காஷ்மீர் – ஒரு முன்கதை சுருக்கம் – பாமரன்
அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தொடர்ந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் துயரத்தை ஓரிரு பக்கங்களில் அடக்கிவிட முடியுமா என்ன? இது வரையிலும் இதுபற்றி வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள்….. ஆயிரக்கணக்கான கட்டுரைகள்…… மரியாதைக்குரிய நீதிபதிகளது உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள்…. என எண்ணற்ற ஆதாரங்களை கரைத்துக் குடிக்காவிட்டாலும் பரவாயில்லை…. குறைந்தபட்சம் அதில் கால்பங்காவது கவனத்தில் கொள்ள வேண்டுமே.? ஏனெனில் இதனை எழுத முற்படுவது எனது கட்டுரைகளில் மேலும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டும் என்பதைக் காட்டிலும்….. ரத்தம் சிந்த போராடிக் கொண்டிருக்கும் எவரையும் தப்பித்தவறிக் கூட தவறுதலாகக் காட்டிவிடக் கூடாது என்பதுதான் எனது தயக்கம். அந்த அச்சம்தான் என்னை இவ்வளவு நாளும் பிடித்தாட்டிக் கொண்டிருந்தது. “ராணுவத்தின் மீதே கலவரக்காரர்கள் கல்லெரிகிறார்கள்.” “அமைதியை நிலை நாட்ட வேறு வழியின்றி ராணுவம் துப்பாக்கிச் சூடு” “பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தாக்குதல்” என அன்றாட தலைப்புச் செய்திகளை மட்டும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு நாமும் ஓய்வெடுக்கலாம்தான். ஆனால் இதுவெல்லாம் அப்படியே நூற்றுக்கு...