காவல்துறைக்கு சவால் விடும் ஜாதிவெறியர்கள்

தமிழ்நாட்டில் ஜாதி ஆணவக் கொலைகள் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, ஜாதிவெறி சங்கங்கள் இதைத் தூண்டிவிட்டு, நியாயப்படுத்தியும் வருகின்றன. நடுவண் ஆட்சி, இந்த ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் ஒன்றை இயற்றிட – மாநில அரசுகளிடம் கருத்துகள் கேட்டுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இது குறித்து ஏதும் கருத்து கூறாது அலட்சியம் காட்டுகிறது.தமிழ்நாடு அரசே, ஒரு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை.
அண்மையில் கோகுல்ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரி, தலை துண்டிக்கப்பட்டு ஜாதி ஆணவக் கொலைக்கு பலியாகியுள்ளார். இந்தக் கொலையில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான யுவராஜ் என்பவர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், அவர் தலைமறைவாக இருந்துகொண்டு, தனது குற்றச் செயலை நியாயப்படுத்தி காவல்துறைக்கு சவால்விட்டு பேசியது, ‘வாட்ஸ் அப்’ வழியாக பரப்பப்பட்டு வருகிறது.ஜாதி ஆணவக் கொலைகளில் காவல்துறையின் இந்த அலட்சியத்துக்குக் காரணம், அதில் ஊடுருவி நிற்கும் ஜாதிய மனநிலைதான் என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறோம். எனவேதான் ஒரு மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியாக அந்த மாவட்டத்தில் ஆதிக்கஜாதியாக உள்ள பிரிவைச் சார்ந்தவர்களையே நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.தமிழகத்தில் சமூக ஒற்றுமைக்கும் – சமத்துவத்துக்கும் பெரும் சவாலாக உருவாகிவரும் – இந்த ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், தமிழகம் ஜாதி வெறிக் களமாக மாறிடும் ஆபத்தை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.
இந்தப் படுகொலைகள் குறித்து, தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் கண்டனங்களைத் தெரிவிக்காமல் ‘பாராமுகம்’ காட்டுவது கவலை அளிக்கிறது. இந்தக் கட்சிகள் தங்கள் மவுனத்தைக் கலைத்து, ஜாதி வெறிக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வற்புறுத்துகிறது.
– செயலவைத் தீர்மானம்

பெரியார் முழக்கம் 23072015 இதழ்

You may also like...

Leave a Reply