வெற்றியின்  யோக்கியதை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமா?

 

 

இந்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்து விட்டதைப் பற்றி இந்தியா பூராவிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடந்தன.

அது மாத்திரமல்லாமல் வெற்றி பெற்ற காங்கிரஸ் வீரர்கள் இந்திய சட்டசபையில் செய்த  செய்கின்ற வேலைகளோ “”சர்க்காருக்குத் தோல்விக்குமேல் தோல்வியும் காங்கிரசுக்கு வெற்றிக்கு மேல் வெற்றியும்” என்பதாக பிலாக் கொட்டை போன்ற எழுத்தில் போட்டு பத்திரிகைகள் பக்கங்களை நிரப்புகின்றன.

இதன் பயன் என்ன என்று பார்த்தால் அரிசிக்கு விலை ஏற்ற வேண்டும். அதற்காக அயல் நாட்டிலிருந்து வரும் நெல்லுக்கும் அரிசிக்கும் நொய்க் குருணைக்கும் வரி போட வேண்டும் என்று சாக்காரைக் கெஞ்சுவதும் தான் வெகு தடபுடலாக அடிபடுகின்றதே ஒழிய மற்றபடியான காரியம் என்ன என்று பார்த்தால் பெரியதொரு சைபர் தான். “”சர்க்கார் தோல்வியடைந்தார்கள்” என்பதனால் ஒரு காதொடிந்த ஊசியளவு பயனாவது மக்களுக்கு ஏற்படும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா? அல்லது வாயினாலாவது சொல்ல முடியுமா? என்று பார்த்தால் அதுவும் ஒன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால், இந்த மாதிரி, “”சர்க்காருக்குத் தோல்வி மேல் தோல்வி” என்று ஏற்படுவதால் கழுகைப் பார்த்து, “கிருஷ்ணா கிருஷ்ணா’  என்று கன்னம் கன்னமாய் போட்டுக் கொள்வது போல தோல்வி மேல் தோல்வி என்பதை பிலாக் கொட்டை எழுத்தில் பார்த்துப் பல்லைச் சிறிது இளித்து மந்தகாசத் தலையசைப்பு அசைத்துக் கொள்ள முடியும் என்பதைத் தவிர வேறு ஒரு பலனும் உண்டாவதில்லை என்பதோடு இந்தியர்கள் சுயாட்சிக்கு அருகதையுடையவர்கள் அல்ல என்று கல்லின் மேல் எழுத்துப் போன்ற ஒரு நிரந்தர ஆதரவும் சர்க்காருக்கு ஏற்பட  அனுகூலமாகும்.

இவ்வளவு தான் கண்ட பலன். சர்க்காரின் இஷ்டத்துக்கு விரோதமாக என்ன தீர்மானங்கள் இந்திய சட்டசபையில் நிறைவேறினாலும் வைசிராய் பிரபு அவர்கள் இந்திய பிரதிநிதிகளுக்குப் புத்தியில்லை. அவர்களுடைய தீர்மானங்களை மதித்தால் தேச நிர்வாகம் கெட்டு போய்விடும் என்று எழுதி அத் தீர்மானங்களை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு தன் இஷ்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய (சர்ட்டிபை செய்து) அனுமதி அளித்து விடுவார். அந்தப்படியே செய்தும் வருகிறார். ஆகவே “”வெற்றி மேல் வெற்றி” என்பதற்கு என்ன அர்த்தம் என்பது நமக்கு விளங்கவில்லை.

இதன் பயனாக என்ன ஏற்படும் என்றால் “”இந்தியப் பிரதிநிதிகள் செய்யும் இப்படிப்பட்ட முட்டாள்தனமான காரியங்களால் இந்திய நிர்வாகம் கெட்டுப் போய் ஜனங்கள் கஷ்டப்படாமல் இருப்பதற்காக வைசிராய்களுக்கும், கவர்னர்களுக்கும் பாதுகாப்பும் தனி அதிகாரமும் இருக்க வேண்டியது அவசியம்” என்பது உறுதி ஆகிவிடும்.

