வரி  குறைப்பும்  சம்பளக்  கூடுதலும்

 

சென்ற  வாரம்  தஞ்சை  ஜில்லா  மிராசுதார்கள்  மகாநாடு  கூட்டி  நஞ்சை  பூமி  வரிகளை  100க்கு  50  பாகம்  வீதம்  குறைக்க  வேண்டுமென்று  தீர்மானம்  செய்திருக்கிறார்கள்.

மகாநாட்டில்  கலந்து  கொண்ட  தோழர்கள்  எல்லோரும்  அதாவது  யார்  யாருடைய  பெயர்கள்  மகாநாட்டு  நடவடிக்கையில்  காணப்பட்டனவோ  அவர்கள்  பெரிதும்  மிராசுதாரர்கள்,  லட்சாதிபதிகள்,  கோடீஸ்வரர்கள்  என்று  சொல்லத்தக்க  பிரபுக்களே  யாவார்கள்.

இன்னும்  சற்று  விபரமாய்ச்  சொல்ல  வேண்டுமானால்  நிலத்தை  உழுவதும்,  விதை  விதைப்பதும்,  மண்வெட்டி  கொண்டு  வரப்பு  வெட்டி  நீர்  பாய்ச்சுவதும்,  அறுப்பதுமான  காரியங்கள்  செய்வது  மகா  பாவமானது  தோஷமானது என்று  எந்த  எந்தக்  கூட்டத்தாருக்கு  மனுதர்மத்தில்  விதி  விதிக்கப்பட்டிருக்கிறதோ  அந்தக்  கூட்டத்தார்களும்  ஆளைத்  தூக்கி  ஆள்  மேல்  போட்டு  வீண் கலகங்களையும்,  வம்புகளையும்,  வழக்குகளையும் உண்டாக்கி  மக்களின்  சமாதானத்தையும்,  சாந்தியையும்  பாழாக்கி  நோகாமல்  வாழ்ந்து வக்கீல்,  வைத்தியம்,  உத்தியோகம்  முதலிய  பேர்களால்  மாதம்  10000,  20000  போல்  சம்பாதிக்கும்  கூட்டத்தார்களுமான  அய்யர்,  ஆச்சாரியார்,  பந்துலு,  சர்மா,  சாஸ்திரி,  ஸ்றெளத்திரி,  தீட்சதர்,  ஜடாவல்லபர்,  வாஜ்பேயர் முதலாகிய  வகுப்பைச்  சேர்ந்த  நபர்களும்,  மற்றும்  தினமும்  பார்ப்பன  வகுப்பு  முதல்  பலபட்டரை  வகுப்பு  அடங்க  தினம்  10,  12  பேர்களுக்கு  குறையாத  வேசிகளும்,  தாசிகளும்,  எக்ஷா  பிராண்டி  முதல்  ஷாம்பெயின்  வரை  உள்ள  பான  வகையில்  தினம்  ஒரு  குரோசுக்கு  குறையாமலும்,  அனுபவித்து,  “”ஆண்டவன்  சிவபெருமான்”  பூஜைக்  கணக்கில்  செலவெழுதி  வரும்  அவதார  புருஷர்களும்,  புண்ணிய  சீலர்களுமாகிய  மடாதிபதிகளும்  மற்றும்  வரவு  என்ன?  செலவு  என்ன?  பூமிகள்  எங்கே  இருக்கின்றது?  அது  எப்படி  வெள்ளாண்மை  ஆகின்றது?  நெல்லு  மரத்தில்  காய்க்கின்றதா?  செடியில்  காய்க்கின்றதா?  என்பவைகூட  அறியாதவர்களும்,  நித்தியமும்  பண்டிகை,  உற்சவம்,  பால்,  டிராமா,  சினிமா,  கார்,  வெகு  உல்லாசம்  ஆகியவைகளிலேயே  உழன்று  கொண்டு யார்  மனைவி  அழகானவள்,  எவர்  மகள்  லட்சணமுள்ளவள்  என்று  அண்ணாத்தைகள்  வைத்து  தேடித்  திரிந்து  கொண்டும்,  லட்சிமீ  புத்திரர்கள்  என்று  பார்ப்பனர் களால்  அழைக்கப்பட்டு  கொண்டும்  இருக்கும்படியான  பிரபுக்களுமே  அதில்  பெரிதும்  காணப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக்  கூட்டத்தாருக்குத்தான்  வரிப்  பளுவு  தாங்கவில்லையாம்,  வரிப்பணத்தில்  பகுதி  தள்ளி  விட  வேண்டுமாம்,  வரிகள்  கொடுக்க  கையில்  பணமில்லையாம்,  அந்தோ  என்ன  கஷ்ட  காலம்!!  எவ்வளவு  ஏழ்மை!!!  என்பதை  வாசகர்கள்  தான்  உணர  வேண்டும்.

