தேசீயப் பத்திரிகைகளின் போக்கு

ஸர்.ஸி.பி. ராமசாமி அய்யர் திருவிதாங்கூர் திவானாக நியமிக்கப்பட்டு விட்டாராம். தேசீயப் பத்திரிகைகளும் செமிதேசீயப் பத்திரிகைகளும் பத்தி பத்தியாய் அவரைப் பற்றி எழுதுகின்றன. சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையில் தேசீயம் என்றால் பிராமணீயம் என்றுதான் பொருள்.

எனவே ஒரு பார்ப்பனர் திவான் ஆனதைப்பற்றி பார்ப்பனப் பத்திரிகைகளும் செமி பார்ப்பனப் பத்திரிகைகளும் ஆனந்தக் கூத்தாடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கில்லை. ஸர்.ஸி.பி. திருவிதாங்கூர் திவான் ஆனதைப்பற்றி நாம் பொறாமைப்படவுமில்லை. ஏன்? அதைப்பார்த்துப் பொறாமைப் படக்கூடிய நிலையில் நாம் இப்பொழுது இல்லை. திவான் பதவியை விட பதின்மடங்கு பொறுப்பும் பெருமையும் வாய்ந்த பதவிகளை நம்மவர்கள் வகித்து வருகையில் மேலும் வகிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகுந்து வருகையில் எவ்வளவு உயரிய பதவிகளை வகிக்கவும் நம்மவர்களுக்கு லாயக்குண்டு என்ற உண்மை வெளியாகி உறுதி பெற்று வருகையில், ஸர்.ஸி.பி. திருவிதாங்கூர் திவான் ஆனதைப்பற்றி நாம் பொறாமைப் படக் காரணமில்லை. மேலும் ஜில்லா கலக்டராயிருந்த பார்ப்பனர்கள் பரோடா போன்ற சமஸ்தானங்களில் திவான் உத்தியோகம் பெற்றிருக்கையில், சென்னை மாகாணச் சட்ட மந்திரியாகவும், இந்திய சர்க்கார் ஆக்டிங் சட்ட மந்திரியாகவும், ஆக்டிங் வர்த்தக மந்திரியாகவும் இருந்தவரும், வட்டமேஜை மகாநாட்டு ஆலோசனைக் கமிட்டி மெம்பராகவும் வெள்ளைக் காகித அறிக்கையைப் பரிசீலனைச் செய்ய மன்னர் மண்டலத்தார் நியமனம் செய்த கமிட்டித் தலைவராகவும் இருந்தவரும் மற்றும் பொதுவாழ்வில் முக்கிய ஸ்தானம் வகித்தவருமான ஸர்.ஸி.பி.க்கு திருவிதாங்கூர் திவான் பதவி அவ்வளவு பெரிய பதவி யென்று நாம் கருதவுமில்லை. மற்றும் அப் பதவியைப் பெற அவர் எவ்வளவோ காலம் தவம் கிடந்திருக்கையில் கொஞ்ச காலத்துக்கு முன்னாடியே அவருக்குக் கிடைக்கவில்லையே என்பது தான் நமது கவலை.

ஆனால் ஸர். ஷண்முகம் கொச்சி திவானாக நியமனம் பெற்ற பொழுது, திவான் பதவிக்கு லாயக்குடைய கொச்சிப்பிரஜைகளின் உரிமை அலக்ஷ்யம் செய்யப்பட்டு விட்டதென்று சென்னை “ஹிந்து” பத்திரிகை கிண்டலாக எழுதியது. ஆனால் ஸர்.சி.பி. விஷயத்தில் “ஹிந்து” பத்திரிகை அந்த நியாயத்தை ஏன் மறந்து விட்டதோ தெரியவில்லை. “திருவிதாங்கூர் திருவிதாங்கூர் வாசிகளுக்கே” என்ற கிளர்ச்சி இப்பொழுதும் திருவிதாங் கூரில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. திருவிதாங்கூர் ஹைக் கோர்ட்டு பிரதம நீதிபதி பதவிக்கு கொச்சி சமஸ்தானத்திலிருந்து ஒரு பார்ப்பன நீதிபதியை திருவிதாங்கூர் சர்க்கார் நியமித்ததைக் கண்டித்து திரு விதாங்கூர் சட்டசபையில் ஒரு கண்டனத் தீர்மானங்கூடக் கொண்டு வரப்பட்டது. அந்த நியமனம் மகாராஜா இஷ்டத்தைப் பொறுத்ததாகையால் அதைப் பற்றிச் சட்டசபையில் விவாதிக்கக்கூடாதென்று திவான்பிரசிடெண்டு அந்தக் கண்டனத் தீர்மானத்தை நிராகரித்து விட்டார்! சாத்தியமானவரை எல்லா உத்தியோகங்களையும் லாயக்குடைய திருவிதாங்கூர் பிரஜைகளுக்கே கொடுக்க வேண்டும் என்ற கிளர்ச்சி சுமார் 60 வருஷகாலமாக திருவிதாங்கூரில் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.

