உண்மையைக் கக்கி விட்டார்

 

சட்டசபைக்குக் காங்கிரஸ்காரர்கள் செல்வதற்கு காரணஸ்தராயும் சட்டசபைக்குப் போவதற்கும் பார்லிமெண்டு போர்டு ஏற்படுத்துவதற்கும் காரணஸ்தராயும் இருந்தது சில பேர்வழிகள் உண்டென்றாலும் அதில் தென்னாட்டைப் பொருத்தவரையில் அதிகப் பங்கெடுத்துக் கொண்டு அதற்கு வேண்டிய எல்லாவித முயற்சிகளும் செய்தது நம் தோழர் சத்தியமூர்த்தி அவர்களாவார். இது எதற்கு உண்மையில் தேசியத்திற்காகவா? தேசாபிமானத்திற்காகவா? இல்லை. தங்கள் சமூகத்தார் எல்லாவித உயர்ந்த பலவித உத்தியோகமும் தாங்கள் பெரிய பெரிய கௌரவ பதவியும் அடைய மனதில் கொண்டுள்ள ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவேதான் காங்கிரஸ் பேரினால் சட்டசபைக்குப் போகவும் பார்லிமெண்டு போர்டு ஏற்படுத்தவும் இவ்வளவு அதிகமாக முயற்சி செய்ததாகும். இவர் சட்டமறுப்புக் காலத்தில் பதுங்கி இருந்து கடைசியாக லேசான சட்டமறுப்பு செய்துவிட்டு ஜெயிலுக்குச் சென்றவராச்சே! இப்பொழுது மாத்திரம் இவ்வளவு தடபுடலாக சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் மணலைக் கயிராகத் திரித்தோம்! வானத்தை வில்லாக வளைத்தோம் என்று போகிற இடத்திலெல்லாம் பேசுகிறாரே என்று கேட்டு விடாதீர்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுமா? தங்கள் சமூகத்தார், அதிலும் தானே உயர்ந்த பதவி வகிக்க வேண்டுமென்ற ஆசையால் இவ்வளவு பிரமாதமாக சட்டசபையில் பெரிய காரியம் செய்து விட்டோம் என்று பாமர ஜனங்களிடம் ஒன்றுக்குப் பத்தாக அளந்தால் தானே மறுபடியும் ஏதாவது ஏமாந்த மக்கள் மூலமாய் கொஞ்சமாவது வெளியில் தலைகாட்ட முடியும். அதற்குத் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறார் பாவம்.

இந்த மாகாணத்தில் பார்ப்பனரல்லாத மக்கள் மந்திரிகளாகவும் சட்ட மெம்பர்களாகவும் இந்த மாகாணம் பூராவும் ஜஸ்டிஸ் கட்சிகாரர்கள் (பார்ப்பனரல்லாதார்) ஆட்சியாகவும் இருப்பதால் தாங்கள் நேரே நேரிய முறையில் (பார்ப்பனர்கள்) போட்டியில் வெற்றி பெற முடியாதென்று தெரிந்தும் தென்னாட்டில் தங்கள் புரட்டுகளை சுயமரியாதைக்காரர்கள் வெட்ட வெளிச்சமாய் செய்து விட்டதால் தாங்கள் இந்தக் காங்கிரஸ், காந்தி, தேசியம், தேசாபிமானம் என்றால் தான் கொஞ்சமாவது வெளியில் தலைகாட்ட முடியும் என்று தெரிந்திருக்கிறார்கள். அப்படிச்சொல்லிக் கொண்டாலும் தாங்கள் மனதில் கொண்ட உத்தியோகம் வகிக்கும் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளவேயாகும். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் கும்பகோண நகரசபையில் உருவச் சிலைத் திறப்பு விழா சொற்பொழிவாற்றுவதற்கு வந்த தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் நான் கவர்மெண்டின் பிரதம காரியதரிசியாக இருக்க விரும்பவில்லை. நான் ஏன் முதல் மந்திரியாக இருக்கக் கூடாதென்றும் எனக்கு மூளை இல்லையா என்றும் பேசியிருக்கிறார். இதிலிருந்து காங்கிரஸ்காரர்களுக்கு அதிலும் தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு உத்தியோக வேட்டை தாகம் வந்துவிட்டதென்பதை நாம் சொல்ல வேண்டுவதில்லை. காங்கிரஸ் (பார்ப்பனர்கள்) சில மாதங்களாகத் தாங்கள் உத்தியோகம் ஏற்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் அவர்கள் நடையுடை பாவனையிலிருந்தே உங்களுக்குத் தெரியவில்லையா? முன்னமே ஒரு தடவை ஈரோட்டில் நான் கவர்ன்மெண்டின் பிரதம காரியதரிசியாக ஆகுவேன் என்றதிலிருந்தும் உண்மை விளங்கவில்லையா?

தோழர் ராஜகோபால் ஆச்சாரியார் அவர்கள் ஜஸ்டிஸ் மந்திரிகளை ராஜிநாமா செய்யும்படியும்  உடனே சட்டசபையை கலைக்கும்படி கவர்னர் அவர்களுக்கு யோசனை கூறியதோடு தங்களை மந்திரியாக்கினால் சர்க்காருக்குக் கட்டுப்பட்டு மிகுந்த ராஜபக்தியோடு யோசனை கூறி சர்க்கார் இஷ்டப்படி ஒத்துழைக்கின்றோம் என்றும் நேரில் கண்டு கெஞ்சி கூத்தாடி விட்டு வரவில்லையா? இதைத் தான் ஜபல்பூர் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஆந்திர தேச தோழர் விசுவநாதம் அவர்கள் “”நீங்கள் பதவி வகிக்கத்தானே சென்னை மாகாண ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களை ராஜிநாமா செய்யச் சொல்லுகிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஏதோ உண்மையல்லாத சமாதானம் சொல்லி விட்டார். இதிலிருந்து தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவர்களுடையவும் தேசியத் தலைவர்களுடையவும் உள் எண்ணங்கள் தெரியவில்லையா?

தாங்கள் எப்படியாவது பார்ப்பனரல்லாதார் கையிலிருக்கும் எல்லா உயர்ந்த பதவிகளையும் காங்கிரஸ் தேசியம், காந்தி, தேசாபிமானம், தீண்டாமை விலக்கு, கிராமப் புணருத்தாரணம் என்ற ஏமாற்றுச் செய்கையால் கைப்பற்றி பதவி வகிக்க வேண்டுமென்ற எண்ணமுடையவர்களாக இருக்கிறார்களா இல்லையா? என்பதையும் அதற்காக அவர்கள் காங்கிரஸ் தேசியம்  காந்தி  தேசத் தொண்டு என்பன போன்ற பலவான எந்த செய்கையுடனும் எந்த வேஷத்துடனும் சூழ்ச்சிகள் செய்கிறார்கள் என்பது விளங்கவில்லையா? இதிலிருந்தாவது அவர்கள் சூழ்ச்சிகளை நாம் கண்டு ஏமாறாமல் இருப்போமாக.

குடி அரசு  கட்டுரை  19.05.1935

You may also like...