எனக்கு ‘வீர சொர்க்கத்தில்’ நம்பிக்கையில்லை – பெரியார்

பெரியார் சமதர்மக் கொள்கைகளை கைவிட்டார் என்று சுயமரியாதை இயக்கத்திலிருந்த பொது
வுடைமையாளர்கள், ஜீவா என்றழைக்கப்பட்ட ஜீவானந்தம், சிங்காரவேலர் போன்றோர் பெரியார்
மீது கடும் விமர்சனங்களை வைத்தனர்.
1936ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட 5ஆவது சுயமரியாதை மாநாடு திருத்துறைப்பூண்டியில் நடந்தது. மாநாட்டில் ஜீவா, பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டு பெரியாரை விமர்சித்ததற்கு பதிலளித்து பெரியார் நிகழ்த்திய உரை இது.
தோழர்களே!
சுயமரியாதை இயக்கம் மிக நெருக்கடி யில் இருப்பதாகவும், சீக்கிரத்தில் செத்துப் போகும் என்றும் இங்கு சொல்லப்பட்டது.
இயக்கம் ஒன்றும் நெருக்கடியில் இல்லை என்பது என் அபிப்பிராயம். சிலருக்கு, அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பை உத்தேசித்து அப்படித் தோன்றலாம். அதற்கு, நான் காது கொடுக்க முடியாது. இந்த இயக்கம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு அனேகர் தங்கள் சுயநலத்துக்கு, சௌகரியமில்லாது கண்டு இது போலவேதான் இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது, செத்துப்போய் விட்டது என்று சொல்லிக்கொண்டே போய்விட்டவர்களும், வெளியில் போய்விட்ட பின்பும் அவர்களால் கூடுமானவரை தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கிறவர்களும் திரும்பி வந்தவர்களும் பலர் உண்டு. அப்படிப்பட்டவர்களையும் அவர்களது விஷமங்களையும் பற்றி நான் சிறிதும் லட்சியம் செய்வதில்லை. அந்தப்படி நான் அலட்சியமாய் இருந்துவிட்டதால் இதுவரை இயக்கத்துக்கோ, எனக்கோ யாதொரு கெடுதியும் ஏற்பட்டுவிடவில்லை. இயக்கம் போய்விட்டது என்று இன்னமும் சொல்லிக் கொண்டுதான் திரிகிறார்கள்.
இயக்கம் எங்கு, போய்விட்டது. அவர்களை விட்டுவிட்டுப்போய் விட்டது. அவ்வளவுதான்.
இப்போது சொல்லுகிறேன் இயக்கத்தின் மூலம் சுயநலம் அனுபவிக்கக் கருதியிருக்கும் எப்படிப்பட்டவர்களுக்கும் இயக்கத்தில் இடம் கிடைக்காது. அவர்கள் யாரானா லும் சரி, இயக்க வளர்ச்சியைவிட இயக்கத் தில் சுயநலம் கருதுபவர்களை கவனிப்பதே என் வேலை. அதனால் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்கத் தயாராய் இருந்து கொண்டுதான் இப்படிச் சொல்லுகிறேன்.
எந்த இயக்கமும் அதிதீவிர கொள்கையில்லாததால் கெட்டுவிடாது. இயக் கத்தை தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள் வதாலேயே கெட்டுப் போகும்.
இதுவரை அநேக இயக்கம் அதனாலேயே மறைந்து போய் இருக் கிறது. மற்றபடி யாருடைய எதிர்ப்பும், யாருடைய தொல்லையும் இருந்தாலும் இயக்கம் அதன் வேலையைச் செய்துதான் தீரும். இயக்கம் நெருக்கடியில் இருப்பதாய் இங்கு, வருத்தப்பட்டவர்கள் எப்படி நெருக்கடியில் இருக்கிறது, இதனால் என்ன கெட்டுப் போய் விட்டது என்று எடுத்துக் காட்டி யிருந்தால் எனக்கு, அவர்கள் வார்த்தையில் உள்ள உண்மை புலப்பட்டு இருக்கும்.
தோழர்கள் தண்டபாணி, கண்ணப்பர், அய்யாமுத்து, ராமநாதன், தாவுத்ஷா முதலான பலர் சுயமரியாதை இயக்கம் செத்துப் போய்விட்டது என்று சொல்லிக் கொண்டுதான் சிலர் வெளியேறியும், சிலர் தாங்கள் இன்னமும் சுயமரியாதைக் காரர்கள் என்றும் சொல்லிக் கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்கள், சிலர் வருகிறார்கள். இதனால் எந்தக் கொள்கை கெட்டுவிட்டது? என்ன நடவடிக்கை நின்று விட்டது?
இந்த மகாநாடு கூட்டியது பைத்தியக் காரத்தனம் என்று மகாநாடு கூட்டிய பிரமுகர்களுக்குத் தோன்றும்படி இன்று காலை முதல் இங்கு, நடவடிக்கை நடக்கிறது. இது எனக்கு, முன்னமேயே தெரியும். அதனாலேயே நான் இதற்கு, வர வேண்டாம் என்று கருதி கடிதம்கூட எழுதி விட்டேன். வந்தே தீர வேண்டுமென்று தந்தியும் கடிதங்களும் வந்தன. வந்த பிறகு, ஏன் வந்தேன் என்றுதான் தோன்றுகின்றது. எங்கள் பெயர்களை விளம்பரம் செய்து ஆட்களைக் கூட்டி இம்மாதிரி இயக்கம் செத்துவிட்டது என்று மாய அழுகை அழுவதே மகாநாட்டின் வேலை என்றால் இனி மகாநாடுகள் கூட்டாமல் இருப்பது கூட நலமென்றே கருதுகிறேன்.
