ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (3) வாலாசா வல்லவன்
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு.
வழக்குரைஞர் பா.குப்பன் பெரியார் மீது சுமத்தும் மற்றொரு குற்றச்சாட்டு “தமிழ்ப் பார்ப்பனர்களிடம் சினப் பாய்ச்சல்; தெலுங்குப் பிராமணர்களிடம் இனப்பாசம்!” (பக் 53) என்று எழுதியுள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பா.குப்பன் தமிழ்ப் பார்ப்பனர் தெலுங்குப் பார்ப்பனர் என்று வரையறை செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம். பழந்தமிழகத்தில் பார்ப்பனர் என்ற சாதியே கிடையாது. தொல்காப்பியர் காலக் கட்டத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியப் பார்ப் பனர்கள் தமிழகத்தில் வந்துள்ளனர். தொல்காப்பி யத்திலேயே வடமொழிச் சொற்களைச் சேர்ப் பதற்கான விதிகளை அவர் உருவாக்கியதிலிருந்தே இதனை நாம் உணர முடிகிறது. பெரியாரியல் வாதிகளும், மார்க்சிய வாதிகளும், உண்மையான தேசிய இன விடுதலையில் அக்கறை உள்ளவர்களும் தலைவர்களின் அரசியல் நடவடிக்கைகளை வைத்தே அவர்களின் அரசியலை மதிப்பீடு செய்ய வேண்டும். அதுதான் முறை. ஆனால் பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்கள் தங்களை உயர்ந்தவர்களாகச் சாத்திரங் களிலும், சட்டங்களிலும் எழுதி வைத்துக்கொண்டும் அதில் அவர்கள் கட்டுப்பாடாகவும் உறுதியாகவும் இருந்துக் கொண்டு மற்ற சமூகத்தினரின் மீது ஆதிக்கம் செலுத்தியதாலேயே திராவிடர் இயக்கத்தால் அவர்கள் எதிர்க்கப்பட்டார்கள்.
இராஜாஜியின் அரசியல் தலைமையைக் காப்பதற்காக ம.பொ.சியால் திட்டமிட்டுப் பரப்பப் பட்டதே தெலுங்கர் ஆதிக்கம் என்பதெல்லாம். அடுத்தது தெலுங்கர் டி.பிரகாசம் முதல்வராக வந்ததற்குப் பார்ப்பனரல்லாதார் கொள்கையே காரணம் என்கிறார்.
1937 தேர்தலிலேயே பிரகாசம் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார். அவர் ஆந்திரா பகுதியில் காங்கிரஸ் கட்சிக்காக வசூலிக்கப்பட்ட தொகை ரூ80,000த்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டார். அதனால் அவரை முதல்வர் வேட்பாளருக்குக் காந்தி பரிந்துரைக்க வில்லை. எனினும் 1937 இல் இராஜாஜி அமைச் சரவையில் பிரகாசம் வருவாய்த்துறை அமைச்சராக இரண்டாமிடத்தில் இருந்தார்.
1946 தேர்தலைத் திராவிடர் கழகம் முற்றிலுமாகப் புறக்கணித்தது.திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கை யிலேயே அதிதீவிரம் காட்டியது. பிரகாசத்தைப் பெரியார் ஆதரித்தார் என்பதெல்லாம் பச்சைப் பொய்.
