கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்
டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகி வரும் கழகத் தோழர்கள் கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்திலும் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.
மாவட்டக் கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
முதல் கட்டமாக பயணம் நவம்பர் 21ஆம் தேதி காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கோபியில் காலை 11.30 மணியளவில் கழகத் தோழர் நிவாஸ் இல்லத்தில் நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்டமான கோபியில் 7 ஒன்றியங்களில் கழக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தைத் தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத் தோழர்கள் பரப்புரைக்காக வாங்கியுள்ள வாகனத்தைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக பரப்புரையை தொடர் நிகழ்வாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கழக வெளியீட்டுப் பிரிவு செயலாளர் கோபி. இளங்கோ இந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்.
கழகச் செயல்பாட்டாளரும் பரப்புரைப் பயணத் தின் ஒருங்கிணைப்பாளராக செயலாற்றியவருமான வேணுகோபால் – கடவுள் ஆத்மா மறுப்பு கூறி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கழக ஏடுகளான புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் ஏடுகளுக்கு புதிய சந்தாக்கள் சேர்ப்பது குறித்தும், டிசம்பர் 24ஆம் தேதி திருச்சியில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடக்கவிருக்கும் கருஞ் சட்டைப் பேரணி மாநாட்டுக்கு கழகத் தோழர்கள் பெருமளவில் திரண்டு வருவது குறித்தும் கலந்துரை யாடல் கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே ‘முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு தோழர்கள் திரட்டிய சந்தாக்களையும் ஒப்படைத்தனர்.
கோபி கலந்துரையாடலில் ஜெயக்குமார் (டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர்), அருளானந்தம் (கோபி ஒன்றிய பொறுப்பாளர்), மூர்த்தி (சத்தியமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர்), கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, சுப்ரமணியன் (கொளப்பலூர் கிளைத் தலைவர்), பழனிச்சாமி (சதுமுகை ஒன்றிய பொறுப்பாளர்), கழக ஆதரவாளர் ஆசைத்தம்பி மற்றும் கழகத் தோழர்கள் தங்கம், மணிமொழி, ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி, மாவட்ட அமைப்பாளர் நிவாஸ், அழகிரி (எலத்தூர்)அறிவியல் மன்றத் தோழர் ஆசிரியர் சுந்தரம், கே.ஆர். மணி ஆகியோர் கழக வளர்ச்சித் திட்டங்கள், கழக ஏடுகளுக்கு மேலும் சந்தாக்களை சேர்த்தல் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர். தொடர்ந்து வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன், பொருளாளர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர்.
ஈரோடு : நவம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணி யளவில் ஈரோடு தெற்கு மாவட்ட கலந்துரையாடல், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பட்டறை வளாகத்தில் ஆசிரியர் சிவக்குமார் கடவுள், ஆத்மா மறுப்புக் கூறத் தொடங்கியது. சண்முகப் பிரியன் வரவேற்றுப் பேசினார். கழகத் தோழர்கள் குமார், கிருஷ்ணமூர்த்தி, சுந்தரமூர்த்தி (எழிலன்), சவுந்தர் (மாணவர் கழகம்), பிரதீப் (மாணவர் கழகம்), மணிமேகலை, கமலக் கண்ணன், கதிர், சென்னிமலை செல்வராஜ், மாவட்ட தலைவர் செல்வராஜ், பத்மநாபன், ஆசிரியர் சிவக்குமார், பிரேமா, சத்தியமூர்த்தி ஆகியோர் பேசினர். அமைப்புச் செயலாளர், பொருளாளர், சூலூர் பன்னீர் செல்வம், கழகப் பொதுச் செயலாளர், கழகத் தலைவர், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பு இயக்கம், டிசம்பர் 24 இல் திருச்சி கருஞ்சட்டைப் பேரணிக்கு தோழர்கள் திரண்டு வருதல் குறித்து விரிவாகப் பேசினர். தோழர்களுடன் கலந்து ஆலோசித்து, மாவட்டக் கழகத்துக்கு புதிய பொறுப்பாளர்களை கழகத் தலைவர் அறிவித்தார்.
மாவட்டத் தலைவர் சென்னிமலை செல்வராஜ்; மாவட்ட செயலாளர் எழில் சுந்தரமூர்த்தி; மாவட்ட பொருளாளர் சண்முகப்பிரியன்; மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி; மாநகரத் தலைவர் மரவபாளையம் குமார்; மாநகரச் செயலாளர் திருமுருகன்; தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் கொங்கம்பாளையம் சவுந்தர்.
