சடலங்களைச் சுமக்கும் கழக மகளிர் அணியின் சமூகப் புரட்சி! `டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டின் படப்பிடிப்பு

சேலம், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி மாவட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழக மகளிர் அணியினர் ஆணாதிக்கம், ஜாதித் தடைகளைத் தகர்த்து சடலங்களை இடுகாடு வரை சுமந்து சென்று இறுதி நிகழ்வுகள் நடத்துவதை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு (அக.16, 2026) கட்டுரையில் படம்பிடித்துக் காட்டியுள்ளது. கட்டுரையின் தமிழாக்கம்:

“மக்கள் சாபமிடுகிறார்கள்; ஆனால், இறுதிச் சடங்குகளை நடத்துவதன் மூலம் ஆணாதிக்கம் இழைத்த அநீதிகளைச் சரிசெய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” சேலத்தில், இந்தப் பெண்கள் இறந்தவர்களை அடக்கம் செய்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் ஒரு விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது.

ஆர்.சரஸ்வதி முதன்முதலில் ஒரு சடலத்தைத் தனது கைகளால் சுமந்து மயானம் வரை எடுத்துச் சென்றபோது, அவரது உறவினர்கள் அவரைக் கண்டித்தனர். கிராம மக்களும், “நீ ஏன் இதைச் செய்கிறாய்?” என்று கேள்வி எழுப்பினர். “இதைச் செய்ய ஆண்களுக்கு மட்டும்தான் அனுமதி இருக்கிறதா?” என்று நான் அவர்களிடம் கேட்டேன் என்கிறார் சரஸ்வதி. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு காலத்தில் அவரைக் கேள்வி கேட்டவர்களே, தங்களது அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்த அவருடன் இணைந்திருக்கிறார்கள்.

50 வயதான சரஸ்வதி, சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சமூகநீதி அமைப்பான திராவிடர் விடுதலைக் கழகத்தின் (DVK) மகளிர் அணியைச் சேர்ந்தவர். இறப்புச் சடங்குகளை ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற ஆணாதிக்க மரபுகளை எதிர்ப்பதற்காகவும், சம உரிமையை நிலைநாட்டுவதற்காகவும், மரணத்தைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள ஜாதி அடிப்படையிலான நடைமுறைகளையும் மத மூடநம்பிக்கைகளையும் தகர்ப்பதற்காகவும் திராவிடர் விடுதலைக் கழகம் இறுதி நிகழ்வுகளை நடத்துகிறது. பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கைகளை உள்வாங்கியிருக்கிறது இந்த இயக்கம். பாலினம், ஜாதி, மதம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து, இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்துவதில் பெண்களுக்கும் சமமான பங்கு இருக்க வேண்டும் என்பதே அவரின் கொள்கை.

“ஆண்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் பெண்களுக்கும் உண்டு என்று பெரியார் நம்பினார்” என்கிறார் சரஸ்வதி. “1980-ஆம் ஆண்டிலேயே திராவிடர் கழகம் இதுபோன்ற இயக்கத்தைத் திருச்சியில் தொடங்கியது. அங்கு பெண்கள் இறுதி நிகழ்வுகளுக்குத் தலைமை ஏற்றனர். 2010-ஆம் ஆண்டு சேலத்தில் இந்த முன்னெடுப்பைத் திராவிடர் விடுதலைக் கழகம் வழியாகத் தொடங்கினோம். பின்னர் இதை மற்ற மாவட்டங்களுக்கும் கொண்டு சென்றோம்.”

சேலத்தில் மட்டும் இந்த மகளிர் அணியில் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஈரோடு, திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சிலர் குடும்பக் காப்பாளர்கள்; மற்றவர்கள் அரசு ஊழியர்கள், தையல் தொழிலாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் ஆசிரியர்கள்.

“கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தங்களது நேரத்தை ஒதுக்கி இவர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களின் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களால் மேலும் மேலும் இளம் பெண்கள் இணைந்து வருகிறார்கள்” என்கிறார் சரஸ்வதி. ஒரு குடும்பத்துக்கு உதவி தேவைப்படும்போது, மகளிர் அணியினர் அந்த வீட்டுக்குச் செல்கிறார்கள். கருப்புப் புடவைகளை அணிந்துகொண்டு, இறந்தவரின் உடலை மயானம் அல்லது இடுகாடு வரை சுமந்து செல்கிறார்கள். இறுதிவணக்கம் போன்ற மரியாதை முழக்கங்களை எழுப்புகிறார்கள். உடலைக் குழிக்குள் இறக்கி, அதன் மீது மண்ணையும் அவர்களே போடுகிறார்கள்.

“நாங்கள் எந்தவிதமான மூடநம்பிக்கைகளையும் மதச் சடங்குகளையும் பின்பற்றுவதில்லை” என்கிறார் சரஸ்வதி. “மலர்கள், விளக்குகள், கற்பூரம், சாண வரட்டிகளை எரித்தல், இறந்தவரின் நெற்றியில் நாணயங்களை வைப்பது, கடவுள்களின் படங்களை வைப்பது போன்ற எதுவும் எங்களிடம் கிடையாது.”

