வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (12) நீதிக்கட்சியின் பார்ப்பன எதிர்ப்பு போலியானதா? வாலாசா வல்லவன்
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படு வதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கை யாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு.
சென்ற இதழ் தொடர்ச்சி
அன்றைக்கு இருந்த அரசியல் அமைப்புக்கு ஏற்றத் தன்மையில் நீதிக்கட்சியினர் இயங்கி வந்தனர். பெரியாரை மட்டும் குறை சொல்வது என்ன நியாயம்? 1956 நவம்பர் 1 ஆம் நாள் தமிழகம் மொழி வழி மாநிலமாக பிரிந்தவுடன் பெரியார் 4-11-56 அன்று தி.க. செயற் குழுவை திருச்சியில் கூட்டினார்.
இனி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற உரிமை முழக்கத்தை எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
‘விடுதலை’ ஏட்டின் தலைப்பு பகுதியில் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று வெளியிட்டு வந்ததை மாற்றி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று வெளியிட்டு வந்தது. பெரியார் மறையும்வரை ஏன் 1975 ‘எமர்ஜென்சி’ காலம்வரை இந்த முழக்கம் ‘விடுதலை’யில் இடம் பெற்று வந்தது. “தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை பெரியார் முழு மனதுடன் எழுப்பவில்லை; அண்ணாதுரையின் ‘திராவிட நாடு’ கோரிக்கையை எதிர்ப்பதற்காக வென்றே தமிழ்நாடு கோரிக்கையை முன் வைத்தார்” என்று கூறுகிறார். (பா.குப்பன் பக் 41)
குப்பன் ஒரு குதர்க்காவாதி. 34 ஆண்டுகள் திராவிடர் கழகத்தில் இருந்த பா.குப்பன், இப்படி ஒரு அபத்தமான கருத்தை எழுதுவது பெரியாரை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆகும். உண்மையில் குப்பனின் இன்றையத் தலைவர் ம.பொ.சி. தான். ஏட்டிக்கு போட்டியாக திராவிடர் கழகத்துக்கு எதிராக ‘தமிழரசு கழகம்’ என்று நடத்தி, ஒரே ஆண்டில் நாட்டு பிரிவினை கோரிக்கையை கைவிட்டார். குப்பன் கூற்றுப்படி பெரியார் அண்ணாவுக்கு போட்டியாக தமிழ்நாடு தனிநாடு கோரிக்கையை வைத்திருந்தால் அண்ணா 1963 இல் திராவிட நாடு கோரிக்கையை கை விட்டவுடனேயே பெரியாரும் கைவிட்டு இருக்க வேண்டுமல்லவா? இல்லையே பெரியார் மறையும் வரை அக் கோரிக்கையை அவர் கைவிடவில்லையே.
பெரியாரிடம் நாட்டு பிரிவினைக்கான எந்தத் திட்டமும் இல்லையென்கிறார் பா. குப்பன். தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்படத்தை எரித்தது எதற்காக? தமிழ்நாடு வேண்டும் என்பதற்காகத் தானே! அதைக் கூட உங்கள் ம.பொ.சி எதிர்த்தாரே. பெரிய மக்கள் திரளிடையே இந்த எண்ணத்தை உருவாக்கியவர் பெரியார்.
பெரியாரிடம் எந்தத் திட்டமும் இல்லை என்று கூறும் குப்பனிடம், தென்மொழியிலும் தமிழர் எழுச்சி இதழிலும் பெரியாரைக் கண்டபடி திட்டி விட்டு கடைசியாக முடிக்கும் போது ஒரு வரி தமிழ்த் தேசியம் அமைப்போம் வாருங்கள் என்று எழுதி விட்டால் போதுமா?
1938 முதல் 1973 இல் பெரியார் மறையும் வரை இந்திய தேசியத்தின் ஆக்கிரமிப்பை, அடக்கு முறையை, இந்திய அரசியல் கட்டமைப்பை எதிர்த்த ஒரே தலைவர் பெரியார் தான். பெரியாரை நீங்கள் திட்டுவதால் அவருடைய புகழ் ஒன்றும் மங்கிக் போய் விடாது. பெரியார் இன்றும் நிலைத்து நிற்கின்றார் என்றால் அவருடைய கருத்து வலிமை, நேர்மையான அரசியல் ஆகியவற்றால் தான், ம.பொ.சி மாதிரி போலியாக தமிழரசுக் கழகம் என்று ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு இந்திய தேசியத்துக்கு ஆதரவாக பக்க மேளம் வாசிக்கவில்லை.
