‘காலச்சுவடு’ கட்டுரைக்கு மறுப்பு நீதிக்கட்சி தலித் மக்களுக்கு எதிரானதா? வாலாஜா வல்லவன்

காலச்சுவடு இதழ் 11 சூலை 2017 இதழில் திராவிட இயக்க நூற்றாண்டு‘அம்பு எய்யாத வில்’என்ற தலைப்பில் க.திருநாவுக்கரசு என்பவர் (இவர் திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அல்ல) நீதிக்கட்சியின் மீதும், பெரியாரின் மீதும் அபத்தமான உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.

பார்ப்பனர்களுக்கே உரிய வழக்கமான, தலித்துகளை பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது மோதவிடும் போக்கிலேயே இக்கட்டுரை அமைந்துள்ளது. இக்கட்டுரை ஆசிரியர் எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் ஒரு பெரிய தலைவராக இருந்தார் என்கிறார். அதுவே உண்மையல்ல.

1916 நவம்பரில் நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதை இக்கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். 1917 இல் எம்.சி.ராஜா ஆதி திராவிட மகா சபையை புதுப்பித்தவர் என்ற வரலாற்றை மறைத்துள்ளார்.

எம்.சி.ராஜா நீதிக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தால் ஆதிதிராவிட மகாசபையை ஏன் தொடங்கவேண்டும். இரட்டைமலை சீனிவாசன், மதுரைப்பிள்ளை, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, தர்மலிங்கம் பிள்ளை போன்றவர்கள் நீதிக்கட்சி ஆதரவாளர்கள்.

எம்.சி.ராஜா, ஜெ.சிவசண்முகம் பிள்ளை, முனுசாமி பிள்ளை போன்றவர்கள் நீதிக்கட்சி எதிர்ப்பாளர்கள். 1920 முதலே இரண்டு குழுக் களாகத்தான் ஆதிதிராவிட அமைப்புகள் செயல் பட்டு வந்தன.

நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாத அறிக்கை உயர் சாதியினரான பார்ப்பனரல்லாதார் நலன் சார்ந்தது என்கிறார் கட்டுரை ஆசிரியர். அதில் ஆதி திராவிடர் அடக்கம் அல்ல என்கிறார், அதுவும் உண்மையல்ல. பார்ப்பனரல்லாதார் என்பதில் ஆதி திராவிடர்களையும் உள்ளடக்கியது தான்.

இந்தியாவில் அப்பொழுது 10 மாகாணங்கள் இருந்தன. அதில் சென்னை மாகாணத்தில் ஆட்சி செய்த நீதிக்கட்சி மட்டும் தான் ஆதி திராவிடர் களுக்கு பல நன்மைகளைச் செய்துள்ளது. மற்ற மாகாணங்களில் ஆதிதிராவிடர்களின் நிலைமை எவ்வளவு மோசம் என்பதை ஜெ.சிவசண்முகம் பிள்ளை 1930 இல் எழுதிய எம்.சி.ராஜா

 

வாழ்க்கைச் சுருக்கமும் எழுத்தும் பேச்சும் என்ற நூலில் அறிந்துகொள்ளலாம்.

1921 இல் ஆங்கிலேயருக்கு சொந்தமான பக்கிங்காம் கர்நாடிக் மில் போராட்டத்தில் ஏறக்குறைய 3000 தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்து வந்தனர். இந்த நிலையில் புளியந்தோப்பு பகுதியில் ஆதி திராவிடர்களின் கூட்டத்தைக் கூட்டி நாளை முதல் ஆதிதிராவிடத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவேண்டும் என்று கூறினார் எம்.சி.ராஜா.

மறுநாள் ஆதி திராவிடர்கள் வேலைக்குச் சென்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அவர்களைத் தடுத்தனர். இதனால் மோதல் போக்கு உருவானது. புளியந்தோப்பு பகுதியில் ஆதி திராவிடர் குடியிருப்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

அப்போது சென்னை நகராட்சித் தலைவராக இருந்த தியாகராயர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று உணவு பொருள்களை வழங்கினார். அவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டன. பனகல் அரசர் ஆறு மாதத்தில் அவர்களுக்கு தீப்பிடிக்காத வீடுகள் கட்டிக் கொடுத்தார்.

