எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்! மீண்டும் தொடங்குகிறது, பரப்புரை இயக்கம்!
தர்மபுரி செயலவையில் ஜாதி எதிர்ப்பு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை வலியுறுத்தி பரப்புரை இயக்கத்தைத் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. தீர்மான விவரம்:
தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களின் எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. அவர்களின் வேலை வாய்ப்புகள், அரசுத் துறைகளில் வெகுவாகக் குறைந்து விட்டன. தாராளமயக் கொள்கையால் பெருகிவரும் பெரும் தொழில் நிறுவனங்களில் இவர்களின் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் சட்டங்கள் வர வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த கால அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, அதன் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் ஏற்றுக் கொண்டிருந்தாலும் செயல்படுத் தாமல் புறந்தள்ளிவிட்டது. பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுதான் நிலம் வழங்குகிறது.தண்ணீர், மின்சாரம் இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த விலையிலோ வழங்கப்படு கின்றன. பங்கு மூலதனங்கள் வழியாக மக்கள் பணம் மூலதனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு இந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்றுவதற்கு முழுமையான அதிகாரமும் நியாயமும் இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அந்நாட்டில் கருப்பர் உள்ளிட்ட மைனாரிட்டி மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்கு சட்டம் இயற்றப்பட்டு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமிழ்நாட்டில், ஜாதி சங்கங்களை நடத்தும் ஜாதித் தலைவர்கள், ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு,கலவரத்தை நடத்தவும், ஜாதி ஆணவக் கொலைகளை நடத்தி, தங்களுக்குக் கீழே ஜாதிக்காரர்களை அணிதிரட்டி, தங்களின்அரசியல் சுயநலன்களுக்குப் பயன்படுத்தவும் துடிக்கிறார்களே தவிர,இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளுக்கோ,எதிர்கால சமுதாய நலனுக்கோ குரல் கொடுப்பது இல்லை. இந்த நிலையில் சமுதாயத்தில் சமத்துவத்தை சீர்குலைத்து, மோதல்களை உருவாக்கிடும் ஜாதியத்துக்கு துணை போகாமல், அதிலிருந்து வெளியேறி,தங்களின் எதிர்கால வாழ்வுரிமைக்கும், ஜாதி எதிர்ப்புக்கும் போராட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று திராவிடர் விடுதலைக்கழகம் அறைகூவி அழைக்கிறது. இந்த நோக்கத்தை முன் வைத்து,
எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்;
எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்!
முழக்கத்தை முன் வைத்து, ஆகஸ்டு இரண்டாம் வாரத்தில் தமிழகம் முழுதும் பரப்புரை இயக்கங்களை நடத்துவது என்று இந்த செயலவை முடிவு செய்கிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டு, இந்தப் பரப்புரை இயக்கத்தை நடத்துவது என்றும் செயலவை தீர்மானிக்கிறது
பெரியார் முழக்கம் 23072015 இதழ்