பெருமாள் மாறி பெத்தப் பெருமாளானார்
உயர்திரு. காந்தியவர்கள் சென்றமாதம் 12-ந்தேதி பரோடா சமஸ் தானம் மரோலி என்ற கிராமத்தில் மதுபானத்தைப் பற்றிப் பேசிய விபரங் களைப் பற்றிச் சென்ற வாரத்திற்கு முந்திய ‘குடி அரசு’ பத்திரிகையில் “காந்தியின் உண்மைத் தோற்றம்” என்னும் தலைப்பில் திரு. காந்தி சொன்ன வார்த்தைகளை அப்படியே எடுத்து எழுதி அதின்மீது நமது அபிப்பிரா யத்தையும் எழுதியிருந்தோம்.
இதைப் பார்த்த சில பார்ப்பனர்கள் அதாவது தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் உடனே திரு. காந்திக்குத் தந்தி கொடுத்தார்கள்.
எப்படி என்றால், ‘தாங்கள் மதுபானத்தைப் பற்றி இம்மாதம் 12ந் தேதி மரோலியில் பேசிய பேச்சானது இங்கு சிலருக்கு பலவித அருத்தம் கொள்ளுவதற்கு இடமளிப்பதாய் இருப்பதால் அதை சரியானபடி விளக்க வேண்டும்’ என்பதாகக் கேட்டார்களாம்.
மற்றும் பலர் திரு. காந்தியைப் பாராட்டி அதாவது இப்போதாவது மதுபானத்தின் தத்துவத்தை அறிந்து அது விஷயமான கொள்கையை மாற்றிக்கொண்டதற்காக அவரைப் பாராட்டியும் எழுதினார்களாம்.
ஆகவே இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லும் முறையில் திரு. காந்தியவர்கள் இம்மாதம் 25-ந் தேதியில் பம்பாயில் இருந்து எழுதுவதாக சுதேசமித்திரன் 26ந்தேதி பத்திரிகை 4வது பக்கம் 6வது கலத்தில் காணப் படுவதாவது,
“இந்தியா முழுமைக்கும் ஒருமணி நேரத்திற்கு என்னை சர்வாதிகாரியாய் நியமித்தால் முதல் முதலில் நான் சாராயக் கடை களை எல்லாம் மூடிவிடுவேன்.
கள்ளு கொடுக்கும் மரங்களை எல்லாம் வெட்டி விடுவேன். தொழிற்சாலை வைத்து நடத்துபவர்களை தொழிலாளர்களை இரக்கத் துடன் நடத்தும்படி வற்புறுத்துவேன்.
தொழிலாளர்களுக்குச் சிற்றுண்டி சாலைகளையும், பொழுது போக்கு சங்கங்களையும் ஏற்படுத்தச் சொல்லுவேன்.
குற்றமில்லாத பானங்களும் பொழுதுபோக்குக்கு ஆnக்ஷ பகரமில்லாத சில வசதிகளும் அளிக்கும்படி செய்வேன்.
தொழிற்சாலை வைத்திருப்போர் இதற்குப் பணமில்லை யென்று சொன்னால் அந்தத் தொழிற்சாலைகளை மூடிவிடும்படி சொல்லுவேன்.
தொழிற்சாலையை மூடி விடுவதால் வேலை இல்லாமல் கஷ்டப்படும் ஆட்களை உடனே மாதிரிப் பண்ணைகளுக்கு (விவசாயத்திற்கு) அனுப்பி விடுவேன்.
ஐரோப்பிய நண்பர்களும், காயலாக்காரரும் வைத்தியர் யோசனைப் படி சாராயம் சாப்பிட வேண்டி இருந்தால் அவர்களுக்கு அனுமதிச்சீட்டு கொடுத்து குறிப்பிட்ட அளவு கவர்ன்மெண்ட் செலவில் வாங்கிக் கொள்ள அனுமதியளிப்பேன்.
இதனால் கவர்ன்மெண்டுக்கு வரும்படி குறைந்து விட்டால் நான் உடனே இராணுவச் செலவைக் குறைத்து விடுவேன்.
சேனாதிபதியானவர் தனது சாமர்த்தியத்தால் புதிய நிலைமைக்கு ஏற்றவாறு சமாளிக்க வேண்டியது தான்.
தொழிற்சாலைக்காரர்கள் நான் சொன்ன நிபந்தனைகளின்படி லாபகரமாகவே தொழிற்சாலைகளை நடத்தலாம் என்று சொன்னால், பழையபடி தொழிற்சாலைகளை நடத்த அனுமதியளிப்பேன்.”
