வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (7) குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி. தமிழருக்கு தலைவரா? வாலாசா வல்லவன்
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு.
(சென்ற இதழ் தொடர்ச்சி)
இராஜாஜி தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தையும் வர விடவில்லை. ஆ.கசபதி நாயகர் தமிழ் ஆட்சி மொழி மசோதாவைச் சென்னை சட்ட மேலவை யில் 5-1-1954இல் தாக்கல் செய்தார். அதை விவாதத்துக்கே வர விடாமல் முதல் அமைச்சர் இராஜாஜி தடுத்து விட்டார். இராஜாஜியின் பச்சை அடிமை ம.பொ.சியும் அன்று மேல் அவையில் தான் இருந்தார். அவர் வாய் மூடி மவுனியாவே இருந்தார். கசபதி நாயகரின் ஆட்சி மொழி மசோதாவை வரவேற்று ‘நம்நாடு’ நாளேடு 16.1.54 இல் தலையங்கம் எழுதியது. 20.12.54 அன்று சென்னையில் அனைத்து கட்சிகளை யும் அழைத்துக் கசபதியார் தமிழ் ஆட்சி மொழி மாநாட்டை நடத்தினார். அங்கு பேசியவர் களின் உரைகள் ‘நம்நாடு’ நாளிதழில் தொடராக வெளி வந்துள்ளது. இதையெல்லாம் ம.பொ.சி திட்டமிட்டு தன்னுடைய ‘செங்கோல்’ இதழில் வெளியிடாமல் மறைத்து விட்டார்.
மத்தியில் இந்தி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று ம.பொ.சி.யும், மத்தியில் இந்தி ஆட்சி மொழியாக இருக்கக்கூடாது ஆங்கிலம்தான் இருக்கவேண்டும் என்று இராஜாஜியும் கூறி வந்தனர். அப்போது ம.பொ.சிக்கும் இராஜாஜிக்கும் இடையே சிறு உரசல் ஏற்பட்டது. ‘கல்கி’ ஏடு இராஜாஜியை ஆதரித்து எழுதியது. அதற்கு பதில் அளித்து ம.பொ.சி. 21.07.63 ‘செங்கோல்’ ஏட்டில் இராஜாஜியைப் பற்றி எழுதியுள்ளார்.
“மொழிவாரி மாநிலத்தை அன்று எதிர்த்தாரே. இராஜாஜி மொழிவாரி மாநிலக் கோரிக்கையைக் ‘காட்டு மிராண்டிகளின் கொள்கை’ என்று அய்தராபாத் காங்கிரசு மகாசபையில் பேசினார். அது மட்டுமன்றி மொழிவாரி மாநிலம் அமையவிருந்த தருணத்தில் அதனை அழிப்பதற்கென்றே ‘தட்சிணப் பிரதேசத் திட்டம்’ என்ற கரடியை கட்டவிழ்த்து விட்டார். இதனை கல்கி மறந்ததா? இல்லை மறைக்கிறதா?
இன்றளவும் இராஜாஜி வாய்ப்பு நேரும் போதெல் லாம் மொழிவாரி மாநில அமைப்பை எதிர்த்து வருகிறார்.”
“பெரியார் மொழிவாரி மாநிலம் பிரிந்தவுடன் அதனை ஏற்றுக்கொண்டு சுதந்திர தமிழ்நாடு கோரினார். ஆனால் இராஜாஜி 1963இல் கூட மொழிவாரி மாநிலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை” என ம.பொ.சியே எழுதியுள்ளார்.
1952 இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, ஆந்திரம் தனி மாநிலமாக பிரிந்து போன சந்தர்ப் பத்தில் எஞ்சிய சென்னை ராஜ்ஜிய ஆட்சியை தமிழிலேயே நடத்த வேண்டுமென்று ஒரு மசோதா மேல் சபையில் அரங்கேற்றப்பட்டபோது. அதனை இராஜாஜி ஆதரிக்கவில்லை. அப்போது அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் பலங்கொண்டு தோற்கடித்தார்.
