‘காலச்சுவடு’ கட்டுரைக்கு மறுப்பு நீதிக்கட்சி தலித் மக்களுக்கு எதிரானதா? வாலாஜா வல்லவன்
காலச்சுவடு இதழ் 11 சூலை 2017 இதழில் திராவிட இயக்க நூற்றாண்டு‘அம்பு எய்யாத வில்’என்ற தலைப்பில் க.திருநாவுக்கரசு என்பவர் (இவர் திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அல்ல) நீதிக்கட்சியின் மீதும், பெரியாரின் மீதும் அபத்தமான உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். பார்ப்பனர்களுக்கே உரிய வழக்கமான, தலித்துகளை பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது மோதவிடும் போக்கிலேயே இக்கட்டுரை அமைந்துள்ளது. இக்கட்டுரை ஆசிரியர் எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் ஒரு பெரிய தலைவராக இருந்தார் என்கிறார். அதுவே உண்மையல்ல. 1916 நவம்பரில் நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதை இக்கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். 1917 இல் எம்.சி.ராஜா ஆதி திராவிட மகா சபையை புதுப்பித்தவர் என்ற வரலாற்றை மறைத்துள்ளார். எம்.சி.ராஜா நீதிக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தால் ஆதிதிராவிட மகாசபையை ஏன் தொடங்கவேண்டும். இரட்டைமலை சீனிவாசன், மதுரைப்பிள்ளை, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, தர்மலிங்கம் பிள்ளை போன்றவர்கள் நீதிக்கட்சி ஆதரவாளர்கள். எம்.சி.ராஜா, ஜெ.சிவசண்முகம் பிள்ளை, முனுசாமி பிள்ளை போன்றவர்கள் நீதிக்கட்சி எதிர்ப்பாளர்கள். 1920 முதலே இரண்டு குழுக்...