சர்வதேசமே கண்டிக்கும் சங்பரிவார் மதவெறி கோயிலுக்குள் சிறுமியின் கோரக் கொலை

ஜம்மு மாநிலத்தில் கோயிலுக்குள் அசீஃபா எனும் எட்டு வயது சிறுமி பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரிலுள்ள கதுவாவில் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள் எட்டு வயது சிறுமி (ஆசிஃபா). கிராமத்தின் மையத்தில் உள்ள ஒரு கோயிலில் ஒரு வாரம் அடைத்து வைத்து, தொடர்ந்து மயக்க மருந்து கொடுத்து வன்புணர்ச்சி செய்திருக்கிறார்கள். அதில் காவலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு காவல் துறையினரும் துணை நின்றிருக்கிறார்கள்.

காஷ்மீரத்தின் குளிர்காலத் தலைநகரான ஜம்முவிலிருந்து 88 கி.மீ. தொலைவில் உள்ள கதுவாவுக்கு  அருகே ரசனா கிராமத்தைச் சேர்ந்தவள் அந்தக் குழந்தை. அவளது வளர்ப்புத் தந்தை முகமது யூசுப் புஜ்வாலா, பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆடு, மாடு, குதிரை மேய்க்கும் நாடோடி சமூகம் இது. மதத்தால் இஸ்லாமியர். இந்தச் சமூகத்தினரை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில், ஜம்முவில் பெரும்பான்மையாக வசிப்பவர்களில் ஒரு தரப்பினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்கள். இதில் தீவிரமாக ஈடுபட்டுவந்த சஞ்சிராம்தான் பிரதான குற்றவாளி. அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலில் வைத்துதான் அச்சிறுமி வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட் டிருக்கிறாள்.

ஜனவரி 10 அன்று, தங்கள் குதிரைகளைத் தேடிக் கொண்டு அருகில் உள்ள காட்டுக்குச் சென்ற சிறுமியை, சஞ்சிராம் தலைமையிலான கும்பல் கடத்திச்சென்று கோயிலில் அடைத்து வைத்தது. மீரட்டிலிருக்கும் தன் நண்பனை அழைத்து இந்த வன்புணர்ச்சியில் பங்கேற்க வைத்திருக்கிறான் சஞ்சிராம். இறுதியில், அவளைக் கொல்ல முடிவெடுத்தவர்கள், உள்ளூர் காவல்துறை தீபக் கஜோரியாவிடம் யோசனை கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது தானும் அந்தச் சிறுமியைப் பலாத்காரம் செய்ய விரும்புவதாகச் சொன்ன தீபக், அந்தப் பாதகத்தைச் செய்தான் என்கிறது காவல் துறை.

பின்னர், நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்குக் கோரமான முறையில் அச்சிறுமி கொல்லப்பட்டாள். சிறுமியைக் காணவில்லை என்று அவளது குடும்பத்தினர் காவல்துறையை அணுகியபோது, “யாருடனாவது ஓடிப் போயிருப்பாள்” என்று அங்கிருந்த காவலர் ஒருவர் சொன்னாராம். சஞ்சிராம் கும்பல், உள்ளூர் காவல்துறைக்கு இலஞ்சம் கொடுத்துச் சரிகட்டி விட்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஒரு பக்கம், விஷமப் புன்னகையுடன் காவல்துறை தேடுதல் நாடகம் நடத்திக்கொண்டிருக்க, மறுபக்கம் பரிதவிப்புடன் அவளது குடும்பத்தினர் தேடியலைந்திருக்கிறார்கள். “உண்மையில், ஏதோ விலங்கு அடித்துக் கொன்றிருக்கும் என்றுதான் நினைத்தேன். இப்படிச் செய்வார்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை” என்று கதறுகிறார் புஜ்வாலா. இது தொடர்பாக, எட்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் நான்கு பேர் காவல்துறை அதிகாரிகள், ஒருவன் சிறுவன். முதன்மைக் குற்றவாளியான சஞ்சிராம் ஓய்வுபெற்ற அரசு ஊழியராம். மரணத்துக்குப் பின்னும் அந்தச் சிறுமிக்கு கொடுமை நேர்ந்திருக்கிறது. தங்களது நிலத்தில் அவளது சடலத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் சென்ற போது இந்துத்துவ அமைப்பினர் தகராறு செய்திருக்கிறார்கள். இதையடுத்து, ஏழு மைல்கள் நடந்து சென்று இன்னொரு கிராமத்தில் இறுதிச் சடங்கை நடத்தியிருக்கிறார்கள்.

சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பின் காவல் துறை குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்த பிறகுதான் இது தேசியச் செய்தியாகியிருக் கிறது. அதிர்ச்சியளிக்கும் இன்னொரு விஷயம், காஷ்மீரில் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பாஜக இந்தப் பிரச் சினையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுவதுதான். குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்துத்துவ அமைப்பினர் பேரணி நடத்தியிருக் கிறார்கள். பேரணியில் கலந்து கொண்டவர்கள் தேசியக் கொடி ஏந்திச் சென்றிருக் கிறார்கள்.

இந்த வழக்கில் காவல் துறை அதிகாரிகள் ஏப்ரல் 9 அன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யச் சென்றபோது நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றிருக்கின்றனர்.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக வெளிப் படையாக செயல்பட்ட ஜம்மு-காஷ்மீர் கூட்டணி ஆட்சியில் பா.ஜ.க. அமைச்சர்களாக இருந்த சவுத்திரிலால் சிங், சந்தர் பிரகாஷ் கங்கா இருவரும் அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளனர். குற்றவாளிக்கு ஆதரவாக நடந்த பேரணியில் இவர்கள் பங்கேற்றனர். ‘இந்து ஏக்தா மஞ்ச்’ என்ற சங்பரிவார் அமைப்பு இந்தப் பேரணியை நடத்தியது.

‘கட்சியின் கட்டளையை ஏற்றே பேரணியில் கலந்து கொண்டேன்’ என்று பதவி விலகல் கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவரிடம் அளித்த சந்தர் பிரகாஷ் கங்கா கூறினார். ‘ஆனாலும் பிரதமர் கட்சியின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்காகவே பதவி விலகுகிறேன்’ என்றும் கூறியுள்ளார்.

மறுபுறம், உ,பி.யின் உனாவ் பகுதியில் 17 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்படும் பாஜக எம்எல்ஏ-வை பாஜக அரசின் காவல் துறை கைது செய்யவே இல்லை. அவரைக் காப்பாற்ற உள்ளூர் பாஜக உறுப்பினர்கள் களம் இறங்கினார்கள். அந்தச் சிறுமியின் தந்தை சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந் திருக்கிறார். நீண்ட போராட்டங்களுக்குப் பின் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐதான் எம்.எல்.ஏ.வைக் கைது செய்தது. “இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களில் பெண் களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களில் அதிகமானோர் பா.ஜ.க-வினர்” என்கிற ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் இந்தச் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.

பெரியார் முழக்கம் 19042018 இதழ்

You may also like...