இது வெறுமனே இறுதிச் சடங்குகளைச் செய்வது மட்டுமல்ல என்கிறார் அவர். இறப்புச் சடங்குகளில் பெண்கள் பங்கேற்பதைக் கட்டுப்படுத்தும் மரபுகளுக்கு எதிரான போராட்டமாகவும் இது அமைகிறது. ஆனால், இந்தப் பணிக்காக அவர்கள் பெரும் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது சேலம் மகளிர் அணியின் தலைவரான ஓ.சுதா கூறுகையில், இந்தப் பணியில் ஈடுபடுவதால் தனது தந்தை பல ஆண்டுகளாகத் தன்னுடன் பேசுவதில்லை என்கிறார். மதப்பற்றுள்ள அவர், சுதா செய்யும் பணியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். “சில நேரங்களில் அவர் என் குழந்தைகளிடம் பேசுவார். ஆனால், என்னிடம் ஒருபோதும் பேசுவதில்லை” என்கிறார் சுதா. “ஆனால், நான் செய்யும் பணியில் ஓர் அர்த்தத்தைக் காண்கிறேன். அதனால் தொடர்ந்து செயல்படுகிறேன்; அதுவும் துணிச்சலுடன் செயல்படுகிறேன்.”

ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த ஆர்.ஜோதிமணி, இறந்தவரின் உடலைச் சுமந்து செல்வதற்காகத் தன்னைப் பலர் சபிப்பதாகக் கூறுகிறார். “இந்தக் கருப்புச் சட்டைக்காரர்களுக்கு (பெரியாரியவாதிகளுக்கு) வேறு வேலையே இல்லை என்று சொல்வார்கள்” என்கிறார் 41 வயதான ஜோதிமணி. “நான் ஒருபோதும் கோபப்படுவதில்லை. நாங்கள் எதைச் சாதிக்க முயற்சிக்கிறோம் என்பதை அவர்களுக்கு விளக்க முயற்சி செய்வேன். இறுதியில் சிலராவது எங்களது நோக்கத்தைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வார்கள்.”

தங்களுடன் செயல்படும் பெண் செயற்பாட்டாளர் ஒருவரின் தந்தையை எரியூட்டியபோது, சில கிராம மக்கள் அவரது தலை வெடித்துவிடும் என்றும், அந்த இறுதி எரியூட்டலில் ஈடுபட்ட பெண்களுக்குப் பெரும் தீங்கு நேரிடும் என்றும் கூறியதாகச் சுதா தெரிவிக்கிறார். “ஆனால், நாங்கள் எரியும் சிதையின் அருகே நின்று, அந்த நிகழ்வு முழுமையாக நடைபெறுவதை உறுதி செய்தோம்” என்கிறார் சரஸ்வதி. இறுதிச் சடங்குகளின்போது பெண்கள் மயானத்துக்குச் செல்லக்கூடாது என்ற மரபு பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருவதாகச் சுதா கூறுகிறார். “இறுதிச் சிதைக்குத் தீ மூட்டுவதும், இறுதிச் சடங்குகளைச் செய்வதும் மகன்களின் பொறுப்பாகக் கருதப்படுகின்றன. பெண்கள் இவற்றைச் செய்தால், இறந்தவர்கள் முக்தி அடைய மாட்டார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள். இந்த மூடநம்பிக்கைகளை உடைக்கவே நாங்கள் விரும்புகிறோம்” என்கிறார் அவர்.

திருப்பூரைச் சேர்ந்த வி.சிவகாமி தனது கிராமத்தில் மகளிர் அணி செய்து வரும் பணிகளைப் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார். பெரியாரின் கொள்கைகளை அவர் மதித்தபோதிலும், இந்த முன்னெடுப்பில் தானும் இணைவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், ஒரு நாள் எனது தோழி, கிராம மக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு தனது கணவரின் சிதைக்குத் தீ மூட்டியதைப் பார்த்தேன். அவரது உறவினர்கள் அவரைச் சபித்தார்கள். ஒரு ஆண்தான் சிதைக்குத் தீ மூட்ட வேண்டும் என்று கூறினார்கள். நீண்ட நேரம் போராட்டம் தொடர்ந்தது. ஆனாலும், என் தோழி தனது முடிவில் உறுதியாக நின்றார்.

“அந்த நிகழ்வுதான், இதேபோன்ற சூழ்நிலைகளில் இருக்கும் மற்ற குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியது” என்கிறார் சிவகாமி. அவர்கள் எதிர்த்துப் போராடுவது ஆணாதிக்கத்தை மட்டும் அல்ல. “ஜாதியின் அடிப்படையிலான சடங்குகளையும் மக்கள் கைவிட வேண்டும் என்று விரும்புகிறோம். உதாரணமாக, ஒருவரது ஜாதியைப் பொறுத்து, வீட்டில் இறந்தவரின் உடலை எந்தத் திசையில் வைக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் ஒரு சடங்கு உள்ளது. “நாங்கள் கிராமத்தில் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்துகிறோம். இறந்தவரின் குடும்பத்தினரின் விருப்பத்துக்கு ஏற்ப உடலைப் புதைக்கவோ எரியூட்டவோ செய்கிறோம்” என்கிறார் ஜோதிமணி. “ஒரு வீட்டுக்குள் நாங்கள் நுழையும்போது, அங்கு வசிப்பவர்களின் ஜாதியையோ மதத்தையோ ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.”

மேலும், மகளிர் அணி பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றையும் அணுகி விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்வதாகவும், நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சமூகக் கூடங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் உரையாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் சுதா கூறுகிறார்.
பெரியார் முழக்கம் இதழ் 22102026

You may also like...