1946 தேர்தலிலும் இராஜாஜியே முதல்வராக ஆசைப்பட்டார். காந்தியும் 1946 ஜனவரி மாதம் ‘அரிஜன்’ இதழில் இராஜாஜியை விட்டால் முதல்வர் வேட்பாளருக்கு வேறு தகுதியான நபர் யாரும் இல்லை. எனக்கு அதிகாரமிருந்தால் இன்றே இராஜாஜியை முதல்வர் பொறுப்பில் அமர்த்தி விடுவேன். என்ன செய்வது அந்த அதிகாரம் மாகாண காங்கிரஸ் கமிட்டியிடம் உள்ளது என்று கட்டுரை எழுதினார். ஆனால் 1942இல் பாக்கிசுதான் பிரிவினைக் கொள்கையைக் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்றக் காரணத்தைக் கூறி ராஜாஜி காங்கிரசை விட்டு வெளியேறி விட்டார். மறுபடியும் 1945 சூன் மாதத்தில் திரும்ப வந்து காங்கிரசில் சேர்ந்து கொண்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துக் கொள்ளாத இராஜாஜியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பல காங்கிரசார் காந்திக்குக் கடிதங்களும், தந்திகளும் அனுப்பினர். காங்கிரஸ் மேலிடம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராசர், ஆந்திர காங்கிரஸ் தலைவர் டி. பிரகாசம், கேரள காங்கிரஸ் தலைவர் மாதவ மேனன் ஆகியோரைத் தில்லிக்கு வர வழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சென்னை மாகாணத்தில் மொத்தம் 215 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. பலமான எதிர்கட்சி எதுவுமில்லாததால் காங்கிரஸ் 163 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. தடை நீக்கம் செய்யப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர் முதன் முதலாகத் தேர்தலைச் சந்தித்தனர். 2 இடங்களில் வெற்றி பெற்றனர். காந்தியின் தலையீட்டின் பேரில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இராஜாஜி முதல்வராக வருவதற்கு 38 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவளித்தனர். இதனால் இராஜாஜி முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகினார்.
ஆந்திர காங்கிரஸ்ஸ்தலைவர் பிரகாசம் முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் பக்தவச்சலத்தின் தாய்மாமன் முத்துரங்க முதலியாரை காமராசர் நிறுத்தினார். ஆந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 77 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே.
வாக்கெடுப்பில் இராஜாஜி குழுவினர் டாக்டர் சுப்பராயன் தலைமையில் 38 பேர் நடுநிலை வகித்தனர். மா.பொ.சியின் எனது போராட்டம் நூலில் 33 பேர் என்று உள்ளது. அது அச்சுப் பிழையாக இருக்கலாம்.
பிரகாசத்துக்கு 82 வாக்குகளும் முத்துரங்க முதலியாருக்கு 64 வாக்குகளும் கிடைத்தன 13 வாக்கு வித்தியாசத்தில் முத்துரங்க முதலியார் தோல்வி யுற்றார். இராஜாஜி குழுவினர் நடுநிலை வகித்தற்குக் கூறிய காரணம் மிகவும் முதன்மையானது. 1937 தேர்தலின்போதே ஆந்திர காங்கிரசாருடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டோம். அடுத்த தேர்தலில் முதல்வர் பதவி ஆந்திராவைச் சேர்ந்தவருக்குக் கொடுக்க வேண்டும் என்று, ஆகவே நடுநிலை வகிக் கிறோம் என்றார்கள். சான்று (றுமைiயீநனயை 1946
ஆயனசயள யீசநளனைநnஉல நடநஉவiடிn சநளரடவ) ஆக, பிரகாசம் முதல் அமைச்சராக வருவதற்கு இராஜாஜிதான் காரணமேயொழிய பெரியாரோ அல்லது காங்கிரசிலிருந்த பார்ப்பனரல்லாதார் உணர்வோ காரணமல்ல.
இந்த வரலாற்றை ம.பொ.சி அப்படியே திருப்பிப் போட்டார். “இராஜாஜி சென்னை மாநிலத்தின் முதல்வராக வேண்டுமென்று 1946இல் நான் விரும்பினேன். அதற்காக கோஷ்டி சேர்ந்து பாடு பட்டேன். சகோதர காங்கிரஸ்காரர்களிடம் கல்லடியும் சொல்லடியும் பட்டேன். அன்று இராஜாஜியிடம் எனக்கிருந்த பக்தி இன்றும் உண்டு”…. (ம.பொ.சி எனது போராட்டம் பக் 585) இந்தப் புத்தகம் 1974 இல் வெளியிடப்பட்டது.
