காஷ்மீரிகளின் தனித்துவம்….. பாமரன்
காஷ்மீர் – ஒரு முன்கதை சுருக்கம் சென்ற வாரம்
”ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இவர்களிடம் இருந்து வருகிறது. நான் பார்த்தவரையில் இவர்கள் ஒரே மக்களாகவே இருந்து வருகிறார்கள். காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முசுலீமுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் என்னால் காண முடியவில்லை. ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றின் எதிர்காலத்தை காஷ்மீரிகளின் விருப்பமே தீர்மானிக்க வேண்டும் என என் அறிவு கட்டளையிடுகிறது.”
– மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
இன்று காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தினை இந்து முசுலீம் இடையிலான போராட்டம் என்றோ……
அல்லது இந்தியா பாகிஸ்தான் இடையிலான யுத்தம் என்றோ எண்ணிக் கொண்டிருந்தால்…..
நாம் எங்கோ தவறான திசையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை ஓரளவுக்காவது நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு முன்னதாக காஷ்மீரி மக்களின் தனித்துவமான பண்பாட்டைப் பற்றிப் புரிந்து கொண்டால்தான் அது சாத்தியப்படும்.
பெரும்பான்மையான மக்கள் இசுலாமியர்கள் என்றாலும் பெளத்தர்கள்….. சீக்கியர்கள்…. இந்துக்கள் என அனைவருமே உழைத்து உண்டு உறவாடிய மண்தான் காஷ்மீர மண். அவர்களை ஆண்ட ஆட்சியாளர்கள்தான் அடக்குமுறையாளர்களாக வந்து வாய்த்தார்கள்.
அது இந்து மன்னனாக இருந்தாலும் சரி. இசுலாமிய மன்னனாக இருந்தாலும் சரி. இரண்டுமல்லாது சீக்கிய மன்னனாக இருந்தாலும் சரி. இம்மன்னர்களது மொழி என்பது கொடுங்கோலாட்சியும் ஒடுக்குமுறையும்தான்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் துவங்கிய போராட்டங்கள் ஏதோ 1947 இல் தொடங்கிய போராட்டமாக….. அதுவும் இந்திய “சுதந்திரத்தைத்” தொடர்ந்து அதனோடு இணைவதா இல்லையா என்பதில் தொடங்கிய போராட்டமாகத்தான் இன்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீர் மக்களது விடுதலைக்கான வேட்கை என்பது 1586 ஆம் ஆண்டிலிருந்தே தொடங்குகிறது.
ஆம்.
பேரரசரான அக்பர் தனது அதிகாரத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் விரிவுபடுத்திய ஆண்டுதான் 1586. அப்போதும் காஷ்மீர மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.
அதன் பிற்பாடு பிரிட்டிஷ்காரர்கள் 1846 இல் எழுபத்தி ஐந்து லட்சம் ரூபாய்க்கு மன்னன் குலாப்சிங்கிற்கு ஜம்மு காஷ்மீரை விற்றபோதும் காஷ்மீர் மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.
அதற்கும் பிற்பாடு சமஸ்தானங்களின் முழு இறையாண்மையை மதிப்பதாக முகம்மது அலி ஜின்னா உறுதியளித்ததைப் பார்த்து பாகிஸ்தானிடம் போகலாமா? என்று இந்து டோக்ரா மன்னன் ஹரிசிங் ஊசலாட்டத்தில் இருந்த போதும் காஷ்மீர மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.
இப்படி எல்லாவற்றுக்கும் பிற்பாடு எதிர்பாராத பழங்குடித் தாக்குதலால் தன்னை தற்காத்துக் கொள்ள இயலாமல் இந்தியாவோடு அதே மன்னன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட போதும் காஷ்மீர் மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.
பொதுவாக காஷ்மீரி இஸ்லாமியர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள். உலகின் பிற பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் இவர்களுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உண்டு.
குறிப்பாகச் சொன்னால் இறுக்கம் நிறைந்த ”ஆச்சாரமான” வைதீக இஸ்லாமியர்களுக்கும் காஷ்மீர இஸ்லாமிய மக்களுக்கும் வாழும் முறையில் இருந்து வழிபடும் முறைகள் வரைக்கும் எண்ணற்ற விசயங்களில் ஒத்துப் போகாது.
காஷ்மீர் இசுலாமியர்கள் இறுக்கமற்ற சூஃபி வழியில் வந்த இசுலாமைப் பின்பற்றுபவர்கள். இந்த வழியில் வந்த சூஃபி ஞானியான ”சில்சிலா ரிசியான்” என்பவரது இசுலாத்தைத்தான் இம்மக்கள் பின்பற்றுகிறார்கள்.
