ஏன் ஜூப்பிலியை?

 

காங்கிரஸ்காரர்கள் ஜூப்பிலியை ஏன் பகிஷ்கரிக்கவில்லை என்றா கேட்கிறீர்கள்.

அவர்கள் தான் சட்டசபைக்குச் சென்று அரசரிடமும் அரசரின் பின் வார்சுகளிடமும் பக்தியாய் விசுவாசமாய் இருப்பதாக சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்தவர்களாயிற்றே. அப்படியிருக்க அவர்கள் பொது ஜனங்களிடம் சத்தியம், நாணையம், யோக்கியம் தவரி நடந்து அவர்களை எப்படி மோசம் செய்தாலும் சர்க்காரிடத்தில் மாத்திரம் எப்போதும் சத்தியம் தவர மாட்டார்கள்.

ஏன் என்றா கேட்கிறீர்கள்?

சர்க்காரிடம் சும்மா தவரினாலோ அவர்களுக்கு நன்றாய் புத்தி கற்பிக்க தெரியும். அப்படிப்பட்ட சர்க்காரார் சத்தியம் தவரினாலும் இவர்களை சும்மாவா விட்டு விடுவார்கள்.  திம்மு திம்மென்று திம்மி இன்னொரு தடவை நிமிர்த்தி விட்டுவிட மாட்டார்களா?

சூடுகண்ட பூனைகள் ஆயிற்றே காங்கிரஸ்காரர்கள். இனியுமா அவர்களுக்குப் புத்தி வந்திருக்காதென்று நினைக்கிறீர்கள்.

எந்த தேசியப் பத்திரிகையாவது மூச்சு விட்டதா?

எந்த தேசியத் தலைவராவது கீச்சு மூச்சுக் காட்டினார்களா?

தலைவர் முதலா வாலர் வரையில் குந்தினாயே குரங்கே என்று ஆகிவிடவில்லையா?

குடி அரசு  செய்தி விமர்சனம்  12.05.1935

You may also like...