தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது

ஆரியர்கள் இந் நாட்டுக்கு வந்து குடியேறுவதற்கு முன் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றியும், அவர்களது மதம், தெய்வ வழிபாடு என்பவைகளின் மாதிரியைப் பற்றியும், பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றபடி பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம்  பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்தவ மதத்தையுமே ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம்.

இஸ்லாம் மார்க்கத்தில் இருந்து வருவதாகக் காணப்படும் கோஷா முறை என்னும்படியான பெண்களுக்கு மூடி இடும் கொடுமை இல்லாமல் அவர்கள் தாராளமாய் ஆண்களைப் போல் வெளியில் ஊசலாடவும், உலக விவகாரத்தில் ஆண்களைப்போல் கலந்து கொள்ளவுமான முறை இருந்திருக்குமானால் இன்றைய “”வைதீகத்” தமிழ் மக்கள் வேண்டும் சீர்திருத்தங்கள் உள்பட சகல அபிலாசைகளுக்கும் இஸ்லாம் மார்க்கத்தில் இடம் இருக்கின்றன என்று சொல்லலாம்.

சுயமரியாதைக்காரர்கள் கோரும் மாற்றமும் திருத்தமும் அதில் பெரிதும் இல்லையானாலும் இன்று ஆரியர்களை வெறுக்கும் தமிழ் மக்களுக்கு தாராளமாய் இடமிருக்கின்றது.

இந்துக்கள் என்கின்றவர்கள் இஸ்லாமியர்களைத் தாழ்ந்த சாதியாகக் கருதி, மிலேச்சர் என்று பெயரிட்டு அவர்களுடன் எந்த காரணத்தை முன்னிட்டும் நெருங்குவதற்கு இல்லாமல் செய்து விட்டதாலும், இஸ்லாமியர்களும் தற்காப்புக்காகவும், தங்கள் சுயமரியாதைக்காகவும், தங்கள் சமூக லட்சியத்தையே பிரதானமாய்க் கருத வேண்டியவர்களாய் இருந்து விட்டதாலும் இருவர் பழக்க வழக்கமும் நாகரீகமும் கலப்பதற்கு இடம் இல்லாமல் தனித்தனியே பிரிந்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதோடு ஒருவரிடம் ஒருவருக்கு அவநம்பிக்கையும், பொறாமையும், துவேஷமும் உண்டாகவும் இடமேற்பட்டுவிட்டது.

ஆனால், பழக்க வழக்கங்களில் ஆரியர்களுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும் வித்தியாசங்களிலும், வேற்றுமைகளிலும், பிரிவினைகளிலும், 100ல் ஒரு பாகம்கூட இஸ்லாமியர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இல்லை என்றே சொல்லி விடலாம்.

பழந்தமிழர் கொள்கை என்பவைகளுக்கு முகமது நபிகளின் கொள்கைகள் என்பவை எவ்வெவ் விஷயத்தில் மாற்றமாயிருக்கின்றன என்று கேட்கப்படுமானால் தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பழந் திராவிடர்கள் வரை உள்ள தமிழ் மக்கள் என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.

முகமதுநபி கொள்கையும், திராவிடர் கொள்கையும், கடவுள் என்னும் விஷயத்தில் ஒரு மாதிரியான கருத்துத்தான் கொண்டு இருக்கிறது என்றாலும் கண்டிப்பாய் பேசப் போனால் முகமது நபி கடவுளைவிட பழந் திராவிடர்கள் கடவுள் ஒரு படி சீர்திருத்தம் கொண்ட கடவுள் என்று கூடச் சொல்லலாம். முகமது நபி மக்கள் யாவரையும் எல்லாத் துறையிலும் சமம் என்றும் சகோதரர்கள் என்றும் எப்படி கருதுகிறாரோ அப்படியே தான் பழந்தமிழ் மக்களும் கருதியிருப்பதாய் பண்டிதர்கள் சொல்லுகின்றார்.

மண விஷயத்தில் ஆரிய மதக் கொடுமையில் 100ல் ஒரு பங்குகூட இஸ்லாம் மதத்தில் இருப்பதாய்ச் சொல்ல முடியாது. ஏனெனில் மணமக்கள் இஷ்டப்பட்ட பெண்ணையும் இஷ்டப்பட்ட மாப்பிள்ளையுமேதான் இருபாலும் மணக்க முடியும் என்று முஸ்லீம்கள் சொல்லுகிறார்கள். ஆனால் கோஷா முறை இருக்கையில் இஷ்டப்படுவதற்கும், இஷ்டப்படாமல் இருப்பதற்கும் எதை ஆதாரமாய்க் கொள்ளுவது என்பது நமக்கு விளங்கவில்லை என்றாலும் கோஷா முறை ஒழியுமானால் அக் கொள்கைகள் அனுபவத்தில் வருவதற்கு தாராளமாக இடமுண்டு.

