வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (9) ஒரே ஆண்டில் மரணித்த ம.பொ.சி.யின் ‘தமிழ்த் தேச விடுதலை’ – வாலாசா வல்லவன்
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு.
சென்ற இதழ் தொடர்ச்சி
ம.பொ.சி.தான் உண்மையான சுதந்திர தமிழ்நாடு கோரினார் என்பதை ம.பொ.சியின் ‘பிரிவினை வரலாறு’ நூலிலிருந்தும் ‘தமிழன் குரல்’ நூல்களி லிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டியுள்ளார் வழக்குரைஞர் பா.குப்பன். ஆம், உண்மை தான், ம.பொ.சி. அப்படி எழுதிய காலத்தில் பெரியார் ம.பொ.சி.யை முழு மனதுடன் ஆதரித்தார் என்பதை வழக்குரைஞர் பா.குப்பன் மறைத்து விட்டார்.
இதோ பெரியார் ஆதரித்ததை ம.பொ.சி.யே எழுதியுள்ளார்.
“பெரியாரைச் சந்தித்தேன்! 1947 ஜனவரி 26 இல் விருதுநகரில் நகர மன்றத்தின் சார்பில் நடைபெற விருந்த விழாவிற்கு அம்மன்றத் தலைவர் வி.வி.இராமசாமி அவர்களால் அழைக்கப்பட்டேன். அதற்காகச் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் நான் சென்று கொண்டிருந்தபோது, அதே வண்டியில் பெரியார் ஈ.வெ. ராவும் கோயில்பட்டியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்றுக் கொண்டிருந்தார். காலை சுமார் 7 மணிக்கு ரயில் கொடைக்கானல் ரோடில் நின்றபோது, நான் எதிர் பாராத வண்ணம், திடீரென்று திருமதி. மணியம்மை யாருடன் பெரியார் எனது பெட்டிக்கு வந்தார்.
நான்கு இட்டலி, அதற்குத் தேவைப்படும் நெய், சர்க்கரை ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து, அதை உண்ணுமாறு இனிய வார்த்தைகள் கூறி உபசரித்தார். அதுவரை நான் பெரியாரை நேரில் சந்தித்துப் பேசியதில்லை. என்னைவிட வயதில் பெரியவரான அவர், தாமாகவே வலிய வந்து என்னை உபசரித்தது எனக்கு வியப்பைத் தந்தது. இருவரும் இரண்டு நிமிடம் உரையாடினோம். அவர், “ஐயா, ‘தமிழ் முரசு’ப் பத்திரிகையில் தாங்கள் எழுதி வருவதையெல்லாம் நான் தொடர்ந்து படித்து வருகிறேன். எங்களைப் போலவே எழுதுகிறீர்கள். அப்படியே பேசுகிறீர்கள் என்றும் கேள்விப்பட்டேன். காங்கிரஸ்காரர்களும் பார்ப்பனர்களும் ஐயாவுக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடும். எங்கள் ஆதரவு தங்களுக்கு எப்போதும் இருக்கும். தாங்கள் தொடர்ந்து அப்படியே எழுதி வாருங்கள்” என்று கனிவான குரலில் பணிவன்போடு கூறினார்” (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 421, 422) என்று ம.பொ.சியே எழுதியுள்ளார்.
இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிந்தாலும், திராவிட நாடு பிரிந்தாலும் பெரியார் அதை வரவேற்றார். பெரியார் விரும்பியது வடவர் ஆதிக்கத்தி லிருந்து தென்னகம் முற்றிலுமாக விடுபட வேண்டும் என்பதே. அதனால் ம.பொ.சி கூறிய தமிழ்நாடு விடுதலையை அவர் எதிர்க்கவில்லை. மேலும் ம.பொ.சியின் ‘தமிழ் முரசு’ இதழுக்கு சிறப்பான முறையில் மதிப்புரை எழுதி அனைவரும் அதைப் படிக்க வேண்டும் என்று தமது ‘குடிஅரசு’ப் பத்திரிகையிலேயே எழுதினார்.