இதற்கு  அனுகூலமாக  காங்கிரஸ்  என்னும்  பேரால்  சில  பார்ப்பனர் களும்,  மாதம்  1000,  5000  ரூ. வீதம்  சம்பாதிக்கும்  உத்தியோகப்  பார்ப்பனர்களும்  உள்ளே  புகுந்து  கொண்டு  இந்த  மிராசுதாரர்களுக்கு  வரி கொடுக்காதீர்கள் என்கின்ற (வரி மறுப்பு) உபதேசம் வேறு  செய்கின்றார்கள்  என்றால்,

தேசத்தின்  “”ஏழ்மை”  நிலைக்கும்,  “”நாணையமான  அரசியல்”  கிளர்ச்சிக்கும்  இதைவிட  வேறு  என்ன  உதாரணம்  வேண்டும்  என்பது  நமக்கு  விளங்கவில்லை.

பார்ப்பனர்கள்  குருமார்கள்  பிரபுக்கள்  ஆகிய  கூட்டத்தாரின்  நாடகம்  இப்படி  இருக்க,  மற்றொரு  புறத்தில்  மாதம்  500,  1000,  2000,  5000  ரூ.  வீதமும்  சம்பளம்  பெறும்  “”ஏழை”  உத்தியோகஸ்தர்கள்  கிளர்ச்சி  செய்து  தங்கள்  சம்பளங்களில்  100க்கு  10  ரூபாய்  வீதமும்,  100க்கு  5  ரூபாய்  வீதமும்  சம்பளம்  குறைத்ததுகூட  மிகவும்  அனியாயம்  என்று  பழையபடியே  கூப்பாடு  போட்டு  அதையும்  உயர்த்திக்  கொண்டார்கள்.  அரசாங்கத்தாரும்  கருணை  கூர்ந்து இப்போதிருக்கும் பண நெருக்கடியையும் கூட லக்ஷியம்  செய்யாமல்  முன்  குறைந்திருந்த  சம்பளங்களை  இப்போது  கூட்டிக்  கொடுப்பதாய்  வரமளித்து  விட்டார்கள்.

ஆகவே  மிராசுதாரர்களுக்கும்  வரி  குறைக்கப்பட  வேண்டும்  அதோடு  கூடவே  அதிகாரிகளுக்கும்  சம்பளங்கள்  உயர்த்தப்பட  வேண்டும்  என்பதே  முடிவு.  அப்படியானால்  இதை  சரிக்  கட்டுவதற்கு  மார்க்கம்  என்னவென்று  பார்ப்போமானால்  பாடுபட்டு  உழைக்கும்  ஏழைப்  பாட்டாளி  மக்கள்  தலையில்  கை  வைக்க  வேண்டும்  என்பதைத்  தவிர  வேறொன்றுமே  இல்லை.

அரசாங்க  மந்திரிகள்  செல்லுமிடங்களில்  மக்கள்  தங்கள்  குறைகளைச்  சொல்லி  அழுது  அவற்றிற்கு  ஏதாவது  பரிகாரம்  செய்ய  வேண்டும்  என்று  கெஞ்சினால்  அதற்கு  பதில்  “”அரசாங்கத்தில்  பணமில்லை.  ஆதலால்  ஒன்றும்  செய்ய  முடியவில்லை”  என்று  சொல்லி  விடுகிறார்கள்.