முஸ்லீம்கள் ஆட்சி உள்ள மற்ற தேசங்களில் பெரும்பாலும் தம்பதிகள் இஷ்டப்படியே தான் திருமணங்கள் நடந்து வருகின்றன. இவ்விஷயங்களில் கிறிஸ்தவ மதக் கொள்கை ஒரு அளவுக்கு ஒத்து வருகின்றது என்றாலும், ஆரிய உணர்ச்சியும், சம்பிரதாயங்களும் மதக் கொள்கைகள் விஷயங்களிலும் வழிபாட்டு விஷயங்களிலும் பெரிதும் கலந்திருக்கின்றன. கிறிஸ்தவ மதக் கொள்கையானது ஆரிய மதத்திலிருந்து ஒரு சிறிது சீர்திருத்தப்பட்டவை ஆனதினால் அதில் ஆரிய சம்பிரதாயமும் வழிபாடு முறைகளும் கலந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

முகமது நபி கொள்கையானது கிறிஸ்தவ மதத்திலிருந்து சீர்திருத்தம் செய்யப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் மறைந்து போக இடமேற் பட்டிருப்பதுடன் கூடிய வரை தாராள நோக்கம் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

1500 வருடங்களுக்கு முன் உலக நிலையையும், மக்களின் பிராயத்தையும் அறிந்த ஒருவனுக்கு முகமது நபியின் கொள்கை அப்போதைய நிலைக்கு எவ்வளவு புரட்சிகரமானது என்பதும் எவ்வளவு துணிவுடனும், வீரத்துடனும் செய்யப்பட்டது என்பதும் விளங்கும்.

முகமது நபியின் கொள்கைகளைக் கொண்ட இஸ்லாம் மார்க்கமானது 15 நூற்றாண்டையே ஆயுளாகக் கொண்டிருந்தாலும் அது தாராள நோக்கத்தோடு இருந்திருக்குமானால் இன்று உலகம் பூராவையும் அதாவது 200 கோடி மக்களையும் அது தன்னுள் அடக்கிக் கொண்டு இருக்க வேண்டியதாகும்.

ஆனால் இயற்கைக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாத ஒரு அபிப்பிராயத்தைப் புகுத்தி அதைக் கட்டுப்படுத்திவிட்டதால் போதிய வளர்ச்சியில்லாமல் போய்விட்டது.

அதாவது “”1500 வருஷத்திற்கு முன் சொன்னது எதுவோ அதுதான் இன்னமும், லக்ஷத்து ஐம்பதினாயிரம் வருஷம் பொறுத்தும் இருக்க வேண்டியதாகுமே ஒழிய அதில் ஒரு சிறு மாறுதல் கூட செய்ய முடியாது என்பதோடு செய்ய இடம் கொடுக்கப்பட மாட்டாது” என்றும் சொல்லி வருகின்ற முரட்டுப் பிடிவாதமே மக்களை அதன் பெருமையை உணர முடியாமல் செய்து விட்டது.

கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி ஒத்துப் போவதற்கு இஸ்லாம் மார்க்கத்தில் இடமில்லை என்றால் அப்படிச் சொல்கின்றவர்கள் எவ்வளவு பக்திவான்களானாலும் முகமது நபிக்கு நீதி செய்தவர்களோ அவருக்கு பெருமையளித்தவர்களோ ஆக மாட்டார்கள் என்றே சொல்லுவோம்.

சர்வ வல்லமை சர்வ வியாபகம் உள்ள கடவுள் என்பவரை நம்பும் ஒரு வெறி பிடித்த ஆஸ்திகர்கூட “”கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்தார். மனிதன் அதை உபயோகித்து நல்வழியில் நடக்க வேண்டியது மனிதனுடைய கடமை” என்று எப்படிச் சொல்லுகிறானோ  இப்படிச் சொல்வதால் அவன் எப்படி கடவுள் சக்திக்கு குறை கூறினவன் ஆவதில்லையோ அதுபோல் எவ்வளவு வெறிபிடித்த இஸ்லாமியனானாலும் “”முகம்மது நபி அவர்கள் மக்களுக்கு ஒளியைக் கொடுத்தார். பழய கட்டுப்பாடுகளை, கொடுமைகளை உடைத்து சுதந்திரமாக்கினார். அதிலிருந்து மனிதன் எதற்கும் அடிமையாகாமல் காலத்துக்கு ஏற்றப்படி சுதந்திரமாய் நடந்து கொள்ள வேண்டும்” என்று சொன்னால் அவன் முகமது நபிக்கோ அல்லது இஸ்லாம் மார்க்கத்துக்கோ நம்பிக்கையற்றவன் ஆகிவிடுவானா என்று கேட்கின்றோம்.