மதிப்புரை ‘தமிழ் முரசு’: தோழர் ம.பொ.சி வஞான கிராமணியார் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘தமிழ் முரசு’ என்ற திங்கள் வெளியீடு நமது பார்வைக்கு வந்தது. ‘தமிழகத்தில் தமிழரசு’ என்ற கிராமணியாரின் கட்டுரையில், அவரின் நாட்டுப் பற்றும், இனப்பற்றும், சீர்திருத்தக் கொள்கையும் நன்கு விளங்குகின்றன.
கிராமணியார் காங்கிரசு இயக்கத்தைச் சார்ந்தவ ரெனினும் தேசியத்தால் தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் வந்த இடையூறுகளை வன்மையாகக் கண்டிக்கின்றார். மதம், கடவுள், புராணம் ஆகிய வற்றால் தமிழர்களின் நிலை சீர் குலைந்துள்ளதைக் கண்டித்தும், வருங்காலத்தில் தமிழராட்சி தனித்தியங்க வேண்டுமென்று வற்புறுத்தியும் விளக்கமாக எழுதியுள்ளார். திரு.வி.க., மு.வரதராசனார் போன்ற தமிழ் அறிஞர்களும் அரிய கட்டுரைகள் எழுதி யுள்ளனர். ‘தமிழ் முரசு’ என்னும் மாத வெளியீட்டைப் பலரும் படித்துப் பயன் பெற வேண்டுமென்பது நமது விருப்பம். கிடைக்குமிடம் தமிழ் முரசுப் பதிப்பகம், 233, லிங்கச் செட்டித் தெரு ஜி.டி. சென்னை -1, (குடிஅரசு 13-7-46)
தமிழ் பேசுபவர்களை தமிழர் என்று பெரியார் கடுமையாக கண்டித்தார் என்று பெரியாருக்கு எதிராக அபாண்டமாக புளுகி வருகின்றனர் போலித் தமிழ்த் தேசியவாதிகள். இவ்வளவு சிறப்பாக ‘தமிழ் முரசு’ இதழுக்கு ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் எழுதி யிருந்தும் ம.பொ.சி அதைத் திருத்தி ஒரு பொய்யை எழுதியுள்ளார்.
“குடி அரசு” வார இதழிலே பெரியார் ஈ.வெ.ரா அவர்களும் “தமிழ் முரசு”ப் புத்தகத்துக்கு மதிப்புரை எழுதியிருந்தார். எனது அரசியல் கட்டுரைகளைப் பொதுவாக அவர் வரவேற்றார் என்றாலும், கதர் அணிந்து கொண்டு, ஆரியரது (அவரது கருத்துப்படி) செல்வாக்கிலுள்ள காங்கிரசிலும் இருந்து கொண்டு நான் புதிய தமிழகம் படைக்கக் கனவு காண்பதனைச் சிறிது நையாண்டியும் செய்திருந்தார். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 378) ம.பொ.சி வரலாற்றை திரிப்பதிலும் மாற்றி எழுதுவதிலும் வல்லவர் என்று ஏற்கனவே நான் எழுதியுள்ளேன். அதனை குடி அரசு மதிப்புரை செய்தியிலும் உறுதிபடுத்தி விட்டார் ம.பொ.சி. ‘குடிஅரசு’ ஏட்டின் “தமிழ் முரசு” மதிப்புரையை நான் அப்படியே கொடுத்திருக்கிறேன். அதில் என்ன நையாண்டி இருக்கிறது. என்ன நக்கல் இருக்கிறது. வேண்டுமென்றே பெரியாரின் மீது ஒரு பொய்யை அள்ளி வீசுவது ம.பொ.சி.யின் வாடிக்கை யாகிவிட்டது என்பதைத் தவிர அதில் உண்மைத் தன்மை இல்லை என்பதே வெளிப்படை.