இதை நாம் நமக்குத் தெரிந்த அளவில் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தென்னகத்தில் அர்த்தமற்ற ஆச்சாரங்களையும்….. மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருந்த இறுக்கம் நிறைந்த வைதீக கட்டுப்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கிய சித்தர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் ஓரளவு இந்த சூஃபி துறவிகளைப் புரிந்து கொள்ளலாம்.
அந்த சில்சிலா பாரம்பரியத்தைப் பின்பற்றி வந்த ஞானிகளில் மிக முக்கியமானவர்தான் நூருதீன். பதினாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் துறவியை ரிசி என்று இன்றும் அழைக்கிறார்கள். இவரை இசுலாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்களும் பிற சமயத்தவர்களும் கூட பெரும் ஞானியாக மதிக்கிறார்கள்.
மக்களோடு நெருக்கமாக நின்ற நூருதீன் போதித்தபடி வாழாத முசுலீம் துறவிகளை கடுமையாக வெறுத்தார். பேராசை….. பாசாங்கு…. அகந்தை கொண்டு அலைந்த உலோமாக்களை கேலி செய்தார்.
இத்தகைய ஞானிகள் கூட்டத்தில் பெண்களும் அடக்கம் என்பதுதான் ஆச்சர்யம் அளிக்கும் செய்தி. இது வைதீக இசுலாமின் கொள்கைக்கு எதிரானது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சங்காபீபி, பேகத்பீபி போன்றவர்கள் இந்த சில்சிலா மரபில் பெண் ஞானிகளாகவே வலம் வந்தனர்.
அதைப்போலவே லாலாமாஜி எனும் சைவத் துறவி பெரும் புகழ் பெற்றிருந்தார். தேவையற்ற சடங்குகளையும், ”உயர் சாதி” மனோபாவங்களையும் இவர் மிகக் கடுமையாகச் சாடினார். இவரை காஷ்மீர் முசுலீம்கள் இன்றும் கூட ஒரு பெரும் ஞானியாகப் பார்க்கிறார்கள்.
காஷ்மீரின் இந்து முசுலீம் மக்களுக்கிடையே நிலவிய இத்தகைய ஒரு அற்புதமான சகிப்புத் தன்மையை நான் வேறு எங்கும் கண்டதில்லை என்று ஆங்கிலேய ஆணையர் ஒருவரே ஆச்சர்யப்பட்டு சொல்லியிருக்கிறார்.
காஷ்மீரி இசுலாம் பண்பாடு சகலரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாடு. மத ஞானிகளது புனிதத்தலங்களில் காஷ்மீரிகள் செய்து வரும் சடங்குகளில் பிற சமயத்தவர்களது சடங்குகளும் கலந்திருக்கின்றன. மசூதிகளோடு பிற புனிதத் தலங்களையும் வழிபடும் போக்கு காசுமீர இசுலாமியர் மரபு. (இதில் நமக்குத் தெரிந்த உதாரணம் விரும்புபவர் எவர் வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய நாகூர் தர்கா)
ஆனால் வைதீக இசுலாமியர்களுக்கு இப்போக்கு ஏற்புடையதாய் இல்லை.
வைதீக விதிகளில் நாட்டம் கொண்ட இசுலாமியர்களுக்கும் அதை ஏற்றுக் கொள்ளாத காஷ்மீர இசுலாமியர்களுக்கும் இடையிலான இந்த நெருடல் காஷ்மீர் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய போராளிக் குழுக்கள் மத்தியிலும் கூட எப்படி பாரிய வேறுபாடுகளை ஏற்படுத்தின என்பதைப் பிற்பாடு பார்ப்போம்.
ஓரளவுக்கு நாம் புரிந்து கொண்ட காஷ்மீர மக்களது தனித்துவங்கள் இவை. மன்னர்கள் மாறி மாறி வந்தாலும் மக்களுக்குள் மகத்தான உறவே நிலவியது. ஏறக்குறைய பிரிட்டிஷ் இந்தியாவின் பெரும்பகுதி மத மோதல்களில் மூழ்கிக் கிடந்தபோது காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டும் மத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டே நின்றது. அதுதான் காஷ்மீரத்தின் தனித்துவம். இன்றைக்கும் காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது.
அந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல வேண்டுமானால் நாம் மீண்டும் 1947 க்குச் செல்ல வேண்டும்.
நன்றி தோழர் பாமரன்
https://pamaran.wordpress.com