“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்!”
ஏன் இந்த முழக்கம்? எதற்காக இந்த பரப்புரை? இதோ நமது இளைய தலைமுறையின் கவனத்துக்கு சில சிந்தனைகளை முன் வைக்கிறோம்.
தமிழர்களாகிய நாம், தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக பிற்படுத்தப்பட்ட ஜாதிகளாக எப்போது ஆனோம்? நமது பாட்டன், முப்பாட்டன் காலங்களில் நாம் எப்படி வாழ்ந்தோம்?
பார்ப்பனருக்கும், பண்ணையார்களுக்கும் அடிமைகளாகக் கிடந்தார்கள் நமது முன்னோர்கள். அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. உழைப்பு, அடிமை வேலை, குலத்தொழில் – இவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அன்று சமுதாயம் விதித்த கறாரானக் கட்டளை.
ஜாதியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த இழிவுகளை எப்படித் தகர்த்தோம்? ஜாதியத்தை எதிர்த்த பெரியாரும் அம்பேத்கரும் போராடிப் பெற்றுத் தந்த கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளைப் பெற்றதால் தகர்த்தோம். இந்த இடஒதுக்கீடுகளை அமுல்படுத்துவதில் – காமராசர் ஆட்சியில் தொடங்கி, தமிழகத்தில் தொடர்ந்து, அதிகாரத்துக்கு வந்த ‘திராவிட’ கட்சிகள் ஆர்வம் காட்டின; அடைக்கப்பட்ட கல்விக் கதவுகள் திறந்தன; படித்தோம்; சுயமரியாதைப் பெற்றோம். ‘ஜாதி’யைக் காட்டி, ‘ படிக்கக்கூடாத ஜாதி; உழைக்க வேண்டிய ஜாதி’ என்றார்கள். அத்தகைய ‘ஜாதி’த் தடைகளை, அதே ஜாதி அடிப்படையில் கண்டறிந்து உரிமைகளை மீட்க வந்ததுதான் இடஒதுக்கீடு. ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்கலாமா என்று கேட்பவர்கள் உண்டு. ஆம்; ஜாதியால் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டு, ஜாதி சமத்துவத்தைக் கொண்டு வருவதே இடஒதுக்கீடு என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லுவோம்.
இப்போது, சமூக நீதியின் ஊடாக ஜாதியைக் கடந்து செல்ல நாம் முற்படுகிறோம். ஆனால், ஜாதி வெறி மீண்டும் நம்மை பாட்டன், முப்பாட்டன் காலத்துக்குப் பின்னோக்கி இழுக்கிறது.
இளைஞர்களே! காலம் காலமாய் – நம்மை அடிமைப்படுத்தி வந்த ஜாதியும் – ஜாதியமைப்பும் நமது தலைமுறைக்கு வேண்டவே வேண்டாம் என்று உரத்துச் சொல்லுங்கள்; ஏன்?
• நாம் எந்த ஜாதியில் இருக்க வேண்டும் என்று நாம் தீர்மானிப்பது இல்லை;
நீ இந்த ஜாதிக்காரர்களாகவே வாழ வேண்டும் என்று நம் மீது திணித்து விட்டார்கள்.
• எந்த ஜாதிக்காரர்களானாலும், எல்லோருக்கும் அடையாளம் ஒன்றுதான்; அது மனிதர்களுக்கான அடையாளம். ஜாதிக்கொரு மனித அடையாளம் இல்லை.
• ஒவ்வொரு ஜாதிகளுக்கும் தனித்தனி இரத்தம் ஓடுவதும் இல்லை. உலகில் எல்லா மனிதர்களின் உடல்களிலும், ஏ, பி, ஏபி, ஓ/பாசிட்டிவ், நெகட்டிவ் என, 8 வகை இரத்தத்தில் ஏதோ ஒன்றுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் ஒரு செட்டியாருக்கு – செட்டியார் இரத்தம் வேண்டுமென்றோ, அய்யங்காருக்கு – அய்யங்கார் இரத்தம் வேண்டும் என்றோ கேட்கிறார்களா? இல்லை. ஒரு ஜாதிக்காரரின் உடல் வேறு ஒரு ஜாதிக்காரன் ‘குருதி’யை ஏற்கிறது; ஆம் இரத்தத்துக்கு ஜாதி இல்லை.