ம.பொ.சி.யின் ‘தனித் தமிழ்நாடு’, ‘சோசலிச தமிழ் தேசக் குடியரசு’ என்ற கொள்கை எல்லாம் எவ்வளவு காலம் நீடித்தது என்பதுதான் கேள்வி. ஒரு ஆறு மாதம் கூட நீடிக்கவில்லையே! 1-4-47 ‘தமிழ் முரசு’ ஏட்டில் ம.பொ.சி எழுதுகிறார். “தமிழ் நாடு தனி நாடு; அதை உபமாகாணம் என்று சொல்வது தமிழரை ஏய்க்கச் செய்யும் சதி. தமிழன் இந்தியனாய் இருக்கத் தயார்; ஆனால், அவன் முதலில் தமிழன்; இரண்டா வதாகத்தான் இந்தியன்;” தமிழன் எப்படி தமிழனாகவும், இந்தியனாகவும் இருக்க முடியும் என்பது ம.பொ.சி அன்பர்களுக்கே வெளிச்சம்.
15-5-47 தமிழ் முரசு இதழில் “சுதந்திர இந்தியாவில் சுதந்திரத் தமிழரசு அமைய வேண்டும். வெறும் மாகாண சுயாட்சி மட்டும் போதாது. தமிழர் வாழ, தமிழ்மொழி வளர, தமிழ் நிலம் செழிக்கத் தமிழரசு வேண்டும் (பக்4) இவ்வளவு வீரமாக எழுதிய ம.பொ.சி அதே கட்டுரையில் ‘தமிழ் முரசு’ 15.5.47இல் ஒரு அந்தர் பல்டியும் அடிக்கிறார். “இந்திய தேசிய இனங்களின் கூட்டரசில் சுதந்திரத் தமிழகம் இணைய வேண்டு மென்பதே நமது விருப்பம்” என்கிறார்.
15.12.47 ‘தமிழ் முரசு’ இதழில் மிகப் பெரிய பல்டியை ம.பொ.சி அடித்தார். “தமிழ் நாடு ஒரு தனிநாடு, தமிழர் ஒரு தேசிய இனம் என்ற வரலாற்று உண்மைகளைக் கூட அரசியல் நிர்ணய மன்றத்தார் மறந்து விட்டனர். அதில் கலந்து கொண்ட தமிழகத்துப் பிரதிநிதிகள் கூட வற்புறுத்தவில்லை. தமிழினத்துக்கு இழைக்கப்பட் டுள்ள இந்த அநீதிகளைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி தமிழகப் பிரிவினையை வற்புறுத்துவதோடு, சுதந்திர சோசலிசத் தமிழ்க் குடியரசை அமைத்துக் கொள்ள தமிழினத்துக்கு உரிமை உண்டென்று பிரகடனம் செய்ய வேண்டும். இது காங்கிரசின் அடிப்படை கொள்கைக்கு முரண்பட்ட தல்ல. காங்கிரசுஸ்வேண்டுவது ஏதேனும் ஒரு வகையில் அய்க்கிய இந்தியா. அதை நாம் ஏற்போம். அதே சமயத்தில் பிரஜா உரிமை, கைத் தொழில், வர்த்தகம், சுங்கம் இவை போன்ற தமிழ்நாட்டின் உயிர் நாடியான உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என மறுப்போம். இது தான் தேச பக்தி மார்க்கம்”.