1971இல் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அனந்தநாயகியிடம் தோல்வி யுற்ற மா.பொ.சியை 1972 இல் தி.மு.க தலைவர் மு. கருணாநிதி சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமித்து அதே ஆண்டில் மேலவைத் துணைத் தலை வராகவும் நியமித்து, அரசாங்க காரும் அரசாங்க பங்களாவும் கொடுத்ததால் குளிரூட்டும் அறையில் இருந்து கொண்டு இரண்டு ஆண்டுகளில் எழுதி 1974 இல் இந்நூல் வெளியிடப்பட்டது. வி.வி.கிரி என்கிற ஆந்திரப் பார்ப்பனர்தான் இந்த நூலை வெளி யிட்டார்.
மேலும் ம.பொ.சி. கூறுகிறார். “இந்த நேரத்தில், இராஜாஜி டில்லி மாநகரில் தம்முடைய மகள் திருமதி லட்சுமி தேவியின் இல்லத்தில் இருந்தார். அதனால் எனது கருத்தை அவருக்கு எடுத்துரைக்க வும் இயலாதவனாக இருந்தேன். ஆனால் எப்படியோ தனது கோஷ்டியினர் நடுநிலை வகிப்பதென்ற எண்ணம் இயற்கையாகவே இராஜாஜிக்குத் தோன்றியது. இந்த நிலையே திரு முத்துரங்க முதலியாருக்கு வெற்றியளித்து விடுமென்று அவர் கருதினாரோ என்னவோ.” ம.பொ.சி (எனது போராட்டம் பக்கம் 364) அப்படியே வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டி எழுதிவிட்டார் ம.பொ.சி. முத்துரங்க முதலியார் வெற்றி பெற வேண்டுமென்று இராஜாஜி குழு நினைத்திருந்தால் அவருக்கு வாக்களித்திருக்கலாமே.
தன்னை முதலமைச்சர் பதவிக்கு வரவிடாமல் தடுத்த காமராசர் குழு வேட்பாளர் முத்துரங்க முதலியார் தோற்க வேண்டும் என்று இராஜாஜி கருதியிருக்க வேண்டும். அல்லது தமிழ்த்தேசியர் பார்வையில் கூற வேண்டுமானால் தனது இனமான தெலுங்குப் பார்ப்பனர் பிரகாசம் முதலமைச்சராக வரவேண்டுமென்று அவர் உள்ளூர நினைத்திருக்க வேண்டும்
இராஜாஜி தெலுங்குப் பார்ப்பனரே
இராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதி யுள்ளார். கல்கி ராஜேந்திரன் தமிழாக்கம் செய்து
1000 பக்கங்களில் வானதி பதிப்பகம் 2010இல் வெளியிட்டுள்ளது.
“இராஜாஜியின் முன்னோர் திருப்பதிக்கு அருகே வசித்து வந்ததாகத் தெரிகிறது. இந்த தெலுங்குப் பகுதியிலிருந்து மைசூர் மன்னர்களின் ஆட்சியி லிருந்த பலகாட் பீடபூமியில் பன்னப் பள்ளி கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்கள். (பக்கம்5)
இராஜாஜியின் தந்தையார் பெயர் ‘வேங்கடார்யா’. சக்ரவர்த்தி என்பது அவர் குடும்பப் பெயர். ஒசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளியில் அவர் முனிசிப்பாக இருந்தார். இராஜாஜிக்குப் பெற்றோர் இட்ட பெயர் ‘ராஜகோபாலாச்சார்’
(பக் 70)
இராஜாஜியின் தந்தையைச் சக்ரவர்த்தி அய்யங்கார் என்று எல்லோரும் அழைப்பர். அவர் சமஸ்கிருத நூல்களைத் தெலுங்கில் எழுதிப் படித்துச் சுமாரான ஞானம் பெற்றிருந்தார் (பக்9)
