பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தெரு முனை பிரச்சாரம்

தந்தை பெரியாரின் 137-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஒன்றிய பகுதிகளிலும் கொடியேற்றுவிழா மற்றும் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! எங்கள் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும் பிரச்சார பயணம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆதன் அடிப்படையில் கடந்த 22-09-15 அன்று கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பலூர் பகுதியில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தெருமுனை பிரச்சாரம் துவங்கியது.

சிறுவலூர் அருகில் உள்ள எலந்தக்காடு பகுதியில் அமைந்துள்ள கழக கொடி கம்பத்தில் கழக கொடியினை ஏற்றிய பின் துவங்கிய பயணம் சிறுவலூர் பகுதியை அடைந்தது. அங்கு காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல தந்திரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இடையே தோழர் காவை இளவரசன் அவர்கள் சாமியார்கள் லிங்கம் எடுப்பது, திருநீறு வரவழைப்பது எல்லாம் மந்திர வேலை அல்ல! எல்லாம் மக்களை ஏமாற்றும் வகையில் செய்யும் தந்திரம் தான் என பல்வேறு செயதிகளை கூறிக் கொண்டே நிகழ்ச்சியினை செய்தார். பின்னர் தலைமை கழக பேச்சாளர் வேலுச்சாமி, மாநில வெளியீட்டு செயலாளர் இராம.இளங்கோவன் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார்கள். அன்று சிறுவலூர் பகுதியில் வாரச் சந்தை என்பதால் அருகில் உள்ள கிராம மக்கள் பலரும் நிகழ்ச்சியினை ஆர்வமாக கேட்டனர். அங்கு இருந்து புறப்பட்ட பயணம் வரும் வழியில் மூப்பன் சாலை, செட்டியாம்பாளையம் பிரிவு, அம்மன் கோவில்பதி ஆகிய பகுதியில் கழக கொடியினை ஏற்றிவிட்டு அருவங்கொரை பகுதியை அடைந்தது அங்கு பயணத்தின் நோக்கத்தினை விளக்கி இராம.இளங்கோவன் உரையாற்றினார். அடுத்து கொளப்பலூர் பகுதியை வந்தடைந்த. அங்கு காவை இளவரசன் அவர்கள் மந்திரமல்ல தந்திரமே நிகழ்ச்சியினையும், தோழர் சுப்பிரமணியம், வேலுச்சாமி இராம.இளங்கோவன் அவர்கள் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்கள். பெருந்திரளான மக்களும், குழந்தைகளும் நிகழச்சியில் கலந்து கொண்டனர். கொளப்பலூர் பேருந்து நிறுத்தத்தில் தந்தை பெரியார் அவர்களின் படம் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது அனைவரையும் கவர்ந்தது. தோழர்கள் அனைவருக்கும் பெரியார் படிப்பகத்தில் அசைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கொளப்பலூர் பகுதி தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

27-09-2015 – வு.N. பாளையம் ஒன்றியம்

வுபோளையம் ஒன்றிய கழகத்தின் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 27-09-15 அன்று பங்களாப்புதூரில் தொடங்கியது. மாவட்ட செயலாளர் வேணுகோபால் அவர்கள் சாதி ஒழிப்பு பாடல்கள் பாடி இம்மக்களை சாதி எவ்வாறு இழிவு படுத்துகிறது?. எவ்வாறு உருவாகியது என்பது குறித்து பேசி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தோழர் இராம.இளங்கோவன் அவர்கள் உரையாற்றும் பொழுது உயர்கல்வி நிறுவனங்களில் நமது மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, மத்திய, மாநில அரசுளின் உயர்கல்விகளில் நமது மக்களின் பணி இட ஒதுக்கீடு நிலவரம் குறித்து பேசினார். அங்கு நிகழ்வை முடித்து விட்டு கிளம்பிய பயணம் அடுத்து வுபோளையம் சென்றது. அங்கு அண்ணா சிலை அருகே நடந்த பயணத்தில் மாவட்ட தலைவர் நாத்திக சோதி, நாம் தமிழர் தோழர் வெங்கட் ஆகியோர் உரையாற்றினார்கள். அடுத்து பயணம் நால்ரோடு பகுதியை அடைந்தது. அங்கு தோழர் சதுமுகை பழனிசாமி கோபி வேலுச்சாமி, இராம.இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினார்கள். நால்ரோடு பகுதியில் வேலுச்சாமி அவர்கள் பேசும் போது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் அவர் பேசக்கூடாது என காவல்துறையிடம் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தனர்.

நால்ரோட்டில் பயணம் முடித்துக் கொண்டு அரசூர் பகுதியை வந்தடைந்தது. அங்கு நாம் தமிழர் தோழர் வெங்கட், இராம.இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினார்கள். அரசூரில் பயணம் முடிந்தவுடன் கொடிவேரியில் தோழர்கள் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மதிய உணவை முடித்துக் கொண்டு சிறிது நேர ஓய்வுக்குப்பின் பயணம் துவங்கியது. பயணம் கொடிவேரி பிரிவை அடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கழக கம்பத்தில் தோழர் கோவிந்தராசு அவர்கள் கழக கொடியினை ஏற்றி வைத்தார். அங்கு பயணத்தின் நோக்கத்தினை விளக்கி தோழர்கள் செயக்குமார், சுப்பிரமணியன், அந்தியூர் வீரா கார்த்திக், நாம் தமிழர் அமைப்பைச் சார்ந்த தோழர் குமுதவல்லி, இராம.இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினார்கள். கொடிவேரி பகுதிகளில் இந்து முண்ணனி அமைப்பைச் சார்ந்தவர்கள் இங்கு பிரச்சார பணயம் நடத்தக்கூடாது நடத்தினால் ரகளை செய்வோம் என்று கூறியதால் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் சாலையில் சென்றவர்களுக்கும் பிரச்சனையாக இருக்கும் போல் நின்று பார்க்கலாம் என அவர்களும் நின்றதால் நமது பேச்சை கேட்க கூட்டம் கூடியது நமக்கு சாதகமாக அமைந்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன் அப்பகுதி மக்கள் நமது தோழர்களை பாராட்டினார்கள். நிகழ்ச்சி அடுத்து காசிபாளையம் பகுதியை சென்றடைந்தது. அங்கு தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட செயலாளர் வீரா கார்த்திக், தோழர்கள் சுப்பிரமணியம், இராம.இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினார்கள். காசிபாளையத்துடன் பிரச்சார பயணம் நிறைவுற்றது. தோழர் செயக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார். அங்கு தோழர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கொடிவேரி மற்றும் காசிபாளையம் தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

 

You may also like...