இந்தக் கட்டுரை ஆசிரியர் க.திருநாவுக்கரசு இவற்றையெல்லாம் மறைத்து விட்டு நீதிக் கட்சியினர் சாதி இந்துக்களுக்கு ஆதரவாக இருந்தனர் என்று எழுதியிருப்பது உண்மை யில்லை. மதுரைபிள்ளை என்கிற ஆதிதிராவிட எம்.எல்.சி. அப்போதே இதைச் சட்டமன்றத்தில் நீதிக்கட்சியின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். விரிவான விவரம் அறிய ஆ.இரா.வெங்கடாசலபதி எழுதிய ‘பின்னி ஆலை வேலை நிறுத்தம்’ நூலைப் பார்க்கவும்.

நீதிக்கட்சி ஆட்சியில் ஆதி திராவிடர்கள் பெற்ற நன்மைகள்:

பள்ளர் பறையர் என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி ஆதி திராவிடர் என்ற பெயரை எங்கள் சமூகத்திற்கு இட்டு அழைக்க வேண்டும் என்று எம்.சி.ராஜா 20.02.1922 சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதன் அடிப்படையில் இனி இச்சமூகத்தினரை ஆதிதிராவிடர்கள் என்றே அனைத்து ஆவணங்களிலும் பதியவேண்டும் என்று அரசாணை எண் 217 சட்டம் (பொது) நாள் 25.03.1922 இல் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

 

* ஆதிதிராவிடர் பிள்ளைகளைப் பொது பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. g.o.no. 87  கல்வி நாள் 6.1.1923.

* அரசு மானியம் பெரும் பள்ளிகளில் ஆதி திராவிடர் பிள்ளைகளைச் சேர்க்க மறுத்தால் அரசு மானியம் ரத்துச் செய்யப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. g.o.no. 88  கல்வி நாள் 16.1.1923.

* திருச்சி மாவட்ட நிர்வாகம் (District board ) ஆதிதிராவிடர் பிள்ளைகளை தனி இடத்தில் தங்கி படிக்க அனுமதி கோரியதை அரசு ஏற்க மறுத்து, ஆதி திராவிடப் பிள்ளைகளையும், மற்ற சாதிப் பிள்ளைகளையும் ஒன்றாகத்தான் படிக்க வேண்டும் என்று ஆணைப்பிறப்பித்தது. g.o.no.2015  கல்வி நாள் 11.2.1924.

* தொடக்கப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டத் தொடங்கும் போதே ஆதி திராவிடப் பிள்ளைகள் அணுக முடியுமா? ஏனெனில் கோவில், அக்கிரகாரம், போன்ற இடங்களில் ஆதிதிராவிடர் பிள்ளைகளை மற்ற சாதியினர் அனுமதிக்க மறுப்பார்கள் என்பதால் அதை ஆய்ந்து பார்த்து ஆதி திராவிடர்கள் பிள்ளைகள் வருவதற்குத் தடையில்லாத இடத்தில் கட்டிடங் களைக் கட்ட அரசு ஆணைப் பிறப்பிக்கப் பட்டது. g.o.no.2333 நாள் 27.11.1922.

* இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதி திராவிட மாணவர்கள் இலவசமாகத் தங்கி படிக்க. ஆதி திராவிடர் மாணவர் விடுதி திறக்கப் பட்டது. g.o.no.2563 நாள் 24.10.1923.

*இதைக்கட்டுவதற்கான பணம்முழுவதையும் ஆதி திராவிடர் தலைவர் எம்.சி.ராஜா அவர்களிடமே கொடுத்து கட்டுவித்தார்கள்.