அரசாங்க  “”பணமுடை  காரணத்தால்”  பள்ளிக்கூடங்கள்  குறைக்கப் பட்டுவிட்டன.  சுகாதார  காரியங்கள்  குறைக்கப்பட்டு  விட்டன.  ரோட்டு,  பாலம்  முதலிய  போக்குவரவு  வசதிகளும்  குறைக்கப்பட்டுவிட்டன.  கைத்  தொழில்  இலாக்கா  அடியோடு  மூடப்பட்டு  விட்டன.  தாழ்த்தப்பட்ட,  பின்பட்ட  வகுப்பு  மக்களின்  விஷயங்கள்  கைவிடப்பட்டுவிட்டன.  100  ரூ. கடன்  வாங்கினவரிடமிருந்து  வசூல்  செய்ய  வேண்டுமானால்  50 ரூ. செலவு  செய்தும்,  “”ஆசாமி  கண்ணுக்கு  கிடைக்கவில்லை”  என்கின்ற  சேதிதான்  கேழ்விப்பட  முடிகின்றது  என்பதுடன்  சொத்தின்  மீது  நடவடிக்கை  நடத்த  வேண்டுமானால்  அதற்கு  வேறு  25  ரூ. செலவு  செய்ய  வேண்டியிருக்கிறது.

காரணம்  என்னவென்றால்  பஞ்ச  காலமும்,  பொருளாதார  நெருக்கடியும்  என்று  சட்ட  இலாக்காவும்,  நீதி  இலாக்காவும்  பதில்  சொல்லுகின்றன.

ஆகவே இந்த நிலையில் ஏழைகளுடைய வாழ்க்கையும், அவர் களுடைய  முற்போக்கும்  என்ன  ஆவது  என்பதை  கவனித்தோமானால்  இந்த  மிராசுதாரர்களது  மகாநாடும்,  உத்தியோகஸ்தர்களுடைய  மகாநாடும்  அரசாங்கத்தின்  போக்கும்  மக்களைப்  பரிகசிப்பது  போன்றும்,  ஆத்திரத்தை  மூட்டக்கூடியதாகவும்  இல்லையா  என்று  கேள்க்கின்றோம்.

நிற்க  மற்றொரு  கொடுமை  என்னவென்றால்  அன்னிய  நாட்டு  உணவுப்  பொருள்கள்  இந்தியாவுக்கு  வந்து  அவைகள்  குறைந்த  விலைக்கு  விற்கப் படுவதால்  மிராசுதாரர்களுடைய  விளை  பொருள்களுக்கு  விலை  இல்லாமல்  போகின்றதாம்.  அதற்காக  அப்பொருள்கள்  மீது  அதிக  வரிகள்  போட்டு  வெளிநாட்டு  உணவுப்  பொருள்கள்  இந்நாட்டுக்கு  வராமல்  தடுக்க  வேண்டுமாம்.  இதன்  அருத்தம்  என்ன  என்று  கேட்கின்றோம்.

சாதாரணமாக  சென்னை  மாகாணத்தைப்  பொருத்தவரை  எடுத்துக்  கொண்டு  பார்த்தாலும்  மாகாண  மொத்த  வரி  வருமானம்  200000000  இருபது  கோடி  ரூபாயானால்  இதில்  சுமார்  5லீ  கோடி  ரூபாய்கள்  தான்  இந்த  மிராசுதாரப்  பிரபுக்கள்  “”பஞ்சத்தையும்”  “”பணக்கஷ்டத்தையும்”  பொருத்துக்  கொண்டு  கொடுக்கும்  நிலவரியாகும்.  இதிலும்  மொத்த  பூமி  வரி  செலுத்தும்  நபர்கள்  4500000  பேர்கள்.  ஆனால்  இதில்  3500000  பேர்கள்  10  ரூபாய்க்கு  கீழ்பட்ட  வரி  செலுத்துகிறவர்கள்.  இவர்கள்  செலுத்தும்  வரி  ஒரு  கோடி  சில்லரை  ரூபாயாகும்.  பாக்கி  ஒரு  லட்சம்  மிராசுதார்கள்  4லீ  கோடி  ரூபாய்தான்  செலுத்துகிறார்கள்.  பாக்கி  145000000  பதினாலரை  கோடி  ரூபாய்களும்  கள்ளு,  சாராயம்  குடிக்கும்  ஏழை  கூலி  ஆளுகளும்,  கஞ்சா,  அபினி  அடிக்கும்  பிச்சைக்காரர்களும்,  வெளிநாட்டில்  இருந்து  வரும்  ஆடை,  உணவு,  அனுபவப்  பொருள்கள்  ஆகியவைகள்  வாங்குவதன்  மூலம்  அவற்றின்  மீது  விதிக்கப்பட்டிருக்கும்  (டூட்டி  என்று  சொல்லப்படும்)  சுங்கங்களும்  முதலாகிய  வகைகளின்  மீது  வசூலிக்கப் படும் வரிகளேயாகும்.

