கருப்பர்கள் தூக்குத் தண்டனை எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றார் பெரியார் இலண்டன் பயணத்தில் ஓர் வரலாற்று நிகழ்வு

1932ஆம் ஆண்டு பெரியார் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, நடந்த ஒரு நிகழ்வுக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. அந்தப் பயணத்தில் பெரியாருக்கு பெரும் உதவிகளை செய்தவர் எஸ். சக்லத்வாலா. இவர் இந்தியாவிலிருந்து இலண்டனில் குடியேறிய கம்யூனிஸ்ட் நாத்திகர். 1922ஆம் ஆண்டிலேயே கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பிரிட்டிஷ் மக்களவையில் உறுப்பினராக இருந்தவர். பெரியார் தனது மேல்நாட்டுப் பயணங்களை நாட்குறிப்பில் பதிவு செய்தார். அந்த நாட்குறிப்பை தோழர் வே. ஆனைமுத்து பெரியாரின், ‘அயல்நாட்டுப் பயணக் குறிப்புகள் என்ற தலைப்பில் 1997ஆம் ஆண்டில் நூலாக வெளியிட்டார். அதில் 28.6.1932 அன்றைய குறிப்பாக பெரியார் கீழ்க்கண்ட தகவலைப் பதிவு செய்திருக்கிறார்.

“(சக்லத்வாலாவோடு) ஒரு ‘நீக்ரோ’ (கருப்பர்கள்) மீட்டிங்குக்குப் போனோம். அதாவது அமெரிக்காவில் ஸ்கார்பரோவில் 9 நீக்ரோ பய்யன்களை ரேப் குற்றத்திற்காக அமெரிக்க கவர்மெண்டார் கொலை தண்டனை விதித்ததை கேன்சில் (நீக்கம்) செய்யும்படி உலகக் கிளர்ச்சி செய்ய, அமெரிக்காவில் இருந்து இங்கு வந்திருக்கும் ஒரு 2 பையன்களின் தாயாரான ரைட்டு முன்னிலையில் கூட்டப்பட்ட கூட்டத்திற்குப் போனோம். பலர் நீக்கிரோ; சுமார் 40, 50 பேர் உள்பட வந்திருந்தார்கள். பலர் பேசினார்கள் சக் (சக்லத்வாலா) பேசினார். பணம் வசூல் செய்யப்பட்டது. 13 பவுன் சேர்ந்தது. ஈ.வெ.ரா. (பெரியார்) அரை பவுனுக்கு ஒரு ஜெர்மன் சில்வர் சங்கிலி ஏலத்தில் எடுத்தார்” என்று பெரியார் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.

பெரியார் பங்கேற்ற இந்த கூட்டம் பற்றிய மேலும் பல வரலாற்றுத் தகவல்களை ஆய்வாளர் ஏ.ஆர். வெங்கடாசலபதி ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஆக.22, 2005) பதிவு செய்துள்ளார். அக்கட்டுரையின் சுருக்கமான கருத்துகள்:

பெரியார் தனது நாட்குறிப்பில் குறித்துள்ள ‘ஸ்காட்ஸ்பரோ’ வழக்கு அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறியில் தொடரப்பட்ட வழக்கு. வழக்கு இதுதான்: 1931ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி 9 ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவர்கள் (அமெரிக்காவில் வாழும் கருப்பர்கள்) கட்டணூகா என்ற ஊரில், தொடர் வண்டியில் ஏறினார்கள். வண்டியில் ஏறிய உடனேயே இரண்டு வெள்ளை நிறப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக கைது செய்யப்பட்டார்கள். அந்தப் பெண்கள், ஆண்களுக்கான உடையில் இருந்தார்கள். இவர்கள் புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனைவருமே வெள்ளையர்கள். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் – தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. ஒரு இளைஞரைத் தவிர 8 கருப்பின இளைஞர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. வழக்கில், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி தன்னை இணைத்துக் கொண்டு கறுப்பின இளைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் தாய் அடா ரைட் (இவரைத்தான் ரைட்டு என்று பெரியார் நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார்). அடாரைட் – அடிமைகளாக இருந்த கருப்பர் இனத்தின் குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது பாட்டி அடிமையாக இருந்தவர். ரைட், வீட்டு வேலை செய்து பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தவர். தனது இரண்டு மகன்கள் ராய் (14), ஆண்டி (17) ஆகிய இருவரையும் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுமாறு கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியை நாடுகிறார். உலக அளவில் இந்த வழக்கில் கருப்பர்களுக்கு நீதி கேட்கும் இயக்கங்களை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. இது குறித்து விரிவாக ஆய்வு செய்து சூசன். டி. பென்னிபேக்கர் என்பவர் ஒரு நூலை வெளியிட்டார். 8 ஆண்டுகளுக்கு முன்பே தனது கணவனை இழந்து ஏழ்மையில் உழன்ற அடாரைட்டுக்கு அரசியல் என்றாலே என்னவென்று தெரியாது. மகனை தூக்குத் தண்டனை யிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம். அவரை அரசியலை நோக்கித் தள்ளியது. தன்னுடைய கிராமத்தை விட்டு எந்தப் பகுதிக்குமே சென்றிடாத அந்த கருப்பின தாய், மகனின் விடுதலைக்காக அய்ரோப்பா முழுதும் பயணங்களை மேற்கொண்டார். சக்லத்வாலா இந்த இயக்கத்தில் தீவிரப்பங்கெடுத்து, இங்கிலாந்தில் பல்வேறு இயக்கங்களின் ஆதரவை திரட்டினார். சக்லத்வாலாவின் பெருமுயற்சிகள் குறித்து பென்னி பேக்கர் தனது நூலில் ஒரு தனி அத்தியாயத்தையே எழுதியிருக்கிறார்.

இங்கிலாந்தில் கருப்பர் களுக்கு நீதி கேட்டு அவர்களின் மரண தண்டனைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நீக்ரோ நலன் காப்பு சங்கம், ஏகாதி பத்திய எதிர்ப்பு லீக் உள்ளிட்ட அமைப்புகளும் இதில் கலந்து கொண்டன. இந்த இயக்கங் களில் பங்கேற்க ரைட் அம்மையாருக்கு, இங்கிலாந்து அரசு அனுமதி தரவில்லை. கடைசியில் அதிகாரிகள் இறங்கி வந்து, 10 நாட்கள் மட்டும் இங்கிலாந்தில் இருப் பதற்கு ‘விசா’ வழங்கினர். அந்த 10 நாட்களின்போது பெரியார் இங்கிலாந்தில் இருந்தார். 1932 ஜூன் 28ஆம் தேதி பாரிசிலிருந்து ரைட் அம்மையார் இங்கிலாந்து வந்த உடன் அவசரமாக அவருக்கு ஆதரவை தெரிவிக்கும் கூட்டம் இண்டனில், கிளர்க்கென்வெல் என்ற பகுதியிலுள்ள ‘கிளப் அன்ட் இன்ஸ்டிடியூட் ஹாலில்’ ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த செய்திகளை இலண்டனிலிருந்து வெளிவந்த பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையான ‘டெய்லி ஒர்க்கர்’ விரிவாக பதிவு செய்தது. அரங்கில் கூட்ட மேடைக்கு ரைட் அம்மையாரை, நீக்ரோக்களும் இந்தியாவைச் சார்ந்த கம்யூனிஸ்ட் தோழர்களும் பாதுகாப்பாக அரண் அமைத்து, அழைத்து வந்தபோது கூட்டத்தினர் உணர்ச்சி வயப்பட்டு கரவொலி எழுப்பி ஆரவரித்தனர். அவர்களிடமிருந்து சர்வதேச பாடல் தன்னிச்சையாக ஒலிக்கத் தொடங்கியது.

அந்தக் கருப்பினத் தாய், தனது ஏழ்மையின் எளிய வாழ்க்கையைப் பற்றிப் பேசினார். தனது இரண்டு மகன்களும் ஏதேனும் வேலை கிடைக்குமா என்று வேலை தேட தொடர் வண்டியில் ஏறிச் சென்றார்கள். பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மின்சார நாற்காலியில் உட்கார வைத்து சாகடிக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று உருக்கமாகப் பேசியதாக, ‘டெய்லி ஒர்க்கர்’ பதிவு செய்திருக்கிறது. அரங்கில் திரண்டிருந்த 500 பார்வையாளர்களில் பெரியாரும் ஒருவர். அப்போது அவருக்கு வயது 53. அம்மையாரின் அமைதியான பேச்சை கூட்டத்தினரால் உன்னிப்பாகக் கேட்க முடியாத அளவுக்கு மென்மையான குரலில் இருந்தது. பேச்சின் இறுதியில் அவர் முன் வைத்த வேண்டுகோள், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