மக்களுக்கு ஸ்தல ஸ்தாபனங்கள் விஷமாய் சர்க்காரால் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அதனால் ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்கள் இழிவாகவும் நாணையக் குறைவாகவும் நடந்து கடைசியில் தாலூகா போர்டுகளை எடுத்து விட்டு முனிசிபாலிட்டிகளுக்கு கமிஷனர்கள் நியமனமாகி ஜில்லா போர்டுகளையும் பிரித்து அவற்றிற்கும் நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டிய அவசியம் எப்படி வந்து சேர்ந்ததோ அதே போல் மாகாண சட்டசபைகள் இந்திய சபை ஆகியவை பொறுப்பற்ற தன்மையில் அதன் அதிகாரங்கள் துஷ்பிரயோகங்கள் செய்யப்பட்டதால் சர்க்காருக்கு பாதுகாப்பு அதிகாரம் இல்லாவிட்டால் காரியம் நடக்காது என்கின்ற உண்மை ஏற்பட்டதுடன் முனிசிபல் விஷயங் களில் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டது போல் சட்டசபை விஷயங்களுக்கும் கமிஷனர்கள் போல வைசிராய்களுக்கும் கவர்னர்களுக்கும் அதிகாரங்கள் கொடுத்து பார்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டியது அரசாங்கத்துக்கு அவசியமாகிவிட்டது.

இதைக் கருமத்தின் பலன் என்று சொல்லி நாம் வெட்கப்பட வேண்டுமே தவிர அல்லது இனிமேலாவது இப்படிப்பட்ட காரியம் செய்வதற்கு இல்லாத புத்தி வரும்படி நடந்து கொள்ள வேண்டியதைத் தவிர இதில் விசனப்படவோ சர்க்காரைக் குற்றம் சொல்லவோ சிறிதுகூட இடமில்லை என்றுதான் சொல்லுவோம்.

தோழர் காந்தியாருடைய அகம்பாவமும் அவரது செல்வாக்கைத் துஷ்பிரயோகம் செய்த முட்டாள்தனமுமே இன்றைய சீர்திருத்தம் என்பது பெரிதும் பாதுகாப்பு என்னும் குழந்தையையே பெற்று இருக்கிறது.

காந்தியாரின் ஆதிக்கம் என்றய தினம் ஒழியுமோ அன்றுதான் பாதுகாப்பு என்கின்ற குழந்தைக்கு உளமாந்தை வந்தால் வரக்கூடுமே தவிர அவருக்கு செல்வாக்கு உள்ள வரை பாதுகாப்பு என்னும் குழந்தை வளர்ந்து வலிமை பெற்று பெரிய வஸ்த்தாது ஆனாலும் ஆகுமே தவிர ஒரு நாளும் இளைக்கப் போவதில்லை என்பது உறுதியான விஷயமாகும்.

காந்தியின் செல்வாக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கும் அவரது அஹம்பாவத்திற்கும் நாம் உதாரணம் காட்ட வேண்டியதில்லை என்றே கருதுகிறோம். யாராவது உதாரணம் வேண்டுமென்று கருதுவார் களானால் அவர்களுக்கு ஒரு சிறு உதாரணம் மாத்திரம் காட்டுகின்றோம்.

அதாவது காங்கிரசின் பேரால் இந்திய சட்டசபைக்கு அபேட்சகர்களாக நிறுத்தப்பட்டு, காந்தியின் பேரால் ஓட்டு கேட்கப்பட்டு காந்தியாரின் ஆசீர்வாதம் பெறப்பட்டு பொது மக்களையும் ஓட்டுச் செய்யும்படி காந்தியாரால் கேட்டுக் கொள்ளப்பட்ட நபர்களின் யோக்கியதைகளைப் பற்றி யோசித்துப் பார்த்தாலே காந்தியாரின் செல்வாக்கு எவ்வளவு துஷ்பிரயோகப்படுத்தப்பட்டது என்பதும் காந்தியாரின் “தான்’ என்ற ஆணவம் எவ்வளவு மிளிர்ந்தது என்பதும் நன்றாய் விளங்கும்.

தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியாரை எடுத்துக் கொள்ளுவோம். அவரது நாணையம் எவ்வளவு? தேசாபிமானம் எவ்வளவு? சமத்துவ உணர்ச்சி எவ்வளவு? மற்றவைகள் எவ்வளவு? இவை தோழர் காந்தியாருக்குத் தெரியாது என்று அவர் “”சத்தியம்” செய்வாரா? தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்காவது தெரியாதென்று அவருக்குச் சத்தியத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் சும்மா வாயினாலாவது சொல்வாரா? இதுபோலவே மற்ற அபேக்ஷகர்களைப் பற்றியும் காந்தியாரும் ராஜகோபாலாச்சாரியாரும் யோசித்துப் பார்க்கட்டும். இந்திய சட்டசபை என்பதை எவ்வளவு பொறுப்பு வாய்ந்ததாகக் கருத வேண்டும்?

அப்படி இருக்க அதை மீன்கடை கள்ளுக்கடையைவிட கீழாக மதித்து அபேக்ஷகர்களை நியமித்து வெற்றி பெற்றார்கள் என்றால் இந்த ஓட்டர்களையும் இந்த தலைவர்களையும் இந்த (காங்கிரஸ்) ஸ்தாபனங் களையும் நம்பி சர்க்கார் பாதுகாப்பு இல்லாமல் சும்மா திறந்துவிட்டு விடுவார்களா? என்பதை யோசிக்க வேண்டுகிறோம். அந்தப்படி சர்க்கார் யாதொரு பந்தோபஸ்துமில்லாமல் திறந்து விடுவார்களானால் அவர்கள் பொறுப்புள்ள சர்க்கார் ஆவார்களா என்று கேட்கின்றோம்.

ஓட்டர்களைப் பற்றி சில வார்த்தைகளாவது சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதாவது சென்ற 50 வருஷ காலமாக இந்தியாவில் அரசியல் கிளர்ச்சி நடந்தது என்றாலும் அதன் பயனெல்லாம் பாமர மக்களை நாளுக்கு நாள் மூடர்களாகவும், செய்ய பொறுப்பற்றவர்களாகவும் முடிந்திருப்பதோடு இவர்களை பயன்படுத்திக் கொள்ளும் நபர்களுக்கு நாணயமும் மானமும் இல்லாமல் செய்து பித்தலாட்டமும், புரட்டும், சுயநலமும், பொறுப்பற்ற தன்மையுமே ஆபரணங்களாகவும் இன்றியமையாத யோக்கியதைகளாகவும் ஆக்கிவிட்டது.

உதாரணமாக இந்திய சட்டசபை தேர்தலின்போது கிளிப்பிள்ளைக்குச் சொல்லுகின்ற மாதிரி ஓட்டர்களுக்கு காங்கிரஸ் தலைவர்களின் யோக்கியதையையும் அபேட்சகர்களின் யோக்கியதையையும் அவர்களது பிரசாரங்களின் இழி தன்மைகளையும் புட்டுப்புட்டு களிமண் உருண்டைக்கும் விளங்கும்படியாக எடுத்துச் சொன்னோம். யார் கேட்டார்கள்? “”இப்பொழுது எங்களுக்குப் புத்தி வந்தது, நாங்கள் மோசம் போனோம், எங்கள் பொறுப்பற்ற தன்மைக்கும், முட்டாள்தனத்துக்கும் வெட்கப்படுகிறோம்” என்றெல்லாம் ஓட்டர்கள் இப்போது சொல்வதில் என்ன பிரயோஜனம்.

காந்திக்காக ஓட்டுப் போடுகிறோமே ஒழிய தோழர்கள் சத்திய மூர்த்திக்கும், சாமிக்கும், முத்துரங்கத்துக்கும், அவனாசிலிங்கத்துக்கும் அதுபோன்ற மற்றவர்களுக்கும் ஓட்டுப் போடவில்லை” என்று ஓட்டர்கள் சொன்னார்களே, அப்படிப்பட்டவர்களில் யாராவது சட்டசபையில் உட்கார்ந்து பேசப் போகின்றவர்கள் காந்தியாரல்ல என்பதையும் மேல் குறிப்பிட்ட தோழர்கள்தான் சட்டசபையில் உட்காரப் போகிறார்கள் என்பதையும் உணராதவர்கள் என்று சொல்ல முடியுமா?