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கி யது இரண்டாம் நாள் பயணம். நவம்பர் 22ஆம் தேதி பகல் 11 மணியளவில் திருச்செங்கோடு ‘கண்ணாத்தாள்’ மண்டபத்தில் தோழர் தனலட்சுமி – கடவுள், ஆத்மா மறுப்பு கூற நிகழ்ச்சிகள் தொடங்கின. அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, சந்திப்பின் நோக்கத்தை விளக்கினார். சரவணன் (மாவட்ட செயலாளர்), முத்துப்பாண்டி (அமைப் பாளர்), சதீஷ்குமார் (திருச்செங்கோடு ஒன்றிய தலைவர்), தண்டபாணி (குமாரபாளையம்), மலர் (இராசிபுரம்), மனோஜ் (மாணவர் கழகம்), ரஜினா (பள்ளிப்பாளையம்), நாகலட்சுமி (திருச்செங்கோடு), பெரியண்ணன் (மல்லசமுத்திரம்), தியாகு (கோயிலங் காடு), சங்கர் (பள்ளிப்பாளையம்), பிரகாசு (பள்ளிப் பாளையம்), சேகுவாரா (இராசிபுரம்), கணபதி (குமாரபாளையம்) ஆகியோர் உரையாற்றினர். அமைப்பாளர் வைரம் வரவேற்று உரை நிகழ்த்திய தோடு, தோழர்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்கு விளக்கம் அளித்துப் பேசினார். நாமக்கல் கலந்துரை யாடலில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. பொறுப்புகளில் பெண்களை நியமிக்க மாவட்டக் கழகம் முடிவெடுத்துள்ளதை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த முத்துப்பாண்டி அறிவித்தார். சூலூர் பன்னீர்செல்வம், பொருளாளர், பொதுச்செயலாளர், தலைவர் உரையாற்றியதைத் தொடர்ந்து கழகத் தோழர்களின் ஆலோசனையோடு கீழ்க்கண்ட புதிய பொறுப்பாளர்களை கழகத் தலைவர் அறிவித்தார்.
திருச்செங்கோடு நகர பொறுப்பாளர்கள் : நகரத் தலைவர் ஞானசேகர்; நகரச் செயலாளர் ஆ. பூபதி; நகர அமைப்பாளர் வை. தனலட்சுமி; இளைஞரணி அமைப்பாளர் விஜய குமார்.
கருவேப்பப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர்கள்: ஒன்றியத் தலைவர் து. சதீஷ்குமார்; ஒன்றிய செயலாளர் பிரியா.
காடச்சநல்லூர் ஒன்றிய அமைப்பாளர் : செல்வகுமார். மல்லை ஒன்றிய அமைப்பாளர் பெரியண்ணன். இராசிபுரம் நகர அமைப்பாளர் பிடல் சேகுவாரா.
பள்ளிப்பாளையம் நகரப் பொறுப்பாளர்கள்: நகரத் தலைவர் மீனாட்சி; நகர செயலாளர் ஷஜீனா; நகரப் பொருளாளர் மு. சரவணன்; நகர அமைப் பாளர் கோபி; நகரத் துணைத் தலைவர் தம்பித்துரை; நகரத் துணைச்செயலாளர் சங்கர்; நகர இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ்; ஆலாம்பாளையம் ஒன்றிய அமைப்பாளர் தியாகு.
குமாரபாளையம் நகரப் பொறுப்பாளர்கள்: நகரத் தலைவர் மீ.த. தண்டபாணி; நகர செயலாளர் வடிவேல்; நகர துணைச் செயலாளர் மாதேஸ்வரன்; கத்தேரி ஒன்றியம் அமைப்பாளர் ப.முருகாண்டி.
மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன்; மாவட்ட செயலாளர் மு.சரவணன்; மாவட்ட அமைப்பாளர் அ. முத்துப்பாண்டி; மாவட்ட துணைத் தலைவர் திராவிட மணி; மாவட்ட காப்பாளர் மு. கேப்டன் அண்ணாதுரை; மாவட்ட துணை அமைப்பாளர்
ஆ. பிரகாசு; தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் மனோஜ் குமார்.
திருப்பூர் : நவம்பர் 22ஆம் தேதி மாலை 6 மணியளவில் திருப்பூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொருளாளர் துரைசாமி, தோட்ட வளாகத்தில் மடத்துக்குளம் மோகன் – கடவுள், ஆத்மா மறுப்பு கூறத் தொடங்கியது. சந்திப்பின் நோக்கத்தை அமைப்புச் செயலாளர் விளக்கினார். மாவட்ட தலைவர் முகில்ராசு, செயலாளர் நீதிராசன், சன்பாண்டியன், அகிலன், ராஜசிங்கம், தனகோபால், சங்கீதா, மாதவன் (மாநகர செயலாளர்), நகுலன், ஆசிரியர் சிவகாமி, பரிமளராசன் (முகநூல் பொறுப்பாளர்), விஜயகுமார் (இணையதள பொறுப்பாளர்), முத்துலட்சுமி, முத்து (மாநகர அமைப்பாளர்), இராமசாமி, தனபால் (மாநகர தலைவர்), மணி, அனிதா (சூலூர்) ஆகியோர் உரையாற்றினர்.
