வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (8) வடக்கு எல்லை மீட்பு போராட்டம்: ம.பொ.சி.யின் நிலை என்ன?
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு.
வடக்கு எல்லைப் பிரச்சினையை இழுத்தடிக்க இராஜாஜி சூழ்ச்சி செய்தார். இதைக் கஜபதி நாயகர் கண்டித்தார். 25.2.1954 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ஆ.கசபதி நாயகர் “தமிழ்நாட்டுடன் சேர்ந்திருக்க வேண்டிய பகுதிகளாகிய சித்தூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி போன்ற பிராந்தியங்களை ஆந்திர இராஜ்யத்தோடு இந்திய சர்க்கார் சேர்ப்பதற்கு அனுமதித்தது தவறு ஆகும். அதனால் நாட்டில் எழுந்த கேடுகளை, கிளர்ச்சிகளை குழப்பங்களை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். அந்த பிராந்தியங்களில் வசிக்கின்ற பெரும் பான்மையான தமிழ் மக்களின் கலாச்சாரத்தைப் பாதிக்கின்ற ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி அந்தச் சபையில் (ஹளளநஅடெல) என் நண்பர் விநாயகம் அவர்கள் பேசும்போது, சித்தூர் விஷயம் ஆந்திர சர்க்காரின் பொறுப்பும் அல்ல, சென்னை ராஜ்ய சர்க்காரின் பொறுப்பும் அல்ல, அது மத்திய சர்க்காரின் பொறுப்பு! என்று குறிப்பிட்டார்கள். ஆனால் மேன்மை தாங்கிய கவர்னர் பிரான் அவர்களுடைய சொற்பொழிவில் இருந்து என்ன தெரியவருகிறது என்றால், இது மத்திய சர்க்காரின் பொறுப்பு அல்ல. சென்னை ராஜ்ய அரசியலாரும், ஆந்திர ராஜ்ய அரசியலாரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிலைமையில் இருவர்களுடைய பொறுப்பாகவே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது……
ஆனால் கவர்னர் பிரான் சொல்லுகிறார். எப்போதும் “நிர்வாகப் பிரிவுகள் மொழி வழியாகப் பிரிக்கப்பட்ட ஒரு பிரிவாக இருக்க முடியாது என்பதை நாம் எல்லோரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று, மக்களுடைய விருப்பங்கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் ஏன் என்று தான் நான் கேட்கிறேன். இப்பொழுது இருக்கும் எல்லைகளை யார் வகுத்தது? யாரால் இந்த எல்லைகள் பிரிக்கப்பட்டது? இவைகளையெல்லாம் மொழி வழி பிரிப்பதற்கு என்ன கஷ்டம் இருக்கப் போகிறது என்பது தான் எனக்குத் தெரியவில்லை.”
“ஒரு எல்லையை நீங்களாவே அமைத்துக் கொண்டு அதில் தமிழ்த் தாயகத்தோடு சேர வேண்டிய தமிழ்ப் பிரதேசங்கள் இருந்தாலும் கூட அதைக் கவனிக்காது அந்த இடத்தோடு ஒரு கோட்டைப் போட்டு இதற்கு அப்பாலுள்ள பிராந்தியங்கள் எல்லாம் தெலுங்கு இராஜ்யத்தைச் சேர்ந்தது என்று அறிவித்திருப்பது ரொம்பவும் வருந்தத்தக்க விஷயம் ஆகும்” என்று கண்டித்துப் பேசினார். (சட்டமேலவை விவாதங்கள் பக் 56-59 நாள் 25-2-54)
ஆனால் வடக்கெல்லைப் போருக்காகத் தாம் வாழ்வதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்ட ம.பொ.சி., இராஜாஜியின் எல்லைப் பிரச்சினையை இழுத்தடிக்கும் சதித் திட்டத்திற்கு ஆதரவாகவே இருந்தார்.