* 1931 க்குள் ஆதி திராவிட மாணவர்களுக்கு மூன்றுவிடுதிகள் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. (t.g.boag Ics, Madras presidency  1881-1931 பக்கம் 132)

 

*ஆதிதிராவிடமாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதத் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்கப் பட்டது. (அரசாணை எண் 1241 சட்டம் (கல்வி) நாள் 17.10.1922).

 

* ஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிலையைப் பற்றிய விவரங்களை அரசுக்கு அளிக்க வேண்டும் என்று அரசாணைப் பிறப்பிக்கப் பட்டது. (அரசாணை என் 859 நாள் 22.06.1922)

* ஆதி திராவிட வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்க அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1568 சட்டம் (கல்வி) நாள் 06.11.1923)

* ஆதி திராவிட மாணவர்களுக்கு சில பள்ளிகளில் தனி வகுப்பறைகள் இருந்ததை அரசு கண்டித்தது. ஆதி திராவிட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் அரசின் பண உதவி அளிக்கப்படும் என்று அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 205 கல்வி நாள் 11.02.1924).

* மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 866 (பொது) சுகாதாரம் நாள் 17.06.1922).

 

பெரியாரைப் பற்றிக் கூறவந்த கட்டுரை ஆசிரியர் “பிராமணர் எதிர்ப்பு, பெண்ணுரிமை ஆகியவற்றைப் பிரதானமாகக் கொண்டிருந்த சுயமரியாதை இயக்கம் மக்கள் இயக்கமாக உருப்பெற்ற போதிலும் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவராக ஈ.வெ.ரா. தான் இருந்தார், ஜனநாயகத்திற்கோகூட்டுத்தலைமைக்கோஅங்கு இடமில்லை. தனது இயக்கத்திலிருப்பவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டிய அவசிய மில்லை, இயக்கத்தில் இருக்கும் வரை தங்களது பகுத்தறிவை, மனசாட்சியை அவர்கள் மூட்டை கட்டி வைத்து விட வேண்டும் என்று தெளிவாகக் கோரியவர் அவர்” என்று எழுதியுள்ளார்.

பெரியாரைப் பற்றி உண்மைக்கு மாறான கருத்துகளை அவர் கூறியுள்ளார். 11.5.1930 ஈரோட்டில் சுயமரியாதை சங்க கூட்டத்தில் இயக்கத் தலைவராக ஊ.ஆ.பு. சவுந்தரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.

பெரியார் எப்போதுமே மிகச் சிறந்த ஜன நாயக வாதியாகச் செயல்பட்டார். ஒவ்வொருக் கூட்டத்திலும் பேசிமுடிக்கும் போது. “நீங்கள் வீட்டிற்கு சென்று நான் சொல்லியதைச் சிந்தித்துப் பார்த்து உங்களுக்கு சரியென தோன்றினால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள்” என்பார் அவரை சர்வாதிகாரி என்பது உண்மையல்ல. அவர் அறிவற்ற மக்களிடையே அறிவுப் பிரச்சாரம் செய்து அவர்களை அறிவாளிகளாக்கப் பிரச்சாரம் செய்து வந்தார்.

 

 

சுயமரியாதை இயக்கத்தில் பல அறிவாளிகள் இருந்தனர். வேறு எவரும் செய்யாத பணியைத் துணிந்து செய்தார் பெரியார். என்னுடைய இயக்கத்துக்கு முட்டாள்கள் மட்டுமே வேண்டு மென்று எப்போதும் அவர் கூறியதில்லை. கட்டுரை ஆசிரியர் வேண்டுமென்றே பெரியாரைக் கொச்சைப்படுத்தியுள்ளார்.