“இந்த இரவு இங்கே கூடியிருக்கும் உங்களிடம் நான் வேண்டுவதெல்லாம், எனது இரண்டு மகன்களை மட்டுமல்ல; தண்டிக்கப்பட்டுள்ள 7 இளைஞர்களின் விடுதலைக்கு உதவி செய்யுங்கள். இந்தப் போராட்டம் எங்களுக்கானது மட்டுமல்ல; உலகம் முழுதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து யுத்தக் கைதிகளுக்குமான போராட்டம்” என்று கூறியபோது, கூட்டத்தினர் உணர்ச்சி வயப்பட்டனர். சக்லத்வாலா தனது உரையில், “இதுபோல் ‘பல ஸ்காட்ஸ்பரோக்கள்’ இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றன” என்றார்.

அமெரிக்க தொழிலாளர் சங்கங்களில் கறுப்பர்கள் உறுப்பினராக அனுமதிக்காததைக் கண்டித்த அவர், அனைத்து இனத்தினரையும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் தான் அனுமதிக் கின்றன என்று பெருமையுடன் குறிப்பிட்டார். கூட்டத்தில் நிறைவாகப் பேசியவர் இசோபெல் பிரவுன் என்ற ‘சர்வதேச தொழிலாளர் மறுவாழ்வு’ அமைப்பின் பிரதிநிதி. இந்த இயக்கத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான நடைமுறைக்கான சாத்தியங்களை பட்டியலிட்டு, அவர் நிகழ்த்திய உரைதான் பெரியாரை மிகவும் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து நிகழ்வுக்கு தலைமை தாங்கிய இலண்டனில் கப்பலில் பணியாற்றும் ஜிம் ஹெட்லோ என்ற ‘நீக்ரோ’ (கறுப்பர்) நிதி திரட்டும் அறிவிப்பை வெளியிட்டு, சில பொருள்களை ஏலம் விட்டார். உடனே பெரியார் அரை பவுண்டுக்கு ஜெர்மன் வெள்ளிச் சங்கிலியை ஏலத்தில் வாங்கினார். கறுப்பின இளைஞர்களின் வழக்குக்காக இந்த நிதி திரட்டப்பட்டது. உலகம் முழுதும் முற்போக்குப் புரட்சிகர இயக்கங்களின் செயல்பாடுகளை நேரில் அறிந்து வருவதே பெரியாரின் பயண நோக்கம். (அதன்படி, லண்டனில் அவர் சந்தித்த இயக்கங்கள், இங்கிலாந்து அரசால் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட புரட்சிகர அமைப்புகள்) ‘ஸ்காட்ஸ்பரோ’ வழக்கு தொடர்பான கூட்டத்தில் பெரியார் நேரடியாகவே பங்கேற்றது – ஒரு வரலாற்றுச் சிறப்பு. அடுத்த 8ஆவது நாளிலேயே 5.7.1932 அன்று பெரியார் போலீஸ் சேதனைக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது ‘பாஸ்போர்ட்’ விவரங்களை போலீஸ் பதிவு செய்தவுடன், அரசின் கெடுபிடியைப் புரிந்து, சக்லத்வாலா உடனே இங்கிலாந்தைவிட்டு பெரியாரை கிளம்பிடச்சொன்னார். பெரியாரின் செயல்பாடுகளை வைத்து இங்கிலாந்து அரசாங்கம், அவரை ஒரு கம்யூனிஸ்ட் என்றே முடிவுக்கு வந்தது. 5.7.1932 அன்று லண்டனிலிருந்து வெளியேறி பெரியார் பாரிசுக்கு வந்துவிட்டார். ‘ஸ்காட்ஸ்பரோ’ வழக்கின் அடிப்படையில்தான் பிரபல எழுத்தாளர் ஹேர்ப்பர் லீ – 1960இல் ஒரு நாவலையே எழுதினார். அந்த நாவலின் பெயர் “To kill a mocking bird” என்பதாகும்!

– ‘ இரா’

பெரியார் முழக்கம் 27082015 இதழ்

You may also like...

Leave a Reply