கருவூலக் கட்டுரை – இது ‘சுதந்திர’ நாடா?
இது ‘சுதந்திர’ நாடா?
1950 ஜனவரி 26ஆம் தேதிய பலன், 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதியைப் போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும். அதே முதலாளிதான்; அதே பணப்பெட்டிதான்; அதே தராசுதான்; அதே படிக் கல் தான்; அதே சரக்குதான்; அதே பித்தலாட்டம் தான். ஆனால், விலாசம் அதாவது ‘டிரான்ஸ்வர்’ செய்யப்பட்டது மட்டும் மாற்றம் அடைகிறது. குடிஅரசு ஆட்சி என்கிற புதுப் பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் அதிக பலத்துடனும், அதிகப் பாதுகாப்புடனும் 26-ந் தேதி முதற்கொண்டு நடைபெறப்போகிறது.
– பெரியார். (‘விடுதலை’, 20.1.1950)
நிற்க, மேல்நாடுகளில் ‘சுதந்திர நாள்’, ‘சுதந்திர ஆண்டு விழா’க் கொண்டாடுவது போல், நம் நாட்டில் சுதந்திர நாள், ஆண்டு விழாக் கொண்டாடுவது – புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போலாகும்.
மேல்நாட்டார்கள் சுதந்திரம் பெற்றபின் பெற்ற நாளைக்குறி வைத்துக் கொண்டாடு கிறார்கள். நாம் அதுபோல் கொண்டாட நமக்குச் சுதந்திரம் வந்து விட்டதா? நாம் ஏதாவது சுதந்திரத்தை அனுபவிக் கிறோமா? என்பதைப் பற்றி நமக்குக் கடுகளவு யோசனையும் இல்லாமல் – நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பவர்களின் சூழ்ச்சிக்கும் வஞ்சத்திற்கும் ஆளாகி அடிமைத் தளையை இறுக்கிக் கொள்ள நாம் ‘சுதந்திர விழா’க் கொண்டாடுகிறோம்.
இந்த நாட்டின் சுதந்திரம் பணக்காரர் மீது, ஏழை மூட மக்களை ஏவி விடுவதாக இருக்கிறதேயொழிய-மனிதனை (நம்மை) நாயிலும், பன்றியிலும் கேடாக இழிவுபடுத்தி, கீழ்சாதி ஆக்கிய ‘கடவுள்’, ‘சாஸ்திரங்களையோ’, சட்டங்களையோ, மக்களையோ – ஏனென்று கேட்க நாதியில்லை.
சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்கலாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திர நாடா? ‘நரக’ நாடா?
இதை ஒழிக்கப் பாடுபட இந்த நாட்டில் ஏதாவது உரிமை இருக்கிறதா? உரிமை கேட்க வழி இருக்கிறதா? சுதந்திர நாட்டில் மனித சமுதாயத்தையே அடிமைப்படுத்தி மடையர்களாக ஆக்கி வைத்திருக்கும் இனத்தினர் (பார்ப்பனர்) மந்திரியாய், தலைவராய் இருக்கின்றார்கள் என்றால் இது சுதந்திர நாடாகுமா?
– பெரியார். (‘விடுதலை’, 15.8.1957)
பெரியார் முழக்கம் 13082015 இதழ்