‘பூப்பெய்தும்’ சடங்குக்கு மாற்றாக…
இந்து ‘கலாச்சாரம்’ திணித்த பெண்ணடிமை பண்பாடுகளில் ஒன்று வயதுவந்துவிட்ட பெண்களுக்காக நடத்தப்படும்‘பூப்பெய்தும்’ விழா என்பதாகும். ஒரு பெண் வயதுக்குரிய பருவத்தை எட்டுவது, இயல்பாக ஏற்படும் உடலியல் மாற்றம். இதை ஏன் ஊருக்கு அறிவிக்கும் விழாக்களாக நடத்த வேண்டும்? இதேபோல் ஆண் பிள்ளைகளுக்கு ஏன் நடத்து வது இல்லை? சென்னையில் பல பகுதிகளில் இதற்காக பெண்ணின் படத்தோடு விளம்பரப் பதாகைகள்கூட வைக்கப்படுகின்றன. புவனேசுவரி என்ற மென்பொருள் பொறியாளர், தனது மகள் பூப்பெய்தும் விழாவை சடங்குகளாக மாற்றாமல், அறிவியல் நிகழ்வாக மாற்றி நடத்தியிருக்கிறார். மகப்பேறு மருத்துவர், ஊட்டச் சத்து நிபுணர், உளவியல் மருத்துவர் களை அழைத்து, அறிவியல் விளக்கம் தரும் நிகழ்ச்சியாக அதை மாற்றியமைத்துள்ளார். “எனக்கு இது போன்று நிகழ்ந்தபோது என்னுள் பல கேள்விகள் எழுந்தன. உடல் மற்றும் உளரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து என் அய்யங்களுக்கு எவரும் விடை தரவில்லை.
இந்த நிலை என் மகளுக்கும் வந்துவிடக் கூடாது என்பதாகவே, இளம் பெண்களும், ஆண்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வுக்கு ஒரு ஓட்டலில் ஏற்பாடு செய்து,முன்னூறுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள், ஆண்களை அழைத்து, அறிவியல் விளக்கம் கிடைக்க ஏற்பாடு செய்தேன்” என்கிறார் பொறியாளர் புவனேசுவரி. பண்பாடு என்ற பெயரில் பார்ப்பனியம் திணித்த சடங்குகளிலிருந்து மக்களை மீட் டெடுக்க இதுபோன்ற மாற்றுச் சிந்தனைகளை முன் வைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இதற்கு முன்னோடியாக செயல்பட முன் வந்துள்ள பொறியாளர் புவனேசுவரியைப் பாராட்ட வேண்டும்.
பா.ஜ.க. ஆட்சி கோயில்களை இடிக்கிறது
இராஜஸ்தான் மாநிலத்தில் நடப்பது பா.ஜ.க. ஆட்சி தான். அங்கே ‘மெட்ரோ’ இரயில் திட்டம் வரப் போகிறது. இதற்காக ஜெய்ப்பூரில் சாலைகளை ஆக்கிரமித்திருந்த 80 கோயில்களை இடித்துத் தள்ளியிருக்கிறது பா.ஜ.க ஆட்சி. சென்னை நகரில் போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ள சட்ட விரோத கோயில்களை அகற்றுவதற்கு நீதிமன்ற ஆணை இருந்தும்கூட இங்கே, ‘இந்து அமைப்புகள்’ என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
மந்தைவெளி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஒரு கோயிலை அகற்று வதற்கு திராவிடர் விடுதலைக் கழகம் முயற்சி எடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்தபோது, அங்கே பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன், நேரே வந்து, இடிக்கவிடாமல் தடுத்தார். அவர்கள் ஆட்சி நடக்கும் இராஜஸ்தானிலோ நிலைமை வேறு. ஆனாலும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பா.ஜ.க. ஆட்சியின் கோயில் இடிப்பைக் கண்டித்து மறியல் நடத்தியுள்ளனர். இடித்தது இடித்தது தான். இடிக்கப்பட்ட கோயில்களை போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாத வேறு இடத்தில் கட்டிக்கொள்ளலாம் என மாநில அரசு கூறி விட்டதாம்!
