதை விட்டு விட்டு மற்றதை யோசிப்போம்.

முதலாவது ஒரு விஷயத்தைச் சொல்லிவிடுகின்றோம். அதாவது அடுத்த தேர்தலில் பார்ப்பனர்கள் இன்றைய நிலைமையைவிட கடுகளவாவது அதிகமாக வந்துவிடுவார்களோ என்கின்ற சந்தேகம் எவருக்கும் வேண்டியதில்லை.

இன்றுள்ள விகிதாச்சாரத்தில் பகுதி அளவு பங்கு ஓட்டுகள் கூட வரப்போகும் சட்டசபைத் தேர்தல்களில் பார்ப்பனர்களுக்கு இருக்கப் போவதில்லை.

மேலும் பத்து ஆயிரம் இருபது ஆயிரம் ரூபாய்களைச் செலவு செய்யும் தைரியத்துடனும், பணத்துடனும் தேர்தலில் போட்டி போடப் போகும் பார்ப்பனர்களும் மிக மிக சுருக்கமாகும்.

ஆதலால் பார்ப்பனர்கள் அதிகமாக வந்துவிடுவார்களே என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை.

இந்த மாகாணத்தில் பார்ப்பனர்களுக்கு இடம் கொடுக்கக்கூடிய இடமெல்லாம் சென்னை, தஞ்சை, மதுரை, ராமனாதபுரம் ஆகிய ஜில்லாக்களேயாகும். “”சென்னை பார்ப்பனரல்லாத பிரமுகர்களுக்கு கொள்கையில்லை” என்பது ஒரு பழமொழியானாலும், பொறுப்பும் பொது நலக் கவலையும் கிடையாது என்பதோடு தன்னலத்துக்கு எதையும் தியாகம் செய்து விடுகிறவர்கள் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு வார்த்தை சொல்லிவிடுகின்றோம். அதாவது சென்னையில் எந்த தேர்தலுக்கும் தன் சொந்தப் பணத்தைச் செலவு செய்து தன் சொந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி தேர்தலுக்கு நிற்கக் கூடியவர்களோ தேர்தலில் வெற்றி பெறக் கூடியவர்களோ மிக அருமை என்றே சொல்ல வேண்டும். ஆதலாலேயே அங்கு பார்ப்பனர்களுக்கு ஆதிக்கம் இருப்பதிலும், ஏற்படுவதிலும் ஆச்சரியமொன்று மில்லை.

தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்கள் பெரிதும் பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து வருவதாலும், தங்கள் தங்கள் சுயநலங்களுக்கு பார்ப்பனர்கள் தயவையும் எதிர்பார்க்க வேண்டிய நிலையில் பல பிரமுகர்கள் இருப்பதாலும் அச்சில்லாக்களிலும் பார்ப்பனர்கள் வெற்றி பெற்று விடுவதிலும் அதிசயமில்லை.

மற்ற ஜில்லாக்களில் பார்ப்பனர்களுக்கு ஆதிக்கமில்லை என்பது ஒருபுறமிருந்தாலும், உள்நாட்டுக் கலகம் என்று சொல்லக்கூடிய விதத்தில் ஜில்லா பிரமுகர்களுக்குள் இருந்து வரும் சுயநலப் போட்டியானது காங்கிரசில் சேரலாமா? தனிப்பட இருக்கலாமா? பார்ப்பனர்களுக்கு உள்உளவாய் இருந்து கொண்டு வெளிப் பார்வைக்கு ஜஸ்டிஸ் கட்சியாய் இருக்கலாமா, அல்லது சுவரின் மேல் பூனையாக எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருக்கலாமா என்கின்றதான கஷ்ட நிலையில் இருக்கும் படியாக ஆகிவிட்டது.

இவைகளுக்கெல்லாம் ஏதாவது ஒரு பரிகாரம் செய்வது என்பதுதான் கட்சியைப் பலப்படுத்தும் காரியமாய் இருந்தால் இருக்கலாமே ஒழிய மற்றபடி வெறும் கூட்டம் போட்டு பேசிவிட்டுப் போவது பயனற்றதாகவே ஆகிவிடும். பிரசாரத்துக்காக மகாநாடு போடுவதாய் இருந்தால் வெறும் பேச்சும் மனதைக் கவரும் தீர்மானங்களுமே போதுமானதாகும்.

இப்பொழுது ஜஸ்டிஸ் கொள்கையைப் பற்றி யாருக்கும் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. ஜஸ்டிஸ் கொள்கை உலகமே ஒப்புக் கொண்ட கொள்கை. உண்மையான சமதர்மக் கொள்கை.

