கழகச் செயல்வீரர்கள் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்
கழகச் செயல்வீரர்கள் உற்சாகத்துடன் களப்பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் குறித்த செய்தி.
சேலம் : தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த தினத்தையொட்டி, 17-09-2015 அன்று, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி சிறப்பாக நடைபெற்றது.
அன்று காலை 7-30 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, தோழர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் கழக கொடியினை கட்டி அலங்கரித்துக் கொண்டு, காடையாம்பட்டி நோக்கி புறப்பட்டனர்; அங்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 8-00 மணியளவில் அப்பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனப் பேரணி திருமலைகிரி, சிவதாபுரம் வழியாக 9-00 மணியளவில் சேலம் மாநகரை அடைந்தது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் (மாவட்ட கழக ஏற்பாட்டில்) கலந்துகொண்டு, நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, கொல்லப்பட்டி வழியாக சுமார் 10-00 மணியளவில் இரும்பாலை சென்றடைந்தது வாகனப் பேரணி. அங்கு மூத்த பெரியார் தொண்டர் இரும்பாலை பழனிச்சாமி தோழர்களை வரவேற்று அனைவருக்கும் தேநீர் விருந்தளித்தார். அங்கு உள்ள கழக கொடிக் கம்பத்தில் கொடியேற்றி பேரணி புறப்பட்டது. கே.ஆர்.தோப்பூரில் தோழர் கண்ணன் அனைவரையும் வரவேற்று, பழச்சாறு வழங்கி, பேரணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். மேலும் நங்கவள்ளி பகுதியை சார்ந்த ஆறு தோழர்களும் இந்த ஊரில் வந்து பேரணியில் தங்களை இணைத்து கொண்டனர்.
இதன் பின்னர், வழக்கத்திற்கு மாறாக குக்கிராமங்கள் வழியே பயணம் தொடர்ந்தது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய சிறு பாதைகள் வழியே, கருப்பு சீருடையில் கழகக் கொடிகளுடன், வரிசையாக வந்த பேரணியின் அழகைக் காண பெரும்பாலான வீடுகளில் இருந்து ஆவலோடு வெளியே வந்து பார்வையிட்டார்கள். “பகுத்தறிவு சவால்… பரிசு வெல்லுங்கள்” என்ற தலைப் பிலும், “பக்தர்கள் சிந்தனைக்கு” என்ற தலைப்பிலும் அச்சடிக்கப்பட்ட இரண்டா யிரம் துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் வினியோகிக்கப்பட்டது. மேல்காடு, மோட்டூர், சம்பளக்காடு வழியாக நல்லாக்கவுண்டனூர் சென்று கழகக் கொடியேற்றப்பட்டது. அடுத்து பெத்தாம்பட்டி, முருங்கப்பட்டி பகுதிகளில் கொடியேற்றி, இலகுவம்பட்டி, சித்தர்கோவில், நல்லனம்பட்டி, காடையாம்பட்டி, பாப்பாபட்டி வழியாக சென்று கறிக்கடை பேருந்து நிறுத்தத்தில் கொடியேற்றி, இராசிக்கவுண்டனூர், மெய்யனூர், அழகப்பம்பாளையம், வடுகப்பட்டி, ஏகாபுரம், கோழிப்பூர் வழியாக சென்று தப்பக்குட்டை பகுதியில் பிற்பகல் 3-00 மணிக்கு மதிய உணவை முடித்துக்கொண்டு, தாடிக்காரணூர், நடுவனேரி, பெருமாகவுண்டம் பட்டி, சந்தைப்பேட்டை, கத்தாளப்பேட்டை, சவுண்டமா கோவில் வீதி வழியாக இளம்பிள்ளை பேருந்து நிலையம் பேரணி வந்தடைந்தது. மாலை 4-30 மணியளவில் பேருந்து நிலையத்தில் உள்ள கழகக் கொடிக் கம்பத்தில் கொடியேற்றி பேரணி நிறைவு செய்யப்பட்டது. மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும் தோழர்கள் கலைந்து சென்றனர்.