கசபதியார்தான் தமிழ் ஆட்சிமொழி மசோதாவை மேலவையில் கொண்டுவந்தார் என்று சொல்லு வதற்குக்கூட ம.பொ.சி. தயாராயில்லை அன்றைக்கு இராஜாஜியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு ம.பொ.சி யும் தான் தமிழ் ஆட்சிமொழி மசோதாவை எதிர்த்தார். ம.பொ.சிக்கு கொள்கையை விட தனி நபர் தன் குருநாதர் தான் முக்கியம் என்று செயல்படுபவர்.
“இராஜாஜியிடமிருந்து விலகி நிற்பதிலோ, அவர் மீது பழிசுமத்திப் பிரச்சாரம் செய்வதிலோ எனக்கு துளி அளவும் மகிழ்ச்சி கிடையாது” (‘செங்கோல்’ 21.7.63)
பெரியார் தன்னுடைய கொள்கைக்கு எதிராக யார் இருந்தாலும் எதிர்க்கத் தவறமாட்டார். 1948இல் ஓமந்தூரார் ஆட்சிக் காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார். தன்னுடைய நண்பர் வரதராசலு நாயுடு பார்ப்பனர்களுக்கு ஆதரவாக 1927முதல் ‘தமிழ்நாடு’ பத்திரிக்கையில் எழுதி வந்ததை ‘குடிஅரசு’ இதழில் வன்மையாகக் கண்டித்தார்.
1927இல் நீதிக்கட்சியைச் சார்ந்த ஏ.பி.பாத்ரோ, முத்துலட்சுமி ரெட்டியின் தேவதாசி ஒழிப்பு மசோதாவை பொறுப்புக் குழுவுக்கு விடவேண்டும் என்று சட்டசபையில் பேசியபோது,
“இவர் பார்ப்பனரல்லாதார் கட்சியில் இருப்பதற்கே தகுதியில்லை. நீதிக்கட்சியில் இருந்து விலக வேண்டும்” என்று பெரியார் ‘குடிஅரசி’ல் எழுதினார்.
1930இல் முதலமைச்சராக இருந்த சித்தூர் முனிசாமி நாயுடுவின் ஆட்சியில் ஆதிதிராவிட பள்ளிகள் மூடப்பட்டதைக் கண்டித்து அவர் பதவி விலக வற்புறுத்தி ‘திராவிடன்’ ஏட்டில் பெரியார் எழுதியுள்ளார்.
ஆனால் ம.பொ.சி தன் கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகளையுடைய இராஜாஜியைத் தான் எப்போதும் ஆதரித்து வந்தார். இவர் என்ன கொள்கை வீரர் என்பது ம.பொ.சி அன்பர்களுக்கே வெளிச்சம்.
“ம.பொ.சிக்கு எப்போதுமே இராஜாஜிதான் குருநாதர். அவர் சொல்படிதான் கேட்பார். தி.மு.க. வோடு தேர்தல் உறவு கொண்டதற்கும் இராஜாஜி தான் காரணம் என ம.பொ.சியே கூறியுள்ளார்.
பிரிவினைக் கோரிக்கையைத் தி.மு.கழகம் கைவிட்டு விட்டதால், அதனோடு தேர்தல் களத்தில் கூட்டுச் சேருவதற்கு எனக்கோ, தமிழரசுக் கழகத்திற்கோ அரசியல் ரீதியான தடை எதுவும் இல்லை. இதைச் சுட்டிக்காட்டி, சுதந்திரா தி.மு.க. கூட்டணியில் தமிழரசுக் கழகமும் இணைய வேண்டும் என்று என் தலைவர் இராஜாஜி வற்புறுத்தினார்.
தேர்தலில் நான் வெற்றிபெற்ற செய்தி கிடைத்த வுடன் முதன்முதலாக இராஜாஜியின் இல்லத்திற்குச் சென்று, அவருக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தேன். இராஜாஜியின் பிடிவாதமான வற்புறுத்தல் இருந்ததில்லையானால், நான் பார்லிமெண்டரி அரசியலில் புகுந்திருக்கவே மாட்டேன். சட்டமன்றத்திற்கு வெளியிலிருந்தே என் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், தமிழினத்திற்கும், என் தாய்நாடான பாரதத்திற்கும் தொடர்ந்து பணியாற்றி வந்திருப்பேன். ஆனால், இராஜாஜி என் மீது வெற்றி கண்டுவிட்டார்.” (ம.பொ.சி. நானறிந்த இராஜாஜி,
பக். 309-312)
தனக்கென ஒரு கொள்கை இல்லாத ம.பொ.சி.யைத் தமிழனத்தின் தலைவராகக் காட்டுவதற்கு முனைவர் அரு கோபாலன், பா. குப்பன் போன்ற தமிழ்த் தேசியவாதிகளுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ தெரியவில்லை.