இன்று கிருஸ்தவ மதத்துக்கு உள்ள செல்வாக்கெல்லாம் கிருஸ்து எப்படி சொல்லி இருந்தாலும் பைபிளில் எப்படி இருந்தாலும் கால தேசவர்த்தமானங்களுக்கும் சமய சந்தர்ப்பங்களுக்கும் தக்கபடி துணிவோடு நடந்து கொண்டு தங்களை கிருஸ்தவர்கள் என்றும் பைபிளைக் கொள்கை யாகக் கொண்டவர்கள் சொல்லிக் கொள்ளுவதினாலேயேயாகும்.

மற்றும் கிருஸ்தவர்களில் பெரும்பான்மை மக்கள் தங்கள் வாழ்க்கையில், நடவடிக்கைகளில், மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் தன்மைகளில், தங்களது வேஷங்களில் எதற்கும் கிருஸ்துவையாவது பைபிளையாவது கொண்டு வந்து போட்டுக் கொண்டு கஷ்டப்படுவதே கிடையாது.

மேற்கண்ட இந்த நடவடிக்கைகளுக்கும், கிருஸ்துவுக்கும், பைபிளுக்கும் சம்மந்தமில்லை என்று கருதுவதோடு தங்களின் பகுத்தறிவையும், சமய சந்தர்ப்பங்களையுமே பிரதானமாய்க் கருதி அதன்படி நடந்து வாழ்ந்து வருகிறார்கள்.

ஆரியர்களும் அதுபோலவே தங்கள் வேதங்களோ, சாஸ்திரங்களோ மற்ற மதக் கொள்கைகளோ எப்படி இருந்தாலும் ஒரு அளவு வேஷத்தில் காட்டிக் கொள்வதைத் தவிர மற்ற எந்தக் காரியங்களுக்கும் அவற்றை சிறிதுகூட லட்சியம் செய்யாமல் காரியத்திலே கண்ணாய் இருப்பதால் அவர்கள் சிறிதுகூட அஸ்திவாரமும் பகுத்தறிவுக்கு பொருத்தமும் இல்லாத கொள்கைகளின் பேரால் இவ்வளவு ஆதிக்கம் பெற்று வருகிறார்கள்.

இந்தக் குணம் முஸ்லீம் சமூகத்தில் இருந்துவிடுமானால் இன்று உலகில் முஸ்லீம் சமூகத்தைவிட வேறு சமூகம் இருப்பதற்கு இடமில்லாமல் போவதோடு 200 கோடி மக்களையும் இஸ்லாம் மார்க்கமே அரசியல், சமூகவியல், பொருளாதார இயல் ஆகிய எல்லாவற்றிலும் ஆதிக்கம் பெற்று இருக்கும் என்றும் சொல்லலாம்.

உலக முழுவதிலும் உள்ள மக்கள் சமூகம் எல்லாம் ஒரே கூட்டத்துக்குள் வரவேண்டும் என்பதில் ஆரியர்கள் மதம் என்பது ஒன்றைத் தவிர உலகில் உள்ள வேறு எந்த மதக்காரருக்கும் ஆ÷க்ஷபணை இருக்கும் என்று நாம் கருதவில்லை.

ஒவ்வொரு மதக்காரர்களும், உலக மக்கள் எல்லோரையும் தங்கள் மதக்காரர்களாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்பதிலும் எல்லோரையும் சமமாய்ப் பாவிக்க வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பதிலும் சிறிதும் ஆ÷க்ஷபணை இருக்காது என்றே கருதுகின்றோம்.