என்று எழுதி இருக்கின்றார்.
இதுதான் நாம் “காந்தியின் உண்மைத் தோற்றம்” என்று எழுதியதற்கு விளக்கமாகும்.
இதனாலேயே இவ்வியாசத்திற்குக் “காந்தியின் விளக்கம்” என்று பெயர் கொடுத்தோம்.
இந்த விளக்க சமாதானத்தை நன்றாய் ஊன்றிப்படித்துப் பார்த்தால் திரு. காந்தியவர்கள் முன் சொன்ன அபிப்பிராயங்களை இந்த விளக்க சமா தானத்தால் பலப்படுத்துக்கின்றாரே யொழிய சிறிதும் அதற்கு மாறுபடும் படியான அபிப்பிராயம் கொண்டிருப்பதாகக் கொஞ்சமும் விளங்க வில்லை. அதாவது,
“எனக்கு ஒரு மணி நேரம் சர்வாதிகாரம் கொடுத்தால் கள்ளு சாராயக் கடைகளை மூடிவிட்டு கள்ளு மரங்களையும் வெட்டி விடுவேன்” என்ப தாகச் சொல்லிவிட்டு உடனே “தொழிலாளிகளுக்கு கள்ளு சாராயம் குடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாமல் இருக்கும்படி வேறு பல காரியங்கள் செய்வேன்” என்பதாக சொல்லி இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விளங்காமல் போகாது. அதாவது “தொழிலாளிகளுக்கு தொழிற்சாலை களில் வேலைகளை குறைப்பேன்”, “அவர்களை இரக்கத்துடன் நடத்தும் படி செய்வேன்”. “சிற்றுண்டி சாலை வைக்கும்படி செய்வேன்”, “பொழுது போக்குச்சங்கம் வைக்கச் செய்வேன்” “குற்றமில்லாத பானங்களை கொடுக்கச் செய்வேன்”, “இந்தப்படி செய்ய முடியாத தொழிற்சாலைகளை மூடிவிடும்படி சொல்வேன்” என்று சொல்வதிலிருந்து இன்றைய நிலைமை யில் தொழிலாளிகளுக்கு மதுபானம் அவசியமென்பதையும் மதுபானத்தை நிறுத்துவதானால் அதற்குத் தகுந்த பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென்பதையும் அவர் நன்றாய் வலியுருத்தி இருக்கிறார் என்பதை பகுத்தறிவும் நாணையமும் உள்ள யாவரும் மறுக்கமுடியாது. அதோடு கூட “ஐரோப்பிய நண்பர்கள் குடிப்பதற்கு அனுமதிச் சீட்டு கொடுத்து (சுயராஜிய) கவர்ன்மெண்ட் செலவில் சீமைச் சாராயம் வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்வேன்” என்றும் சொல்லி இருக்கிறார். ஆகவே, திரு. காந்தியின் மதுவிலக்குப் பிரசாரத்தில் உள்ள முக்கியம் ஐரோப்பியர்கள் (சுயராஜிய) சர்க்கார் செலவில் வேண்டிய அளவு சீமைச்சாராயம் குடிக்க வேண்டியதும் நமது தொழிலாளிகள் தங்கள் சொந்தச் செலவில் உள்நாட்டு கள்ளு, சாராயம் குடிக்கவேண்டியதும் என்பதாகத்தான் புலப்படுகின்றதே தவிர இன்றைய நிலையில் நமது தொழிலாளிகள் கள், சாராயம் குடிக்கக் கூடாது என்றோ, குடிக்காமல் இருக்க முடியும் என்றோ ஒரு இடத்திலும் அவர் கருதுவதாக நமக்குத் தெரியவே இல்லை. தொழிலாளர்களுடைய குடியை நிறுத்த வேண்டுமானால் அதற்கு பல பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக் கொண்ட திரு. காந்தி அந்தப்பரிகாரம் செய்யப்படுமுன் எதற்காக கள்ளுக் கடை மறியல் செய்யச் செய்து கலவரம் உண்டாக்கி வீண் விளம்பரம் செய்யச் செய்கின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. திரு. காந்தி அவர்கள் இன்றையதினம் இந்திய மில் வைத்து நடத்தும் முதலாளிகளிடம் எல்லாம் ஒப்பந்தம்பேசி இருக்கிறார். அவரது பிரிதிநிதிகள் மில் முதலாளி களிடம் சில நிபந்தனைகள் கண்டு கையெழுத்தும் வாங்கி இருக்கிறார்கள். அந்நிபந்தனைகளில் மில்லின் “நிர்வாகஸ்தர்கள் பெரும்பாலும் இந்தியர் களாய் இருக்க வேண்டும். பங்குக்காரர்கள் பெரும் பகுதி இந்தியர்களாய் இருக்க வேண்டும். கதர் வியாபாரிகளுக்குக் கஷ்டம் உண்டாக்கும்படியான 18 நெம்பருக்கு கீழ்ப்பட்ட நெம்பர் ýநூல் ýநூற்கக் கூடாது” என்பதாக வெல்லாம் நிபந்தனைகளைக் கண்டு கையெழுத்து வாங்கி அந்தப்படி கையெழுத்திட்ட மில் ýநூல்களை மாத்திரம் வாங்கி நெய்ய வேண்டும் என்று உத்திரவு போட்டார்களே யொழிய தொழிலாளிகள் குடிக்காமல் இருப்பதற்கு திரு. காந்தியவர்கள் சொல்லும் பந்தோபஸ்து செய்யும் படியான நிபந்தனைகளை அதில் போட்டார்களா என்று கேட் கின்றோம்.
