காஷ்மீர் – ஒரு முன்கதை சுருக்கம் – பாமரன்
அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தொடர்ந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் துயரத்தை ஓரிரு பக்கங்களில் அடக்கிவிட முடியுமா என்ன?
இது வரையிலும் இதுபற்றி வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள்…..
ஆயிரக்கணக்கான கட்டுரைகள்……
மரியாதைக்குரிய நீதிபதிகளது உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள்….
என எண்ணற்ற ஆதாரங்களை கரைத்துக் குடிக்காவிட்டாலும் பரவாயில்லை…. குறைந்தபட்சம் அதில் கால்பங்காவது கவனத்தில் கொள்ள வேண்டுமே.?
ஏனெனில் இதனை எழுத முற்படுவது எனது கட்டுரைகளில் மேலும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டும் என்பதைக் காட்டிலும்….. ரத்தம் சிந்த போராடிக் கொண்டிருக்கும் எவரையும் தப்பித்தவறிக் கூட தவறுதலாகக் காட்டிவிடக் கூடாது என்பதுதான் எனது தயக்கம். அந்த அச்சம்தான் என்னை இவ்வளவு நாளும் பிடித்தாட்டிக் கொண்டிருந்தது.
“ராணுவத்தின் மீதே கலவரக்காரர்கள் கல்லெரிகிறார்கள்.”
“அமைதியை நிலை நாட்ட வேறு வழியின்றி ராணுவம் துப்பாக்கிச் சூடு”
“பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தாக்குதல்” என அன்றாட தலைப்புச் செய்திகளை மட்டும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு நாமும் ஓய்வெடுக்கலாம்தான்.
ஆனால் இதுவெல்லாம் அப்படியே நூற்றுக்கு நூறு உண்மையான செய்திகள்தானா?
அல்லது அத்தனையும் அப்பட்டமான பொய்களா?
இதில் எது உண்மை?
எது பொய்? கொஞ்சம் ஆழமாகக் கவனித்தால் எதார்த்த உண்மை இந்த இரண்டுக்கும் இடையே அகப்பட்டுக் கொண்டு அல்லாடிக் கொண்டிருப்பது தெரியும்.
அந்த உண்மையை வெளிக்கொணர நாம் காஷ்மீரின் கடந்த கால வரலாற்றினை ஓரளவுக்காவது உள்வாங்கிக் கொண்டால்தான் சாத்தியப்படும்.
இது காஷ்மீருக்கு மட்டும் என்றில்லை. எந்தவொரு போராட்டத்தின் ஆணிவேரையும் அறிந்து கொள்ள இந்த அணுகுமுறைதான் நம்மை ஓரளவுக்காவது உண்மையின் பக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தும்.
சரி இனி விசயத்திற்குள் வருவோம்.
நாற்பத்தி ஏழாம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி என்ன நாள் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போது வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் இருந்த சமஸ்தானங்கள் மட்டும் ஏறக்குறைய 550. இந்த சமஸ்தானங்கள் இந்தியாவோடோ அல்லது பாகிஸ்தானோடோ…… இவர்களில் யாரோடு வேண்டுமானாலும் சேரலாம். அது அவரவர்கள் விருப்பம் என சொல்லிவிட்டு வெள்ளையர் வெளியேற….. பல சமஸ்தானங்கள் சத்தமில்லாமல் இந்தியாவோடு சேர்ந்து கொண்டன.
இதில் ஐதராபாத் சமஸ்தானத்தின் நிஜாம் பாகிஸ்தானோடு போக விரும்பினார். மக்கள் விருப்பத்தைப் புறக்கணித்து பாகிஸ்தானோடு சேரத் துடித்த மன்னனை பட்டேல் அனுப்பிய படைகள் 1948 செப்டம்பர் 13 இல் தோற்கடிக்க…. ஐதராபாத் இந்தியாவோடு சேர்கிறது.
ஆண்ட மன்னனோ இஸ்லாமியர்….. மக்களோ இந்துக்கள்….
தென்னகத்தில் திருவாங்கூர் சமஸ்தான திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யரோ ”திருவாங்கூர் சமஸ்தானம் இனி தனி நாடாக இயங்கும்” என அறிவிக்கிறார்.
இங்கு மன்னனும் மக்களும் ஒரே சமயத்தவர்கள்.
ஜம்மு காஷ்மீரை ஆண்டு வந்த ஹரிசிங் மன்னரோ ”எமக்கு இந்தியாவும் வேண்டாம்….. பாகிஸ்தானும் வேண்டாம் என்று முடிவெடுத்து தனி நாடாக இருக்கவே விருப்பம்” என அறிவிக்கிறார்.
இங்கோ ஆண்ட மன்னன் டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இந்து. பெரும்பாலான மக்களோ இஸ்லாமியர்.
அதற்கு முன்னரே காஷ்மீர் மக்களது உரிமை போராட்டங்களுக்கு முன்னனியில் நின்று போராடி வந்தவர்தான் சேக் அப்துல்லா. இவர் தனது கட்சி மதசார்பற்று அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில் ”முசுலீம் மாநாட்டுக் கட்சி” என்கிற தனது கட்சியின் பெயரையே ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சி என துணிச்சலாக மாற்றி அமைக்கிறார்.
வெள்ளையர் வெளியேறும் வேளையில் இந்து அரசர் தனி நாடாக இருக்க முடிவெடுக்க சேக் அப்துல்லாவோ இந்தியாவோடுதான் இணையவேண்டும் என போராட்டத்தில் குதிக்கிறார்.
கட்சியின் பெயரை மாற்றுவதில் இருந்து…. மன்னனின் முடிவையே எதிர்த்து இந்தியாவோடுதான் இணைய வேண்டும் என்று போராட்டங்களில் குதித்தது வரைக்கும் சேக் அப்துல்லா உறுதியாக இருந்ததற்கு எது காரணம்?
நேருவின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை. அவரதுவார்த்தைகளின் மீதும்…. வாக்குறுதிகளின் மீதும் இருந்த அசாத்திய நம்பிக்கை.
இந்த வேளையில்தான் யாரும் எதிர்பாரா வேளையில் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான பழங்குடியினர் படை எடுத்து காஷ்மீரினுள் நுழைகிறார்கள். இதற்கு பாகிஸ்தானின் படைத் தளபதி அக்பர்கான்தான் தலைமை. இது திட்டமிட்ட படையெடுப்பாக இல்லாவிட்டாலும் பாகிஸ்தானுக்குத் தெரிந்து நடந்த படையெடுப்பு.
உள்ளே நுழைந்த கலகக்காரர்கள் தீ வைப்பு…. கொள்ளை….. பாலியல் பலாத்காரம்….. என சகல விதமான நாசச் செயல்களிலும் ஈடுபட……
மன்னர் ஹரிசிங் நிலைமையைச் சமாளிக்க வழி தெரியாது தத்தளிக்க…..
அபயக்கரம் நீட்டுகிறார் ஜவஹர்லால் நேரு.
ஒரு உன்னதமான உறுதிமொழியோடு……..
என்ன அந்த உன்னத உறுதிமொழி?
நன்றி தோழர் பாமரன்
https://pamaran.wordpress.com