பெரியாரை இவ்வளவு கேள்வி கேட்கும் பா.குப்பன், ம.பொ.சி காங்கிரசில் இருந்து கொண்டே தமிழ்நாடு கேட்டாரே அது நடைமுறை சாத்தியமா? கண்ணியமாக காங்கிரசை விட்டு அவராகவே வெளிவந்து தனி அமைப்பு அல்லவா வைத்திருக்க வேண்டும்? பெரியார், திராவிட நாடு, திராவிடன் என்று எல்லாம் கூறி திசை மாற்றி விட்டார் என்று அங்கலாய்க்கும் ம.பொ.சி. பக்தர்களோ, ம.பொ.சி. மூச்சுக்கு முன்னூறுதரம் இந்து, இந்தி, இந்தியா என்று எழுதிக் கொண்டிருந்தாரே அவரை ஒரு கேள்வி நீங்கள் கேட்டதுண்டா?
பெரியார் திராவிட நாடு கேட்டதோ, சுதந்திர தமிழ்நாடு கேட்டதோ, வடநாட்டான், பார்ப்பான் போன்ற அன்னியன் சுரண்டலற்ற, இந்துமதச் சாக்கடையான வருணாசிரம, சாதிபேதமற்ற மக்களாக உழைப்பாளி மக்களின் ஆட்சியை நிறுவவும் ஆணுக்கு அடிமைப்பட்டு கிடந்த பெண்ணினத்தை விடுவிக்கும் விதமாக அனைத்து விதமான அடிமைத்தளை களிலிருந்தும் விடுதலை வேண்டும் என்பதற்காகவே விடுதலை கேட்டார். வெறும் கோடு போட்டது போல் இதுவரை உன் எல்லை, இதுவரை என் எல்லை என்று வரைப்படம் போட்ட நாடு அல்ல. இன்றைக்கு தமிழ் மக்களிடையே விடுதலை உணர்ச்சி வளர்ந்து வருகிறதென்றால். அது பெரியார் இயக்கத்தின் நீட்சியே ஆகும். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியே தமிழ்த் தேசியமாகும்.
பா.குப்பனின் குற்றச்சாட்டுகள் “பெருங்காவூர் இராசகோபாலாச்சாரி என்ற பிராமணரை சபா நாயகராக ஆங்கிலேயே ஆளுநர் நியமித்தபோது அதை நீதிக் கட்சியினர் எதிர்க்கவில்லை; மாறாக மனமுவந்து ஏற்றுச் செயல்பட்டனர். இது நீதிக் கட்சியினரின் பிராமண எதிர்ப்பு போலியானது என்பதற்கு முதல் எடுத்துக்காட்டு”(பக் 49) என்கிறார் பா.குப்பன்.
1919 இல் ஏற்பட்ட இரட்டை ஆட்சியில் முதல் முறை மட்டும் சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் உரிமை சட்டசபைக்கு கொடுக்கப்படவில்லை. சபாநாயகர் பதவி ஆளுநர் நியமனம் என்பதை பா.குப்பனே தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு சட்டம் இயற்றும் எந்த அதிகாரமும் கிடையாது. அவர் வெறும் பொம்மை தான். அந்த பார்ப்பனர் சபாநாயகராக இருந்த போதுதான் பார்ப்பனரல்லாதாருக்கு இடஒதுக்கீடு அளிக்கக்கூடிய இரண்டு வகுப்புவாரி உரிமை அளிக்கக் கூடிய அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன என்பதை பா.குப்பன் அறிவாரா?
முதல் வகுப்புரிமை அரசானை 16-9-1921இலும் இரண்டாவது வகுப்புரிமை அரசாணை 15-8-1922 இலும் பிறப்பிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் தான் 1922 முதல் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு கல்லூரிகளில் 50ரூ இடஒதுக்கீடு அளிக்கும் தீர்மானமும் அதனை கண்காணித்து மாணவர் தேர்வு குழுக்களும் அமைக்கப்பட்டன.
பா.குப்பன் சொல்லும் பார்ப்பனர், சபாநாயகராக இருந்த காலத்தில்தான் பார்ப்பனர் கோயில்களில் கொள்ளை அடித்து வந்ததை தடுக்கும் விதத்தில் இந்து அறநிலையத் துறை பாதுகாப்பு மசோதாவை, பனகல் அரசர் 8.12.1922இல் முன்மொழிந்தார். அது 1923க்குள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பார்ப்பனரல்லாதாருக்கும் ஆதி திராவிட மாணவர் களுக்கும் பயனளிக்கும் பல விவாதங்கள் சட்ட மன்றத்தில் விவாதிக்கப்பட்டு பார்ப்பனரல்லாதாருக்கு சாதகமான பல சட்டங்கள் இயற்றப்பட்டன. ‘நீதிக்கட்சியினரின் பார்ப்பன எதிர்ப்பு போலி யானது’ என பா.குப்பன் கூறுவதில் ஒரு சிறிதும் உண்மை இல்லை.
(தொடரும்)
பெரியார் முழக்கம் 25022016 இதழ்