இன்றையதினம் தமிழ்நாட்டில் குடி மறியலின் பேரால் எவ்வளவு பேர்கள் அடிபடுகின்றார்கள்? எவ்வளவு கலவரங்கள் ஏற்படுகின்றன? இதனால் பொதுஜனங்களுக்கு எவ்வளவு தொல்லைகள் ஏற்படுகின்றன?
பைத்தியக்காரர்களிடமும் பயங்காளிகளிடமும் சுயநலக்காரர்களிட மும் பணம் வசூலித்து வேலைத்திண்டாட்டம் உள்ள சிறுவர்களையும் பெற்றோர்களுக்குக் கீழ்படிய இஷ்டமில்லாத சிறுவர்களையும் பாடுபடக் கஷ்டப்படும் சிறுவர்களையும் வேடிக்கை விளையாட்டில் விளம்பரத்தில் பைத்தியமுள்ள சிறுவர்களையும் கூட்டி வைத்து சோறு போட்டு இந்தப்படி கலவரம் செய்வதில் லாபம் என்ன? என்றுதான் கேட்கின்றோம். ஒரு சமயம் இதனால் ஏதாவது ஒரு பயன் உண்டு என்று திரு. காந்தியாகிலும் சொன்னா ரானால், ஏதோ ஒரு விதத்தில் சிலர் சமாதானமாவது சொல்லப் புரப்படலாம். “கள்ளுக்கடை மூடுவதால் குடி நிற்காது” என்றும் “குடிகாரர்களை தடைப் படுத்தி ” “குடிக்காமல் செய்வதால் குடி நிற்காது” என்றும், “குடிப்பவர்கள் எப்படியும் திருட்டுத்தனமாகவாவது குடித்துத்தான் தீருவார்கள்” என்றும், “கள்ளு சாராய வியாபாரிகள் திருட்டுத்தனமாக கள்ளு விற்றுத் தான் தீருவார்கள்” என்றும், “சரீரத்தால் பாடுபட்டு உழைப்பவர்களுக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றவர்களுக்கும் அவர்களது களைப் பும், சலிப்பும் தீருவதற்கு கள் அவசியமானது” என்றும், “நானே (திரு காந்தியே) அவர்களது களைப்பைப் பார்த்து மனமிறங்கி சாராயக் கடைக்குப்போய் சாராயம் வாங்கி வந்து அன்பாய் கொடுத்து இருக்கின் றேன்” என்றும் சொல்லி கள்ளின் அவசியத்தையும், குடிக்க வேண்டிய தையும் ஒப்புக் கொண்டு வெளிப்படுத்தி இருக்கும் போது மறுபடியும் ஆங்காங்கு கள்ளுமறியல் செய்வது என்றால் கள்ளுமறியல் செய்யப் படுவது அருத்தமற்றதென்றும், புரட்டு என்றும் ஏன் சொல்லக்கூடாது? என்று கேட்கின்றோம்.
தவிர, தொழிற்சாலை முதலாளிகள், தொழிலாளிகள் கள்ளு குடிக் காமல் இருக்கத்தகுந்த மாதிரியில் “அவர்களது வேலைகளை சுளுவாக்கி கள்ளுக்குப் பதில் வேறு கெடுதி இல்லாத பானங்களும், சௌகரியங்களும் செய்யாவிட்டால் தொழிற்சாலையை மூடிவிட உத்தரவு போடு”வதாக திரு. காந்தி எழுதி இருக்கிறார். ஆனால் இந்தப்படி மூடிவிட்டபிறகு அந்தத் தொழிலாளிகளுக்கு வேலை வேண்டுமே என்றால் “அவர்களை எல்லாம் மாதிரிப்பண்ணை விவசாயத்துக்கு அனுப்பி விடுவேன்” என்று சொல்லு கின்றார்.