கூட்டத்தில் தோழர் நீதிராசு ரூ.5000/-மும், தோழர் இராமசாமி ரூ.5000/-மும் கட்டமைப்பு நிதியாக கழகத் தலைவரிடம் வழங்கினர். கழக ஏடுகளுக்கு தோழர்கள் சேர்த்த சந்தாக்கள் ஒப்படைக்கப்பட்டு, மேலும் சந்தாக்களை டிசம்பர் 15க்குள் சேகரிக்க தோழர்கள் உறுதியளித்தனர். தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், சூலூர் பன்னீர்செல்வம் உரையாற்றினர். புரட்சிப் பெரியார் முழக்கம் தொடங்கிய வரலாற்றையும் கடந்து வந்த பாதை களையும் ‘நிமிர்வோம்’ இதழுக்கு கிடைத்து வரும் ஆதரவு குறித்தும் விளக்கி பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார்.
கோவை : மூன்றாம் நாள் நவம்பர் 23ஆம் தேதி பயணம் கோவையில் தொடங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளரும், திராவிடர் இயக்கக் கொள்கையில் தீவிரப் பற்றுக் கொண்டு மேடைகளில் முழங்கி வந்தவருமான கோவை
மு. இராமநாதன், முதுமையில் இல்லத்தில் உடல்நலன் பாதித்த நிலையில் ஓய்வில் இருந்து வருகிறார். கழகத் தலைவர், பொதுச் செயலாளர், கழகப் பொறுப் பாளர்களோடு அவரது இல்லம் சென்று சந்தித்து உரையாடினர். கோவை இராமநாதன் மகன் செல்வராஜ், அவரது துணைவியார் அன்புடன் வரவேற்று, கோவை இராமநாதன் அவர்களின் தீவிர இயக்கப் பற்று குடும்பங்களையும் கடந்து கொள்கையில் காட்டிய உறுதியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். கோவை இராமநாதன் அதிகம் பேச இயலாத நிலையில் பெரியார் இயக்கத் தோழர்கள் சந்திக்க வந்ததில் மிகவும் நெகிழ்ச்சி யடைந்தார். அவர் எழுதிய நூல்களை கையெழுத்திட்டு வழங்கினார். “காசோலையில் கையெழுத்திட மறுக்கிறார் அப்பா. உங்களுக்கு மட்டும் கையெழுத்திடுகிறார்” என்று உருக்கமுடன் கூறினார், கோவை இராமநாதன் அவர்களின் மகனும் தி.மு.க. செயற்பாட்டாளருமான செல்வராஜ், தி.மு.க.வின் கலை இலக்கியப் பேரவையைச் சார்ந்தவரும் பெரியாரியலாளருமான கார்த்திக் இந்த சந்திப்பில் கழகத் தோழர்களுடன் உடனிருந்தார்.
கோவை இராமநாதன் சந்திப்பிற்கு முன்பாக காலை 10 மணியளவில் மனித உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர், பொன் சந்திரன் அவர்களை கோவையில் அவரது இல்லத்தில் கழகத் தலைவர், பொதுச் செயலாளர் தோழர்களோடு சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். கோவையில் இராணுவ வாகன முற்றுகைப் போராட்டத்தில் தனது துணைவியார் தனலட்சுமியுடன் கைதாகி 60 நாட்கள் கோவை சிறையிலிருந்தவர் பொன் சந்திரன். மோடி ஆட்சியில் இந்துத்துவா திணிப்பு குறித்தும், மனித உரிமை ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள் மோசமாக ஒடுக்கப்படுவது குறித்தும் கவலையோடு உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஆனை மலை : நவம்பர் 23ஆம் தேதி ஆனைமலையில் கோவை புறநகர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் ஆனைமலை விடுதி அரங்கில் வினோதினி கடவுள் மறுப்புடன் தொடங்கியது. கழகப் பொறுப்பாளர்கள் வெள்ளியங்கிரி, மடத்துக்குளம் மோகன், நிர்மல், நேருதாஸ் உரையைத் தொடர்ந்து சூலூர் பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர், பொருளார், பொதுச் செயலாளர், தலைவர் உரையாற்றினர். கழக ஏட்டுக்கு திரட்டிய சந்தாக்களை தோழர்கள் ஒப்படைத்தனர்.