அந்த அபேக்ஷகர்கள் அப்போது அளித்த வாக்குதத்தம் என்ன? இப்போது நடந்து கொள்ளும் மாதிரி என்ன? என்பதை ஓட்டர்கள் எதிர்பார்த்தவர்கள் என்று சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். ஆகவே இந்த 50 வருஷத்திய அரசியல் கிளர்ச்சியும் சிறப்பாக 15 வருஷத்திய காந்தியாரின் கிளர்ச்சியும் ஓட்டர்களுக்கு கடுகளவு அரசியல் ஞானத்தையும் பிரதிநிதித்துவப் பொறுப்பையும் கூர்ந்து பார்க்கும் ஞானத்தையும் உண்டாக்கவில்லை என்பதோடு அரசியல் கிளர்ச்சிக் காரர்கள் காந்தியாருள்பட எவரும் பாமர மக்களை இவற்றை உணரும்படி செய்ய முயர்ச்சிக்காமல் சுலபத்தில் ஏமாறத்தக்க மாதிரியான பாமரத் தன்மையில் வேண்டுமென்றே வைத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

இதுவரையில் நமது மாகாணத்தில் இருந்து இந்திய சட்டசபைக்குச் சென்றவர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ எப்படி இருந்தாலும் சட்ட சபைக்கு ஒரு ஆபரணமாக, முக்கிய புருஷராக, சட்டசபை ஞானமுள்ளவர்களாக, விஷயம் தெரிந்தவர்களாக, எழுந்து பேசினால் மற்ற அங்கத்தினர்களாலும், சர்க்கார் அங்கத்தினர்களாலும், சர்க்காராலும் மதிக்கத் தகுந்தவர்களாக, பாராட்டத்தகுந்தவர்களாகவும் இருந்து வந்தார்கள்.

இன்று இந்திய சட்டசபையில் சென்னை மாகாணத்திலிருந்து போனவர்களிலானாலும் சரி மற்றபடி  இந்தியா முழுவதிலுமிருந்து போனவர்களானாலும் சரி, ஒரு ஆளாவது மேற்கண்டபடி மதிக்கத் தகுந்தவர்களாய் இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்.

தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரி அவர்களைப் பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள் பனங்கொட்டை எழுத்தில் விளம்பரம் போட்டாலும் அவர் பேசியது என்ன? அந்த சபையார் மதித்ததென்ன? அரசாங்கத்தார் கவனித்த தென்ன? என்பதைப் பார்த்தால் அவரைத் தெரிந்தெடுத்த ஓட்டர்களின் ஞானம் எவ்வளவு என்பதை பளிங்குபோல் காட்டக் கூடியதாகும்.

தோழர் சத்தியமூர்த்தியாரை ஏன் என்று சட்டை பண்ணுகின்றவர்கள் அங்கு யாரும் இல்லை என்றாலும் அவர் சாதித்ததுதான் என்ன என்று பார்த்தால் ஓட்டர்களைத் தவிர மற்ற யார் மீதும் குற்றம் சொல்ல இடமிராது.

சட்டசபை பிரதிநிதித்துவம் என்பதும், சட்டசபை ஞானம் என்பதும் தெருக்களில் பேரிச்சம்பழ மாற்றுப் பண்டமாக மதிக்கப்பட்டு விட்டால் பிறகு சீர்திருத்தத்திற்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டால் இந்திய ஏழை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகியவர்களின் கதி என்ன ஆவது என்றுதான் கேட்கின்றோம். இந்த தேர்தலால் சென்னை மாகாணத்தின் யோக்கியதை அடியோடு புதைக்கப்பட்டுப் போய்விட்டது.

ஆகவே ஓட்டர்கள் இனி வரப்போகும் தேர்தல்களிலாவது தங்களுடைய ஆராய்ந்து பார்க்கும் ஞானத்தைப் பயன்படுத்தி இந்தியர்கள் அரசியல் பிரதிநிதித்துவங்களுக்கு அருகதை உடையவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசைபடுகின்றோம்.

குடி அரசு  தலையங்கம்  03.03.1935

You may also like...