ம.பொ.சி.யின் தமிழின துரோகத்தை அப்போதே தோலுரித்துக் காட்டினார் கி.ஆ.பெ. “ஈ.வெ.ராவையும் அவருடைய விடுதலையையும் மட்டுமல்ல, தமிழ் நாட்டிற்கு நலம் தரும் கொள்கைகளைக் கூடத் தாக்க முன் வந்திருக்கிறார். காங்கிரசுஸ்கட்சிக் கூட்டங்களில் இருந்து கொண்டு பிற கட்சியினரின் கொள்கைகளை வசை மொழிகளால் தாக்க முன் வந்து விட்டார். வடநாட்டார் தமிழ் நாட்டைச் சுரண்டவில்லை என்று பேசத் தொடங்கி விட்டார். ம.பொ.சியால் அவருக்கோ, தமிழ் நாட்டிற்கோ, எவ்வித பயனும் ஏற்படாது என்பதை நட்பு முறையில் அறிவித்துக் கொள்கிறோம்”. (தமிழர் நாடு 16-12-1950)
“ம.பொ.சியின் மும்மொழிக் கொள்கை; பிரதேச மொழிகளும் சிறுபான்மையினரும் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ம.பொ.சி எழுதுகிறார் பள்ளிகளில் மாகாண மொழி முதல் மொழியாகவும் ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவும் உயர் நிலைப்பள்ளிகளில் ஏதாவது ஒரு மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட வேண்டும்” என்கிறார். ஆங்கிலத்தின் தேவையை அக்கட்டுரையில் ம.பொ.சி. அழுத்தமாகக் கூறியுள்ளார்.
“அடுத்தப்படியாக, உலகப் பொது மொழி யாகவும், நாடுகளின் கூட்டுறவு மொழியாகவும் அறிவியல் மொழியாகவும் உள்ள ஆங்கிலம் எல்லோருக்கும் இரண்டாம் மொழியாக இருக்கும். உலகத்தோடு ஒட்டி வாழ, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய விரும்பும் எந்த அறிவாளியும் இதற்கு மாற்றாக எண்ணவே முடியாது.” (‘தமிழ் முரசு’ 15-3-48)
ம.பொ.சி ஆங்கிலத்தைப் பற்றி இப்படி சொன்னால் அவர்களுக்கு இனிக்கிறது. பெரியார் ஆங்கிலத்தை படி என்று சொன்னால் அவர்களுக்கு கசக்கிறது. ம.பொ.சியின் ‘தமிழ்க் குடி அரசு’ ஒரே ஆண்டில் செத்துபோய் விட்டது. அய்க்கிய இந்தியாவை ஏற்போம். சில உரிமைகள் மட்டும் நமக்கு இருந்தால் போதும் என்ற முடிவுக்கு அவருடைய தமிழரசுக் கழகம் 1948 லேயே முடிவு செய்து விட்டது. உண்மை இப்படி இருக்க “ம.பொ.சி தான் தனித் தமிழ்நாட்டை தூக்கிப் பிடித்தார், பெரியார் திராவிடம் பேசி அதை கெடுத்து விட்டார்” என்ற குப்பனின் வாதத்தில் அர்த்தமில்லை.
‘இந்து’ பத்திரிக்கை நிருபர், ‘ம.பொ.சி. சுதந்திர தமிழ்நாடு வேண்டும் என்று கோருகிறார்’ என்று எழுதி விட்டார். ம.பொ.சி அடுத்த நாளே ‘இந்து’வுக்கு எழுதிய கடிதத்தில், ‘தான் எப்போதுமே சுதந்திர தமிழ்நாடு கேட்டதில்லை. ‘இந்து’வில் தவறான செய்தி வந்திருக்கிறது’ என்று மறுப்பு எழுதினார். உடனே குத்தூசி குருசாமி 4.2.53 ‘விடுதலை’ ஏட்டில், ‘பொய்! பொய்! பொய்!’ என்று ‘விடுதலை’யில் தலையங்கம் எழுதினார். அதில் ‘தமிழ் முரசுப்’ பத்திரிக்கையில் ‘தனித் தமிழ்நாடு வேண்டும்’ என்று ம.பொ.சி. எழுதியதை எல்லாம் எடுத்துக் காட்டினார். ம.பொ.சிக்கு ‘விடுதலை’யின் மீது ஆத்திரம் பொங்கி எழுந்தது. காங்கிரசிலிருந்து ம.பொ.சியை வெளியே அனுப்ப இருந்த காலம் அது. ம.பொ.சி எழுதுகிறார்.