பொதுக் கூட்டம் : தொடர்ந்து மாலை 7 மணியளவில் ஆனைமலையில் சட்ட எரிப்பு நாள் விளக்கப் பொதுக் கூட்டம் ஆனைமலை நரசிம்மன் நினைவு திடலில் வே. அரிதாசு (நகர செயலாளர்) தலைமையில் நடந்தது. தோழர்கள் கணேசு, அப்பாதுரை, ஆனந்த் முன்னிலை வகித்தனர். கோ. சபரிகிரி வரவேற்புரையாற்றினார்.
தோழர்கள் வெள்ளியங்கிரி, மடத்துக்குளம் மோகன், ஆசிரியர் சிவகாமி ஆகியோர் உரையைத் தொடர்ந்து பொதுச் செயலாளர், கழகத் தலைவர் உரையாற்றினர். அரசியல் உருவாக்க மோசடிகள், பெரியார் காட்டிய எதிர்ப்பு, வரைவுக் குழுத் தலைவரான அம்பேத்கர், சட்ட உருவாக்கத்தில் சந்தித்த நெருக்கடிகள், சட்ட எரிப்புப் போராட்டத்தில் பெரியார் தொண்டர்கள், சிறைவாசத்தை அஞ்சாமல் எதிர்கொண்ட துணிவு ஆகிய வரலாற்றுச் செய்திகளை விரிவாக விளக்கி ஒன்றரை மணி நேரம் பேசினார்.
சட்ட எரிப்புப் போராளிக்கு மரியாதை : சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற சட்ட எரிப்புப் போராளி ஆறுமுகம் நிகழ்வில் பங்கேற்றார். அவருக்கு கழகத் தலைவர், பொதுச்செயலாளர் ஆடை போர்த்தி மரியாதை செலுத்தினர். சட்ட எரிப்புப் போராட்டத்தில் அதிக தோழர்கள் பங்கேற்றப் பெருமை ஆனை மலை நகருக்கு உண்டு. வினோதினி நன்றி கூறினார்.
பழனி : நான்காம்நாள் நவம்பர் 24ஆம் தேதி கழகத் தோழர்கள் சந்திப்பு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வண்டிக்காரன் பாளையம், பெரியார் படிப்பகத்தில் நடந்தது. மருதமூர்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தோழர்கள் செல்வராஜ் (திண்டுக்கல் நகரத் தலவர்), மோகன், கார்த்தி, ஆனந்த், கிருஷ்ணன், துரை ஆகியோர் கழக ஏடுகளுக்கு சந்தா சேர்க்கும் பணியை டிசம்பர் 15க்குள் முடித்து விடுவதாக உறுதியளித்தனர்.
திருச்சி : நவம்பர் 24ஆம் தேதி மாலை கலந்துரையாடல் கூட்டம் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள புனித ‘அந்தோணிசாமி சர்ச்’ மண்டபத்தில் நடந்தது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் சார்பில் நடந்த கலந்துரையாடலில் கழகப் பொறுப்பாளர்கள் புதியவன், அந்தோணிசாமி, மனோகர், துரை தாமோதரன் (பெரம்பலூர்), டார்வின்தாசன், வழக்கறிஞர் சந்துரு, மணிகண்டன், அசோக் (திருவரங்கம்), குணாராஜ், ஞான சண்முகம், மருத்துவர் முத்து ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து சூலூர் பன்னீர்செல்வம், பொருளாளர், பொதுச் செயலாளர், தலைவர் உரையாற்றினர். கழகத் தலைவர் தோழர்களுடன் ஆலோசித்து கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை அறிவித்தார்.
திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் மி.இ. ஆரோக்கியசாமி, மாவட்ட செயலாளர் மு. மனோகரன், அமைப்பாளர் த. புதியவன், பொருளாளர் ஞா. டார்வின் தாசன், திருச்சி மாநகர அமைப்பாளர் வழக்கறிஞர் சந்துரு, திருவரங்கம் நகர அமைப்பாளர் த. அசோகன், திருவெறும்பூர் ஒன்றிய அமைப்பாளர் ந. குணாராஜ், திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் மணிகண்டன்.
பெரம்பலூர்: மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன், நகர செயலாளர் ராஜேஷ் குமார், மாவட்ட அமைப்பாளர் பழனி முருகன், நகர அமைப்பாளர் சுதாகர்.
கலந்துரையாடல் கூட்டங்களில் கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களை பரப்புவது குறித்தும், டிசம்பர் 24இல் திருச்சியில் நடக்கவிருக்கும் கருஞ்சட்டைப் பேரணியில் பெரும் எண்ணிக்கையில் தோழர்கள் பங்கேற்க வேண்டியது குறித்தும் வலியுறுத்திப் பேசப்பட்டது.
இரண்டாவது கட்ட கலந்துரையாடல் நவம்பர் 30 அன்று சேலத்தில் தொடங்குகிறது. – நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 29112018 இதழ்