இரண்டும் உண்மையே

2.9.36ந் தேதி “எது உண்மை?” என்னும் தலைப்பில் “ஜனநாயகம்” பத்திரிகையில் ஒரு உபதலையங்கம் எழுதப்பட்டு அதில் தோழர் பாண்டியன் அவர்களும், தோழர் மந்திரி ராஜன் அவர்களும் கோவை ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் பேசிய பேச்சின் சுருக்கத்தை தனித்தனி எடுத்துப் போட்டு இவற்றுள் எது உண்மை என்று தெரிய ஆசைப்பட்டிருக்கிறது.

அதைக் காணும் பொதுமக்களில் சிலராவது மயக்கங்கொள்ளக் கூடுமாதலால் இரண்டும் உண்மையே என்று விளக்க ஆசைப்படுகிறோம்.

அதாவது தோழர் பாண்டியன் அவர்கள் கோவை மகாநாட்டுக் கூட்டத்தில் ஜில்லா ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களைப் பற்றி பேசுகையில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் “ஜில்லாக்களில் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் (குணிட்ஞு) சிலர் நாங்கள் போனபோது எங்களைப்பற்றி லட்சியம் செய்யவில்லை.

சிறப்பாக சென்னையில் நாங்கள் போனபோது ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் சிறிதுகூட உதவி செய்யவில்லை, நாங்களே நோட்டீசு போட வேண்டியிருந்தது, நாங்களே பெஞ்சு நாற்காலி போடவேண்டியிருந்தது, நாங்களே விளக்குக்கு பணம் கொடுக்க வேண்டி வந்தது என்று பேசினார்.

இது சில இடங்களில் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் சிலரின் அற்ப புத்தியைக் காட்டிற்று என்று ஆகுமேயல்லாமல் பொதுஜனங்கள் ஆதரவு இல்லை என்று ஆகுமா என்பதை யோசிக்க வேண்டுகிறோம்.

இதற்கு விளக்கம் ஏற்கனவே தோழர் ஈ.வெ.ரா. சேலம் பேச்சில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

என்னவென்றால் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் பட்டம், பதவி, பணம் சம்பாதித்துவரும் சிலருக்கு பிரசாரத்தில் நம்பிக்கை இல்லை என்றும், அவர்கள் சமயத்துக்குத் தகுந்தபடி நடித்து தங்கள் சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதிலே கருத்துடையவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

அதே மாதிரி சென்னையில் பிரசாரக் கமிட்டி சென்றபோது ஒரு ஜஸ்டிஸ் பிரமுகர் என்பவர் சிறிதும் கவலையில்லாமல் இருந்ததோடு பொப்பிலி ராஜா அவர்கள் பிரசாரத்துக்காக கொடுத்த பணத்தையும் ஒழுங்காக செலவழிக்காமல் பாழாக்கிவிட்டு பிரசாரக் கமிட்டி பிரசாரத்தை குறை கூறியும் பேசினவருக்கு உடனே பெரியதொரு உத்தியோகம் கிடைத்துவிட்டது. அப்படிப்பட்ட சிலருக்கு இன்னமும் சில உத்தியோகங்கள் காத்துக்கொண்டுமிருக்கின்றன.

ஆகையால் தோழர் பாண்டியன் அவர்கள் குறிப்பிட்டது கட்சியின் பேரால் பயனடைந்து நன்றியறிதல் இல்லாதவர்களைக் குறிவைத்தே ஒழிய பொதுஜன ஆதரவைப்பற்றி அல்ல என்பது அவரது பேச்சிலேயே விளங்கும். தோழர் மந்திரி ராஜன் அவர்கள் கூறியதும் உண்மையே யாகும்.

அதாவது தோழர் ராஜன் அவர்கள் தனியாகவும் பிரசாரக் கமிட்டியாருடனும் சென்ற இடங்களில் எல்லாம் பொதுஜன ஆரவாரமும் ஆதரவும் ஏராளமாக இருந்தது என்பதோடு தோழர் மந்திரி குமாரசாமி செட்டியார் அவர்கள் சென்ற எல்லா இடங்களிலும் திருநாள்கள் போல் வரவேற்பும் ஆதரவும் இருந்தது என்பது எதிரிகளாகிய பார்ப்பனர்கள் பத்திரிக்கைகளைப் பார்த்தாலும் விளங்கும். ஆதலால் இரண்டும் உண்மையே என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 06.09.1936

You may also like...