பெரியார் ரஷ்யா செல்வதற்கு முன்பே 1927 முதலே பொதுவுடமைக் கொள்கைகளில் தீவிர நாட்டங் கொண்டார். ஆனால் இக்கட்டுரை ஆசிரியர், ரஷ்யா சென்று வந்த பிறகு தான் பொதுவுடைமைக் கொள்கைகளை தீவிரமாகப் பரப்பினார். அரசு தடை செய்தவுடன் இரண்டே ஆண்டுகளில் நிறுத்திக் கொண்டார் என்கிறார்.அவருக்குஎன்றுமேவர்க்கப்பார்வை இருந்ததில்லை என்றும் கூறுகிறார். இதுவும் தவறான விமர்சனமாகும். பெரியார் வர்க்க ஒற்றுமை வருவதற்கு வர்ணம் தடையாக இருந்ததால் முதலில் வருணம் ஒழிய வேண்டும் என்று பாடுபட்டவர். தொழிற் சங்கங்களில் தொழிலாளர்களே தலைவர் களாக இருக்க வேண்டும் என்றக் கொள்கை உடையவர். பெரியாரின் இறுதி லட்சியம் பொது வுடைமையே.

“பெரியாரின் கொள்கை பிராமணரல்லாத உயர் இடை நிலைச் சாதியின் நலன் காப்பது மட்டுமே. சாதி ஒழிப்பது இரண்டாம் பட்சமே” என்கிறார்கட்டுரையாசிரியர். இதுவும் உண்மை நிலையல்ல பெரியாருடைய சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகுதான் தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது.

காலமெல்லாம் சாதி ஒழிப்புக்காகப் போராடிய பெரியாரை இப்படிக் கூறுவது சற்றும் பொருத்தமற்றதாகும். கீழ் வெண்மணி படுகொலையைப் பெரியார் கண்டிக்கவில்லை. கம்யூனிஸ்டுகளைக் கண்டபடி திட்டினார் என்கிறார். 1968சனவரி25அன்றுகீழ்வெண்மணி படுகொலை நடைபெற்றது. அதனுடைய பின்னணியை அறிந்து கொள்வது அவசியம். பொதுவுடைமைக் கட்சியினர் விவசாய சங்கம் அமைத்துப் போராடி வந்தனர். அறுவடைக்கு நெல்லின் கூலி அளவை உயர்த்திக் கேட்டு வேலை நிறுத்தம் செய்தனர்.

கோபாலகிருஷ்ண நாயுடு அடுத்த கிராமத்தை சேர்ந்த கூலி விவசாயிகளை (ஆதி திராவிடர்களை)அழைத்துவந்துநெல்அறுவடை செய்துவிட்டார். அவர்கள் அறுவடையை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்ற போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த விவசாயக் கூலிகள் (ஆதிதிராவிடர்கள்) மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் வந்து கோபால கிருஷ்ண நாயுடுவிடம் இதைக் கூறினர். இதனால் கோபமடைந்த கோபாலகிருஷ்ண நாயுடு அவர்களை விரட்டினார். அவர்கள் ஒரு குடிசைக்குள் ஒளிந்து கொண்டனர். அவர் களை குடிசையோடு எரித்துவிட்டார். இது பண்ணையார் தொழிலாளர்கள் போராட் டமாகத் தான் நடைபெற்றது. எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆதி திராவிடர்களாக இருந்ததால் பிற்காலத்தில் அது ஆதிதிராவிடர்கள் மேல் சாதியினர் போராட் டமாக மாற்றப்பட்டது.

 

பெரியார் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அன்று உடல் நலக் குறைவுக் காரணமாக சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். மூன்று நாள் கழித்து விடுதலை ஏட்டில்தலையங்கம்எழுதியுள்ளார்.காலச்சுவடு கட்டுரையாசிரியர்க.திருநாவுக்கரசுதிட்டமிட்டு நீதிக்கட்சியின் மீதும் பெரியாரின் மீதும் பொய்யான குற்றச் சாட்டுகளைக் கூறியுள்ளார். காலச்சுவடு தன்னுடைய பார்ப்பன வேலைகளை திறம்பட செய்து வருவதை இது காட்டுகிறது.

(கட்டுரையாளர் திராவிட இயக்க ஆய்வாளர், ‘தமிழ்க்குடி அரசு’ பதிப்பக ஆய்வு வெளியீட்டாளர். பல நூல்களை எழுதியவர்)

நிமிர்வோம் ஆகஸ்ட் 2017 இதழ்

You may also like...