• உடல் உறுப்புகளைக் கொடையாக வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம். இது நமக்கு ஒரு பெருமைதான். மூளைச் சாவு அடைந்தவர் களின் உறுப்புகள் – இருதயம், சிறுநீரகம், கல்லீரல், கண் போன்றவை பழுதடைந்து உயிருக்குப் போராடுகிறவர்களுக்குப் பொருத்தப்படுகின்றன. இந்த உறுப்புகளுக்கு ஜாதி பார்க்கப்படுகிறதா? அல்லது, உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளோ உறவினர்களோ சொந்த ஜாதிக்காரர் உறுப்புதான் வேண்டும் என்று கேட்கிறார்களா? இல்லையே. சிகிச்சை தரும் மருத்துவர்களும் நோய்க்குத்தான் சிகிச்சை தருகிறார்கள்; ஜாதிக்கொரு சிகிச்சை தருவது இல்லை.
ஆனால், இளைஞர்கள் ஜாதி கடந்து ஒருவரையொருவர் விரும்பி, திருமணம் செய்ய முன் வரும்போது மட்டும் ஜாதி வெறியைக் காட்டி ஏன் தடுக்கிறார்கள்? அதுவும் ‘தலித்’ இளைஞர் என்றால் தலையை வெட்டி தண்டவாளத்தில் வீசுகிறார்களே, ஏன்? பெற்ற மகளையே கதறக் கதறக் கொடூரமாக பெற்ற தகப்பனே கொன்று குவிக்கிறானே, ஏன் இந்த கொலை வெறி?
குடிமக்களின் வாழும் இடங்களில், தேனீர்க் கடைகளில், சுடுகாடுகளில், வழிபாட்டு இடங்களில் அனைவருக்கும் சம உரிமைகளை மறுப்பது ஏன்? இதற்கு வித்திட்டது யார்?
மனிதர்களைப் பிரித்து ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ என்று இழிவுக்குள்ளாக்கியது ‘மனு சா°திரம்’. இந்த மேல்ஜாதி, கீழ் ஜாதி அமைப்பை கடவுளே உருவாக்கினார் என்றார்கள் பார்ப்பனர்கள். புனித நூலாக போற்றப்படுகிற ‘பகவத் கீதை’யில் கிருஷ்ண பகவான் ‘நான்கு வர்ணங்களை நான்தான் படைத்தேன்’ என்கிறான். (சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்) ‘சம்பூகன்’ என்ற ‘சூத்திரன்’, ‘பிராமணன்’ வழியாக கடவுளை வணங்காமல், நேரடியாக கடவுளை வணங்கியது ‘குற்றம்’ என்று கூறி, சம்பூகன் தலையை வெட்டினான் ‘ராமன்’. அதுதான் ‘நமது குல ஜாதி தர்மம்’ என்று இராமாயணம் கூறுகிறது. ‘ஏகலைவன்’ என்ற ‘கீழ் ஜாதிக்காரன்’ வில் வித்தையில் கை தேர்ந்தவனாக மாறியபோது, அந்த உரிமை உன் ‘ஜாதி’க்கு இல்லை என்று அவனது கட்டை விரலை வெட்டி குருதட்சணைத் தருமாறு கேட்டுப் பெற்றான், வித்தையைக் கற்றுத் தராத பார்ப்பன குரு துரோணாச்சாரி. உடல் உறுப்பையே ‘தட்சணையாக’ வெட்டித் தருமாறு எந்த மனிதனாவது கேட்பானா? அதுவும் கட்டை விரலையே ‘தானமாக’ வெட்டி தந்துவிட்டால், பிறகு, எப்படி வில்லை விட முடியும்? இதுதான் ‘மகாபாரதம்’ வழியாக நமக்கு சொல்லப்பட்ட ‘ஜாதி தர்மம்’.