1937இல் இராஜாஜி பள்ளிப் பாடங்களில் இந்தியைக் கட்டாயமாகத் திணித்ததால் பெரியார் எதிர்த்தார். தமிழினமே கொந்தளித்து எதிர்த்தது.
1952இல் இராஜாஜி முதலமைச்சராக இருந்த போது அரைநாள் கல்வித் திட்டம் (குலக்கல்வித் திட்டம்) அரைநாள் பள்ளியில் பாடம் பயில வேண்டும். மீதம் அரைநாள் பெற்றோர் தொழிலை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு அதுவும் அது கிராமப்புறப் பள்ளிக்கு மட்டுமே என்பதை நடைமுறைப்படுத்தினார். பார்ப்பனரல்லாத பிள்ளை களின் எதிர்காலமே பாழடிக்கப்படுகிறது என்ற காரணத்தில்தான் பெரியார் எதிர்த்தாரே தவிர,
பா. குப்பன் கூறுவது போல் இராஜாஜி தமிழ்ப் பார்ப்பனர் என்பதால் எதிர்க்கப்படவில்லை. அவர் தெலுங்கு பார்ப்பனரே என்பதை நிரூபித்துள்ளேன்.
தமிழ் ஆட்சி மொழி பற்றியும் ம.பொ.சி. மழுப்பலாகவே மேலவையில் பேசினார். 11-3-1954 அன்று மேலவையில் பேசிய ம.பொ.சி. –
“தலைவர் அவர்களே, ஆட்சி மொழிப் பிரச் சினையைப் பற்றி நான் வற்புறுத்திப் பேசுகின்றபோது. உடனடியாகத் தமிழ் மொழியை இந்த இராச்சியத்தின் ஆட்சி மொழியாகச் செய்ய வேண்டுமென்று கூட நான் சொல்லவில்லை. இன்றைய நிலைமையில் சட்டத்தி லுள்ள சிக்கல்களையும், நிர்வாகத்திலுள்ள கஷ்டங் களையும் நான் அறிகின்றேன்” என்று இராஜாஜிக்கு ஒத்தூதும் தன்மையிலே பேசினார்.
இந்தியா முழுவதற்கும் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மொழியைத்தான் தேசிய மொழியாகக் கொண்டு வர வேண்டுமென்று நமது அரசியல் அமைப்பில் தெள்ளத் தெளிய விளக்கப்பட்டிருக் கிறது. இந்தியாவின் விடுதலைக்காகப் போரிட்ட வீரர்களில் ஒருவன் என்ற முறையில் நான் இந்தியைத் தேசிய பாஷையாக ஆக்குவதற்கு ஒப்புக் கொள்கிறேன். தமிழ்மொழி இருக்க வேண்டிய இடங்களை எல்லாம் இன்றைக்கு ஆங்கிலம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது தான், அந்த இடத்தில் இனிமேல் இந்தி உட்கார்ந்து கொண்டு தாய் மொழி மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதனால் தேசியவாதிகளிற் பலரும், இந்தியை எதிர்க்கும் தேசிய எதிர்ப்பு சக்திகளின் கூட்டத்தினிடையே வழுக்கி விழும்படி நேரிட்டு விடுமோ என்று நான் அச்சப்படுகிறேன். ஆகவே தமிழை ஆட்சி மொழியாக ஆக்குவதற்கு வேண்டிய ஏற்பட்டை உடனே எடுத்துக் கொள்ள வேண்டு மென்று நான் அரசாங்கத்திற்கு வற்புறுத்திக் கூற விரும்புகிறேன்” அதே உரையில் மேலும் கூறுகிறார்.
“ஒரு பாட்டாளி, பாரளுமன்றத்திற்கு ஆங்கிலம் தெரியாது என்பதினால் வரமுடியவில்லை என்பதை நினைக்கும் போது என் நெஞ்சு துடிக்கிறது. மனம் கொதிப்படைகிறது”.
