சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே!
ஏப்ரல் 30, 2018 அன்று பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. இந்த தன்மானம்-தன்னுரிமை மீட்பு மாநாட்டில் விவாதிப்பதற்கு ஆயிரக்கணக்கான செய்திகளை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள். 2014ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சி தொடங்கிய காலத்திலிருந்து மிக வேகமாக இந்த வேலையைச் செய்து கொண் டிருக்கிறார்கள். இதையெல்லாம் காங்கிரசு செய்ய வில்லையா என்றால் அது நமக்குத் தேவையில்லை. அவர்கள் இருட்டில் திருடிக்கொண்டு போனார்கள். இவர்கள் பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் கத்தியைக் காட்டி வெட்டுகிற கொலைகாரர்களைப் போல மிகத் துணிச்சலாக மனிதாபிமானமற்றவர் களாக, எதையும் மதிக்காதவர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் மறைவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால், 1955 டிசம்பரில்தான் மொழிவழி மாநிலங்கள் பற்றிய சிந்தனையைப்...