இந்தி எதிர்ப்பு ஒழிந்து விட்டதா?
சென்னை மாகாணத்தில் 125 பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கப் போவதாக கனம் ஆச்சாரியார் கூறியது முதற் கொண்டு நாளிது வரை தமிழர்கள் எல்லாம் கட்டாய இந்தியை ஒருமுகமாக எதிர்த்து வருவதை சென்னை மாகாணத்தார் நன்கறிவார்கள். முதன்முதல் ்பொதுமொழி தேவையா?” என்ற சிறு நூலை மறைமலையடிகள் வெளியிட்டார். அப்பால் இந்தி கட்டாய பாடத்தைக் கண்டித்து தோழர் சோமசுந்தர பாரதியார் சென்னை முதன்மந்திரிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பினார். திருநெல்வேலி தமிழ்ப்பாதுகாப்புச் சங்கத்தாரும் கட்டாய இந்தியைக் கண்டித்துப் பல துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டனர். இப்பிரசுரங்கள் எல்லாம் பதினாயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு தமிழ்நாடு முழுதும் வினியோகம் செய்யப்பட்டன. தமிழ்நாட்டார் அவைகளைப் படித்துக் கட்டாய இந்திச் சூழ்ச்சியை நன்குணர்ந்தனர். 26-12-37-ல் திருச்சியில் கூடிய சென்னை மாகாண 3-வது தமிழர் மகாநாட்டில் கட்டாய இந்தி வன்மையாகக் கண்டிக்கப்பட்டதுடன் இந்தி எதிர்ப்புக் கமிட்டியும் ஸ்தாபிக்கப்பட்டது. இம்மகாநாட்டில் காங்கரஸ்வாதிகளும் ஜஸ்டிஸ்வாதிகளும், சுயமரியாதைக் கட்சியாரும், எக்கட்சியிலும் சேராத தமிழர்களும் மனமுவந்து தாராளமாகக் கலந்து...
