அன்னிய அரிசிக்கு வரி விதிப்பது அனியாயம்

 

அன்னிய அரிசிக்கு வரி போடுவதனால், அரிசி விலை உயர்ந்து விடும் என்றும், அதனால் ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் கஷ்டம் ஏற்படும் என்றும், நாம் சென்ற வாரம் விரிவாக எழுதியிருந்தோம். அன்னிய அரிசிக்கு வரி விதிக்கப் போகிறார்கள் என்ற விஷயம் தெரிந்தவுடனேயே அரிசியின் விலை மூட்டைக்கு 2 ரூபாய் ஏறி விட்டது. தொழிலாளிகளுக்கும் ஏழைகளுக்கும் இப்பொழுதே கஷ்ட காலம் ஆரம்பித்துவிட்டது.

21.2.35ல் சென்னையில், இந்திய அலுமினியம் சங்கத் தொழிலாளர்கள் ஆதரவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னிய அரிசிக்கு வரி விதிக்கக் கூடாதென்றும் அன்னிய அரிசிக்கு வரி விதிக்கும்படி இந்திய சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் பணக்காரர்களின் நன்மையை மாத்திரம் கருதி அரிசிக்கு வரி விதித்து இறக்குமதியைத் தடுக்க வேண்டும் என்று நிறைவேற்றிய தீர்மானத்தைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள்.

20.2.35ல் கூடிய சென்னை மாகாணத் தொழிற் கட்சியின் கமிட்டிக் கூட்டத்திலும் அன்னிய அரிசிக்கு வரி விதிப்பதைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

மற்ற இடங்களில் உள்ள தொழிலாளர்களும், சுயமரியாதைக்காரர் களும், ஏழைகளின் மேல் இரக்கம் உள்ளவர்களும், உடனே கூட்டம் போட்டு அன்னிய அரிசிக்கு வரி விதிப்பதைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றி வைசிராய்க்கு அனுப்பும்படி வேண்டுகின்றோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  24.02.1935

You may also like...