ஆகவே  வெளிநாட்டு  சாமான்களின்  மீது  விதிக்கப்படும்  வரிகளில்  100க்கு  80  பாகம்  வரிகள்  ஏழைக்கூலி  மக்கள்  தொழிலாளிகள்  ஆகியவர் களிடமிருந்தே  வசூலிக்கப்படுகின்றன.

உதாரணமாக  கிருசநாயில்  எண்ணை,  நெருப்புகுச்சி,  உப்பு,  துணி முதலாகிய  வஸ்துக்களை  வாங்குகிறவர்களில்  ஏழை  மக்களே  மொத்தத்தில்  100க்கு  80  பேர்களுக்கு  மேலாக  இருப்பதால்  அந்த  வரி  யார்  மீது  விதிக்கப் பட்டதாகும்  என்பதையும்,  கள்ளும்,  சாறாயமும்  100க்கு  98  பேர்கள்  கூலிகளும்,  தொழிலாளிகளுமே  உபயோகிப்பதால்  கலால்  வரி  வருமானம்  யார்  மீது  விதிக்கப்பட்ட  வரி  ஆகும்  என்பதையும்  யோசித்துப்  பார்த்தால்  அரசாங்க  வரி  வருமானம்  பெரிதும்  ஏழைகளால்  வசூலிக்கப்பட்டு  அவற்றை  செல்வவான்களையும்  அவர்களுடைய  செல்வங்களையும்  ஆதிக்கங்களையும்  காப்பாற்ற  பயன்படுத்தப்பட்டு  வருகின்றது  என்பதும்  படித்த  வாயாடிக்  கூட்டங்களுக்கு  ஆயிரம்,  பதினாயிரமாக  சம்பளமாகவும்,  வரும்படியாகவும்  வருவாய்  ஏற்பாடு  செய்யப்பட்டிருக்கிறது  என்பதும்  விளங்கும்.

இந்த  நிலையில்  போதாக்குறைக்கு  வெளிநாட்டில்  இருந்து  வரும்  அரிசிக்கும்,  நெல்லுக்கும்  வரிபோட்டு  அவற்றின்  விலைகளை  உயர்த்தி  அதை  மக்களை  வாங்கச்  செய்வதின்  மூலம்  மிராசுதாரர்கள்  தங்களுக்கு  லாபம்  உண்டாக  வழி  தேடுவது  என்பது  எவ்வளவு  அநியாயமானதும்,  கொடுமையானதும்  என்பதை  யோசித்துப்  பார்க்கும்படி  வேண்டுகிறோம்.

விவசாயிக்கு  விலையில்லையானால் வெளிநாட்டு  உணவுப்  பொருள்கள்  மீது  வரிப்  போடுவதும்  மில்  முதலாளிகளுக்கு லாபம்  இல்லையானால்  வெளிநாட்டு  சாமான்கள்  மீது  வரிப்  போடுவதும்  தான்  செல்வவான்கள் பணம் சேர்க்கும் முறையாக  இருக்கின்றது  என்று  ஏற்படுமானால்  இவர்கள்  மக்களைக்  கசக்கிப்  பிழிந்து  அதிலேயே  வாழும்  கொடுந்தன்மை  அல்லவா  என்று  கேள்க்கின்றோம்.