அந்தக் கிளர்ச்சி தாங்கமுடியாத எல்லையை அடைந்ததினால் தான் எம்.இ.வாட்ஸ் (இவர் திருவிதாங்கூரில் பிறந்து வளர்ந்து கடைசியில் ஆங்கிலேயராகி லண்டனில் பாரிஸ்டர் தொழில் நடத்தியவர்) என்ற ஆங்கிலோ இந்தியரையும் திவான் பகதூர் வி.எஸ். சுப்பிரமணியய்யரையும் ரீஜண்டு மகாராணியார் சேது லக்ஷ்மிபாய் திவான்களாக நியமித்தனர். இப்பொழுதும் திவான் பதவிக்குத் தகுதியுடையவர்கள் திருவிதாங்கூரில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். திருவிதாங்கூர் ஹஜூர் சீப்சிக்ரிட்டரியாக இருக்கும் டாக்டர் குஞ்ஞன் பிள்ளை சமஸ்தானத்தில் பல உத்தியோகங்கள் வகித்து அனுபவம் பெற்ற திருவிதாங்கூர் சுதேசி. இங்கிலாந்தில் உயர்தரக் கல்வி கற்று பல பட்டங்கள் பெற்றவர். பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் ஆதரவில் நடைபெறும் பல டிபார்டுமெண்டுக் கூட்டங்களில் பங்கு கொண்டு அனுபவம் பெற்றவர். மற்றும் அகில இந்தியப் புகழ்பெற்ற சர்தார் கெ.எம்.பணிக்கரும் ஒரு திருவிதாங்கூர் பிரஜையே. அவர் இப்பொழுது மன்னர் மண்டலக் காரியதரிசி என்ற பொறுப்பான பதவியில் இருக்கிறார். மற்றும் ஜினீவா சர்வதேச சங்கத்தில் ஒரு பொறுப்பான பதவி வகிக்கும் டாக்டர் பத்மநாப பிள்ளையும் ஒரு திருவிதாங்கூர் பிரஜையே. மைசூர் நிர்வாக சபை மெம்பராக இருந்து பென்ஷன் பெற்று இப்பொழுது திருவிதாங்கூர் சமஸ்தானம் கோட்டயத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தோழர் மாத்தனும் திருவிதாங்கூர் பிரஜையே. மாஜி சென்னை நீதிபதியும் இப்பொழுது திருவிதாங்கூரில் தமது குடும்ப வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவருமான டாக்டர் கிருஷ்ணர் பண்டாலையும் ஒரு திருவிதாங்கூர் பிரஜையே. தோழர்கள் மாத்தனும் பண்டாலையும் பென்ஷன் பெற்றவர் களானாலும் கிடுகிடு கிழவர்களாகிவிட வில்லை. தற்காலத் திவான் ஸர். ஹாபிஜல்லாவைப் போல் சக்தியுடையவர்களே. சென்னை சர்வகலா சங்க பொருளாதார புரபசரும் நிபுணருமான டாக்டர் மத்தாயியும் ஒரு திருவிதாங்கூர் பிரஜையே. இம்மாதிரியே யோக்கியதையுடைய திருவிதாங்கூர் பிரஜைகள் திருவிதாங்கூரிலும் பிரிட்டிஷிந்தியாவிலும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். “திருவிதாங்கூர் திருவிதாங்கூர் வாசிகளுக்கே” என்ற கிளர்ச்சி வலுப்பெற்றிருக்கும் இக்காலத்திலே, திவான் பதவிக்கு யோக்கியதையுடைய எத்தனையோ திருவிதாங்கூர் பிரஜைகள் இருக்கையில், ஸர். ஸி.பி. யை திவானாக்கியது ஒழுங்கா என சென்னை “ஹிந்து” வைக் கேட்கிறோம். ஸர். ஷண்முகத்தையோ, திவான்பகதூர் ராமசாமி முதலியாரையோ, டாக்டர் சுப்பராயனையோ திவானாக நியமித்திருந்தால் “திருவிதாங்கூர் திருவிதாங்கூர் பிரஜைகளுக்கே” என்ற நியாயத்தை “ஹிந்து” வற்புறுத்தாதிருக்குமா என்றும் கேட்கிறோம்.

குடி அரசு கட்டுரை 13.09.1936

You may also like...