“இந்த நேரத்தில் திராவிடர் கழக நாளேடான ‘விடுதலை’ சும்மா இருக்கவில்லை. அதுவும் தனது பங்கைச் செய்ய முன் வந்தது. எனக்கு ஆதரவாக அல்ல. என்னை ஒழித்து கட்ட விரும்புபவர்களுக்கு உதவியாக.
அந்த நாளில், திராவிடர் கழகத்துக்கும் எனது தமிழரசுக் கழகத்திற்கும் மோதல் இருந்து வந்தது. ஆகையால் விடுதலைப் பத்திரிக்கைக்கு என்பால் நல்லெண்ணம் இருக்குமென்று நான் எதிர்பார்க்க இயலாது தானே! சுதந்திர திராவிடம் கோரி வந்த ‘விடுதலை’ யார் அதன் குறைந்தபட்ச உருவகமான சுயாட்சி தமிழகம் கோரிய எனக்கு தார்மீக ரீதியிலேனும் ஆதரவு காட்டியிருக்க வேண்டும். இது சாத்தியமில்லா விட்டாலும் என்னை அடியோடு அழித்து முடிக்கப்பாடுபட்ட காங்கிர° காரர்களுக்குக் கை கொடுக்காமலேனும் இருந்திருக்கலாம். அதற்கு மாறாக தமிழரசு கழகத்தின் கொள்கை சுதந்திரத் தமிழகம் தான் என்று சாதித்து பிரிவினைக் கோரும் என்னை காங்கிரசுஸ்வைத்திருக்கக் கூடாதென்று உபதேசம் செய்தது. ‘விடுதலை’ ஆசிரியர் ‘தமிழ் முரசி’ன் பழைய இதழ்களிலே நான் எழுதியவற்றிலிருந்து சான்றுகள் காட்டி, காமராசர் குழுவினருக்கு தகவல் அளித்தார். சுருங்கச் சொன்னால், ‘விடுதலை’ என் முதுகில் குத்தியது. ‘விடுதலை’யின் தலையங்கப் பகுதிகள் மிகுந்த உற்சாகத்துடன் காங்கிரஸ் ஏடுகளிலே எடுத்தாளப்பட்டன.” (ம.பொ.சி எனது போராட்டம் *பக் 700-701)
ம.பொ.சி முன்பு தான் எழுதியவற்றையே அவ்வாறு எழுதவில்லை என்று மறுத்து காங்கிரஸ் காரர்களிடம் மண்டியிட்டு கொண்டிருந்த காலம் அது. நேருவுக்கு தன்னை காங்கிரசிலிருந்து நீக்க வேண்டாமென்று பல கடிதங்களை ம.பொ.சி எழுதியுள்ளார். தமிழரசு கழகத்தின் சட்ட திட்ட விதிகளையும் மாற்றி, ‘இது ஒரு கலாச்சார கழகமே அரசியல் அமைப்பல்ல’ என்று கூறியும் நேரு விடம் மண்டியிட்டார். குத்தூசி குருசாமி ‘விடுதலை’ தலையங்கத்தில் ம.பொ.சியின் ‘தமிழ் முரசு’ ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளைத் தானே வெளியிட்டார்? அவர் சொந்த கருத்து எதையும் அதில் எழுதவில்லையே. இது எப்படி ம.பொ.சி. யின் முதுகில் குத்தியது ஆகும். ‘விடுதலை’யை மட்டுமன்று ‘தினத்தந்தி’யையும் திட்டித் தீர்த்தார். ம.பொ.சி.
பெரியார் முழக்கம் 28012016 இதழ்