‘உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிப்பவர்கள் கூட வராத எங்கள் பகுதிக்கு வந்து துண்டறிக்கை வழங்கியிருக்கிறீர்கள்’ ‘எங்கள் பகுதியில் ஒரு கூட்டம் நடத்துவீர்களா?’ ‘பெரியார் புத்தகங்கள் கிடைக்குமா?’ ‘சிறப்பான பணியை செய்திருக்கிறீர்கள்; குளிர்பானம் வாங்கி வருவதற்குள் சென்றுவிட்டீர்கள்’ ‘அடுத்த முறை எங்கள் ஊருக்கு வந்தால் அவசியம் எங்களை தொடர்பு கொள்ளவேண்டும்’ ‘நீங்கள் கொடுத்த துண்டறிக்கையை நகல் எடுத்து வினியோகித்தோம் – அசல் துண்டறிக்கை தொலைந்துவிட்டதால் தெளிவான அச்சு வரவில்லை; எங்களுக்கு மீண்டும் ஒரு துண்டறிக்கை வழங்குங்கள்’ என்று அன்று மாலை முதல், துன்டறிக்கையைப் பாராட்டி பொதுமக்கள் பலர் தொலைபேசி வழியாக கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாகனப் பேரணியில் ஒரு மகிழ்வுந்து உட்பட 19 வாகனங்களில், 35 தோழர்கள் கலந்துகொண்டனர்.
ஈரோட்டில் : ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து கழகத்தினர் மரியாதை செலுத்தினர். பின்னர் பெரியாரின் நினைவு இல்லத்திற்குச் சென்று பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். மரப்பாலத்தில் ரங்கம்பாளையம், சூரம்பட்டி வலசு, சத்யாநகர், மரவபாளையம் பகுதிகளில் கழகக் கொடியேற்றப்பட்டது. இறுதியாக சித்தோடு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கும், சித்தோடு நான்கு சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
கிருட்டிணகிரி : கிருட்டிணகிரி மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் குமார் தலைமையில் பிசிஆர் பள்ளி தாளாளர் பிசிஆர். மனோகரன் முன்னிலையில் மாவட்டச் செயலாளர் குமார், மாவட்ட அமைப்பாளர்கள் சிவ.மனோகர், ராஜேஷ் ஜெயராமன், கழகத் தோழர்கள், தோழமை அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் மற்றும் பிரமுகர்கள் பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
திருச்செங்கோட்டில் : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெரியாரின் 137 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகரின் இரு பகுதிகளில் கழக கொடியேற்றப்பட்டது, இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி, திருச்செங்கோடு நகர தலைவர் சோமசுந்தரம், நகர செயலாளர் நித்தியானந்தம், ஒன்றிய அமைப்பாளர் சதிசு, பள்ளிபாளையம் நகர தலைவர் பிரகாசு, மல்லை பெரியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கடலூரில்: விருத்தாசலம் பாலக்கரையிலிருந்து தோழர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று. இரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நீதிமன்றம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர் .அங்கு முழக்கம் எழுப்பி சாதிக்கு எதிராக . உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். நிகழ்வில் திவிக மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி சிவா. மாணவர் கழக தோழர்கள் தினேஷ், பார்த்திபன், கழக தோழர்கள் மதி, மாவட்ட திவிக அமைப்பாளர் பாலமுருகன், வீரா மற்றும் சி.பி.எம்.எல் (மக்கள் விடுதலை) தோழர்களும், தோழர் ராமன் தலைமையில் கலந்து கொண்டனர்.
திருப்பூர் : 17.09.2015 அன்று காலை, கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையிலும். கழக மாவட்டசெயலாளர் முகில்ராசு முன்னிலையிலும் விழா நிகழ்வுகள் நடைபெற்றன. திருப்பூர் ரயில் நிலையம் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மலை அணிவித்த பின் கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் கனல்மதி திராவிடர் உறுதிமொழியை வாசிக்க தோழர்கள் அனைவரும் உறுதி எடுத்துக்கொண்டனர். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெரியார் முழக்கம் 24092015 இதழ்