ஆகவே தொழிலாளிகளுக்கு சுயராஜிய அரசாங்கத்தில் ஏற்படும் நன்மைகள் எல்லாம் தொழிற்சாலையில் சிறிது சௌகரியமும், அதுசெய்ய முதலாளி சம்மதிக்காவிட்டால் அந்தத் தொழிலாளிகளை விவசாயம் செய்ய ஏர் உழுகும்படியும், மண் வெட்டி எடுத்து மண் வெட்டும்படியும் சொல்லுவ தைத்தவிர வேறு வேலை இல்லை என்பதை நன்றாய் விளக்கி இருக்கிறார்.
ஆகவே, சுயராஜியத்தில் தொழிலாளர்களுடைய நிலைமை இன்ன தென்று விளங்கி விட்டது. “காந்தியின் உண்மைத் தோற்ற” மெனும் முந்திய வியாசத்தில் நாம் எழுதி இருந்த அபிப்பிராயத்தை மாற்றவேண்டும் என் கின்ற எண்ணத்தின் மீது நமது பார்ப்பனர்களும், நமது காங்கிரஸ் பக்தர்களும் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாய் எடுத்துக்கொண்ட சிரமமானது “பெருமாள் என்கின்ற பெயரை மாற்றிக் கொள்ளும்படி கொடுத்த பணத்தின் பயனாய் பெத்த பெருமாள் என்கின்ற பெயரை வைத்துக் கொண்டான்” என்பதுபோல் திரு. காந்தியவர்கள் நன்றாய் அழுத்தந் திருத்தமாகக் கள்ளு சாராயம் குடிக்க வேண்டிய அவசியத்தை யும், தொழிலாளிகளுடைய (சூத்திரர்களுடைய) நிலைமையையும் பலப்படுத்திவிட்டார். இதைக்கண்ட தொழிலாளிகளான (சூத்திர) காங்கிரஸ் பக்தர்கள் இனி என்ன சமாதானம் சொல்லுவார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. வயிற்றுப் பசியின் கொடுமையினால் வேறுவழியில் மனிதர்களாக வாழ முடியாததின் நிலை யினால் தங்களை ஆதரிப்ப வர்களுக்கு நன்றி காட்டவேண்டுமே என்கின்ற சொந்த அவசியத்தினால் நம்மை வையலாம். “குடி அரசை” வையலாம். ஆனால் தாங்கள் செய்யும் இந்த மாதிரியான யோக்கியப் பொறுப்பும் நாணையமுமற்ற காரியத்திற்கு அறிவாளிகளுக்கு என்ன பதில் சொல்லு வார்கள் என்று தான் கேட்கின்றோம்.
எவ்வளவு யோக்கியதை யற்றவனாகவும், இழிவானவனாகவும் இருந்தாலும் அவனால் “நமக்கு ஒரு ஓட்டுக்காவது மார்க்கமுண்டு” என்று ஒருவன் அறிந்தால் அவனைப் பிரமாதப்படுத்தி “இந்திரனே! சந்திரனே!! ” என்று கூறி ஏமாற்றி கையில் ஏதோ கொடுத்து அனுப்புவது சிலரின் இயற்கையேயாகும். இதையே ஆதாரமாய்க் கொண்டு பிழைக்க வேண்டி யதும் சிலரின் இயற்கையேயாகும். ஆனால் சுயநலமற்ற பொது மக்களும் கஷ்டப்படுகின்ற பாட்டாளிகளும் இந்த வியாபாரத்தில் ஏமாந்து போகாமல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதற்கே இதை நாம் எழுது கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 05.07.1931
வினா: மதுவிலக்குப் பிரசாரம் என்றால் என்ன?
விடை: தான் மதுவருந்திக் கொண்டும், தனது மரத்தில் கள்ளு
முட்டி கட்டித்தொங்கவிட்டுக் கொண்டும், தனது
பத்திரிகைகளில் ஒவ்வொரு மனிதனும் வீட்டில் சாராயம்
வைத்திருக்க வேண்டுமென்று எழுதிக்கொண்டும்,
தன்னை சட்டசபைக்கு அனுப்பினால் மதுவை ஒழித்து
விடுகிறேன் என்று சொல்லுவதும், இப்படிப்பட்டவர்
களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று சொல்லுவதும்
மதுவிலக்கு பிரசாரமாகும்.
குடி அரசு – உரையாடல் – 02.05.1926