இன்று ‘சம்பூகன்கள்’ வதையோ, ‘ஏகலைவன்’ ‘சிதை’ப்போ நடக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், தர்மபுரி ‘இளவரசன்’களும், திருச்செங்கோடு ‘கோகுல்ராஜ்’களும் வதைப்புக்கும் சிதைப்புக்கும் உள்ளாகிறார்களே! ‘மனு சா°திரத்தை’க் காட்டி பார்ப்பனர் தொடங்கி வைத்த இந்த ‘ஜாதியம்’ இப்போதும் தொடர்வதை இளைஞர்களாகிய நாம் அனுமதிக்கலாமா? இந்த அநீதிகளுக்கு எதிராக பொங்கி எழ வேண்டாமா?
2014இல் மட்டும் தமிழகத்தில் ஜாதி வெறிக்கு 72 தலித்துகள் கொல்லப் பட்டுள்ளார்கள் (20.8.2015 ‘இந்து’). தமிழகம் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?
அன்று நம்மை ஜாதி சிறைக்குள்ளே அடைத்தார்கள். இன்று, ஜாதி சங்கத் தலைவர்கள், தங்கள் சுயநலனுக்காக ஊதி வளர்க்கும் ஜாதிவெறியால் தம் தலைவர்களின் சிலைகளையும்கூட கூண்டில் அடைத்து விட்டார்கள்; அதோடு மட்டுமல்ல, கலவரத்தைத் தூண்டிவிட்டு தம் ஜாதிக்காரர்களையும் சிறைக்குள் அனுப்புகிறார்கள். ஆனாலும், உறுதியாகச் சொல்கிறோம். ஒரே ஜாதியைச் சேர்ந்த அனைவருமே அந்த ஜாதித் தலைவர்களின் இந்த வன்முறைகளை ஏற்பதில்லை; ஜாதிக் கலவரத்தை வெறுப்பவர்கள், சமூக ஒற்றுமையை நேசிப்பவர்கள், ஜாதியை மறுப்பவர்கள் என்று ஒவ்வொரு ஜாதியிலும் ஏராளமானோர் உண்டு.
இப்படி, ஜாதி வெறியைத் தூண்டிவிடும் சுயநல ஜாதித் தலைவர்களை நோக்கி எழுப்ப வேண்டிய கேள்விகள் இருக்கின்றன.
• பிற்படுத்தப்பட்ட ஜாதிகளிலே பல இலட்சம் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் 86 இலட்சம். (இது தமிழக சட்டமன்றத்தில் தந்த தகவல்). வேலை கிடைக்காமல் நமது இளைஞர்கள் வீதியில் திரியும் இந்த நிலைக்குக் காரணம் என்ன?
• பொதுத் துறை நிறுவனங்கள் ஒழிந்து, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு பொதுத் துறை நிறுவனங்கள் படிப்படியாக ஒழிவதால் அங்கே தாழ்த்தப்பட்டோருக்கு இருந்த வேலை வாய்ப்புகளைப் பறி கொடுத்து விட்டோம். எனவேதான் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் சட்டம் வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இது நியாயமா? இல்லையா?
• இலாப வெறியே இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் நோக்கம். நமது அரசு இலவசமாக அல்லது குறைந்த விலையில்…, நிலம் தருகிறது; 24 மணி நேர தடையற்ற மின்சாரம் தருகிறது; ஏராளமான வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவர்களின் உற்பத்திப் பொருள்களையும் நாமே விலை கொடுத்து வாங்குகிறோம். இந்த நிலையில் வேலையின்றி தவிக்கும் நமது இளைஞர்களுக்கு இங்கே வேலை வாய்ப்புகளை ஏன் உறுதி செய்யக் கூடாது? அதற்கு ஏன் சட்டமியற்றக் கூடாது? இது நியாயமா? இல்லையா?
• அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி 2004ஆம் ஆண்டு பதவியேற்ற போது, கார்ப்பரேட் நிறுவனங்களில், தனியார்துறையில் இடஒதுக்கீடு செய்யும் திட்டத்தை அறிவித்தது. ஆனால், கார்ப்பரேட் பெருமுதலாளிகள் எதிர்த்தார்கள்; அதனால் திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். இதைத் தட்டிக் கேட்க நாதியில்லை; எந்தக் கட்சியும் குரல் கொடுக்கவில்லை. ஜாதிப் பெருமைக் காக்க, கழுத்தை அறுக்க, கலவரம் செய்ய துடிக்கும் எந்த ஜாதி சங்கத் தலைவராவது இதை கேட்டார்களா?
• பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி சாதனை செய்த எம்.ஜி.ஆர். தனது ஆட்சியில் தமிழ்நாட்டில் பெரும் தொழில் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு உரிமைகளுக்காக திட்டம் தீட்டினார். ஆனால், அப்போது அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதற்குப் பிறகு, எந்த ஆட்சியும் கவலைப்படவில்லை. இப்போதும் கருநாடகத்தில் மகாராஷ்டிராவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் அம்மாநில அரசுகள் இடஒதுக்கீடு சட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் பலவற்றிலும் தொழில் நிறுவனங்களில் பல்கலைக் கழகங்களில் சிறுபான்மை மக்களான கருப்பர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் இடஒதுக்கீடுகள் உறுதி செய்யப்பட் டுள்ளன. அதற்குப் பெயர் உறுதியாக்க செயல்பாடு (யககசைஅயவiஎந யஉவiடிn).
• பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு இருந்தும்கூட, இப்போது மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 7 சதவீதம்தான்; மத்திய அமைச்சகத்தில் துறை செயலாளர்களில் ஒரு தாழ்த்தப்பட்டவரோ, ஒரு பிற்படுத்தப்பட்டவரோ இல்லை. அதிகார மய்யங்கள் அனைத்திலும் பார்ப்பனர், உயர்ஜாதியினர்தான்.
இட ஒதுக்கீட்டில் படித்து, நல்ல மதிப்பெண் பெற்றும் உயர்கல்வி – வணிகமயமாகிவிட்டதால் படிப்பதற்கு பணம் இல்லாமல் தவிக்கிறார்கள், நமது இளைஞர்கள்.
எந்த ஜாதித் தலைவர்கள் இந்த உரிமைகளுக்குக் குரல் கொடுத்தார்கள்? போராடினார்கள்? ஜாதிகளை எதிர்க்கும் நாங்கள்தான் – பிற்படுத்தப்பட்ட ஜாதித் தலைவர்களின் ஜாதி வெறியை கண்டிக்கும் நாங்கள்தான், பிற்படுத்தப்பட்ட வர்களின் சமூக நீதிக்காக குரல் கொடுக்கிறோம்; போராடுகிறோம்.
அன்று பார்ப்பனர்கள் – திணித்த ‘மனு சாஸ்திரத்தின்’ இன்றைய தூதுவர்கள்தான் ஜாதி வெறியூட்டும் சில பிற்படுத்தப்பட்ட ஜாதி தலைவர்கள். இவர்கள் ஜாதி வெறி கலவரங்களுக்கு மட்டும் நம்மை பகடைக்காயாகப் பயன்படுத்துவார்கள். ஆனால், நமது வேலை வாய்ப்பை வாழ்வுரிமையை உறுதி செய்ய குரல் கொடுக்க மாட்டார்கள்; போராட முன் வரமாட்டார்கள்.
வேண்டாம்; வேண்டவே வேண்டாம்; இந்த சுயநல – ஜாதிவெறி சக்திகளைப் புறந்தள்ளுவோம்!
நமக்கு வாழ்வுரிமை வேண்டும்! வேலை வேண்டும்!கல்வி வேண்டும்!
எல்லாவற்றுக்கும் மேலாக ஜாதியை மறுக்கும் மானுடத்தை நேசிக்கும் சமத்துவத்துக்கான, சுயமரியாதைக்கான வாழ்வு வேண்டும்!
தோழமையை – மானுடத்தை – காதலை – நட்பை – சமூக ஒற்றுமையை சிதைத்து பகைமையாக்கும் ஜாதியை ஜாதி வெறியை தூக்கி எறிவோம்!
இளைய தலைமுறையே! தோழியர்களே! தோழர்களே! எழுந்து வாருங்கள்! இணைந்து குரல்கொடுப்போம்!
எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்!
இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்!
– திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரைப் பயணத்திற்கான துண்டறிக்கை
பெரியார் முழக்கம் 10092015 இதழ்