இந்த லட்சணத்தில் மாகாண மகாநாடு ஏன் கூட்டவில்லை என்று என்மீது குறை கூறப்பட்டது. மகாநாடு இந்த லட்சணத்தில் இப்படிப்பட்ட ஆட்களை வைத்துக் கொண்டு எப்படி கூட்டமுடியும்? கூட்டுவதால் பிரயோஜனம்தான் என்ன? கூட்டாததால் என்ன கெட்டுவிடும்?
இதற்குமுன் கூட்டின 3 மகாநாடுகளும் பணக்காரர் களாலும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாலும் தான் கூட்டப்பட்டது? இந்த மகா நாடும் ஒரு பணக்காரரின் பெரிய பொருளுதவியின் மீதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களின் ஆதரவின் மீதும்தான் கூட்டப்பட்டது என்று காரியதரிசி சொன்னார். அப்படியிருக்க பணக்காரர்கள் தயவில் மகாநாடுகளைக் கூட்டி அவர்கள் நிழலில் இருந்துகொண்டு அவர்கள் சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு அவர்களையே அக்கட்சியையே வைது கொண்டிருப்பதனால் மகாநாடு எப்படிக் கூட்ட முடியும்?
நாகையில் மாகாண மகாநாட்டைக் கூட்ட தோழர் தயாரோகணம் பிள்ளை அவர்கள் ஏற்றுக்கொண்டார். வேண்டிய ஏற்பாடும் செய்தார், முன் பணமும் கொடுத்தார். அப்படியிருக்க சில தோழர் கள் மகாநாட்டு நிர்வாகத்தில் சம்பந்தப் பட்டவர்களே அவரைக் கேட்காமல் மகாநாட்டுப் பந்தலில் சமதர்ம மகாநாடு கூடும் என்று பத்திரிகையில் விளம்பரம் செய்துவிட்டார்கள். பிறகு, பலர் அவரைக் கேட்க ஆரம்பித்த உடன் அவர் அம் முயற்சியை விட்டு விட்டதாகத் தெரிகிறது.
மற்றும் நாளையும் மகாநாடு கூட்ட வேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சியார் உதவியும் சில பணக்காரர்கள் உதவியும் வேண்டித்தான் இருக்கும். அப்படி இருக்க அவர்களை வைவதின் மூலம் வீரராக இருப்பேன். இருக்கிறவர்களின் வசவுக்குக் கட்டுப்பட்டு யார் தான் மகாநாடு கூட்டு வார்கள்? என்பதை யோசித்துப் பாருங்கள். என்மீது குற்றம் சொல்லுவது யாருக்கும் எளிதுதான். ஆனால் இயக்கத்தில் வேறு எந்தத் தோழர் செய்கின்ற காரியத்தைவிட என் காரியம் என்ன குறைந்து போய் விட்டது என்று யோசித்துப் பாருங்கள்.
இயக்கம் என்றால் எவனோ ரயில் சார்ஜ் கொடுத்து, எவனோ விளம்பரம் செய்து, எவனோ கூட்டம் கூட்டி விட்டால் அதில் வந்து நின்று கொண்டு எல்லோரை யும் பயங்காளி என்றும் கோழை என்றும், மந்திரிகள் மாய்கையில் மறைந்துவிட்டவன் என்றும், சர்வாதிகாரி என்றும் ஒருவர் மற்றொருவரை வைதுவிட்டுப் போய் விடுவது அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். என்ன குறைந்தாலும் மாதம் 200, 300 ரூபாய் இயக்கத்துக்காகச் சொந்தப் பொறுப்பில் செலவு செய்து வருகிறேன். பல தடவை 1000, 2000#மாக மொத்த செலவு செய்து வருகிறேன். மாதம் 10 பிரசாரங் களுக்கும் குறையாமல் பெரிதும் என் சொந்தச் செலவிலேயே பல தோழர்களை வைத்துக் கொண்டு ஊர் ஊராய் கிராமம் கிராமமாகத் திரிந்து நோயுடனும், காயலா வுடனும், டாக்டர்கள் அபிப்பிராயங்களை லட்சியம் செய்யாமலும் பிரசாரம் செய்கிறேன். இதற்கு மேல் மற்றவர்கள் சாதிப்பதோ மற்றவர்களுக்கு உள்ள பொறுப்போ இன்னது என்று எனக்கு விளங்கவில்லை.
இந்த இயக்கம் எந்த தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும், வீரசொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீரசொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது. வீரனாவதிலும் பயன் உண்டு என்று நம்பிக்கை கிடையாது. காந்திக்கு மேல் ஒருவன் வீரனாகவோ, மகாத்மாவாகவோ விளம்பரம் பெற முடியாது. ஆனால் அவரால் மனித சமூகத்துக்கு ஒரு காதொடிந்த ஊசி அளவு பயனும் ஏற்படவில்லை. ஏற்படப்போவதுமில்லை. வேண்டுமானால் அவருக்கும் அவர் சந்ததிக்கும் பெரிய மதிப்பு ஏற்பட்டு விடும். கோவிலும் ஏற்படும். ஆனால் நான் அப்படிப்பட்ட புகழை விரும்பவில்லை. எனக்குப் புகழ் வேண்டியதுமில்லை. புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். அத்துறையிலும் நான் இருந்து பார்த்துவிட்டுத்தான் இந்த இழிவு பெறும் வேலைக்கு மனப்பூர்த்தியாகவே வந்தேன். ஆதலால் நான் புகழ் பெறும் மார்க்கமோ, வீரப் பட்டம் பெறும் மார்க்கமோ அறியாதவனல்ல.

‘குடிஅரசு’, 29.3.1936

பெரியார் முழக்கம் 03092015 இதழ்

You may also like...

Leave a Reply