“மதிப்பிற்குரிய துணைத் தலைவர் அவர்களே கவுன்சில் முன்புள்ள நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். குறிப்பாக சித்தூர் மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பகுதிகளை இந்த இராஜ்யத்தோடு சேர்ப்பதற்காக இந்தச் சர்க்கார் ஒரு உடன்படிக்கை செய்து கொள்வார்கள் என்பதாக அவ்வுரையின் ஆரம்பத்திலேயே அந்தப் பிராந்தியத்தி லுள்ள மக்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக, அவ்வுரையை நிகழ்த்திய கவர்னர் அவர்களுக்கும் அதனைத் தயாரித்துள்ள மந்திரிமார் களுக்கும் நான் சித்தூர் மாவட்டத் தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திர அரசாங்கத்துடன் நம் சர்க்கார் சுமூகமான முறையில் பேச்சு வார்த்தைகள் நடத்தியே ஒரு நேர்மையான முடிவைக் காண வேண்டும் என்பது அபிப்பிராயம். என்னைக் கேட்டால் எல்லைக் கமிஷன் சர்ச்சைக்கே இப்பிரச்சனையை விடாமல், உண்மை இந்தியர்கள் நாம் என்பதை அகில உலகுக்கும் எடுத்துக் காட்டும் முறையில் தமிழர்களும், தெலுங்கர்களும் கூடிப்பேசி இவ்விஷயத்தைத் தீர்த்து கொள்வது தான் சரியான தாகும். இன்றைய தினம் சென்னை இராஜ்ஜியத்திற்கும் சரி, ஆந்திர இராஜ்யத்திற்கும் சரி அறிவும், அனுபவமும், வயதும் முதிர்ந்த இரு பெரியார்கள், இரு அறிஞர்கள், இரு சிறந்த தேசத் தலைவர்கள்தான் முதலமைச்சர் களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். சென்னை முதல்வர் இராஜாஜியும், ஆந்திர முதல்வர் பிரகாசமும் இவர்கள் இருவருமே தேச விடுதலைப் போராட்டத்தில் ஒன்றாக, ஒரே கட்சியில் நின்று போராடி வெற்றி பெற்ற சிறந்த தியாகிகள். ஆகவே ஆந்திர நாட்டுப் பிரதமராகவும், தமிழ்நாட்டுப் பிரதமராகவும் வீற்றிருக்கின்ற இந்த இரு நண்பர்களுமே ஓரிடத்தில் கூடி இப்பிரச்சினைக்கு உடனடியாக ஒரு முடிவைக் காணுவதுதான் சிறந்த வழியாகும்”. (மேலவை விவாதங்கள் பக். 106 நாள் 26.2.1954)
முன்பு எல்லைக்கமிஷன் வேண்டுமென்று விநாயகம் மூலம் தீர்மானத்தைக் கொடுத்து நான்தான் அதைச் சட்ட முன் வடிவில் சேர்த்தேன் என்றார். (ம.பொ.சி எனது போராட்டம் பக் 673) ஆனால் இப்போது எல்லைக் கமிஷனுக்கே விட வேண்டாம் என்கிறார்.
ஏனென்றால் ஆளுநர் உரையில் அப்படி உள்ளது அதற்காக இராஜாஜிக்குப் பக்கமேளம் வாசித்தார். இதனால் வந்த விளைவு பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 1956 இல் தீர்ந்திருக்க வேண்டிய வடக்கெல்லை தீராமல் பவுண்டரி கமிஷன் அனுப்பு என்று நான்காண்டுக் காலம் போராட்டம் நடத்தினார். இராஜாஜி, ம.பொ.சி கூட்டுறவால் காலம் கடந்ததுதான் மிச்சம்.
வடக்கெல்லைப் போராட்டத்திலும், தெற் கெல்லைப் போராட்டத்திலும், மொழிவாரி மாநில அமைப்பிலும், தமிழ் ஆட்சி மொழியாக்குவதிலும், எதிலுமே ம.பொ.சிக்கு ஆதரவாக இராஜாஜி இல்லை. தட்சிண பிரதேசத்திட்டத்தை ம.பொ.சி.எதிர்த்தார். இராஜாஜி ஆதரித்தார்.
மொழி வாரி மாநிலப் பிரிவினை கேட்பவர்கள் “காட்டுமிராண்டிகள்” என்று இராஜாஜி பேசினார். 5.11.1953இல் நடைபெற்ற வடக்கெல்லை மீட்பு மாநாட்டிற்கு “மாநாடு வெற்றி பெறக் கோரிப்” பெரியார் ஈ.வெ.ரா. ராஜா சர்.முத்தையா செட்டியார் ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தனர். (கோல்டன் நா.சுப்பிரமணியன் தமிழக வடக் கெல்லைப் போராட்டமும் தணிகை மீட்சியும். பக் 48, ம.பொ.சி. யின் செங்கோல் 11-1-1953)
9-2-1953இல் நகரியில் நடைபெற்ற தமிழர் மாநாட்டுக்குத் திருவாளர்கள் ஈ.வே.ரா, கோவை ஜி.டி.நாயுடு, செட்டி நாட்டரசர், டாக்டர் மு.வ., திருமதி மரகதம் சந்திரசேகர் முதலிய பல தலைவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தனர். (கோல்டன் நா.சுப்பிர மணியன் தமிழக வடக்கெல்லைப் போராட்டமும் தணிகை மீட்சியும், பக் 55 ம.பொ.சியின் ‘செங்கோல்’
15-2-53)
ஆக, பெரியார் வடக்கெல்லைப் போராட்டத்திற்கு எதிர்ப்பாக இருந்தார் என்று கூறுவது தவறே ஆகும். ம.பொ.சி.யின் எந்தக் கொள்கைக்கும் ஒத்துவராத இராஜாஜியை ம.பொ.சி ஏன் தலைவராக ஏற்றுக் கொண்டார் என்பதையும் வடக்கெல்லை, தெற்கெல்லைப் போராட்டத்தை ஆதரித்த, தட்சிணப் பிரதேச திட்டத்தை எதிர்த்த ம.பொ.சி.க்கு ஒத்த கொள்கையுடைய பெரியாரை ஏன் எதிர்த்தார் என்பதையும் அடிக்கடி இராஜாஜி வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்து வரும் ம.பொ.சி. இராஜாஜி தெலுங்குப் பார்ப்பனர் என்பதை ஏன் மறைத்தார் என்பதையும் இராஜாஜி தமிழ்ப் பார்ப்பனர் அதனால் தான் பெரியார் எதிர்த்து வந்தார் எனக்கூறித் திரியும் தமிழ் தேசியம் பேசுவோர் மற்றும் ம.பொ.சி.யின் பற்றாளர்கள் தான் விளக்க வேண்டும்.
(தொடரும்)
பெரியார் முழக்கம் 21012016 இதழ்