சுயமரியாதை இயக்கம்
தோழர் ஈ.வே. ராமசாமி அறிக்கை சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் சமுதாய சம்மந்தமான கொள்கைகளின் எதிரிகளால் கிளப்பிவிடப்பட்ட பலவிதமான கற்பனைச் சேதிகளாலும் விஷமப் பிரசாரங்களாலும் பொது மக்களுக்குள் சில தப்பு அபிப்பிராயங்கள் பரவி வருவதாகத் தெரிகின்றது. இதைப்பற்றி பல சமயங்களில் நாம் பொது ஜனங்களுக்கு விளக்கி இருந்தும் சில பகுதிகளில் அவ்வித தப்பு அபிப்பிராயங்கள் மாறியதாகத் தெரியவில்லை. ஆதலால் முன்பு விளக்கியவைகளையே மறுபடியும் விளக்க வேண்டியிருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான கருத்தெல்லாம் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும், ஏழை மக்களுக்கும் நன்மை செய்வதற்கு உழைப்பதேயாகும். அதாவது அவர்களை தற்போது இருக்கும் கஷ்டமான நிலையிலிருந்து விடுவித்து சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் சமத்துவமாக வாழச் செய்ய வேண்டும் என்பதே. இந்தக் கருத்து வெற்றி பெற வேண்டுமானால் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல் ஆகிய மூன்று துறைகளிலும் கவலை எடுத்து உழைத்து வந்தாலொழிய பயனேற்படாது. ஆதலால், சுயமரியாதை இயக்கமானது முக்கியமாய் இத்...