தலையங்கம்-‘புண்ணிய’ முழுக்குகளில் பலியாகும் அப்பாவி உயிர்கள்
மதத்தை மக்களிடம் நிலைநிறுத்துவதற்கு மதவாதிகள் உருவாக்கிய சடங்குகள், அதன் மீது திணிக்கப்பட்ட நம்பிக்கைகள் மக்களின் சிந்தனைகளை முடக்கிப் போட்டு விட்டன. இந்த நம்பிக்கைகள்தான் மக்களை விழாக்களில் இலட்சக்கணக்கில் கூடுவதற்கு தூண்டுகின்றன. பெரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறன் மிக்க நிர்வாகக் கட்டமைப்புகள் இல்லாதபோது அப்பாவி பக்தர்கள் உயிர்ப்பலியாகி விடுகிறார்கள். காதைக் கிழிக்கும் அளவுக்கு மதங்களையும் அதன் மீதான அரசியலையும் நீட்டி முழங்கிக் கொண்டிருப்பவர்கள், மத உணர்வில் வீழ்ந்துபட்ட பக்தர்கள் இப்படி உயிர்ப்பலியாகும் போது வாயை இறுக மூடிக் கொண்டுவிடுகிறார்கள். மதத் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி, அப்பாவி மக்கள் பலியாகும் அவலம் தொடர்கதையாகிவிட்டது.ஆந்திராவில் கோதாவரியாற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ‘கோதாவரி புஷ்கரம்’ விழாவில் முழுக்குப் போட வந்த மக்களில் 29 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த துயர செய்தி அண்மையில் வெளி வந்திருக்கிறது. இந்த ‘புண்ணிய முழுக்குப்போடும் விழாவுக்கு கட்டுக்கடங்காத வகையில் கூட்டத்தைக் கூட்டச் செய்ததில் சாமியார்களுக்கு ஜோதிடர்களுக்கு...