ஆதலால் அதைப் பற்றி கவலைப்படாமல் இப்போது இயற்கை யாகவே இருந்து வரும் உத்தியோகம் பதவி பட்டம் ஆகியவைகள் சம்மந்தப்பட்ட போட்டிக்கு ஒரு விவஸ்தையும், முறையும் ஏற்படுத்த வேண்டும். அதுவே முக்கிய காரியமாகும்.

முக்கியமாக மந்திரிகள் சம்பளத்தில் பெரும்பாகம் குறைக்க வேண்டும். அல்லது அதில் 100க்கு 75 பாகம் கட்சிக்குப் பயன்படுத்த வேண்டும். இந்தப்படி செய்துவிட்டால் பணத்தாசை பிடித்தவர்களுடைய தொல்லை பெரும்பாகம் ஒழியும்.

கட்சித் தலைவருக்குக் கீழ் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமே ஒழிய அவரவர்கள் சுயேச்சையாய் ஒன்றும் செய்யக் கூடாது என்கின்ற நிபந்தனைகள் மந்திரிகளுக்கு இருக்கும்படியாய் செய்து மந்திரிகளை நடத்த ஒரு தலைவரும் அவருக்கு யோசனை சொல்ல ஒரு கமிட்டியும் இருக்க வேண்டும். இப்படிச் செய்துவிட்டால் அதிகார வெறி கொண்டவர் களுடையவும், அகம்பாவம் கொண்டவர்களுடையவும், தொல்லை பெரும்பாகம் ஒழியும்.

இவ்விஷயத்தை தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் நெல்லூர் மகா நாட்டிலேயே பிரேரேபித்தார். ஆனால் தாங்கள் தலைவர்களாவோம் என்றும் தாங்கள் மந்திரிகளாவோம் என்றும் தங்களுக்கு செல்வாக்கில்லாமல் போய்விடுமே என்று நினைத்துக் கொண்டவர்களின் எதிர்ப்பாலும் முயற்சியாலும் அத் தீர்மானம் பின் வாங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.

அது எப்படியோ போனாலும் இனி இந்தக் காரியங்களால்தான் கட்சி பலப்படக்கூடும் என்பதோடு கட்சி நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நிலைத்தும் இருக்க முடியும்.

மற்றப்படி கட்சியின் வேலைத் திட்டத்தைப் பற்றி இனி அதிகம் பேச வேண்டிய அவசியமில்லாத நிலையிலேயே ஜஸ்டிஸ் கட்சி இருந்து வருகின்றது.

இதை நம் எதிரிகளான காங்கிரஸ்காரர்களே ஒப்புக் கொண்டு பொறாமையையும் காட்டி விட்டார்கள்.

அதாவது கட்சி வேலைத் திட்டத்தைப் பற்றிக் கூறும்போது “”ஜஸ்டிஸ் கட்சி தன்னால் சாதிக்க முடியாத அவ்வளவு பெரிய சமதர்மத் திட்டத்தைக் கைகொண்டுவிட்டது” என்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் உட்பட பார்ப்பனப் பத்திரிகைக்காரர்களும் தாராளமாய் வெளியிட்டுவிட்டார்கள்.

மற்றும் அவர்களது பொறாமையைக் காட்டும் முறையில் கட்சி வேலைத் திட்டத்தை “”ராஜ பக்தி கொண்ட சமதர்மத் திட்டம்” என்றும், “”ராமசாமி நாயக்கரை திருப்திப் படுத்த வேண்டிய சமதர்மத் திட்டம்” என்றும் சொல்லி சமதர்மத் திட்டம் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

ஆகையால் இத் திட்டங்களே போதுமானவை. இனி அவைகளை நிறைவேற்ற வேண்டியதுதான் கட்சியின் கடமையாகும்.

ஆதலால் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் இப்போது எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

வரும் தேர்தலில் கண்டிப்பாய் ஜஸ்டிஸ் கட்சியே வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாம் முன் சொன்னபடி உத்தியோகம், பதவி ஆகிய போட்டிகள் ஏற்படாமல் இருப்பதற்கு, ஏதாவது வழி கண்டு பிடிக்க வேண்டியது இக் கூட்டத்தின் முக்கிய வேலையாய் இருக்க வேண்டும் என்பதோடு, கையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றும் முறையில் இனி பாக்கி இருக்கும் 1லீ வருஷ காலத்துக்குள் தக்க வேலை செய்ய ஏற்பாடும் செய்ய வேண்டும் என்றும் ஞாபகப்படுத்த ஆசைப்படுகின்றோம்.