தாழ்த்தப்பட்டோர் ஆணையம் குற்றம் சாட்டுகிறது
தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தாழ்த்தப்பட்டோருக்கான 18 சதவீத நிதியில் 2 சதவீதத்தைக்கூட பயன்படுத்தவில்லை என்பது தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத் தலைவர் பி.எல். புனியா கூறியுள்ளார். மீதமுள்ள நிதியை வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்படுவதை ஆணையம் அனுமதிக்காது என்றும் அவர் கண்டிப்பாகக் கூறியுள்ளார். அவர் கூறியிருக்கும் வேறு பல தகவல்கள் அதிர்ச்சிக்குரியவை. “தேசிய அளவில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை அதிகளவில் நடக்கும் 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. வன் கொடுமை தொடர்பான புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதியாமல், நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்பே பதிவு செய்யப்படுகிறது.வழக்கு பதிந்து விசாரணை நடத்தி ஆதாரம் இல்லாவிட்டால் வழக்கை முடிக்கலாம். ஆனால், தமிழகத்தில் 70 சதவீதம் வழக்குகள் ஆதாரம் இல்லை என முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 10 சதவீதம் வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்பான விஷயங்களை கண்காணிக்க மாநில அளவில் முதல்வர் தலைமையிலும், மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலும் கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன. ஆண்டுக்கு இருமுறை கூட வேண்டிய இந்த குழு, மாநில அளவில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜுன் 25-க்குப் பின் கூட வில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள் என போலி சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் சேர்ந்துள்ள 2000 பேரையும் பணியில் இருந்து உடனடியாக நீக்கி, குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளோம். வேறு ஜாதி பெண்களை காதலிக்கும் தலித் இளைஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது” -என்று, பி.எல். புனியா கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஜாதி ஆணவக்காரர்கள் கொலை வெறி ஒரு புறம்; தமிழக அரசின் அலட்சியம் மற்றொரு புறம். இந்த அவலங்கள் தொடரலாமா?
சத்தீஸ்கரின் கொடும் அடக்குமுறை சட்டம்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளை எதிர் கொள்வதற்கான கடுமையான சட்டம் என்ற பெயரில், மாநில அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம் ‘சத்தீஸ்கர் சிறப்பு பொதுப் பாதுகாப்புச் சட்டம் 2005’. சட்டப்படியான நிர்வாகத்துக்குத் தடை ஏற்படுத்தும் விதத்தில் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டாம் என்று யாரையாவது ஊக்குவிப்பதாக அரசு கருதும் எவரின் நடவடிக்கையும் இந்தச் சட்டத்தின்படி
‘சட்ட விரோதம்’. இந்தச் சட்டத்தின் கீழ் அரசு உங்களைக் கைதுசெய்ய நீங்கள் பெரிதாகக் குற்றம் ஏதும் செய்திருக்க வேண்டாம். அரசை விமர்சித்து ஒரு இடத்தில் கூட்டம் போடுவது, உரையாடல் நடத்துவது, சுவரொட்டி ஒட்டுவது எதுவானாலும் ‘சட்ட விரோதம்’ ஆகலாம்; அதன் அடிப்படையில் உங்களைக் கைதுசெய்து மூன்றாண்டுகள் வரை உள்ளே வைக்கலாம்.
சத்தீஸ்கரில் பத்திரிகையாளராக இருப்பது இன்றைக்கு அவ்வளவு எளிதானது அல்ல. அங்கிருந்து கொண்டே அரசை விமர்சிப்பது சாத்தியமே இல்லை என்கிறார்கள் பத்திரிகை யாளர்கள். “முதலில் அதிகாரிகள் தரப்பிலிருந்து வாய்மொழியாக மிரட்டல் வரும். அடுத்து, அரசு தரும் விளம்பரங்கள் நிறுத்தப்படும். அப்புறம், பத்திரிகை முகவர்கள், விற்பனையாளர்கள் மிரட்டப்படுவார்கள். இவ்வளவையும் தாண்டி னால், சட்டத்தை அரசு கையில் எடுக்கும். ஏனென்றால், ‘சட்டவிரோத நடவடிக்கைகள்’ தொடர்பாக ஊடகங்கள் எந்தச் செய்தியையும் வெளியிடக் கூடாது என்று தடை விதிக்கிறது இந்தச் சட்டம். எது ஒன்றையும் சட்ட விரோதம் ஆக்க அரசால் முடியும்” என்கிறார்கள். புகழ் பெற்ற மருத்துவரும் மனித உரிமை ஆர்வலருமான டாக்டர் விநாயக் சென் 2007-ல் கைதுசெய்யப்பட்டது இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான். அரசை விமர்சித்தார் என்பதாலேயே அவரைக் குறிவைத்தது அரசு. தடைசெய்யப்பட்ட இயக்கம் தொடர்பான புத்தகம் ஒன்றை வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டே அவரை ஆயுள் தண்டனையை நோக்கித் தள்ள சத்தீஸ்கர் அரசுக்குப் போதுமானதாக இருந்தது. நோம் சோம்ஸ்கி, நோபல் பரிசு பெற்றவர்கள் 22 பேர் என்று சர்வதேச அளவில் அறிவுஜீவிகள் பலர் சென்னுக்கு நீதி கேட்டுக் கை கோத்தும் ஒன்றும் அசைக்க முடியவில்லை. இப்போதும் உச்ச நீதிமன்றம் அளித்த பிணையிலேயே வெளியே
வந்திருக்கிறார் சென்.
பெரியார் முழக்கம் 16072015 இதழ்