ம.பொ.சிக்கு ஆங்கிலத்தின் மீது ஏன் அவ்வளவு ஆத்திரம் என்பது உங்களுக்குப் புரிகிறதா? 1946 இல் வடசென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு ம.பொ.சி மனுப்போட்டிருந்தார். தமிழ்நாடு காங்கிரசு வேட்பாளர் பட்டியலிலும் இவர் பெயர் இருந்தது. பட்டியல் டில்லிக்குச் சென்ற பிறகு ம.பொ.சி பெயர் நீக்கப்பட்டு நரசிம்மராவ் பெயர் வெளியிடப்பட்டது. (எனது போராட்டம் பக் 356) இதை மனதில் கொண்டு தான் ம.பொ.சி பேரவையில் பேசியுள்ளார். அதே மேலவை உரையில் ம.பொ.சி. மேலும் கூறுகிறார். “ஆங்கிலத்தை உலகப் பொது மொழியாக நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயார். இந்தியை இந்திய நாட்டுப் பொது மொழியாகவும் ஏற்றுக் கொள்ளத் தயார். ஆனால் தமிழை இந்த இராச்சியத்தின் ஆட்சி மொழியாகச் செய்தே தீரவேண்டும்” என்கிறார்.
ஆக மும்மொழித் திட்டத்தை ம.பொ.சி. ஏற்றுக் கொண்டார் என்பதே இதன் பொருள். அன்றே குலக் கல்வித் திட்டத்தையும் ஆதரித்து பேசியுள்ளார்
“கல்வித்திட்டம். இதற்கு எதிராகச் சொல்லப்படும் வாதங்கள் பலர் பேசிப் பேசிப் புளித்துப் போனவைகள். சொல்லிச் சொல்லிச் சலித்துப் போனவைகள். இருந்தாலும்கூட அதே சான்றுகளைப் பழைய அத்தாட்சிகளை எடுத்துச் சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் உண்மையில் கல்வித் திட்டத்திற்கு முன்பு இருந்த எதிர்ப்புச் சக்திகள் தேய்ந்து கொண்டே வருகின்றது. ஆதரவு தான் அமோகமாக வளர்ந்து கொண்டிருந்தது. தேய் பிறை போல நாளுக்கு நாள் தேய்ந்து வரும் எதிர்ப்பை எனது நண்பர் டி.ஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். ஆரம்பத்திலிருந்தே அதற்கு ஆதரவு தேடிக் கொண்டு வரும் நான், தற்போது அதற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதிக ஆதரவைக் கண்டு உள்ளம் பூரித்து உவகைக் கொள்கிறேன்” ஆதாரம்: (சட்ட மேலவை விவாதங்கள் பக்கம் 412 – முதல் 420 வரை நாள் 11.3.1954 வரவு – செலவு திட்டத்தின் மீதான உரை)
ம.பொ.சி பேசியதில் ஒரு துளிக்கூட உண்மை இல்லை. இராஜாஜியை மகிழ்ச்சியடையச் செய்வதற்காக அந்தத் திட்டத்திற்கு ஆதரவு பெருகுவதாக அவர் பொய்யாகப் பேசியுள்ளார். உண்மையில் குலக் கல்விக்கு எதிர்ப்புதான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ம.பொ.சி பேசிய 20 நாட்களில் மார்ச்சு 31 ஆம் நாள் இராஜாஜி ஆட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது தோற்று ஆட்சியை மூட்டைக் கட்டிக்கொண்டது. காமராசர் 1954 ஏப்ரல் 14 ஆம் நாள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
காமராசர் ஆட்சிக்கு வந்தவுடனேயே குலக் கல்வித் திட்டத்தை நீக்கினார். அதனால் பெரியார் அவருக்கு ஆதரவு கொடுத்தார்.
(தொடரும்)
தனது கொள்கைக்கு எதிராக செயல்பட்டாலும் கண்மூடித்தனமாக இராஜாஜியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டவர் ம.பொ.சி.
நண்பர்களாக இருந்தாலும் கொள்கைக்கு எதிராகப் போனால் தயங்காமல் கண்டித்தவர் பெரியார்
பெரியார் முழக்கம் 07012016 இதழ்