ராம – ராவண ஆராய்ச்சி
சித்திரபுத்திரன் ராமனின் “”தெய்வீகத்தன்மையும்” ராவணனின் “”ராக்ஷதத்தன்மையும்” ராமனின் தெய்வீகத்தன்மையான காரியங்கள் ராமன் தாடகையைக் கொன்று யாகம் நடத்திக்கொடுத்தான். சூர்ப்பநகையின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தம்பிக்கு உத்தரவு கொடுத்தான். வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்குப் பட்டங் கட்டினான். ராவணனைக் கொன்று விபீஷணனுக்குப் பட்டங் கட்டினான். 5மாத கர்ப்பத்தோடு தன் பெண்ஜாதியான சீதையை விபசாரப் பட்டம் கட்டி தனியே காட்டில் கொண்டுபோய் விட்டுவந்தான். இந்த ஐந்து அரும்பெருங் காரியங்களைச் செய்திருக்கிறான் ராமன். இந்தக் காரியங்களிலிருந்து ராமனிடத்தில் தெய்வத்தன்மையோ, நீதியோ, அறிவுடைமையோ, மனுஷ்யத் தன்மையோ ஏதாவது இருக்கிறதாகச் சொல்ல முடியுமா? தாடகையைக் கொன்றதற்காக என்ன சமாதானம் சொல்லமுடியும்? தாடகை செய்த குற்றமென்பதெல்லாம் அவள் தேவர் (ஆரியர்) களுடைய யாகத்தைத் தடுத்துக்கொண்டு வந்தாள் என்பதே. யாகம் என்றால் என்ன என்பதைப்பற்றி நாம் சொல்லவேண்டியதேயில்லை. குதிரை, மாடு, ஆடு, மனிதன் முதலிய ஜீவன்களை (சித்திரவதை செய்து) கொன்று பக்குவம் செய்யும் ஒரு காரியமாகும். அதுதான் இன்று முறையே அஸ்வமேத...