காங்கிரஸ் கட்டுப்பாடு

காங்கிரஸ் கட்டுப்பாடு கட்டுப்பாடு என்று புலம்பிக் கொண்டு காங்கிரஸ்காரர் வெகு கட்டுப்பாட்டுக்காரர்கள் போல் பறை அடித்துக் கொள்ளுகிறார்கள்.

காங்கிரசுக்காரர்கள் எதில் கட்டுப்பாடாக இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் உணரவேண்டுகிறோம்.

காங்கிரஸ் மெம்பர் முறையில் கட்டுப்பாடுண்டா?

கதரில் கட்டுப்பாடுண்டா?

மெம்பர்கள் சேர்ப்பதில் கட்டுப்பாடுண்டா?

அன்று; அன்று. அவசரத்துக்கு ஆள் பிடிப்பதுபோல் யாரையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.

மெம்பர்கள் நாணயத்தில் கட்டுப்பாடு இல்லை.

அதைப்பற்றி விசாரிப்பதில், கவலை கொள்ளுவதில் கட்டுப்பாடு இல்லை.

தோழர் டாக்டர் ராஜன் காங்கிரஸ் கட்டளையை மீறி நடந்துவிட்டு காங்கிரஸ் நன்மைக்கு ஆகவே மீறினேன் என்றார். டாக்டர் டி.எஸ்.எஸ்.சாஸ்திரியும் காங்கிரஸ் கட்டளையை மீறிவிட்டு காங்கிரஸ் நன்மையை உத்தேசித்தே அப்படி செய்தேன் என்கிறார்.

ஸ்தல காங்கிரஸ் கமிட்டி தலைவர், மேற்படி இருவரும் காங்கிரஸ் கட்டுப்பாட்டை மீறிவிட்டார்கள் என்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வைஸ் பிரசிடெண்டும் காரியதரிசியும் டாக்டர் ராஜன் செய்தது அக்கிரமம் என்கிறார்கள்.

பத்திரிகைகள் எல்லாம் ஒரே அபிப்பிராயமாக டாக்டர்கள் ராஜனையும் சாஸ்திரியையும் குற்றம் சாட்டுகின்றன. அப்படி எல்லாம் இருந்தும் டாக்டர்கள் ராஜனும் சாஸ்திரியும் கட்டுப்பாட்டுப்படி நடந்ததாகவும் காங்கிரசின் நன்மைக்கு ஏற்ற காரியமே செய்ததாகவும் சொல்லுகிறார்கள்.

இதையெல்லாம் விட ஒரு அதிசயம் என்னவென்றால் காங்கிரஸ் கட்டளையை மீறி சேர்மென் ஸ்தானத்துக்கு அபேக்ஷகராய் நின்று வெற்றிபெற்ற தோழர் பொன்னையாவும் தான் கட்டுப்பாட்டுக்கு உடன்பட்டு கட்டுப்பாட்டின்படி நடந்ததாகவே சொல்லுகிறார். ஆகவே டாக்டர்கள் கட்டுப்பாட்டுக்கென்றே, சிறப்பாக பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டிற்கென்றே வேறு அகராதி இருப்பதாகத் தெரிகின்றது.

இனி என்ன செய்தால்தான் கட்டுப்பாட்டை மீறியதாகும் என்பது நமக்கு விளங்கவில்லை.

மனுதர்ம சாஸ்திரத்தில் எப்படி பார்ப்பனன் எவ்வளவு அயோக்கிய னாகவும், ஒழுக்கத்தையும் தர்மத்தையும் மீறியவனாகவும் இருந்தாலும் அக்காரணத்தால் அவன் பார்ப்பனத் தன்மையில் இருந்து விலகினவனாக மாட்டான் என்று கூறப்பட்டிருக்கிறதோ, அதேபோல் பார்ப்பனர் காங்கிரசில் எவ்வளவுதான் அக்கிரமமாக, அயோக்கியமாக, துரோகமாக நடந்து கொண்டாலும் காங்கிரஸ்காரராகவே, காங்கிரசுக்கு ஆக உயிர் வாழ்பவராகவே மதிக்கப்படுவார்கள் என்கின்ற தர்மம் இன்று காங்கிரசிலும் இருந்து வருகின்றது.

பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதையும் மானமும் அறிவும் ஏற்படும் வரை மதத்திலும் அரசியலிலும் மனுதர்மம்தான் தாண்டவமாடும் என்பதற்கு இது ஒரு பெரிய அத்தாட்சியாகும்.

குடி அரசு துணைத் தலையங்கம் 23 .08.1936

You may also like...