இராஜாஜி பட்டப்படிப்பில், தமிழில் தேர்ச்சி யடையவில்லை. சட்டக்கல்லூரியில் சேர்ந்த பின்பு அவர்கள் பட்டப்படிப்பில் தமிழில் தேர்ச்சி பெற்றால்தான் சட்டப்படிப்பில் தேர்வு எழுத முடியும் என்று அறிவித்தனர். மீண்டும் தமிழ்த் தேர்வு எழுதினார். மயிரிழையில் 46/120 மதிப்பெண்கள் பெற்றுத்தேறினர். தன்னுடைய தந்தையாரிடம் “தமிழ்ப் பூதத்திடமிருந்து ஒரு வழியாக விடு பட்டு வந்து விட்டேன்” என்று கூறினார். (பக் 18)
ஆந்திராவில் உள்ள குப்பம் கிராமத்தில் இராஜாஜியின் திருமணம் நடைபெற்றது. குப்பம் கிராமத்தில் தெலுங்கு பேசுவோரே அதிகமாக இருந்தனர். இராஜாஜியின் மனைவியின் பெயர் அலமேலு மங்கம்மாள் (பக்22)
இராஜாஜியின் மனைவிக்குத் தெலுங்கு மட்டுமே எழுதப்படிக்கத் தெரியும். திருமணத் துக்குப் பின் இhஜாஜி அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தார் (பக்45)
இராஜாஜி வழக்குரைஞர் தொழில் நடத்து வதற்காக அவருடைய குடும்பம் 1900த்தில் சேலத்தில் குடியேறியது.
இராஜாஜி 1952 இல் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த போதும் ஆந்திரர்களுக்குச் சார்பாகவே நடந்து கொண்டார்.
வடக்கு எல்லை மீட்புக் குழுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே. விநாயகம் (தி.க, தி.மு.க.வின் ஆதரவோடு), செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவர் ஆச்சார்யா கிருபாளனியின் ‘கிசான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி யின்’ (அதாவது விவசாயிகள் தொழிலாளர்கள் மக்கள் கட்சி) வேட்பாளராக அவர் போட்டியிட்டார்.
அந்த கட்சிக்குத் தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. 1952 தேர்தலில் தி.க, தி.மு.க இரண்டுமே காங்கிரசைக் கடுமையாக எதிர்த்தும், எதிர்கட்சி களுக்கு ஆதரவாகவும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்ததால்தான் கே. விநாயகம், சி.பா.ஆதித்தனார் போன்றவர்கள் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியில் இருந்தபோதிலும் வெற்றிபெற முடிந்தது.
கே. விநாயகம் திருத்தணியைச் சேர்ந்தவர். எம்.ஏ., பி.எல். படித்து வழக்குரைஞராக இருந்தவர். அவருடைய பகுதி நேரு சர்க்காரால் ஆந்திராவுக்குக் கொடுக்கப்பட்டதால் அதை எதிர்த்து அவர் தீவிரமாகப் போராடினார். அவர்தான் ம.பொ.சி.யை வடக்கு எல்லைப் போராட்டக் குழுவுக்குத் தலைவராக 1953 இல் நியமித்தார். ம.பொ.சி. முதலமைச்சர் இராஜாஜியுடன் நெருக்கமாக இருந்ததால் வடக்கெல்லைப் பிரச்சனையைச் சுமுகமாக முடித்து விட முடியும் என்ற நம்பிக்கையிலேயே கே. விநாயகம் அதைச் செய்தார். அது வரை தி.மு.க.வினரும் வடக் கெல்லைப் பிரச்சனையில் ஒன்றாகவே இருந்து போராடினர். ம.பொ.சி அப்போது குலகல்விக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரம் செய்து வந்ததால் அவருடைய தலைமையை ஏற்க முடியாது என்று வ.டஆற்காடு தி.மு.க செயலாளர் ஏ.எல்.சி கிருஷ்ணசாமி செய்தி ஏடுகளுக்கு அறிக்கை யொன்றை அனுப்பினார். (நம் நாடு) 12.2.1954 தி.மு.க. வடக்கெல்லைப் பிரச்சினையில் தனித்தே போராடும் என்றும் அறிவித்தார்.
(தொடரும்)
பெரியார் முழக்கம் 10122015 இதழ்