கட்சித் தலைவரும் முதல் மந்திரியுமான பொப்பிலி ராஜா அவர்களுக்கு பணம், பட்டம், பதவி ஆகிய ஆசைகள் இல்லை என்பதையும் தனது பணத்தையும் பதவியையும் கட்சிக்காக செலவழிக்கிறார் என்பதையும் எவரும் மறுக்க மாட்டார்கள். அவர்கள் சமதர்மக் கொள்கையில் அதி தீவிரப் பற்றுடையவர் என்பதிலும் அவருக்கு அத் திட்டத்தில் அதிக வேலை செய்ய ஆசை இருக்கிறது என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை. அதுபோலவே மற்ற மந்திரிகளுக்கும் ஆசை இருக்கலாம். ஆனால் அவர்கள் தைரியமாய் வெளியில் காட்டிக் கொள்ள அஞ்சுகிறார்கள் என்றாவது சொல்ல வேண்டி இருக்கிறது.

கூட்டுறவு இலாக்காவில் 2வது மந்திரிக்கு ஆதிக்கம் இருந்தும், தக்க திட்டங்கள் கட்சித் திட்டமாக இருந்தும், குறிப்பிடத்தக்க காரியம் எதையும் செய்ய பயப்படுகிறார் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.

விவசாயம், வியாபாரம், லேவாதேவி ஆகிய துறைகளில் இதுவரை எவ்வித மாறுதலும் அவர் செய்ததாகத் தெரியவில்லை.

கூட்டுப் பண்ணை முறையும், கூட்டுறவு ஸ்தாபனம் பாங்கி ஆகியவைகள் நிர்வாகத்துக்கு சர்க்கார் சிப்பந்திகளை நியமிக்கும் வேலையும் செய்து விடுவாரேயானால் அது பிறகு அந்த இலாக்காவை நாணயமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் செய்துவிடும் என்பதும் சந்தேகமில்லை.

இப்போது ஐக்கிய நாணய சங்கம் என்பதில் நாணயமும் இல்லை; பயனும் ஏற்படுவது இல்லை என்று வருத்தத்துடன் சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

அதுபோலவே கல்வி மந்திரியாரும் பெண்கள் கல்விக்கும், பாட புத்தகங்கள் விஷயத்திலும் எவ்வித முன்னேற்றமோ, மாறுதலோ குறிப்பிடத்தக்கதாய் ஏற்படுத்தி இருப்பதாய்த் தெரியவில்லை.

பெண்களுக்கு கல்வி பசி ஏற்படுத்தி விட்டோம். குறைந்தது 3வது பாரம் வரையாவது படிக்கும்படி தாலூகாவுக்கு ஒரு பள்ளிக்கூடமாவது இருந்தால் அவர்கள் நிலை எவ்வளவோ மேம்பாடடைந்துவிடும்.

பள்ளிக்கூடங்களுக்கு 5வது கிளாஸ் வரையிலும் உபாத்தியாயர் களாக பெண்களையே நியமிக்க வேண்டும் என்கிற விதி வைத்து விட்டால் பெண்கள் வாழ்க்கையும் ஒரு அளவுக்குச் சுதந்திர வாழ்க்கையாக ஆகிவிடும்.

பாட புத்தகங்கள் சர்க்காரிலேயே அச்சுபோடும்படியாகவும், அதற்கு கல்வி மந்திரியே பொறுப்புள்ளவராகவும் இருக்கும்படி செய்துவிட்டால், பிள்ளைகளுக்கு பணச் செலவு குறைவது மாத்திரமல்லாமல், அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற கல்வியும் கற்றுக் கொடுக்க முடியும்.

ஆகையால் கட்சியை பலப்படுத்துவது, பிற்கால வேலைத் திட்டம் அமைப்பது, எல்லோரையும் ஒற்றுமைப்படுத்துவது என்கின்றதான காரியங்கள் செய்யும்போது இவற்றைப் பற்றிச் சிறிதாவது யோசிக்கும் படியாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.

மற்றப்படி அக்கூட்டம் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவதோடு இக்கூட்டத்தைக் கூட்ட முயற்சித்த தோழர் களுக்கும், சிறப்பாய் தோழர்கள் பொன்னையா, சௌந்திரபாண்டியன் முதலியவர்களுக்கும் நன்றி செலுத்திப் பாராட்டுகிறோம்.

குடி அரசு  தலையங்கம்  16.06.1935

You may also like...