கட்டாத வியாபாரங்களையும்,  கட்டாத  விவசாயங்களையும்  செய்யும்படி  இந்த  முதலாளிகளையும்,  மிட்டா  மிராசுதாரர்களையும்  யார்  கெஞ்சுகிறார்கள்?  கட்டாவிட்டால்  மரியாதையுடன்  விட்டுவிட்டுப்  போய்விட்டால்  சர்க்காரார்  அந்த  இரண்டு  காரியங்களையும்  தானாக  சொந்தத்தில்  பார்க்க  முன்வருவார்கள்.  அப்போது  ஏராளமான  ஆட்களுக்குத்  தாராளமாய்  வேலை  கொடுப்பார்கள்.  ஒரு  தொழிலும்  கட்டாமல்  போவதற்கு  இடமேற்படாது.  இதுதான்  யோக்கியதை  ஆட்சியாகவும்  இருக்க  முடியும். அப்படிக்கில்லாமல்  விவசாயக்காரருக்கும்,  வியாபாரிக்கும்  லாபம்  வருவதற்கு  என்ன  வேண்டுமானாலும்  செய்யும்படியும்,  யார்  கழுத்தை  வேண்டு மானாலும்  அறுக்கும்படியும்  அரசாங்கத்தை  தூண்டுவதும்,  கெஞ்சுவதும்  யோக்கியமான  சுயராஜ்யம்  கேட்பதாகுமா  என்று  கேட்கின்றோம்.

நாட்டில்  வேலையில்லாத்  திண்டாட்டத்தால்  பல  ஆயிரக்கணக்கான  குடும்பம்  சீறழிந்து  கொண்டும், மானமழிந்து  கொண்டும்  மற்றும்  பல  ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒருவன் சம்பாதிக்க, 9 பேர்  சோம்பேரியாய்  உட்கார்ந்து  கொண்டு  சாப்பிட்டுக்  கொண்டும்  இருக்கும்  சமயத்தில்  ஆகாரப் பொருள்கள்  மீது  வரி  போடும்படி  அரசாங்கத்தை  இந்த  மிராசுதார்  பிரபுக்கள்  கேட்ப்பது  என்பது  எவ்வளவு  மனந்  துணிந்த  செய்கை  என்பது  யோசிக்கத் தக்கதாகும்.

ஜப்பானில்  இருந்து  வரும்  துணி  மூன்று  முள  அகலமுள்ளது  கஜம்  ஒன்றுக்கு  இரண்டு  அணாவுக்குப்  புதுச்சேரியில்  கிடைக்கின்றது.  ஆனால்  அதே  துணி  இந்தியாவில்  கஜம்  நாலணா,  நாலரையணாவுக்கு  வாங்க  வேண்டி  இருக்கிறது.  நெசவு  மில்  முதலாளிகளின்  நன்மைக்காக  இந்த  வரி  போட  வேண்டியது  நமது  சுயராஜ்யம்  வாங்கிக்  கொடுக்கும்  அரசியல்வாதிகளின்  கடமையாய்  இருக்கிறது.  ஆகவே  சர்க்கார்  வரி  குறைத்தாலும்  குறைக்கா விட்டாலும்  மற்ற  அதிகாரிகளுக்குச்  சம்பளம்  இன்னமும்  உயர்த்தினாலும்  தாழ்த்தினாலும்  ஏழைகளின்  உணவுப்  பொருளுக்கும்  உடைப்  பொருளுக்கும்  அவை  எங்கிருந்து  வந்தாலும்  வரி  போடாமலும்  கல்வியையும்,  சுகாதாரத்தையும்  தாழ்த்தப்பட்ட  மக்கள்  நலனையும்  சிக்கனம்  என்னும்  பேரால்  குறைக்காமல்  இருக்கும்படியும்  தெரிவித்துக்  கொள்கிறோம்.

குடி அரசு  தலையங்கம்  13.01.1935

You may also like...