இன்று எந்த மதக்காரனும் அவனவன் இஷ்டப்பட்டதைச் சாப்பிடு கிறான். அவனவன் இஷ்டப்பட்டவர்களைப் புணருகிறான். என்றாலும் ஒரு மதக்காரன்கூட மனிதனை மனிதன் அடித்துத் தின்பது என்பதை செய்வ தில்லை. ஒரு மதக்காரனும் தங்களைப் பெற்றத் தாயாரையும், தன்னுடன் பிறந்த சகோதரியையும், தான் பெற்ற பெண்ணையும் பெண்டாய்க்  கொள்ள வேண்டும் என்றும் சொல்லுவதில்லை. சாதாரணமாய் செய்வதும் இல்லை என்றும் சொல்லி விடலாம். மற்றப்படி உலக நடப்புக்கும், தோற்றத்துக்கும், தங்களுக்குத் தெரியாத அல்லது தாங்கள் அறியமுடியாத ஏதோ ஒரு சக்தியோ அல்லது சக்தி பொருந்திய இயற்கைத் தன்மையோ இருக்கின்றது என்பதை எல்லா மதக்காரர்களும் ஒப்புக் கொள்ளுகிறார்கள்.

ஆகவே உலகில் மக்கள் சமூகத்தில் ஆஸ்திகர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களுக்குள்ளாகவே மதம் காரணமாய் 1008 பிரிவினைகள் ஏன் இருக்க வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை. அதுவும், பிரிவினைக்கு முக்கிய காரணங்களாக அவ்வவ் மதக்காரர்களின் தெய்வங்களும், வழிபாடு முறைகளும், அத் தெய்வங்களின் கட்டளைகளும், அத் தெய்வ தூதர்களும், அத் தூதர்களின் உபதேசங்களும் ஆகியவைகளின் பேராலேயே ஆதாரங்கள் இருக்குமானால் ஆஸ்தீக மதங்களுக்கும், ஆஸ்திக மக்களுக்கும் இதைவிட வேறு என்ன கேவலமும் அவமானமும் முட்டாள்தனமும் வேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை என்பதோடு இம் மதங்கள் உண்மையானவைகள் அல்ல என்பதற்கும், பெரிதும் கற்பனைகள் என்பதற்கும் வேறு ஆதாரங்கள் வேண்டுமா என்றும் கேட்கின்றோம்.

மதமும் வழிபாடும் மனித சமூக சாந்திக்கும் சுதந்திரத்துக்கும் முட்டுக்கட்டையாய் இருப்பதாகக் கருதும் ஒருவன்கூட அம்மதமும் வழிபாடும் ஒழிந்து தொலைய வேண்டும் என்று கருதுவதற்கு உரிமை  அற்றவன் என்று சொல்லப்படுமானாலும் உலகம் பூராவுக்கும், ஒரே மதமும் ஒரே வழிப்படு பொருளும் இருக்க வேண்டும் என்று கருதுவதற்காவது உரிமை யில்லையா என்று கேட்பதோடு

மதக்காரர்கள் இந்த அளவுக்காவது இணங்கி வர வேண்டியது அவர்களுடைய மத நம்பிக்கைக்கும் வழிபடு பொருள் நம்பிக்கைக்கும் அத்தாட்சியல்லவா என்று கேட்கின்றோம்.

வெந்ததைச் சாப்பிட்டுவிட்டு வாயில் வந்ததைப் பேசிக் கொண்டு வாழ்நாள் கழிப்பதே மதக்காரர்கள்  ஆஸ்திகர்கள் ஆகியவர்களின் கடமையாய் இருந்தால் இதற்கு மதமும், ஆஸ்திகமும் அவசியமா என்று கேட்கின்றோம்.

ஆகவே இயற்கை மதம் என்றும், பகுத்தறிவு மதம் என்றும் சொல்லிக் கொள்ளும் சமீபகால சீர்திருத்த மதக்காரர்களாகிய முஸ்லீம்கள் உலக மக்கள் பூராவையும் ஒரு மதக் குடையின் கீழ் கொண்டு வருவதற்குத் தக்க வண்ணம் இணங்கி கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்றப்படி நடந்து கொள்ள உரிமையுள்ளபடி முகமது நபியின் உபதேசத்துக்கு வியாக்கியானம் தந்து சீர்திருத்தம் செய்யப் புறப்பட்டார்களானால் ஒரு அளவுக்காவது வெற்றி பெறக் கூடும் என்றும், பழந்தமிழ் மக்களும் தங்கள் மதம் வேறு, முஸ்லீம் மதம் வேறு என்று சொல்லிக் கொள்வதற்கு இடமில்லாத நிலைமையில் கலந்து கொள்ளக்கூடும் என்றும், இதன் பயனாகவாவது தங்கள் மீது சுமத்தி தங்களை இழிவுபடுத்திக் கொடுமைக்குள்ளாக்கி இருக்கும் ஆரிய மத விலங்கிலிருந்து விடுபடக்கூடும் என்றும் கருதுகிறோம்.

குடி அரசு  தலையங்கம்  24.02.1935

You may also like...